மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 15

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள்

திருப்பணிகளைப் பற்றிக் கேட்டால் சிரித்தபடி, ``எல்லாம் ஈசன் அருளும் குருவின் அருளும்தான் காரணம்.

`இல்லறமல்லது நல்லறமன்று’ என்று போதித்தார் ஒளவை. `இல்லறத்தில் இருந்துகொண்டு அடியார்களுக்கு சேவை செய்துவரும் வாழ்க்கையே மகத்தானது' என்று நம்முடைய தர்ம நூல்களும் எடுத்துரைக்கின்றன. சிறுதொண்டரும், இளையான்குடி மாறனாரும், அப்பூதி அடிகளும் இல்லறத்தொண்டர்களுக்கு நல்வழிகாட்டிகள். அப்படி குடும்பமே இணைந்து இறைவனுக்கும் இறைவனின் அடியார்களுக்கும் தொண்டு செய்து வாழ்வது என்பது பெரும்பேறு. அப்படி ஒரு மனமொத்த அடியார் தம்பதியைத்தான் இப்போது காணவிருக்கிறோம்.

வேலூர் மாவட்டம் வாலாஜா அருகில் வன்னிவேடு பகுதியில் மோட்டூரில் வசிக்கும் கோ.சிவசாமி - செல்வி தம்பதி 20 ஆண்டுகளாக ஈசனின் தொண்டே தங்கள் வாழ்க்கை என்று வாழ்ந்துவருபவர்கள். தாங்கள் மட்டுமன்றி, சுமார் 50 அடியார்கள்கொண்ட ஓர் உழவாரத் திருப்படையை உருவாக்கி, அதன்வழியே பல ஆலயங்களில் உழவாரப் பணிகளைச் செய்துவருகிறார்கள். இவர்களோடு இவர்களின் இரு மகள்களான வர்த்தினியும் ஸ்வேதனாவும் இணைந்து சிவப்பணியைச் செய்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் பட்டுத்தறி நெய்யும் தொழிலை மேற்கொண்டு நல்ல வருமானத்துடன் வாழ்ந்து வந்த இவர்கள், சைவ நெறியை தங்களது பாதையாக மேற்கொண்டவுடன், அந்தத் தொழிலை விட்டு வெளியேறினர். கடுமையான வறுமையிலும் ஈசனைப் பற்றிக்கொண்டு சைவ நெறிப்படி வாழ்ந்துவந்தார்கள். இப்போது சுமைகளை ஏற்றும் ஒரு வாகனத்தை வாங்கி அதை ஓட்டிப் பிழைப்பு நடத்து கிறார்கள். ஞாயிறுதோறும் உழவாரப் பணிகள், வள்ளி மலையில் 300 சாதுக்களுக்கு அன்னதானம் வழங்குதல், அடியார்களுக்குச் சுக்கு காபி, பால் வழங்குதல் என இவர் களின் இறைப்பணிகள் நீண்டுகொண்டே போகின்றன.

திருப்பணிகளைப் பற்றிக் கேட்டால் சிரித்தபடி, ``எல்லாம் ஈசன் அருளும் குருவின் அருளும்தான் காரணம். இந்தத் தொண்டுகள் யாவும் தனிப்பட்ட எங்கள் குடும்பத்தின் கைங்கர்யம் கிடையாது ஐயா. எங்களோடு இணைந்திருக்கும் அடியார்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் பணிகள்தாம். நந்தி அறக்கட்டளை போன்ற அமைப்புகளும் எங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருகிறார்கள். இதைத்தாண்டி எங்களுடைய தனிப்பட்ட பணியென்றால், அது திருமுறைகள் ஓதுவது மட்டுமே.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

எங்கள் வீட்டில் ஊரில் மட்டுமன்றி விருப்பப்படும் அடியார்கள் வீட்டுக்கும் சென்று அவர்கள் குறைகள் தீர திருமுறைகளை ஓதிவருகிறோம். திருமுறைகளில் இல்லாத தீர்வுகள் இல்லவே இல்லை. நோய்கள் தீர்க்கும், செல்வ வளம் சேர்க்கும், பகை விலக்கும், பாவம் போக்கும்... இப்படி எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தருவன திருமுறைகள் மட்டுமே ஐயா. 12 திருமுறைகளையும் நமக்குத் தந்த 27 தேவாசிரியர்களையும் நாள்தோறும் வணங்கிவிட்டே எங்கள் நாள்களைத் தொடங்குகிறோம். எந்த நாளும் எதற்காகவும் எங்களை கைவிட்டதே இல்லை எங்கள் ஈசனும் அவர் புகழ்பாடும் திருமுறைகளும்'' என்கிறார், சிவசாமி.

