மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள்! - 12

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள்

ஈசனே லய வடிவானவர் என்பதால்தான் `லய சிவம்’ என்போம்.

`ஈசன் நாத வடிவானவன்’ என்கிறது வேதம். சாம கானப் பிரியரான ஈசனுக்குத் தாள வாத்தியங்கள் என்றால் அத்தனைப் பிரியம். ஆடற்கலையின் நாயகனான சிவனுக்கு வாத்திய முழக்கமின்றி ஏது பூஜைகள், புறப்பாடுகள்.

ஈசனே லய வடிவானவர் என்பதால்தான் `லய சிவம்’ என்போம். அதுவே படைத்தல் முதலிய ஐந்தொழிலைச் செய்யும் இச்சையுடையது என்கின்றன சைவ நூல்கள். இசைக்கலையிலும் குரலை மட்டுமே வைத்துக்கொண்டு இசை மழையைப் பொழியும் `கொன்னக்கோல்' கலை அதிசயமானது.

இது, நந்தியம்பெருமானால் அருளப்பட்டது என்றும் சொல்வார்கள். ஆடல்கலைக்கு அஸ்திவாரமான நட்டுவாங்கத்திலிருந்தே கொன்னக்கோல் பிறந்தது என்றாலும் இது தனித்துவமானது; சிக்கலான சொற்கட்டுகளைக் கொண்டது. இதனாலேயே இதைப் பயில்பவர்களும் மிகச்சிலரே. இந்தக் கலையில் சிகரம்தொட்ட மகாகுரு தாயுமானவர்; திருச்சியைச் சேர்ந்தவர்.

புண்ணிய புருஷர்கள்! - 12

உறையூருக்கு அருகே வசித்துவரும் தாயுமானவர் ஐயாவின் இல்லத்தில் நாம் நுழைந்ததும் முகம் மலர வரவேற்றவர், மூச்சுக்கு முந்நூறு முறை தன் குருநாதர்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.

தாயுமானவர் ஐயா சுவாமிமலைக்கு அருகே கொட்டையூரில் இசைக்குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை ராஜு. அவர் வயலின் வித்வான். இசையில் திளைத்துச் செழித்து வளர்ந்த குடும்பம் இவருடையது. ஏழு வயதில் இவருடைய வீட்டில் அடகுக்காக வந்த ஒரு மிருதங்கத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினார் தாயுமானவர். விரலில் வழிந்த லயத்தைக் கண்டு வியந்த கும்பகோணம் ராஜப்ப ஐயர் இவருக்கு முதல் குருவானார். பின்னர் தட்சிணாமூர்த்தி ஆசாரி அவர்களின் குருகுல சீடராக திருச்சிக்கு வந்து குடியேறினார்.

‘11 வயதில் திருச்சிக்கு வந்தேன், இப்போது 19 வயதாகிறது. இன்னமும் இசையைக் கற்றுக் கொள்கிறேன்’ என்று சிரிக்கிறார். இவருக்கு வயது 91. `இசையார்வத்தில் தான் இன்னமும் இளைமையானவனே' என்று உணர்த்தும் விதம் நம்மிடம் `19 வயது' என்று உற்சாகமாய் அவர் பகிர்ந்ததை ரசித்தோம்.

புண்ணிய புருஷர்கள்! - 12

12 ஆண்டுக்காலம் புதுக்கோட்டை பாணியில் மிருதங்கம், கஞ்சிரா இரண்டிலும் சிறந்த தேர்ச்சியைப் பெற்றிருந்த தாயுமானவர், தன் குருவோடு சேர்ந்தே பல கச்சேரிகள் செய்தார். அரியக்குடி ராமாநுஜர், தண்டபாணி தேசிகர், ஆலத்தூர் சகோதரர்கள், சித்தூர் சுப்பிரமணியம், கே.பி.சுந்தராம்பாள், தியாகராஜ பாகவதர் என அக்காலப் பிரபலங்கள் தொடங்கி, இக்கால இசை மேதைகள் வரை இணைந்து பல மேடைகள் ஏறிவிட்டார். எனினும், `எல்லாம் குருவருள். அவர்கள் இட்ட பிச்சை என் இசை' என்றே அவர்களை வணங்குகிறார். மனைவி கனகாம்புஜம், தாயுமானவரின் குருவான தட்சிணாமூர்த்தி ஆசாரியரின் மகள் என்பதும் ஒரு விசேஷ செய்தி. ‘தாயுமானவரை’க் கவனித்துக் கொள்வதில் தாயாகவே திகழ்கிறார் கனகாம்புஜம்.

