Published:Updated:

புராணங்கள் போற்றும் விநாயகர்

விநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
விநாயகர்

புராணங்கள் போற்றும் விநாயகர் - பி.சந்திரமெளலி

புராணங்கள் போற்றும் விநாயகர்

புராணங்கள் போற்றும் விநாயகர் - பி.சந்திரமெளலி

Published:Updated:
விநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
விநாயகர்
பிரணவப் பொருளாய் திகழ்பவர் விநாயகர். தத்துவம் நிறைந்த திருவுருவம், தண்ணருள் நிறைந்த கணபதியின் காருண்யம் போன்றே அவரின் அவதாரமும் தனிச் சிறப்பு மிக்கது. படித்தாலே புண்ணியம் தரும் பிள்ளையாரின் புராணங்களும் அபூர்வமான காரண விளக்கங்களும் 16 பேறுகள் அருளும் 16 பிள்ளையார் திருவடிவங்களும் இங்கே உங்களுக்காக... கந்த புராணம் சொல்லும் கதை!

கந்தபுராணம் சொல்லும் கதை

திருக்கயிலையில், பல்வேறு ஓவியங்கள் நிறைந்த அழகிய மண்டபம் ஒன்று இருந்தது. ஒருநாள் பரமசிவனும் பார்வதியும் அந்த மண்டபத்தைப் பார்வையிடச் சென்றனர். அங்கு சமஷ்டிப் பிரணவம், வியஷ்டி பிரணவம் என்ற இரண்டு மந்திரங்களும் ஓவியமாக வரையப்பட்டிருந்தன. அவற்றை சிவனும், சக்தியும் தங்கள் அருட்கண்களால் நோக்கினர். அப்போது, நான்கு கரங்களுடனும் யானை முகத்துடனும் தோன்றிய குமாரன் ஒருவன் சிவ-சக்தியரை வணங்கி நின்றான். அவனை ஆசீர்வதித்து, சிவகணங்களுக்குத் தலைவராக இருக்கும்படி நியமித்தருளினார் ஈசன்.

சிவ குடும்பத்தில் எவரும் தாய் வயிற்றில் தோன்றிப் பிறப்பதில்லை. கணபதி, பிரணவத் திலிருந்து தோன்றினார்; முருகன், ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றினார்; சிவசக்தி தம்பதியரின் சினத்திலிருந்து வீரபத்திரர் தோன் றினார் என்று விவரிக்கிறது கந்த புராணம்.

கணபதி
கணபதி

பிரும்மாண்ட புராணம் என்ன சொல்கிறது?

லலிதாம்பிகை பண்டாசுரனுடன் போர் புரியச் சென்றாள். அம்பிகையின் படைகளை வீரத்தால் வெல்வது அரிது என்று பண்டாசுரன் உணர்ந்தான். குறுக்கு வழியில் வெல்லத் தீர்மானித்தான்.

அசுரனின் தம்பியாகிய விசுக்கிரன் என்பவன், மாய மந்திரங்களில் தேர்ச்சி பெற்றவன். அவன், வெற்றிக்குத் தடை செய்யும் ‘ஜயவிக்ன யந்த்ரம்’ என்ற மந்திரத் தகட்டை உருவாக்கி, சக்தி சேனையின் முகாமில் தந்திரமாக ஒளித்துவைத்தான். இதனால், அம்பிகையின் படைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டது; வெற்றி தடைப்பட்டது.

இந்த நிலையில் விசுக்கிரனின் சூழ்ச்சியை அறிந்த அம்பிகை, போர்ப் பாசறையில் காமேஸ்வரன் என்ற பெயருடன் எழுந்தருளியிருந்த சிவனாரை தன்னுடைய கண்களால் சற்றே நோக்கினாள். இறைவனும் தேவியை நோக்கினார். அந்த அருட்பார்வைகளின் சங்கமத்தால், ‘மகா கணேசன்’ தோன்றினார். யானை முகத்துடன் தோன்றிய மகா கணேசன், விசுக்கிரனின் மந்திரத் தகட்டைக் கண்டுபிடித்து, தனது துதிக்கையால் உடைத்துத் தூளாகச் செய்தார். பின்னர் அம்பிகைக்குத் தொடர்ந்து வெற்றிகள் கிட்டின.

