Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 32: ‘வார்த்தைகளே மந்திரமாகும்!’

சித்தர்களின் அருள் பெற்ற வாசி தாத்தா

பிரீமியம் ஸ்டோரி
சென்னையில் இணைய வழியில் சித்தக் கலைகள் பற்றிய கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் நாங்கள் கலந்துகொண்டபோது பல இளைஞர்கள் ‘வாசி தாத்தா, வாசி தாத்தா’ என்று ஒருவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். விசாரித்ததில் இன்று அரிதாக இருந்துவரும் `வாசி' கலையை எல்லோருக்கும் கற்றுத் தரும் ஞானகுருவாக இந்த வாசி தாத்தா கோவையில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்.

“வெளியில் உலாவும் காற்று, உடலுக்குள் போனால் மூச்சு. மூச்சு விட்டுப்போனால் எல்லாம் போச்சு! மூச்சை நெறிப்படுத்துவது பிராணாயாமம். உரிய காலகதியோடு மூச்சை உடலுக்குள் தங்கவைத்துச் சீவனைச் சிவமாக மாற்ற வைத்தால், அது `வாசி யோகம்'. எம்பெருமான் ஈசன் வாசி யோகியாக எப்போதும் நிஷ்டையில் இருப்பவர். அதனாலேயே மகா யோகியாக, குருவாக சகலருக்கும் இருக்கிறார்.

அஷ்டாங்க யோகம் என்ற வாசி யோகத்தைத் தென்முகக் கடவுளான தக்ஷிணா மூர்த்தி முருகனுக்கு அருளினார். அவருக்குப் பின் நந்தி, அகத்தியர், திருமூலர், போகர், ரோமர், காக புசுண்டர் போல பல குருமார்கள் வழியே இந்த வாசியோகம் உலகுக்குத் தெரிய வந்தது. விஷ்ணு புராணத்தில் பராசர முனிவரும், யோக சூத்திரத்தில் பதஞ்சலி முனிவரும் `வாசி' கலையின் பிதாமகர்கள் என்று போற்றப்படுகிறார்கள்.

புண்ணிய புருஷர்கள் - 32: ‘வார்த்தைகளே மந்திரமாகும்!’

நிலையான மூச்சுப் பயிற்சியின் வழியே உறுதியான உடல் பெறலாம், உயர்ந்த அறிவு பெறலாம், நிறைந்த சக்தி பெறலாம், தெய்விக நிலை பெறலாம், உள்ளுறையும் ஈசனையும் அறியலாம். மூச்சை நிலை நிறுத்தி ஆதாரச் சக்கரங்களை இயக்கி ஈசத்துவ தன்மையை அடைய வாசி ஒன்றே எளிய வழி. சிவா என்ற நிலையை அடையும் சூட்சும பயிற்சியே வாசி. வாசி ஒரு நுட்பமான பயிற்சி.

உரிய குருவின் வழிகாட்டல் இல்லாமல் இதைக் கற்றுக் கொள்ள கூடாது. தகுந்த வழிகாட்டி இல்லாமல் வாசி மேற்கொள்வது ஆபத்தானது. வாசி யோகத்தின் சிறப்பான குரு திருமூலர், இவரே வாசி யோகத்தின் வழியேதான் 3000 ஆண்டுகள் வாழ்ந்து திருமந்திரத்தை இயற்றினார். மனிதன் தெய்வ நிலையை எட்டலாம் என்றார். வாசி யோகத்தின் விரிவான விளக்க நூல் திருமந்திரம். எங்குமிருக்கும் ஈசனை நம் உடலைக் கொண்டே அறிந்து கொள்ளலாம் என்பது வாசியின் அடிப்படை. அதையே ‘உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்’ என்றார் திருமூலர்.

