மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 16

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள்

`பாடும் எனை நீ பாடவைத்தாயே...'

ல்லாமுமாக இருக்கும் ஈசன், இசை வடிவில் இன்பமளிப்பவராகவும் இருக்கிறார். அதனாலேயே இசைக்கு முக்கியத்துவம் அளித்து அநேக திருவிளையாடல்களை அருளினார். ஈசனைப் போற்றிப் பாடுவதே தன் பிறவிப் பயன் என்று வாழ்ந்த பாணபத்திரருக்காக, அவரின் இசை தோற்றுப் போகக் கூடாது என்பதற்காக, வேகாத வெயிலில் விறகு சுமந்தாரே அந்த சோமசுந்தரக்கடவுள், அது ஒன்று போதும் ஈசன் இசைக்குப் பிரியமானவன் என்பதை உணர.

பாணபத்திரர் நின்று பாடுவதற்காக ஈசன் பலகை இட்டதும், அவர் பொருட்டு பாண்டியன் கருவூலத்திலிருந்து செல்வங்களைக் கவர்ந்துகொடுத்ததும், சேரமான்பெருமானிடம் பாணபத்திரருக்காகத் திருமுகம் கொடுத்துப் பொருளுதவி கோரியதும், இசையின் மகத்துவத்தை உணர்த்தும் ஈசனின் திருவிளையாடல்கள் அல்லவா. சமயக்குரவர் நால்வரும் ஈசனைப் பாடி அதன் மூலம் நடத்திய அற்புதங்கள் எத்தனை எத்தனை..!

அன்று மட்டுமல்ல, நிகழ்காலத்திலும் பதிகங்களைப் பாடுவதால் நடந்த - நடக்கும் அதிசயங்கள் அநேகம். ஓதுவாமூர்த்திகளும், சைவ சிவாசார்யர்களும் மட்டுமே பதிகங்கள் பாடி ஈசனை வழிபட்ட காலம் மாறி, இன்று இளைஞர்களும் குழந்தைகளும் ஆலயங்கள் எங்கும் பதிகங்கள் பாடி நம்மைப் பரவசப்படுத்தும் நிலையைக் காண்கிறோம்.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

பதிகம் ஓதுவதையே தனது பக்தி மார்க்க மாகக்கொண்டிருக்கும் ஷண்முகப்பிரியா இதில் குறிப்பிடத்தக்கவர். ஆம், இவர் பேசத்தொடங்கியபோதே பதிகங்கள் பாடத்தொடங்கிவிட்ட ஞானக்குழந்தை. ஐந்து தலைமுறைகளாக ஈசனைத் தொழும் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஷண்முகப்பிரியா. இவருடைய வாழ்வும் வழிபாடும் வளரும் குழந்தைகளுக்கு ஒரு பாடம் எனலாம்.

‘`சூரியனை ஒதுக்கிவிட்டு எப்படி வாழ முடியாதோ... அப்படிப் பதிகங்களை ஒதுக்கிவிட்டு வாழ்வதும் அடியார்களுக்குச் சாத்தியமில்லை ஐயா. அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் திருமுறைப் பாடல்கள். அவற்றை வைத்துக்கொண்டே, `அதை கொடு... இதை கொடு' என்று வெளியே யாசித்துக்கொண்டிருக்கிறோம். எந்தக் குறையானாலும், எந்தத் துன்பமென்றாலும் திருமுறைகளில் தேடுங்கள்; தீர்வுகள் உண்டு. பதிகத்தைப் படிப்பதைவிடவும் பாடுவது கூடுதல் பலன் அளிக்கும்'' என்கிறார் ஷண்முகப்பிரியா.

`மகிமைமிகு பஞ்ச புராணம்' ஷண்முகப்ரியாவின் இனிய குரலில் வீடியோ உங்களுக்காக...

இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் காஞ்சி மாநகரில். கச்சபேஸ்வரர் ஆலயத்து மாடவீதியில் ஆலயத்துக்கு எதிரேயே ஓடி விளையாடிய இந்தக் குழந்தை, ஈசனையே தாயாக தந்தையாக பாவித்து வளர்ந்தது. பிறப்புக்கான தாய் தந்தையராக முருகவேலன் - ஜெயந்தி அமைந்தனர். முருகவேலன் காஞ்சியில் வணிகம் செய்துவருகிறார். தாயார் குடும்பத்தலைவி.