`கொன்னக்கோலில் அடிப்படை தாளச் சொல்லான `தீம்' என்பதை `ஓம்' என்றும் `தரிகிட' என்பதை `ஹரிகிட' என்றும் உச்சரிக்கிறார் எனில், தாயுமானவர் ஐயாவின் இறைச் சிந்தையை என்னவென்பது?!'

கஞ்சிராவைக் கண்டறிந்த மாமுண்டியாப் பிள்ளையின் நான்காவது இசை வாரிசு இவர். மாமுண்டியாப் பிள்ளையின் சீடர் புதுக்கோட்டை தட்சிணா மூர்த்தி ஸ்வாமிகள். இவர் இசைக் கடலில் மூழ்கி முத்தெடுத்த மிகப்பெரிய மகான். ஆறுபடை வீடுதோறும் சென்று முருகப் பெருமானைத் தொழுது அருள்பெற்றவர். பழநியம் பதியில் முருகப்பெருமானை நேரில் தரிசித்து தாம்பூலங் களைப் பெற்றவர். பழநியாண்டவரே நேரிடையாக வந்து தட்சிணாமூர்த்தி ஸ்வாமி களுக்கு இசை பாடமும் சொல்லிக் கொடுத்துள் ளாராம். பாடகச்சேரி ராமலிங்கம் ஸ்வாமிகளின் நண்பருமானவர். இத்தகு சிறப்புகள் கொண்ட தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகளின் சீடர் தட்சிணா மூர்த்தி ஆசாரி. அவரிடம் குருகுலமாக பாடம் பயின்றவரே தாயுமானவர் ஐயா.

புண்ணிய புருஷர்கள்! - 12

திருச்சி மலைக்கோட்டை தாயுமானஸ்வாமி அருளால் திருச்சிக்கு வந்து அடியார்களுக்கு இசைப் பயிற்சியும் எண்ணற்ற தொண்டுகளும் செய்து வாழ்கிறார். இவரின் தனித்த அம்சம் தாளக்கட்டுக்கான சொற்கள்தாம். கொன்னக் கோலில் சொல்லப்படும் அடிப்படை தாளச் சொல்லான `தீம்' என்பதை `ஓம்' என்றும் `தரிகிட' என்பதை `ஹரிகிட' என்றும் வித்தியாசமாக பக்திபூர்வமாகச் சொல்கிறார். தன் குருவின் குருவான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி ஸ்வாமிக்குக் கற்கோயில் கட்டி பூஜைகளையும் விழாக்களையும் சொந்த செலவில் நடத்தி வருகிறார், தாயுமானவர் ஐயா. மேலும் தன் குருநாதர்களின் வாழ்க்கை வரலாற்றையும் புத்தகமாக எழுதி சிறப்பித்துள்ளார்.

75 ஆண்டுகளுக்கு மேலாக இசையோடு வாழ்ந்து வரும் இவரிடம் 400-க்கும் மேலான சீடர்கள் உருவாகி உலகெங்கும் ஜொலித்துவருகிறார்கள். மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் என்று பல நாடுகளுக்குப் பயணம் செய்து பக்தி இசையைப் பரப்பியுள்ளார். 1971-ம் ஆண்டு முதல் பல காலம் திருச்சி வானொலியில் எண்ணற்ற இசை நிகழ்ச்சி களைத் தயாரித்துள்ளார். கலைமாமணி, காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வான் அங்கீகாரம்... என இவர் வாங்கியுள்ள விருதுகள் அறையெங்கும் காணப்படுகின்றன.

‘சிறுவயதில் பாடகச்சேரி ஸ்வாமிகளிடம் மிட்டாய் வாங்கி உண்டிருக்கிறேன். அந்த அருள்தான் என் குரலைக் கம்பீரமாக்கி இன்றும் வாசிக்க வைக்கிறது போலும்’ என்று கூறி, குழந்தை யைப் போல் சிரிக்கிறார்.

புண்ணிய புருஷர்கள்! - 12

பல மாணவர்களை தன் வீட்டிலேயே தங்க வைத்து உணவளித்து, இசைக்கருவிகள் அளித்து இசைக்கலையை இலவசமாக வழங்கி யுள்ளார்; இன்றும் வழங்கிவருகிறார். இப்படி, இசைப்பணியாலும் இசைக்கலையாலும் அதிகம் அறியப்படும் இந்தப் புண்ணிய புருஷரின் இறைத் தொண்டுகள் பற்றி பலரும் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. திருச்சி, புதுக்கோட்டை வட்டங்களில் தேவாரம், திருவாசகம் ஓதும் சிவனடியவர்களுக்கு ஊக்கத்தொகை அளித்து மகிழ்வூட்டுகிறார். எந்தவித எதிர்பார்ப்புமின்றி தனது சொந்த வருமானத்தையெல்லாம் கோயில் திருப்பணி களுக்கும் அடியவர்களுக்கும் செலவிட்டுவருகிறார். தன் சொந்த ஊரான கொட்டையூரில் இருந்த தனது நிலங்களைப் பள்ளிக்கூடம் கட்டவும் ஆன்மிகப் பணிகளுக்கும் கொடுத்துவிட்ட தயாளன் இவர்.