வாசி யோகம் முறையாக பழகிக் கொண்டால் நாடிகளைச் சுத்தம் செய்து, உடலில் பிராணசக்தியை அதிகரித்து, ஜீவனை இறைவ னோடு ஒன்றிணைக்கும் ஆற்றலை பெறமுடியும். அத்துடன், மகா சக்தியாகிய குண்டலினியை மேலெழுப்பும் ஓர் அற்புத பயிற்சியே வாசியோகம். ஒருவர் வாசி யோகத்தில் மேன்மை பெற சித்தர்களின் ஆசியும் அருளும் கட்டாயம் தேவை.

சித்தர்களால் தரப்பட்டுள்ள முறையான பயிற்சிகள் காலம் காலமாக ரகசியமாகப் பாதுகாக்கப் பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே கற்றுக் கொடுக்கப்படுகிறது. சித்தர்கள் அருள் இருந்தால் இது உங்களுக்கும் கற்றுக்கொடுக்கப்படும்.”

`வாசி' கலையைப் பற்றிக் கேட்ட தும் மடை திறந்த வெள்ளமாக வாசி தாத்தா கொட்டிய விளக்கங்களே இவை.

எளிமையான, ஆனால் தெளிவான குருவாக இவர் காணப்படுகிறார். வெள்ளந்தியான சிரிப்பும் வெளிப்படையான பேச்சுமாக வளைய வரும் இவர் மாணவர்களுக்கு விருப்பமான ஆசிரியர் என்கிறார்கள். ``கடுமையான இந்த வாசி யோகத்தை எல்லோரும் கற்க முடியுமாஐயா...'' என்று கேட்டால், சிரிக்கிறார்!

``ஆர்வம் இருப்பவர்கள், சித்தர் பெருமக்களின் ஆசி பெற்றவர்கள் கட்டாயம் கற்றுக் கொள்ளலாம். ஆனால் எல்லோருமே நிச்சயம் எளிமையான மூச்சுப் பயிற்சியால் பூரண உடல் நலத்தையாவது பெறலாமே. எல்லோரும் வாசியின் அடிப்படையான... மூச்சைக் கட்டுப்படுத்தும் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள்; வளமான வாழ்வை அடையலாம்.

புண்ணிய புருஷர்கள் - 32: ‘வார்த்தைகளே மந்திரமாகும்!’

சுவாசத்தின் ஆதாரம் நுரையீரல். இது வலதுபுறத்தில் மூன்று அறைகளும இடதுபுறம் இரண்டு அறைகளும் கொண்டது. சராசாரியாக 3.5 முதல் 4.5 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதில் 1.5 லிட்டர் காற்று தங்கும். அதிகபட்சமாக 2 முதல் 3 லிட்டர் காற்று சுவாசிக்கப்படும். முறையற்ற வேகமான நம் சுவாசத்தால் உடல் நலனை இழக்கிறோம். இதனால் கழிவுகளும் முழுமையாக வெளியேறாது. நோய்கள் உருவாகி ஆயுளை குறைத்துக் கொள்கிறோம்.

இந்த வாசி யோகத்தால் சுவாசத்தின் அளவை கூட்ட முடியும். சாதாரண மனிதன் 0.5 லிட்டர் முதல் 1 லிட்டர் காற்றுதான் சுவாசிக்கிறான். அதனால் அதிகபட்சம் 70 ஆண்டுகள் வாழ்கிறான். சுவாசத்தை உயர்த்தி உள்வாங் கும் காற்றின் அளவை அதிகப்படுத்தினால், நிச்சயம் 100 ஆண்டுகள் வாழலாம் என்பது சித்தர்கள் வாக்கு'' என்றவர், வாசி யோகம் குறித்து மேலும் விளக்கினார்.

``வாசி யோகத்தில் 8 அங்கங்கள் உண்டு; அஷ்டாங்கம் என்பார்கள். அவைஇயமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்யா காரம், தாரணம், தியானம், சமாதி நிலை ஆகும். இவற்றில் படிப்படியாக ஒருவர் தேறி விட்டால், ஈசத்துவம் எனப்படும் தெய்வ நிலையை எட்டலாம்.

