திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள்! - 13

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள்

நந்தனாரைச் சிறப்பித்து சேக்கிழார் அருளிய பாடல் இது. பேரிகை, முரசு, முழவு போன்ற இசைக்கருவிகளைத் தயாரித்து அடியார்களுக்கு வழங்குவதும் நந்தனாரின் திருப்பணிகளில் ஒன்று.

`பிறந்து உணர்வு தொடங்கிய பின்

பிறைக் கண்ணிப் பெருந்தகைபால்

சிறந்த பெரும் காதலினால்

செம்மை புரி சிந்தையராய்

மறந்தும் அயல் நினைவு இன்றி

வரு பிறப்பின் வழி வந்த

அறம் புரி கொள்கையராயே

அடித்தொண்டின் நெறி நின்றார்...'

ந்தனாரைச் சிறப்பித்து சேக்கிழார் அருளிய பாடல் இது. பேரிகை, முரசு, முழவு போன்ற இசைக்கருவிகளைத் தயாரித்து அடியார்களுக்கு வழங்குவதும் நந்தனாரின் திருப்பணிகளில் ஒன்று.

அவரைப்போன்றே, சிவ வாத்தியங்கள் செய்து தரும் திருப்பணியைச் செய்து வருகிறார் அடியவர் ஒருவர் என்ற தகவலைக் கேள்விப்பட்டதும் ஆச்சர்யமடைந்தோம். கிருஷ்ணகிரி - பர்கூர் அருகேயுள்ள காட்டாம் புலியூர் எனும் கிராமத்தில் அவர் வசிப்பதாக அறிந்ததும் உடனே புறப்பட்டோம்.

`இகலோக நினைவு எதுவுமின்றி சிவலோக நினைவாகவே வாழும் இறையடியார் அவர்' என்று அந்தக் கிராமத்தார் மூலமும் மற்ற அடியார்கள் மூலமும் அறிந்தபோது, மிகவும் நெகிழ்ந்தது நம் மனம். அந்த அடியாரின் பூர்வீகப் பெயர் குறளரசன். ஆனால், தற்போது திருநாவுக்கரசர் என்றே அழைக்கப் படுகிறார்.

அந்தப் பெயருக்கேற்ப தமிழகமெங்கும் உள்ள ஆலயங்களுக்குச் சென்று உழவாரப் பணியும் திருத்தொண்டும் செய்துவருகிறார்.ஆலயக் கட்டுமானப் பணிகள், சுதை வேலைப்பாடுகள், தச்சு வேலை, நந்தவனம் அமைத்தல் என எல்லா வேலைகளையும் செய்துவரும் தேசாந்திரி இவர் என்கிறார்கள்.

புண்ணிய புருஷர்கள்! - 13

சிறுவயதிலேயே சிவன்பால் சித்தத்தை வைத்து வாழ்ந்த அடியவர் திருநாவுக்கரசர், தன் குடும்பத்தைத் துறந்து ஆறு வருடங் களாகிவிட்டன. அந்த ஆறு ஆண்டுகளாக இந்த அடியார் செய்த திருப்பணிகள் ஏராளம்.

``மற்ற அடியார்கள் கொடுத்த இரண்டு ஜோடி வேட்டி - துண்டு - சட்டையைத் தவிர, வேறு சொத்து எதுவும் இல்லை. சம்பாத்தியம் இல்லை; எந்த உறவுகளும் இனி வாழ்க்கையில் இல்லை என்று வாழ்ந்து வருகிறார். அடியார்கள் உணவு தந்தால் சாப்பிடுவார். `சித்தன் போக்கு சிவன் போக்கு' என ஊர் ஊராகத் திரிந்து பணியாற்றி வருகிறார். வேறு ஊருக்குப் போவதென்றாலும் யாராவது கொண்டுபோய் விட வேண்டும். எதையும் கடையில் சென்று வாங்கியதில்லை. கையில் காசும் வைத்துக்கொள்வதில்லை'' என்று இந்த அடியாரைக் குறித்து மற்றவர்கள் சொல்லச்சொல்ல, நாம் வியப்பின் உச்சிக்கே சென்றோம்.

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், நிறைய திருப்பணிகள் செய்துவருகிறார் என்றாலும், இவரின் முக்கியப் பணிகள் சிவ வாத்தியங்கள் செய்து தருவதும், அவற்றை இசைக்கக் கற்றுக்கொடுப்பதும்தான். குறிப்பாக உடல், திருச்சின்னம், கொக்கரை, முழவு, முரசு, நாகக் கொம்பு ஆகியவற்றைச் செய்து ஆலயங்களுக்கு வழங்கிவருகிறார்.

