திருத்தலங்கள்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 17

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள்

நம் நாகரிகம் புராதனமானது; முழுமையானது; எல்லோரும் அமர நிலையை எய்தும் நன்முறையை உலகுக்கு அளிக்கும் வல்லமை பெற்றது.

தற்குத் தேவையான பல யோக சாஸ்திர, வர்மக் கலைகளைச் சைவ நெறி நமக்கு வழங்கியுள்ளது. `ஆண்டவன் நம்முள் எப்போதும் வந்து தங்கும்படி நம்மைத் திறந்து வைத்திருக்க வேண்டும்' என்பார் மகாகவி பாரதி.

உற்சாகமான வாழ்க்கைக்கு நோயில்லாத உடல் வேண்டும். நோயற்ற உடலைப்பெற முறையான வாழ்க்கை வாழ வேண்டும். நோய் வந்தாலும் அதை மருந்தில்லா மருத்துவ முறையால் தீர்த்துக்கொள்ள வேண்டும். சித்தர்களும் சித்தர்களின் தலைவனான ஈசனும் இந்த உலகுக்கு வழங்கிய மருத்துவ முறைகள் அநேகம். அவற்றில் முக்கியமானது வர்ம சிகிச்சை.

ஆதிசிவனே மனிதர்களுக்குத் தேவையான அனைத்து வாழ்வியல் கலைகளையும் கற்றுக்கொடுத்த ஆசான். நாட்டியம், இசை, மொழி, வைத்தியம், தற்காப்பு, மருத்துவம்... என மனிதர்கள் சகலமும் பயின்றது அவரிடம்தான். அந்த வகையில் ‘வர்மம் எனும் மர்மக் கலையை மனிதர்கள் கற்றுக்கொண்டதும் சிவனிடமே’ என்கின்றன சித்தர்களின் நூல்கள். வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடி, நரம்புகள் மற்றும் உயிர் தங்கும் புள்ளிகளைப் பற்றிய அறிவை மையமாகக்கொண்டது.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

உடல் ஆரோக்கியமாக இயங்கக் காரணமான உடலின் 108 உயிர்நிலைகளே வர்மப் புள்ளிகள் என்று சித்த நூல்கள் கூறுகின்றன.

அவையே ஒரு மனிதன் உயிரோடு இருப்பதற்கும், இயங்குவதற்கும், நோய் நிலையை அடைவதற்கும், சுகமடைவதற்கும் அல்லது இறப்பதற்கும் காரணமாக அமைகின்றன. இந்த வர்மக்கலையில் பெரும்புகழ் பெற்று, அதையே அருமையான மருத்துவ முறையாக்கி ஏழை மக்கள் பலருக்கும் அளித்துவருகிறார் பாண்டியராஜன் என்ற ஓர் அடியார் என்று கேள்விப்பட்டோம். அவரைக் காண உடனே தேனி மாவட்டம் கம்பத்துக்கு விரைந்தோம்; சந்தித்தோம்; பேசினோம்.

“உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை வர்மம். சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, காலங்காலமாக நம் மூதாதையரால் கொண்டாடப்படும் உண்மைகளின் தொகுப்பு.

ஆதிசித்தனான சிவனே வர்மக்கலையை உருவாக்கினார் என வர்ம சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. ஒருமுறை ஈசனும் சக்தியும் பூவுலகின் தண்டகாரண்யத்தில் சுற்றிவரும்போது, அந்த வனத்தில் சிவபூஜை செய்துகொண்டிருந்த ஒரு முனிவர் மயங்கி விழுந்தார். உடனே ஈசன், தன் கையிலிருந்த பிரம்பால் முனிவரின் உடலில் குறிப்பிட்ட ஒரு வர்மத்தில் தட்ட, அக்கணமே எழுந்து அமர்ந்தார் முனிவர்.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

இந்த அதிசயத்தைக் கண்ட சக்தி ஈசனிடம் அதுகுறித்து விளக்கும்படி கேட்டுக்கொண்டாள். சிவனாரும் உடலிலுள்ள வர்மம், அடங்கல் என்ற இரண்டு நிலைகளைப் பற்றிய ரகசியங்களைச் சக்திக்கு உபதேசித்தார். பிறகு சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்ய வேண்டிய தருணம் வந்தபோது, சக்திதேவி ஈசன் முன்பு தனக்கு உபதேசித்த படுவர்மம், தொடுவர்மம், தட்டுமுறை, தடைமுறைகள் ஆகியவற்றை முருகனுக்கு உபதேசித்தாராம். இந்தத் தகவலை ‘வர்ம காவியம்’ என்ற நூல் கூறுகிறது.