வாசி யோகமும் ஆழ்மனமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. மனத்தை நெறிப்படுத்தினால் வாசி யோகம் வசமாகும். வாசி வசமானால் மனமும் செம்மையாகும். வாசியில் தேறியவர் மந்திரங்கள் ஜபிக்க வேண் டாம், அவர்கள் சொல்லும் வார்த்தைகளே மந்திரங்கள் ஆகும். எனவே, `வாசி' ஒரு மந்திரக் கலை. அதை எல்லோரும் தகுந்த குருவால் கற்றுக்கொள்ள முடியும். சித்தர்கள் அருளிய இந்தக் கலை எல்லோருக்கும் வசமாக வேண்டும் என்பதே என் விருப்பம்” என்கிறார் வாசி தாத்தா.

“ஐயா உங்களைப் பற்றி சொல்லுங்களேன்” என்றால், “என்னைப் பற்றி என்ன இருக்கிறது... ஒன்றுமில்லை... எல்லாம் சித்தர் பெருமக்கள் போட்ட அருள்பிச்சை” என்று அமைதியாகி விட்டார். இவரின் இயற்பெயர் பாரதிராஜா; இப்போது மௌன குரு. விருப்பமிருந்தால் பேசுவாராம். திங்கள்கிழமை முழு மௌன விரதம் மேற்கொள்வார். நினைத்தால் எங்கோ சென்றுவிடுவார். விரும்பினால் மீண்டும் கோவைக்கு வந்துவிடுவாராம்.

``பூர்விகம் தேனி மாவட்டம் சின்னமனூர். என்றாலும் 40 ஆண்டுகளாக கோவை பேரூர் அருகில் வசிக்கிறார். இவரின் தந்தையார் எம்.எஸ்.ராமசாமி காவல்துறையில் பணியாற் றியவர். கட்டுப்பாடும் ஒழுக்கமும் நிறைந்த குடும்பத்தில் வளர்ந்ததால், சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் ஈடுபாட்டுடன் வளர்ந்துள்ளார், வாசி தாத்தா.

கோவைக்கு வந்ததும் இருமுறை வெள்ளியங் கிரிக்கு மலைமீது பயணம் செய்திருக்கிறார். அங்கு ஏற்பட்ட அனுபவங்கள், இவரை முழு ஆன்மிகவாதியாக மாற்றியுள்ளது. மனைவி கிருஷ்ணவேணி இவரின் மனத்துக்கு ஏற்ற மாதரசி. வாசி தாத்தா `சித்தன் போக்கு சிவன் போக்கு' என்று வாழ்ந்தாலும், எந்த எதிர்பார்ப்புமின்றி அவரோடு இணைந்து தொண்டாற்றி வருகிறார் இந்த அம்மையார்.” என்கிறார்கள் இந்த ஐயாவின் சீடர்கள்.

புண்ணிய புருஷர்கள் - 32: ‘வார்த்தைகளே மந்திரமாகும்!’

வெள்ளியங்கிரியில் கிடைத்த சித்த தரிசனத் துக்குப் பிறகு, அந்த மலைக்குமேல் ஏறிச் செல்வதை விட்டுவிட்டாராம். இப்போது மலையடிவாரத்திலேயே மாதம் ஒருமுறை அல்லது இருமுறை அடியார்களோடு இணைந்து அன்னதானம் செய்துவருகிறார்.

2013-ம் ஆண்டு வடநாட்டு யாத்திரையாக கேதாரர்நாத் சென்றிருக்கிறார் வாசி தாத்தா. அப்போது ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் சிக்கிக்கொண்டாராம். ``பல நாள்கள் ஆகியும் எந்தத் தகவலும் தெரியாத நிலையில், இவர் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே கலங்கி போயிருந்தோம். இவர் மீண்டு வந்ததுகூட சித்தர்களின் அருளால்தான்'' என்கிறார்கள் உடன் இருப்போர்.