அதிர்வுகள் அதிகம்கொண்ட தோல் வாத்தியங்களை விரும்பிச் செய்கிறார். இதற்காக மாடு, ஆடு போன்ற விலங்குகளின் தோலை வாங்கி, முறைப்படி பக்குவப் படுத்தி தோல் கருவிகள் தயார் செய்கிறார். படிகாரம், பாக்கு போன்றவற்றால் தோலைப் பக்குவப்படுத்தி, பின்னர் புளியங்கொட்டைக் கூழைக்கொண்டு தோலினை வாருடன் இணைத்து இறுக்கி, சட்டத்தில் பொருத்தி, தோல் கருவிகளைத் தயார் செய்கிறார்.

தோல் கருவிகள், நரம்புக் கருவிகள், துளைக் கருவி கள், கன கருவிகள், உலோக கருவிகள் ஆகிய ஐந்தும் ஈசனால் ஈசனின் பூஜைக்காகப் படைக்கப் பட்டவை என்பார்கள்.

அவ்வகையில் முரசு, உடல் போன்ற தோல் கருவிகள், ஜால்ரா, குழித்தாளம் போன்ற கன கருவிகள், புல்லாங் குழல் முதலான துளைக் கருவிகள் ஆகியவற்றைச் செய்து தருகிறார், அடியார் திருநாவுக்கரசர். இப்பணி சிவனுக்காகவே என்ற எண்ணத்தில், இப்பணிகளுக்காகப் பணமோ, பொருளோ பெற்றுக் கொள்வதில்லை.

``எந்தக் கருவிகளை எங்கு வைத்து வாசிக்க வேண்டும் என்பதைக்கூட சைவம் தெளிவாக வரையறுத்து உள்ளது. அதன்படியே தொண்டாற்றி வருகிறார் இந்த அடியார்'' என்று அவரைச் சுற்றியிருந்த அடியார்கள் பெருமையோடு குறிப்பிட்டார்கள்.

புண்ணிய புருஷர்கள்! - 13

நாம் சென்றிருந்தபோதும் `உடல்' எனும் மேளவாத்திக் கருவியைச் செய்துகொண்டிருந்தார் அடியார். அறிமுகப்படுத்திக் கொண்டபோது, சிறிதாகப் புன்னகைத்தார். அதிகம் பேசாதவர் இந்த அடியார். ஆகவே, அவர் சார்பில் அவ்வூரின் மற்ற அடியார்கள் பேசினார்கள்.

“விடையேறும் எம்பெருமானுக்கு விருப்பமானவை இசை வாத்தியங்கள். எந்நேரமும் நின்றாடும் ஈசனுக்கு அருகில் நந்தியெம்பெருமான் எப்போதும் இசைத்தபடியே இருக்கிறார். பூலோகத்தில் தம்மை வழிபடும் அடியார்கள், இசையோடு தம்மை வணங்க வேண்டும் என்பதற்காக, முசுகுந்த சக்ரவர்த்தி மூலம் 70 வகை இசைக்கருவிகளை அருளினாராம் ஈசன். ஆகவே, சிவ வாத்தியங்கள் இல்லாத ஆலயமே இருக்கக் கூடாது என்ற நோக்குடன், இந்த அடியவர் சிவ வாத்தியங்களைச் செய்து ஆலயம்தோறும் அளித்துவருகிறார்.

அம்பலத்தரசர்ஆடும்போது நந்தி மத்தளம் வாசிப்பார் என்பது நாமறிந்ததே. ‘குடமுழா நந்தீசனை வாயில் காப்பாகக்கொண்டார்’ என்பது தேவார வாக்கு. ‘பஞ்சமுக வாத்திய லக்‌ஷணம்’ என்ற சுவடி, ‘பஞ்சமுக வாத்தியம் நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது' என்று கூறுகிறது.