``திருமணமாகி நீண்டகாலமாக குழந்தை செல்வம் இல்லாமல் வாடிவந்தோம். பர்வதமலைக்கு விடாமல் சென்று ஈசனின் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. முன்ஜன்ம வினையோ என்னவோ அந்தக் குழந்தை காலமாகி விட்டது. பிறகும் பர்வதமலை ஐயனை விடாமல் தொழுத பலனால் குழந்தைப்பேறு உண்டாகி, வேலூரில் ஓர் ஆலயத்தில் பெரியபுராணம் கேட்டுக்கொண்டிருந்த வேளையில் மூத்த மகள் பிறந்தாள். அடுத்த மகள் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் அருளால் பிறந்ததால் `ஸ்வேதனா' என்றானார்'' என்று சிலிர்த்துப் பேசுகிறார் சிவசாமி ஐயா.

``இல்லறத்தில் இருப்போர் இறைவனை நாடுவது என்பது கொம்புத்தேன்தானே ஐயா... பந்தம், பாசம், பொருள் தேடல், பிள்ளைகளுக்கான உடமைகள் என்று எத்தனை கட்டுகள்... இவற்றையெல்லாம் தாண்டி இறை தேடல் சாத் தியமா'' எனறு கேட்டால், சிரிக்கிறார் குருசாமி.

``இல்லறம் என்பது உற்றார் உறவுகளுக்கு மட்டுமே வாழக்கூடிய வாழ்க்கை இல்லை என்று பெரியபுராணம் எடுத்துக்கூறுகிறது. இந்த உலக உயிர்களுக்காக வாழும் வாழ்க்கையே சைவ நெறி வாழ்க்கை என்றும் சொல்கிறது. கெளபீனக் கள்வராக... சிவனடியார் வடிவில் வந்த சிவனாரின் ஒற்றைக் கெளபீனத்தைத் தொலைத்த குற்றத்துக்காக தன் மனைவி, மக்கள், செல்வங்கள் அத்தனையும் தராசு தட்டில் ஏற்றி இறவாப்புகழ் கொண்டாரே அமர்நீதி நாயனார், அவர் வாழ்ந்ததே இல்லறம்.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

எதுவுமே ஒரு கெளபீனத் துணிக்கு ஈடாகாத நிலையில் ஐந்தெழுத்தோதி, திருநீற்றைத் துளி அளவு தராசில் இட்டு, அந்தச் சிவனடியாரையே வணங்கி, ‘சிந்தை செய்வது சிவன் கழலல்லது ஒன்றில்லை, நாங்கள் இழைத்த அன்பில் இறை திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோம் என்றால் இத்தராசின் தட்டு சமமாக நிற்பதாகுக...இது சிவனடியார்கள் மீது ஆணை!’ என்று கூறி அத்தனையும் துறந்து நின்றாரே அமர்நீதியார் அதுதானய்யா பக்தி.

அதனால்தான் அந்தத் தராசு தட்டே புஷ்பக விமானமாகி சிவலோகத்துக்கு அவர் களைக் கூட்டிச் சென்றது. அப்படி வாழ வேண்டும் இல்லறத்தார். நாங்கள் அத்தனை பேறு பெற்றவர்கள் இல்லை ஐயா. ஏதோ எங்களால் முடிந்த தொண்டினைச் சிவனின் கருணையால் செய்துவருகிறோம்.

நாங்கள் எல்லோருமே அன்றாடங் காய்ச்சிகளே. எனினும், சிவனே எங்களுக்கு வழிகாட்டுகிறார் எனும்போது எங்களுக்கு என்ன கவலை ஐயா. எங்கள் யாருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எந்தச் சொத்துபத்தும் எங்களுக்கில்லை. தேவையுமில்லை. ‘செல்வமே... சிவபெருமானே! என்று மாணிக்கவாசக சுவாமிகள் சொல்லியதைப் போல சிவமென்ற செல்வமே போதும். வருமானம் இல்லாமல் வறுமையில் வாடியபோது, இந்த வாகனத்தை வாங்கிக்கொடுத்து வழிகாட்டியது அடியார்கள் உருவில் வந்த என் ஈசன்தான். எங்கள் வாகனத்தின் பெயரே ‘திருச்சிற்றம்பலம்’தான். உழவாரத் திருப்பணிக்கு இந்த வாகனம்தான் எங்களைச் சுமந்து செல்கிறது.

ஆரம்பத்தில் எங்கள் குழுவில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இணைந்து தொண்டுகளை செய்து வந்தோம். ஆனால், இடையில் வேறோர் அடியார் தலைமையேற்று பல அடியார்களை அழைத்துச் சென்றுவிட்டார். செய்ய வேண்டிய பணிகள் அப்படியே நிற்க, தவித்துப் போனோம்.