சிறுவயதில் வீட்டில் உள்ளோர் பாடிய பதிகங்களே இவருக்குத் தாலாட்டாக அமைந்துவிட, பேசும்போதே பாடவும் தொடங்கிவிட்டார். நான்கு வயதிலேயே சிவாலயங்களில் பதிகங்கள் பாடவும் விழாக்களில் மேடைகள் ஏறிக் கச்சேரி செய்யவும் தொடங்கிவிட்டாராம்.

ஈசன்
ஈசன்

`முறைப்படி இவருக்கு ஒரு குருநாதர் அமைய வில்லையே' என்ற குறையையும் இவரின் பத்து வயதில் ஈசனே தீர்த்துவைத்துவிட்டார். நெய்வேலி சிவராஜபதி என்ற அற்புதமான குரு அமைந்தார். ஓதுவார் பண்ருட்டி ராமச்சந்திரனின் சீடரான நெய்வேலி சிவராஜபதி ஒரு மெய்ஞ்ஞானி என்றே சொல்லலாம். தமிழகம் முழுக்க நூற்றுக்கணக்கான ஓதுவார் மாணவர்களை உருவாக்கிப் பதிகங்களை எங்கெங்கும் பரப்பிவருகிறார்.

சிவபக்தியைப் போல் குருபக்தியும் அதிகம் கொண்டு, அவரிடம் பாடங்கள் கற்று திருமுறை ஓதுவாராக, சிவனருள்செல்வியாக உலா வருகிறார், ஷண்முகப்பிரியா. காஞ்சி, திருநெல்வேலி எனப் பல இடங்களில் கச்சேரிகள் செய்துவரும் ஷண்முகப்பிரியா அதற்காக எந்தப் பணமும் வாங்குவதில்லை. கொடுத்தாலும் அதை ஆலயத் திருப்பணிகளுக்காகக் கொடுத்துவிடுகிறார். தற்போது காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு படித்துவருகிறார்.

“இனி, வருங்காலத்திலும் ஷண்முகப்பிரியா எப்போதும் இந்தத் திருமுறைகளைப் பாடிக் கொண்டே இருக்கவேண்டும். அடுத்த தலைமுறைக் கும் இந்தத் திருமுறைகளைப் பண்ணோடு அளிக்க வேண்டும். ஷண்முகப்பிரியாவின் குருநாதர் விருப்பப்படி, தொடர்ந்து ஈசனுக்காக இவர் செயலாற்றவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதற்கேற்ப இவரின் எதிர்கால வாழ்வும் அருமையாக அமையவேண்டும். அதுவே எங்கள் வேண்டுதல். குருவருளும் திருவருளும் இதை நிறைவேற்றும் என நம்புகிறேன்” என்கிறார் இவரின் தாயார் ஜெயந்தி.

“அன்பர்களே பதிகம் பாடக் கூச்சப்படாதீர்கள். சுருதி விலகியோ, அபசுரமாகவோ, பிழையாகவோ, எப்படியானாலும் இன்றிலிருந்துப் பாடத் தொடங்குங்கள். ஈசன் அரூபமாக நின்று ஆசையா கக் கேட்பார். நல்ல குருவை அளித்து உங்களை ஆட்கொள்வார். மழலையை அழவைத்து, பாட வைத்து, திருஞானசம்பந்தராக்கிய கருணைக் கடல் ஈசன். அவரைப் பக்தியோடு பாடிக் கொண்டாடுங்கள். உங்கள் தேவையை அவர் உணர்ந்துகொள்வார். வேண்டியதை வேண்டுமுன்னே கொடுத்துவிடுவார்.

மெய்ம்மறந்து எந்த வேண்டுதலும் எதிர்பார்ப்பு மின்றி ஐயனைப் பாடிக்கொண்டே இருங்கள்; உங்கள் வாழ்வில் அத்தனையுமே மகிழ்ச்சியாக மாறும். 27 தேவாசிரியர்கள் அளித்த 12 திருமுறை களும் நமக்குப் பெரிய சொத்து. நாமே பாடல் இயற்றிப் பாடமுடியாது என்பதால்தான் பதிகங்கள் தோன்றின. காசில்லாத எளிய மக்களும் தொண்டு செய்ய பதிகங்களே சிறந்த வழி” என்று பரவசத்தோடு சொல்கிறார் ஷண்முகப்பிரியா.

“பதிகங்கள் பாடும் முறையென்ன...” என்று கேட்டால், புன்னகையோடு பதில் சொல்கிறார்.