பின்னர் முருகப்பெருமானிடம் தமிழும் இலக்கணமும் கற்ற அகத்தியர், வேளிமலை எனும் தலத்தில் களரி, சிலம்பம், அடிமுறைகள், வர்மம், வாசி, யோகம் போன்றவற்றைக் கற்றார். அதேபோல் ஈசனிடமிருந்து நந்திதேவரும், நந்தி தேவரிடமிருந்து அகத்தியர் மற்றும் திருமூலரும் கற்றார்கள் என்றும் திருமூலரிடமிருந்து காலங்கியார், போகர், புலிப்பாணி, ராமதேவர் ஆகியோரும் கற்றுக்கொண்டார்கள். அவர்கள் மூலம் ஏனைய குருமார்களுக்கும் இக்கலைகள் போதிக்கப்பட்டன என்றும் சில நூல்கள் கூறுகின்றன.

அகத்திய வர்ம சூத்திரம், அகத்திய வர்ம ஒடிமுறிவு சாரி, அகத்திய வர்ம நிகண்டு, அகத்தியர் மெய்தீண்டாக்கலை என அகத்திய மாமுனி மட்டுமே வர்மத்தைப் பற்றி 30 நூல்களை அருளியுள்ளார் என்கிறார்கள். சித்தர்களிடமிருந்து பரசுராமர், துரோணாசார்யர் போன்றோர் கற்றுக்கொள்ள, அவர்கள் மூலம் இந்தக் கலை பொலிவுபெற்றது என்றும் ஒரு தகவல் உண்டு.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

குறிப்பிட்ட வர்மப்புள்ளிகளைத் தொட்டு எதிரிகளை வீழ்த்தும் போர்க்கலையாகவும் இது மாறியது. அதனால் இது மன்னர்களிடமும் சென்றது. ராமபிரான் காலந்தொட்டு சங்க கால மன்னர்கள் காலம் வரை இந்த வர்மக்கலை ‘அங்கைப் (வெறும் கை) போர்முறை’ என அழைக்கப்பட்டுச் சிறப்புற்று விளங்கியது. கம்ப ராமாயணத்தில் `யுத்த காண்ட' பகுதியில், நீலன் என்ற வானரன் அங்கைப் போர் முறையில் ராவணனின் படைவீரர்களுடன் மோதினான் என்ற குறிப்பு உள்ளது. காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் வழியாக இந்தக் கலை இலங்கை, சீனா, ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் பரவத் தொடங்கியது. பிற்காலத்தில் சோழர்கள் வர்மக்கலையைக் கற்றனர். ராஜராஜனும், ராஜேந்திரனும் இந்தக் கலையில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார்கள். வர்மக்கலையின் முக்கிய அங்கமான வர்ண - விதை சிகிச்சை கொரியாவுக்குச் சென்று தற்போது இந்தியாவிலும் புகழ்பெற்று வருகிறது.

உடலின் ஒவ்வோர் ஆதாரங்களுக்கும் அதற்கென குறிப்பிட்ட வர்மப் புள்ளிகள் உண்டு. இந்தப் புள்ளிகளை வர்ம ஆசான் தன்னுடைய விரல்களின் மூலம் அழுத்தித் தடவித் தூண்டுவதன் மூலம், அந்த ஆதாரத்தைத் திறக்கவோ அல்லது தூண்டவோ செய்யலாம். அதனால் குறிப்பிட்ட அந்தப் பாகத்தைச் செயல்படுத்தவும் ஏதேனும் குறையிருந்தால் சரி செய்யவும் முடியும் என்கிறது வர்மம். உடலில் 108 வர்மப்புள்ளிகள் இருந்தாலும் முக்கியமான புள்ளிகள் யாவும் கை கால்களில் ஒருங்கிணைவதால், பெரும் பாலும் கை கால்களிலேயே சிகிச்சை அளிக்கப் படுகிறது” என்றவரிடம், ``உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்'' என்று கேட்டோம்.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