அப்போதும் சுவாமியிடம் கண்ணீர் மல்க முறையிட்டோம். குருவின் வடிவாக ஆறுதல் கொடுத்தார் சுவாமி. யார் தலைமையில் நடந்தால் என்ன, திருத்தொண்டு எங்கோ நடந்தால் சரி, கவலையை விடு. இந்தப் பணிகளுக்கான அடியார்கள் குழு விரைவில் சேரும் என்றார். அப்படியே மெள்ள மெள்ள புதிய அடியார்கள் பலரும் சேர்ந்தனர். இப்போது உழவாரத் திருப்பணியை எங்கள் தலையாயப் பணியாகச் செய்து வருகிறோம். எல்லாம் ஈசன் கருணை.

அனுபவித்தால் மட்டுமே உணரக்கூடிய இன்ப நிலை இந்தத் திருத்தொண்டு ஐயா. நாயினும் கடையனான என்னை ஆட்கொண்டு வழிநடத்தி வரும் சுவாமியின் திருத்தாளை எந்நாளும் விடமாட்டோம். அவர் ஒவ்வொரு நாளும் விதவிதமான அருளாடல்களை நடத்தி கருணையால் எங்களைக் கசிந்துருக வைக்கிறார்.

கருவறையில் இருக்கும் லிங்கத் திருமேனி மட்டுமே கடவுள் இல்லை; திருத் தொண்டும் எங்களுக்குக் கடவுள். அடியார்களும், திருத் தொண்டும், திருமுறை களுமே தெய்வ வடிவங்கள். எங்கும் எதிலும் எப்போதும் இருக்கும் ஈசனை வாயாறத் துதிப்பது மட்டுமே எங்கள் வழிபாடு.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

பொருளாதாரக் கஷ்டமே இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். யாருக்கு என்ன தேவையோ அதை உடனே கொடுத்துவிடுகிறார் சுவாமி. யாரிடமும் கையேந்த வேண்டிய நிலையை எங்கள் திருவாரூர் தியாகேசன் கொடுத்ததே இல்லை. பித்தனாகவும் பிட்சாடனாகவும் திருவிளையாடல்கள் நடத்திய பெருமான், எங்களை ஒரு குறையுமில்லாமல் தாயாக நின்று காத்து வருகின்றார்'' என்று நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டவர், மேலும் தொடர்ந்தார்.

``பார்த்ததை மனம் நம்புவதைப்போல கடவுளை நம்பவேண்டும். அங்கு கேள்விகள் எழும்பவேண்டிய அவசியமே இல்லை. கடவுளை மறுக்கும் எல்லா வாதங்களுக்கும் திருமுறை களில் அழுத்தமான பதில் இருக்கிறது. கரையில் இருந்துகொண்டு நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. எங்கோ இருந்துகொண்டு இறைவனை அறிந்துகொள்ள முடியாது. திருமுறைகளை படித்துவிட்டுச் சொல்லுங்கள் ஆன்மிக அனுபவம் என்னவென்பதை. ஆலயத்திலிருந்து அமைதியை எடுத்துக்கொள்ளுங்கள்; புராணத்திலிருந்து தத்துவங்களை எடுத்துக்கொள்ளுங்கள்; திருமுறை களிலிருந்து வாழ்க்கை நெறியை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வளர்ச்சி விரைவாகும்; வாழ்க்கை இதமாகும்.

ஆன்மிகத்தை மறுக்கும் அறிவியல் வெறும் ஆரவாரக் கூச்சல் மட்டுமே. ஆன்மிகத்தை ஒதுக்கி விட்டு எதுவுமே இயங்க முடியாது. கடவுள் இல்லை என்று மறுப்பவர்களுக்குக்கூட பணமோ, பதவியோ, புகழோ கடவுளாகவே தெரிகின்றன. இருக்கட்டும்... எங்களுக்கு ஈசன் போதும் ஐயா'' என்று தத்துவமாகப் பேசுகிறார்.

``இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இனி பிறந்தாலும் இந்தத் தென்னாட்டில் பிறந்து ஈசனின் திருவடிக்கு அவர்தம் அடியார்கள் திருவடிக்கு சேவை செய்ய வேண்டும் அதுவொன்றே எங்கள் விருப்பம்'' என்று இணைந்து சொல்கிறார்கள் இந்தத் தம்பதி.

தனக்குள் இறையை உணராதவர் வேறெங்கு சென்றாலும் உணரமாட்டார். `காற்றைக் கட்டலாம்; அலையை நிறுத்தலாம்; ஆகாயத்தில் பறக்கலாம் - மனத்தைக் கட்டிவிட்டால்' என்றார்கள் சித்தர்கள். மனத்தைக் கட்டி விருப்பங் களைக் குறைத்து, போதுமென்ற மனதோடு வாழும் இந்த அடியார் தம்பதி வணங்கப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, நம் வாழ்க்கைக்கு உதாரணமானவர்களும்கூட.

- அடியார்கள் வருவார்கள்...