“ஒருமுறை ஐயாவின் கனவில் வந்த சித்தர் தரிசனம்தான், இவரை வாசி யோகத்தின்பால் திசை திருப்பியது எனலாம். ஜடாமுடியுடன் பெரும் ஆகிருதியோடு தோன்றிய சித்தப் புருஷர் ஒருவர் அழைப்பை ஏற்று சதுரகிரிக் குச் சென்ற ஐயா, வாசியோகம் பயின்று வந்தார். பிறகு அதைத் தமிழகமெங்கும் சென்று விருப்பமுள்ளவர்களுக்குச் சொல்லி தருகிறார்” என்கிறார்கள் இவரின் சீடர்கள்.

“இதைக் கற்றுக்கொள்வதுகூட சித்தர்களின் அருள் இருந்தால் மட்டுமே நடக்கும் ஐயா” என்கிறார் வாசி தாத்தா. “காலக் கணக்கோடு, நெறிப்படுத்திய சுவாசம்தான் வாசி. முறையான சுவாசத்தை பயன்படுத்தி குண்டலி சக்தியை உருவாக்கி அதை வாலையாக ஒளிர வைக்க வேண்டும். இந்த வாலை எல்லையற்ற சக்தி கொடுக்கும் சக்தி அம்சம். இதுவே அட்டமா ஸித்திகளை அளிக்கும். அமிர்தம் என்ற சாகா சுரப்பை வாலை அளிக்கும். இதுவே உடலை அழியாமலும் காக்கும். இதைக் கற்றுக்கொள்ள சித்தர்களை வேண்டுங்கள்.

உங்கள் வீட்டில் தீபம் ஏற்றி அதன்முன்னே கண்மூடி வேண்டுங்கள். சித்தக் கலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இறைஞ்சுங்கள். அவர்கள் விரும்பினால் கற்றுக் கொள்ளலாம். நான் குருவல்ல; வழிகாட்டி அவ்வளவுதான். சித்தர்களே குருமார்கள். வழிகாட்டி உங்களுடன் பயணிக்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு வரைமுறை ஒன்று கூறப்பட்டுள்ளது. அதற்கேற்பவே வழிகாட்ட முடியும். நீங்கள்தான் பயணித்து வாசி யோகத்தின் உச்சத்தை அடைய முயல வேண்டும். வாசி யோகம் சிவன் சொத்து.

அதை யாரும் அவர் அருளால் அடையலாம். இது ஆன்மிக பூமி; இங்கு மட்டுமே அருள் நிறைந்த அற்புதக் கலைகள் பலவும் ஞானியர்களால் அருளப்பட்டுள்ளன. அது எங்கும் எவரிடமும் பரவ வேண்டும். அற்புதச் சித்தக் கலைகளால் இந்தப் பூமி சிறக்க வேண்டும். அதற்கு இளைஞர்கள் பாடுபட வேண்டும்.

சிறப்பான இந்தப் பணியில் இந்த எளியோனும் சிறிதேனும் பயன்பட்டால், எம்பெருமானுக்கும் என் குருவான சித்தர் பெருமக்களுக்கும் காணிக்கை செலுத்தியதாக மகிழ்வேன். என்னால் ஆனது, ஆவது ஒன்றுமில்லை எல்லாம் குருமார்கள் மகிமையே” என்று கூறி முடித்துக்கொண்டார்.

உப்புக்கு ஒரு சிறப்பு உண்டு. எப்பொருளில் அது கலந்தாலும் அதில் தன்னைக் கரைத்துக் கொண்டு, தன் சுவையை அப்பொருளுக்கு அளிக்கும். நல்ல அடியார்களும் அப்படியே.

எப்போதும் அவர்கள் தங்களை முன்னிறுத் தாமல், தாங்கள் விரும்பும் திருத்தொண்டுக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்பதே அவர்களின் லட்சியமாக இருக்கும்.

அந்த வகையில் பெருமைமிக்க ஓர் அடியா ரைச் சந்தித்த மகிழ்வோடும் நிறைவோடும் விடைபெற்றோம்.

- அடியார்கள் வருவார்கள்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு