மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள்! - 14

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள்

வைத்தியநாதனின் சிவகைங்கர்யத்தில் அவரின் தாய், துணைவியார், இரு மகன்கள் ஆகியோரும் இணைந்து செயல்படுகிறார்கள்.

ல்லா உயிரிலும் ஈசனைக் கண்டு அன்புகொண்டு வாழ்வதே சைவ சமயத்தின் அடிப்படை. செல்வ வளம் குறைவாக இருந் தாலும், இருப்பதைக்கொண்டு நிறைவாக வாழ்ந்து அறவழியில் பொருளீட்டி, தன் குடும்பத்தையும் சுற்றத்தையும் காத்து, சிவப்பணி செய்வதே அடியார்களின் இலக்கணம். எப்போதும் சிவத்தைப் பற்றியே எண்ணுவதும், பேசுவதும், சிந்திப்பதும், தொழுவதும் என்று இருப்பவரே அடியார். தன்னை வசை பாடினாலும் இசைபட வாழ்த்தினாலும் எந்த பாதிப்புக்கும் உள்ளாகாதவரே... புற அடையாளங்களைவிட அகத்தைத் தூய்மையாக்கி அடுத்தவருக்குத் தொந்தரவு தராத வாழ்க்கை வாழ்பவரே சிறந்த அடியார். அந்த வகையில், வைத்தியநாதன் என்ற இந்த அடியார் நமக்கெல்லாம் வழிகாட்டி எனலாம்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே குமாரபாளையத்தில் வசித்துவரும் இந்த அன்பர், சிவப்பணிக்காக அள்ளிக்கொடுக்கும் வள்ளல். தலைமுறை தலைமுறையாகச் சித்த மருத்துவப் பொருள்களை விற்பனை செய்துவரும் குடும்பம் இவருடையது. இவரும் பூஜைப் பொருள்கள், சித்த வைத்தியப் பொருள்கள், மூலிகைகள் விற்கும் நாட்டு மருந்துக் கடையை நடத்தி வருகிறார். இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா...

தான் தினமும் ஈட்டும் பொருளில் 300 ரூபாயைச் சிவ கைங்கர்யப் பணிகளுக்காக எடுத்துவைத்துவிடுவார். ஓரளவு பணம் சேர்ந்ததும் ஆலயத் திருப்பணி நடைபெறும் தலங்களுக்கு அந்த பணத்தைக் கொடுத்துவிடுவாராம். அதுமட்டுமல்ல, சுற்று வட்டாரத்தில் கவனிப்பாரற்றுத் திகழும் சிவாலயங்களுக்கு எண்ணெய், திரி, அபிஷேகப் பொருள்கள், நைவேத்தியம் செய்ய மளிகைப் பொருள்கள், `யாக' ஆகுதிப் பொருள்கள் ஆகிய வற்றையும் தன்னால் இயன்றவரை இலவசமாகக் கொடுத்துவருகிறார். சுமார் 15 ஆண்டுகளாகத் தொடர்கிறது இவரின் இந்தத் திருப்பணி.

வைத்தியநாதனின் சிவகைங்கர்யத்தில் அவரின் தாய், துணைவியார், இரு மகன்கள் ஆகியோரும் இணைந்து செயல்படுகிறார்கள். சிவதீட்சை பெற்று அனவரதமும் அரனின் நினைவாகவே வாழும் இந்த அடியார், தென்னாடு முழுக்க பல சிவாலயங்களை தரிசித்தவர்; காசிக்கும் சென்று வந்துள்ளார்.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

இவரின் தந்தையார் வள்ளலாரின் வழியில் வாழ்ந்த அறநெறியாளர். அவர் காலத்திலேயே, ஓர் உண்டியலில் பணம் சேர்த்து அதை அறப் பணிகளுக்குச் செலவு செய்வார்களாம். இவரும் அதை விரிவுபடுத்தி செய்துவருகிறார். சொந்த வீடுகூட இல்லாத இந்த அடியார், பொருள் சேர்க்கும் ஆசையே இல்லை என்கிறார். ‘`எல்லாமே இறைவன் கொடுத்தது. அதில் எதை நமக்கென்று வைத்துக்கொள்வது’' என்று சொல்லி சிரிப்பவர், அடியார்கள் எந்த உதவி கேட்டாலும் உடனடியாகச் செய்து கொடுத்துவிடுவாராம்.

‘`ஈசனைவிடவும் ஈசனின் அடியார்கள் என் வழிபாட்டுக்குரியவர்கள். நடமாடும் சிவமாகிய அடியார்களைக்கொண்டாடுவதே பெருமைக்கு உரியது’' என்கிறார்.

``அடியார்களுக்கு அவ்வளவு மகிமையா...'' என்று கேட்டால், ``பெரிய புராணமே அடியார்களை அலட்சியப்படுத்தியதால் விளைந்ததுதானே ஐயா'' என்று சிரித்த வைத்தியநாதன், அதுபற்றிய விவரத்தைப் பகிர்ந்துகொண்டார்...

``ஒருமுறை, சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் தேவாசிரியன் மண்டபத்தில் கூடியிருந்த சிவனடியார்களைக் கவனிக்காமல் திருக்கோயிலுக்குள் சென்றார். அவரின் அந்தச் செயல், அடியார்களை அலட்சியப்படுத்துவதாகப் பட்டது விறன்மிண்ட நாயனாருக்கு.

ஆகவே, சுந்தரரையும் அவருக்கு அருள்செய்த தியாகேசரையும் சினந்து ‘இவனும் புறகு; இவனை ஆண்ட சிவனும் புறகு’ என்று ஒதுக்கினார். அதனால் பதைபதைத்துப்போன சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஈசனிடம் மனம் உருகி, ‘அடியேன், இவ்வடியார்க்கெல்லாம் அடியானாகும் நாள் என்று’ எனக் கேட்டு வேண்டினார்.

தியாகேசப் பெருமான் ‘அடியார் புகழே என் புகழ்’ என்றருளி `தில்லைவாழ் அந்தணர்' என அடியெடுத்துக்கொடுத்தார். மகிழ்ந்துபோன சுந்தரமூர்த்தி சுவாமிகள் `தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்...' எனத் தொடங்கி, மடைதிறந்த வெள்ளமாய் திருத்தொண்டத் தொகையைப் பாடியருளினார்.

63 நாயன்மார்களை மட்டுமன்றி, `ஒன்பது தொகை அடியார்கள்' என்ற திருக்கூட்டத்தின் வழியே, உலக மாந்தர் அனைவரையும் அடியார்களாக்கி `அவர்களுக்கும் அடியேன் நான்' என்று முடித்தார் சுந்தரமூர்த்தி நாயனார். அவரே சகலருக்கும் அடியார் என்றால், இந்தக் கடையேன் எம்மாத்திரம்! இப்படி, இறைவனே தன்னுடைய அடியார்களைக்கொண்டாடும் அன்புப் பிரவாகம் வேறெங்கும் காண முடியாத அனுபவம். அந்தச் சிறப்புமிக்க அடியார்களுடன் இந்தக் கடையேனையும் வைத்து எழுதாதீர்கள். நான் செய்வது சிறிய கைங்கர்யம். இதை செய்விப்பவர் ஈசன். குடும்பமும் தேவைகளைப் பெருக்கிக்கொள்ளாமல் என்னோடு ஒத்துழைப்பு கொடுப்பதால் ஏதோ செய்துவருகிறேன்'' என்றார் நெகிழ்ச்சியோடு.