இன்றுவரை தன் குருமார்களை தெய்வங்களாக வணங்கிவரும் இவரால் வாழ்வுபெற்றவர் பலர். இன்றும் பலருக்கும் உதவிகள் பல செய்து வருகிறார். இவருக்கு மழலைச் செல்வங்கள் இல்லை. ஆனாலும் என்ன, 400 பிள்ளைகளை வளர்த்தெடுத்திருக்கிறாரே, சாமானிய விஷயமா அது?!

நாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கொஞ்ச நேரம் மிருதங்கமும் கஞ்சிராவும் வாசித்துக் காண்பித்தார். பிறகு கம்பீரக்குரலில் கொன்னக் கோல் வாசித்தார். அப்பப்பா... என்ன ஒரு சாரீரம், எத்தனை துல்லியமான தாள வகைகள். 91 வயதில் அற்புதமான லய விவகாரங்களை கொன்னக்கோலில் பாடி அசத்தினார். அந்த 10 நிமிடங்கள் இமைக்கவும் மறந்து நெகிழ்ந்து போனோம். இசையால் ஈசனை வசமாக்கிய ஆனாய நாயனாரை தரிசித்த உணர்வு நமக்கு.

நாம் விடைபெறும் நேரம் சீடர் ஒருவர் வந்து சேர, தாயுமானவர் ஐயாவின் பணி ஆரம்பமானது. ‘இசையால் ஐந்தெழுத்துங் குழைய வைத்து தங்கு சராசரங்களும் உருகா நிற்ப’ என்று திருத்தொண்டர் புராணம் ஆனாய நாயனாரிடம் உருகும். நாமும் அப்படித்தான் இந்த அடியவரின் இசையில் உள்ளம் உருகிப்போனோம்!

- அடியார்கள் வருவார்கள்

ஒரு விளக்கம்...

சென்ற இதழ் `புண்ணிய புருஷர்கள்’ பகுதியில், அடியவர் பூதம் ஐயா பற்றிய கட்டுரையில், `பூதம் ஐயா திருப்பனந்தாளில் தாம் கட்டியிருக்கும் நாயன்மார் ஆலயத்தையும் நிர்வகித்து வருகிறார்’ என்ற தகவல் இடம்பெற்றிருந்தது. ஆனால், அந்த ஆலயம் திருப்பனந்தாள் காசி மடத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. மிகப் பழைமையான அந்த ஆலயத்தில் பூதம் ஐயா வழிபாடும் திருப்பணியும் செய்து வருகிறார் என்பதே சரியான தகவல்.

- ஆசிரியர்

குருவும் தெய்வமும்!

பீர்தாசர் ஒருமுறை தனது குடிலில் அமர்ந்து கண்ணனைத் தியானித்துக் கொண்டிருந்தார். வெகுநேர தியானத்துக்குப் பிறகு கண் விழித்தவர், எதிரில் தன் சத்குரு அமர்ந்திருப்பதைக் கண்டார்.

குருநாதருக்கு நேர் எதிர் திசையில் கண்ணன் குழந்தை வடிவில் சிரித்தபடியே தவழ்ந்து வந்துகொண்டிருந்தான். இருவரில் முதலில் யாரை வணங்குவது என்று கபீர்தாசர் யோசித்தார்.

புண்ணிய புருஷர்கள்! - 12

`மாதா, பிதா, குரு, தெய்வம்' என்று சிறுவயதில் கிடைத்த உபதேசம் நினைவுக்கு வந்தது. மாதா - பிதாவையும், பிதா - குருவையும், குரு- தெய்வத்தையும் காட்டினார். அந்த வரிசையில் இப்போது முதலில் இருப்பவர் ‘குரு’தான்.

எனவே, குருவையே முதலில் வணங்குவது என்று எழுந்தார். என்ன ஆச்சர்யம்... குரு இருந்த இடத்தில், குழல் ஊதும் கண்ணன் அமர்ந்திருந்தான். குருவும் இறைவனும் ஒன்று என்பதில் ஐயம் உண்டோ!

- எஸ். பவானி, சிதம்பரம்.