“அடியேன் கம்பத்தில் பிறந்து வளர்ந்தவன். மூலிகைகள் கொட்டிக்கிடக்கும் இந்தப் பகுதியில் வளர்ந்ததால், வேறு எந்தத் தொழிலுக்கும் போகாமல் என் மூதாதையர் வழிவந்த வைத்திய முறையையே நானும் எடுத்துக்கொண்டேன். ராமநாதபுரம் சுந்தரமூர்த்தி, கோவை மகாலிங்கம், பேராசிரியர் சண்முகம் போன்ற ஆசான்களிடம் பல்வேறு வைத்திய முறைகளைப் பயின்றேன். பழைமையான ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்து வர்மக்கலையை தீவிரமாகப் பயின்றேன். தற்போது கொரியாவிலிருந்து வந்ததாகக் கூறப்படும் ‘சுஜோக்’ முறையில் ஏழை எளிய மக்களுக்கு 18 ஆண்டுகளாக மருத்துவம் செய்துவருகிறேன்.

ஒருவருக்கு நோய் வந்துவிட்டால், அவருடைய அனைத்துத் திறமைகளும் பாதிக்கப்படுகின்றன. அவரின் குடும்பமும் பாதிக்கப்படும். அதனால் நோயற்ற வாழ்க்கைதான் நம்முடைய இலக்கா கிறது. நோய் வராமல் இருக்கவும், வந்தால் மருந்தில்லாமல் சிகிச்சை அளிக்கவும் வர்மக்கலை வழிகாட்டுகிறது. திருமலை, ரமேஷ், மீரா, சாந்தி, ராமமூர்த்தி போன்ற அன்பர்களும் இந்த மருத்துவப் பணியில் உதவி செய்துவருகிறார்கள். அதுமட்டுமன்றி தமிழகமெங்கும் அடியேனிடம் பயின்ற பலரும் எந்த எதிர்பார்ப்புமின்றி மருத்துவம் செய்துவருகிறார்கள்.

என் குருநாதர் சொல்லித்தந்த அமிர்த வர்ம வழியில் வர்ணம், வர்மம், மர்மம் என்ற மூவகை சிகிச்சைகளால் மருத்துவம் செய்துவருகிறோம். வர்மப்புள்ளிகள் இணையும் உள்ளங்கைகளில் அழுத்தம் கொடுப்பது, வண்ணம் தீட்டுவது (கலர் தெரபி), பச்சைப்பயறு, மிளகு, வெந்தயம், கடுகு போன்ற விதைகள் வைத்து அழுத்துவது (Seed theraphy) போன்ற முறைகளால் அநேக நோய்களைக் குணமாக்குகிறோம்.

என் முன்னோர் பிக்ஷையாக அளித்த இந்த மருத்துவத்தை நான் எப்படி விற்கமுடியும். ஆனால் இலவசமாக மருத்துவம் அளித்தபோது, பல நடைமுறைச் சிக்கல்கள் உருவாகி, உண்மையாக பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவமுடியாமல் போனது. எனவே தற்போது ‘குரு காணிக்கை’ என்ற பெயரில் பத்து ரூபாய் வாங்குகிறோம். அதையும் ஏழை எளியவர்களுக்காகவே செலவிடுகிறோம். நன்கு புரிந்துகொண்டவர்கள் ஆதலால், எங்களின் குடும்பத்தாரும் எங்களிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.

சைவ ஆகம நெறிப்படி கல்வி, மருத்துவம், உணவு ஆகிய மூன்றுமே விற்கக்கூடாதவை ஐயா. வர்மம் சிவனால் அருளப்பட்ட உப ஆகமம். `பொருளாசையால் மருத்துவம் பார்ப்பவர்கள் 28,000 கோடி அடுக்கு நரகத்தில் வீழ்வார்கள்’ என்று இறைவனே எச்சரிக்கை செய்கிறார். எனவே, காணிக்கை மட்டுமே பெற்று அதையும் மக்களுக்கே செலவு செய்துவிடுகிறோம்.