“சில நெறிமுறைகளைச் சைவம் வகுத்துள்ளது. நீராடித் தூய ஆடை உடுத்து, வெண்ணீறு அணிந்து, உரிய பண்ணோடு ஈசன் முன்பு ஓதுதல் வேண்டும். ஒவ்வொரு கால பூஜையிலும் திருமுறைகள் ஓதப்பட வேண்டும். அந்தத் தலத்துக்கு உரிய பாடல்களைப் பாடுவது உயர்ந்த பலனைத் தரும்.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

திருமுறையைப் பாடத் தொடங்கும் முன்பும், பாடி நிறைவு செய்த பின்பும் ‘திருச்சிற்றம்பலம்’ என ஓதுதல் வேண்டும் (திருவாரூரில் இது வேண்டாம்). தேவாரம் பாடினால் பதிகம் முழுவதையும் பாடுவதே சிறப்பு. கால அவகாசம் இல்லாவிட்டால் பதிகத்தின் முதற்பாடலையும், நிறைவுப் பாடலையும் பாடலாம். அதேபோல் பன்னிரு திருமுறைகளிலிருந்தும் ஒரு பாடலை யாவது பாடுதல் சிறப்பு. அதனிலும் சிறப்பு `பஞ்சபுராணம்' பாடுதல்.

ஒரு தேவாரப் பாடல், ஒரு திருவாசகப்பாடல், ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பாவிலிருந்து ஒரு பாடல், திருப்பல்லாண்டில் ஒன்று, பெரியபுராணப் பாடல் ஒன்று என்று ஐந்து பாடல்களைப் பாடும் முறையே பஞ்சபுராணம் பாடுதல். 12 திருமுறைகளைப் பாடிய பலனை இந்த பஞ்சபுராணம் அளித்துவிடும்.

`பித்தா' என்று கூறி இகழ்ந்த சுந்தரரிடம் ‘எமக்கு அர்ச்சனையாவது பாட்டேயாகும்’ என்று கூறி, பாட்டையே தனக்கான விருப்பமாக திருவெண்ணெய்நல்லூர் பெருமான் கேட்க வில்லையா! `காரைக்கால் அம்மையார் தலையால் நடந்த காரணத்தால் திருவாலங்காட்டில் கால்வைத்து நடக்கமாட்டேன்' என ஊர் எல்லையிலேயே சம்பந்தர் தங்கிவிட்டார். அவரிடம், ‘ஆலங்காட்டு ஐயனைப் பாட மறந்தாயோ’ என ஈசனே பாடலைக் கேட்டு வாங் கினாரே! தருமிக்குப் பொற்கிழி கிடைக்க, தானே புலவனாக வந்து வாதிட்ட கருணை எல்லாம், ஈசன் பாட்டில் விருப்பமானவர் என்பதை உணர்த்தவன்றோ! ஒரு பதிகம் பாடி ஈசனைத் தொழுவதன் பலனை கபிலதேவ நாயனார் 11-ம் திருமுறையில் சொல்லியிருப்பதைப் பாருங்கள்.

‘நூறான் பயன் ஆட்டி நூறு மலர்சொரிந்து

நூறா நொடிவதனின் மிக்கதே நூறா

உடையான் பரித்தவெரி உத்தமனை

வெள்ளேறு உடையானைப் பாடலால் ஒன்று.’

100 பசுக்களின் பாலைக்கொண்டு செய்யும் அபிஷேகப் பலனும், 100 மலர்களைக்கொண்டு செய்யும் அர்ச்சனைப் பலனும், 100 மந்திரங்கள் சொல்லி ஜபிக்கும் பலனும் ஒரு பாடலைப் பாடி வணங்குவதற்குச் சமம் என்கிறார்.

எல்லாப் பொருள்களும் ஈசனுடைய படைப்பு எனும்போது நம்மால் முடிந்தது பதிகங்கள் பாடுவது மட்டுமே. பாடலோடு மனத்தைச் சமர்ப்பியுங்கள். மகேசன் மகிழ்ந்து போவான். சர்க்கரை, தானே இனிப்பதில்லை; வாயில் கரையும்போதுதான் இனிக்கிறது. பதிகங்கள், வாய் திறந்து எல்லோரும் பாடவே அருளப்பட்டுள்ளது. எல்லோரும் பாடுங்கள்; ஈசனைக் கொண்டாடுங்கள்'' என்கிறார் ஷண்முகப்பிரியா.