நாதம் பிறந்தது ஈசனால். ராகங்கள் பிறந்தது ஈசனால். எனவே, இசையில்லாத ஈசன் வழிபாடு நிறைவில்லாதது. சிவ வாத்தியங்களால் அதிரும் இடத்தைத் தீய சக்திகள் அணுகாது. கயிலாய வாத்தியங்கள் முழங்கும் இடங்களில் மனச்சோர்வே வராது. ஆனந்த லயத்தை அள்ளித்தரும் இந்த வாத்தியங்கள் ஆதித் தமிழர்களின் தொன்மையான அடையாளமும் கூட. விலங்குகளை விரட்டவும், எதிரிகளைக் களம் காணவும், வெற்றிக்கொண்டாட்டத்தின் போதும் இந்த வாத்தியங்கள் முழங்கும். அக வாழ்வுக்கும் புற வாழ்வுக்கும் இவை அவசியமாக இருந்தன.

அசுவன், கம்பளதாரன் எனும் கின்னரர்களின் இசையில் மயங்கிய ஈசன், எப்போதும் அவர்களது இசையைக் கேட்டுக்கொண்டிருக்கும் வகையில், அவர்களையே குண்டலங்களாக்கிச் செவியில் அணிந்துகொண்டார். ராவணன் மற்றும் அகத்தியரின் இசைக்கு மயங்கி அவர்களுக்கு ஈசன் அளித்த வரங்கள் அநேகம் அல்லவா. அதேபோல், சரஸ்வதிதேவிக்கு ‘கச்சபீ’ என்ற வீணையை அளித்ததும் ஈசனே என்பதையும் நாமறிவோம். `முழவும் சங்கும் ஒலிக்காத சிவ பூஜை முழுமையடையாது' என்பார்கள், சைவப் பெரியோர்கள். எனவே, எப்போதும் இசையால் ஈசனைத் துதிப்பது அவசியம்'' - இப்படி அடியார்கள் பேசிக்கொன்டிருக்கும்போதே, நம் அருகில் வந்து அமர்ந்தார் அடியார் திருநாவுக்கரசர்.

அதுவரையிலும் அவர் செய்துகொண்டிருந்த வாத்தியம் குறித்து அவரிடம் கேட்டோம்.

`‘இது `உடல்' என்ற வாத்தியம் ஐயா...'' என்று தொடங்கி சன்னமான குரலில் பேசினார்.

``உடல் வாத்தியத்தில் சன்ன உடல், நெட்டுடல், குட்டுடல் ஆகிய மூவகையும் சிவனுக்கு விருப்பமானவை. அதிகமான நாதத்தை எழுப்பும் இந்த இசைக்கருவி, ஆதியில் பனைமரக் கட்டையைக் குடைந்து இருபுறமும் தோல் போர்த்தப்பட்டு இசைக் கருவியாக வாசிக்கப்பட்டது. ஆனால், கனம் அதிகம் என்பதால் பிற்காலத்தில் கனம் இல்லாத மரங்களைக்கொண்டு செய்யப்படுகிறது.

உலோகத்தால் செய்யப்படும் எக்காளங்களும் சிவபெருமானுக்கு விருப்பமானவை. மாட்டுக் கொம்பால் உருவாக்கப்படும் `கொக்கரை' எழுப்பும் ஒலி அலாதியானது. இதுவே ஆதியான இசைக்கருவி என்றும் சொல்லலாம்.

அதேபோல், மாட்டுத்தோல் கொண்டு செய்யப்படும் வாத்தியங்கள், வல்லின ஓசையை எழுப்பக்கூடியவை. மெல்லின ஒலிக்கு ஆட்டுத் தோல் வாத்தியங்கள் சிறப்பானவை'' என்றார்.

‘`காளை மீதேறி கருணை புரியும் ஈசனுக்கு மாடுகளைத் தோலுரித்துச் செய்யப்படும் வாத்தியங்கள் மகிழ்வைத் தருமா ஐயா...'’ என்று கேட்டோம்.

ஒரு கணம் நம்மைக் கூர்ந்துநோக்கிய திருநாவுக் கரசர், பிறகு புன்னகையோடு விவரித்தார்.