இங்கு வரும் ஒவ்வொரு மனிதரையும் சிவத்தின் பிரதிபிம்பம் என்றே நினைக்கிறோம். அவர்களுக்குச் செய்யும் சேவையே இறைவனுக்குச் செய்யும் சேவை என மகிழ்கிறோம். மாலை 6 மணிக்குத் தொடங்கி விடியற்காலை வரை மருத்துவம் பார்த்துவருகிறோம். ஈசனருளால் இங்கு வந்தவர் எல்லோருமே குணமடைந்திருக்கிறார்கள்.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

தொண்டு செய்வதற்கு எந்த இலக்கணமும் இல்லை. இடங்கழி நாயனாரின் திருக்கதையைப் படித்திருப்பீர்கள். மன்னரான இடங்கழியாரின் களஞ்சியத்திலிருந்து நெல்லைத் திருடியவனைத் தண்டிக்க முயன்றபோது, அவன் இறையடியார் களுக்கு அமுது செய்விக்கவே திருடினான் என்று தெரியவந்தது. `இந்தத் தொண்டனைத் தண்டிக்க எண்ணினோமே' என மனம் கலங்கினார் இடங்கழியார். உடனே முரசறைந்து ‘தேவைப்படுவோர் இறைப்பணிக்கும் இறையடியார் பணிக்கும் வேண்டியதைக் கொள்க’ அறிவித்தார். இதைவிடப் பெரிய சேவை என்ன இருக்க முடியும்... துயருற்ற ஜீவன்களுக்குச் சேவை செய்வது, பெருமானைத் துதிக்கும் செயலைவிடப் பெரியது அல்லவா!

முன்தோற்று பின்வென்ற மூர்க்க நாயனார் சூதாடி பெற்ற பொருளால் அடியார்களுக்கு அமுது செய்வித்த காரணத்தால் புகழ்பெற்றார். அவர் ஆடிய சூதே ‘நற்சூது’ என்று போற்றப்பட்டது. ஆக, சேவை செய்ய அன்புள்ளம் ஒன்றுதான் வேண்டும். அதிலும் உயிர்காக்கும் மருத்துவப் பணியில் தன்னலமே கூடாது” என்று சொல்லி முடித்தார் பாண்டியராஜன் ஆசான்.

‘எல்லா காலத்திலும் எல்லா தேசத்திலும் வெல்லக்கூடியது அன்பு ஒன்றுதான். அதுவே சிவம். அதுவே சிவனடியார்களின் அடையாளம். அன்பு ஒரு சிறகாகவும் சேவை மற்றொரு சிறகாகவும் விரியும்போது வானக்கூரையில் தட்டி நிற்குமாம் புண்ணிய பலாபலன்கள். புண்ணிய வடிவாகவேத் திகழும் அந்த அடியவரை வணங்கி விடைபெற்றோம்.

- அடியார்கள் வருவார்கள்

`சாந்தமு லேகா சௌக்யமு லேது'

ருமுறை திருவையாறு தலத்தில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதைக் காண விரும்பிய தியாகராஜரின் சீடர்கள், அதற்கு அவரிடம் அனுமதி கேட்டனர். தியாகராஜர் அனுமதிக்கவில்லை!

ஒருநாள் இரவு தியாகராஜருக்குத் தெரியாமல், அவரின் சீடர்கள் நாட்டியத்தைக் கண்டுகளித்து வந்தனர்.

தியாகராஜர்
தியாகராஜர்

இந்த விஷயம் தெரியவந்ததும் தியாகராஜர் தன் மனைவியிடம், ‘‘இறை பக்தியில் இருக்கும் இன்பம் தெரியாமல் கேளிக்கைகளின் மீது நாட்டம் செலுத்துகிறார்களே... அதனால் சீடர்கள் எவருக்கும் உணவு அளிக்காதே'' என்று கண்டிப்புடன் கூறினார்.

அதற்கு அவர் மனைவி, ‘‘உங்களுக்குள்ளும் பக்தியோடு கோபம் கலந்திருக்கிறதே. அதனால் தானே இப்படி உத்தரவு தருகிறீர்கள்'' என்றார்.

கண நேரம் யோசித்த தியாகராஜர் உண்மையை உணர்ந்தார். பின்னர், ‘சாந்தமு லேகா சௌக்யமு லேது’ என்கிற பாட்டைப் பாடி சீடர்களை மன்னித்து, அவர்களுக்கு உணவளிக்கும்படி மனைவியிடம் கூறினார். சீடர்களிடம் அவர் கோபப்பட்டது இதுவே முதலும் கடைசியுமாகும். ஆம், சாந்தம் இருந்தால் சௌக்கியத்துக்குக் குறை ஏது?!

- எம்.வி. குமார், மதுராந்தகம்