அவரிடம், ``பதிகம் ஒன்று பாடுங்களேன்'' என்று நாம் கேட்டதும் சிவஉணர்வு மேலோங்க, மெய்ம்மறந்து பாடத் தொடங்கினார். அந்தச் சிவத்தையே மனதில் எண்ணி, கண்ணீர்மல்கக் கசிந்துருகி, நா தழுதழுக்க அவர் பாடுவதைக் கேட்டும் கண்டும் சிலிர்த்துப்போனோம்.

பாடல் அருவியாகி, அதில் இறை உணர்வுப் பொங்கிப்பெருகி, அங்கு சுற்றியிருந்த அத்தனை உயிருக்குள்ளும் ஊடுருவி, என்னவோ செய்து, பலரையும் அழவைத்தது. அறிவு செயல் இழந்து, அத்தனை புலன்களும் செவியில் ஐக்கியமாகி சிவ உணர்வில் திளைத்த ஆன்மாக்கள் விம்மித்து நின்றன. நம்மைவிட்டு நாமே விலகி, நாதத்தின் வழியே நாயகனை தரிசித்த அற்புதத்துக்குத் திருமுறைகள் இட்டுச்சென்ற அனுபவத்தை அன்று அளித்தார் ஷண்முகப்பிரியா.

கேள்விகள் நின்றுபோன இடத்தில்தானே இறையனுபவம் கிடைக்கிறது. இசை கேட்டால் இறை அசைந்தாடும் அங்கே இனிய அனுபவம் உருவாகும் என்பதை உணர்ந்து விடைபெற்றோம்.

பதிகம் பாடுவது மட்டுமே தொண்டாகி விடுமா என்று உங்களுக்குத் தோன்றலாம். நாமும் அப்படியே எண்ணம்கொண்டிருந்தோம்; ஷண்முகப்ரியாவைச் சந்திக்கும் வரை. ஆனால், அவர் பாடுவதைக் கேட்டதும், அவர் மூலம் பதிகம் பாடுவதன் மகிமையை அறிந்ததும் `இதுவே பெரிய தொண்டு' என மகிழ்ந்தோம்.

ஆம், ஷண்முகப்பிரியா பாடும்போது அந்தப் பாடலாகவே மாறிவிடுகிறார். அதில் கேட்பவருக்கு சிவதரிசனம் மானசீகமாகக் கிடைத்துவிடுகிறது. இதைவிட வேறென்ன வேண்டும்!

- அடியார்கள் வருவார்கள்...

ஆராவமுதனுக்குக் கிடை அழகு!

கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி திருக்கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இதை உபயபிரதான திவ்விய தேசம் என்பர்.

தேவலோகப் பட்டணம், சிவ விஷ்ணுபுரம், மந்த்ராதி தேவதா ஸ்தானம், சாரங்கராஜன் பட்டணம், க்ஷேத்ர ஸாரம், ஒளிமயமான பட்டணம், பாஸ்கர க்ஷேத்திரம், குடமூக்கு, திருக்குடந்தை, தண்டகாரண்ய க்ஷேத்திரம் ஆகிய பெயர்கள் இந்தத் தலத்துக்கு உண்டு. லட்சுமிதேவியான கோமளவல்லிக்கும், ஸ்ரீசார்ங்கராஜனுக்கும் இங்கு திருமணம் நடைபெற்றதால், கல்யாணபுரம் என்ற பெயரும் இதற்கு உண்டு.

ஸ்ரீசார்ங்கபாணி
ஸ்ரீசார்ங்கபாணி

ஸ்ரீரங்கம் அரங்கன்- நடை அழகு; மதுரை- கள்ளழகர்- படை அழகு; ஸ்ரீவில்லிபுத்தூர் மன்னர்- தொடை அழகு; திருப்பதி வேங்கடவன்- வடிவழகு; திருநாராயணபுரம் நாராயணர்- முடி அழகு; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி- உடையழகு. அந்த வரிசையில் கும்பகோணம்- ஆராவமுதனுக்குக் கிடை அழகு (கிடை= பள்ளிகொண்ட கோலம்)

தாயார் மகாலட்சுமியின் அவதாரத் தலமாகக் கருதப்படுவதாலும் தமது இருப்பிடத்துக்கு வரவழைத்து மணம் புரிந்ததாலும் இங்கு ஸ்ரீகோமளவல்லித் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து புடவை சாத்தினால், பெண்களுக்கு திருமணப் பிராப்தம் கூடும் என்பது நம்பிக்கை.

- எம்.ஈஸ்வரி, மதுரை-2