ஆலயத் திருப்பணிகளுக்கு மட்டுமல்ல, இயற்கையை ஆராதிக்கும் அருள்பணிக்கும் இவர் உதவி செய்துவருகிறார். திருக்குளங்கள் சீரமைப்பு, மரங்கள் வளர்த்தல், கோசாலைகளைப் பராமரிப்பது போன்ற பணிகளுக்கும் உதவிகள் செய்கிறார். இயற்கையை நேசிப்பதே ஈசனை நேசிப்பதற்குச் சமமானதுதானே. ஒவ்வோர் அணுவிலும் அசைந்துகொண்டிருக்கும் சிவத்தைப் பரமானந்த நிலையில் தொழுபவர் இவர் என்றே சொல்ல வேண்டும்.

``இறைப்பணிக்காக என்று நீங்கள் எடுத்து வைக்கும் பணத்தை, உங்கள் சொந்த தேவைக்காக எப்போதாவது எடுத்துக்கொண்டது உண்டா...'' என்று கேட்டோம்.

லௌகீகத்தில் உழலும் நமக்கு அப்படித்தானே கேட்கத் தோன்றும். அதற்குப் பளிச்சென்று பதில் வருகிறது அடியாரிடமிருந்து.

“அப்படியொரு நிலையை இதுவரை ஈசன் எனக்கு அளித்ததில்லை. அதற்கும் நாயன்மார்களே வழிகாட்டியாக இருக்கிறார்கள். அடியார்களுக்கு அமுது செய்வதற்காக வைத்திருந்த பொருளை செலவு செய்த உறவினர்களைத் தண்டித்த கோட்புலி நாயனாரைப் படித்திருக்கிறோமே ஐயா...'' என்கிறார்.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

`‘ `குற்றமற பின்கொடுப்போம்’ என்பதும் வழக்கம்தானே ஐயா...'' என்று நாம் கேட்டோம்.

ஆண்டவனுக்கு என்று எடுத்துவைத்த பொருளை வேறோர் அவசியத்துக்காக எடுக்க வேண்டிவந்தால், அந்தக் காரியத்தின் தீவிரத்தை வைத்து ஐந்து அல்லது பத்து மடங்காகத் திரும்ப கொடுத்துவிடுவதையே `குற்றமற பின்கொடுத்தல்' என்பார்கள். இதை மேற்கோள்காட்டி நாம் கேள்வி கேட்க, அற்புதமாய் ஒரு பதிலைச் சொன்னார், அடியார் வைத்தியநாதன்.

``வழக்கம், நடைமுறை என்று சொல்லி எந்தவொரு குறுக்கு வழியும் ஆண்டவனிடம் காட்டக் கூடாது ஐயா. பொருளாசை நரகத்துக்கு உந்தித் தள்ளும் ஒரு வாகனம். `ஆண்டவனுக்கானது ஆண்டவனுக்கே' என்ற நிலையே எங்களுடையது. பணம் கண்டுபிடித்தவனே அதற்கு அடிமை ஆகக் கூடாது ஐயா'' என்றவர், தொடர்ந்து... “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தோடு ஈரோட்டிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றுகொண்டிருந்தோம். நான் முன் இருக்கையில் அமர்ந்திருக்க, குடும்பத் தினர் பின் சீட்டில் அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தனர்.

எதிர்பாராதவிதமாக எங்களின் கார் ஒரு லாரியின் மீது மோதியது. `இனி எங்கள் நிலை அவ்வளவுதான்' என்றே அந்தக் கணத்தில் முடிவு செய்தேன். ஆனால், எம்பெருமான் ஈசனின் கருணை... சிறு காயம்கூட இல்லாமல் அனைவரும் தப்பிப்பிழைத்தோம். இப்படி ஒவ்வொரு தருணத்திலும் எங்களை உடனிருந்து அந்தச் சிவம் காத்துவருகிறது.