புண்ணிய புருஷர்கள்! - 13

“மாட்டுத்தோலை இசைக்கருவிக்காகப் பயன்படுத்துவது குற்றமோ குறையோ ஆகாது. நந்தனார் தோல்கருவிகளைச் செய்து சிவத் தொண்டாற்றினார் என்று சேக்கிழார். ஸ்வாமிகள் சொல்கிறார். அதேநேரம், எவரும் வாத்தியங்களின் தோல் தேவைக்காக மாடுகளைக் கொல்வதில்லை.இறந்துபோன மாட்டின் தோலும் கொம்புகளும் வீணாகப் புதைக்கப்படாமல், அவையாவது சிவ காரியத்துக்காகப் பயன்பட்டுப் புண்ணியம் பெறட்டும் என்றுதான் பெரியோர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மாட்டின் தோலைக் கொண்டு செருப்போ, பெல்ட்டோ, பர்ஸோ செய்து அதை அணிந்தால் தவறு எனலாம். ஆனால், சிவனுக்கு உகந்த இசைக் கருவியாக செய்வது தவறு இல்லையென்றே சொல்லலாம். செய்யக்கூடிய காரியத்தின் பலனைப் பொறுத்தே பாவ புண்ணியங்கள் உருவாகின்றன... தெரியுமா?''

திருப்பணியால் மட்டுமல்ல, அர்த்தம் பொதிந்த பேச்சாலும் நம்மை வியக்கவைத்தார் அடியார்.

``ஆண்டவன் திருப்பணி ஒருபுறம் இருந்தாலும் உங்களுக்கென்று உறவு, ஓர் இடம் எல்லாம் வேண்டாமா...'' என்று கேட்டோம்.

``ஆளுடைய அரசப்பெருமான் (நாவுக்கரசர்) போல் ஊருக்கு ஒருவர் வேண்டும் ஐயா. அப்போதுதான் நம் அடையாளங்கள் மீட்கப்படும். ஆலயங்கள் சீர்பெறும். ஆகவேதான், என் முந்தைய அடையாளங்களை மறந்துவிட்டேன். எனக்கு அடியார்களே உறவுகள். ஈசனே எனக்கு தாய் தந்தை. இதுபோதும். சேர்க்கச் சேர்க்க கருமம், நீக்க நீக்க நிம்மதி! இயன்றவரை ஈசனுக்கும் அவர்தம் அடியாருக்கும் திருத்தொண்டு செய்ய வேண்டும். இதுவே அடியேனின் சிறுவிருப்பம். அதை என் தகப்பன் செய்துகொடுத்தால் போதும்'' என்று கூறிச் சிரித்தார் அடியார்.

நம்மால் பதிலுக்குப் புன்னகைக்கக்கூட இயல வில்லை. `இறைவா! எங்களுக்கும் இவரைப் போன்ற பரந்த உள்ளத்தைத் தரக்கூடாதா...' எனும் ஏக்கம் நிறைந்த வேண்டுதல் மனத்தில் எழ, பெரும் விம்முதலோடு விடைபெற்றோம்.

- அடியார்கள் வருவார்கள்....

பிள்ளையார் சுழி ஏன் தெரியுமா?

`ஓம்’ எனும் ஓங்கார எழுத்தின் தனித்தமிழ் வடிவம், ஏறத்தாழ யானை முகத்தின் வடிவம் போலக் காணப்படும்.

ஓங்கார ஒலியைக் காதால் கேட்கலாம்; அதை எழுதினால் கண்ணுக்குப் புலனாகும். காதால் கேட்பது நாதம்; கண்ணுக்குப் புலனாவது விந்து. நாத தத்துவத்தை வரி (கோடு) போலவும் விந்து தத்துவத்தை புள்ளியிலும் அமைப்பது உண்டு.

புண்ணிய புருஷர்கள்! - 13

இரண்டும் சேர்ந்ததே, ‘உ’ என்கிற பிள்ளையார் சுழி ஆகும்.

நாதமும் விந்துவும் ஒன்றுக்கொன்று துணை (சான்று) நிற்க வேண்டும். இதில், சான்று எனும் பதத்தைக் ‘கரி’ என்றும் சொல்வர். ஆக, உமை வடிவாகிய ‘சுழி’ வடிவமும், சிவசக்தி சான்றாகிய ‘கரி’ வடிவமும் கொண்டு நிற்கும்போது, கணபதியின் வடிவாகிய ஓங்காரம் தோன்றும்.

எனவேதான், ஏதேனும் எழுதத் தொடங்கு முன், ஒரு சுழியும் கோடும் இடுகிறோம். தமிழ் உயிர் எழுத்துகள் அனைத்தும், சுழியை அடிப்படையாகக் கொண்டவையே! பிரணவத் துக்கும் ஒலி வடிவமும் வரி வடிவமும் உண்டு. வரி வடிவாக விநாயகரின் திருவுருவும், ஒலி வடிவாக அவரது ஆற்றலும் திகழ்கின்றன.

- அ.கிருஷ்ணன், சென்னை-20