எப்படியான துயரங்கள் வந்தாலும் அடியார்கள் வடிவில் அந்த ஆண்டவனே வந்து எங்களை ஆறுதல்படுத்துகிறார். இறையாட்சி ஒன்றே எங்களை வாழ்விக்கும் முறையாட்சி என்பதை உணர்ந்துகொண்டோம். ஈசனின் திருவடிக்கும் அவரின் அடியார்கள் திருவடிக் கும் என்றென்றும் சேவை செய்து வாழ்வோம். அதுவே பிறவிப்பயன். அதற்காகத்தான் அன்று ஈசன் எங்களைக் காப்பாற்றினார் என்று மனமார நம்புகிறோம் ஐயா” என்று கண்கலங்குகிறார் வைத்தியநாதன்.

சக உயிர்களை நேசிப்பதே சைவ வழிபாடு. அதையே திருமுறைகள் கூறுகின்றன. சைவ நெறியில் திளைப்பவருக்குத் தனக்கு என்ற எண்ணமே வராது. எத்தனையோ பேர் சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்கிறார்கள். எதையும் எதிர்பாராது தொண்டாற்றும் அடியார்களால்தான் நமது தர்மம் வாழ்கிறது; வளர்கிறது.

அன்றாடம் தான் பிடிக்கும் மீன்களில் நல்லதொன்றைச் சிவபெருமானுக்கு அர்ப்பணமாக விட்டுவிடுவது அதிபத்த நாயனாரின் வழக்கம். ஒற்றை மீன் மட்டுமே கிடைத்த நாளிலும் அதையும் சிவனுக்கு அர்ப்பணித்துவிட்டு வறுமையில் வாடியவர் அதிபத்தர்.

`அதிபத்தர்' என்றாலே சிறந்த பக்தர் என்றுதானே பொருள். எப்போதும் எந்த நிலையிலும் இறைத்தொண்டு செய்து வாழும் எல்லோருமே அதிபத்தர்தான் என்றால் இந்த அடியாரும் ஓர் அதிபத்தர்தான்!

- அடியார்கள் வருவார்கள்...

பேசும் குருவும்... பேசா குருவும்...

குரு(பிரஹஸ்பதி) என்பவர், வடக்குத் திசை பார்த்தபடி நமக்குக் காட்சி தருபவர். குரு தட்சிணாமூர்த்தி, தென் திசை பார்த்தபடி அருளுபவர்; தேவர்களின் தலைவனாக திகழ்பவர்; குருவுக்கும் குருவானவர்! குரு பகவான் (பிரஹஸ்பதி) மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான வாமனருக்கு ஆசிரியராகத் திகழ்ந்தவர் என்கின்றன புராணங்கள். குரு தட்சிணாமூர்த்தி, சனகாதி முனிவர்களுக்கு பேசாமல் மௌனமாக இருந்தே பேருண்மையை உபதேசித்து அருளினார் என்கின்றன புராணங்கள்! பிரகஸ்பதியை பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர் எனப் போற்றி வணங்குகிறோம். ஆனால், தட்சிணாமூர்த்தியை, சிவாம்சமாகவே வழிபடுகிறோம்.

குரு
குரு

'யோகஸ்ய ப்ரதமம் த்வாரம் வாங்நிரோத' என்கிறார் பதஞ்சலி முனிவர். அதாவது, 'மனிதனுக்கு யோகம் ஸித்திக்க வேண்டும் எனில், அதன் முதல் பயிற்சியான மௌனத்தைப் பழக வேண்டும்' என்கிறார். ஆனால் இந்த உலகில், சாதாரணர்களாகிய நாம், எதையுமே பேசித்தான் செயல்படவேண்டியிருக்கிறது. ஆகவே, உலகாயத வாழ்வில், முதலில்... பேசும் குருவை வணங்கிப் பிரார்த்தித்துவிட்டு, அடுத்து, மௌன குருவை, தட்சிணாமூர்த்தியை வணங்கிப் பேரருளைப் பெறுவோம்!

- எஸ். முநீஸ்வர சாஸ்திரி