புராணங்கள் போற்றும் விநாயகர்

இன்னும் சில புராணங்கள்

அசுரர்களை அடக்க வல்லமை படைத்த ஒரு மகனைத் தோற்றுவிக்கும்படி வேண்டினர் தேவர்கள். அதன்படி, ஈசன் தனது ஓர் அம்சத்தை யானை முகமுடைய மகனாகப் படைத்தருளினார் என்கிறது லிங்க புராணம்.

உமாதேவி தனது திருமேனியில் இருந்த நறுமணப் பொருட் களைத் திரட்டி ஒரு குமாரனைப் படைத்தாள். யானை முகத்துடன் தோன்றிய அந்தக் குமாரனுக்கு, ‘கணன்’ என்று பெயரிட்டாள் என்று விவரிக்கிறது சிவமகா புராணம்.

வராக புராணமோ, `விக்னங்களைத் தடுத்தருள்பவர் விக்னேஸ்வரர்’ என்று பிள்ளையாரைச் சிறப்பிக்கிறது! 

வன்னியும் மந்தாரையும்

செளனக முனிவரின் சீடன் மந்தாரன். அவன் மனைவி சமி. ஒருமுறை இவர்கள் விநாயகரைப் போன்றே உருவம் கொண்ட புருசுண்டி முனிவரின் தோற்றத்தைக் கேலி செய்ததால், அவரின் சாபத்துக்கு ஆளாகினர்; வன்னி மற்றும் மந்தாரை விருட்சங்களாக மாறினர். ஞான திருஷ்டியால் இவர்களின் நிலை அறிந்த செளனக முனிவர் பெரும் தவமிருந்து, விநாயகரை தரிசித்து, சாபவிமோசனம் குறித்து வழி கேட்டார்.

விநாயகர்
விநாயகர்

பிள்ளையார், ``அடியவர்கள் இட்ட சாபத்தை எவராலும் போக்க இயலாது. எனவே, இவ்விருவரும் விருட்சங்களாக இருந்தபடியே முக்தியை பெறுவார்கள். வன்னி மற்றும் மந்தாரை மரங்களையும் அவற்றின் கீழ் இருக்கும் என்னையும் வழிபடுபவர்களுக்கு சகல இடர்களும் நீங்கும். வன்னி இலையாலும் மந்தார மலர்களாலும் என்னை அர்ச்சித்து வழிபடுவோரும் இன்னல்கள் நீங்கி இன்பம் அடைவர்’’ என்று அருள்பாலித்தார். ஆகவே, வன்னி இலைகளும் மந்தார புஷ்பங்களும் பிள்ளை யாருக்கு உகந்தவை ஆயிற்று.

மூஷிக வாகனம்

மாகத முனிவருக்கும் விபூதி என்ற அசுரப் பெண்ணுக்கும் தோன்றிய அசுரன் கஜமுகன். சிவபெருமானை எண்ணி தவம் இயற்றி, ஆயுதங்களால் அழிக்கமுடியாத வரத்தைப் பெற்றான். ஆயுதத்தால் அவனை அழிக்க முடியாது என்பதை உணர்ந்த விநாயகர் தன் தந்தத்தை உடைத்து, அவன் மீது ஏவினார். அசுரனோ, பெருச்சாளியாக உருவம் கொண்டு வந்தான். விநாயகர் அவனை ஆட்கொண்டு, தம் வாகனமாக அமர்த்திக் கொண்டார்.

முதல் மோதகம்

ஒருமுறை, வசிஷ்ட மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று அவரது ஆசிரமத்துக்கு எழுந்தருளினார் விநாயகர். அவருக்கு ஏற்ற புதிய நிவேதனம் ஒன்றைச் செய்ய விரும்பி னாள் வசிஷ்டரின் மனைவி அருந்ததி. சர்வவியாபியான விநாயகர் அண்டத்தின் உள்ளே எங்கும் பூரணமாய் நிறைந்துள்ளார். ஆகவே, அருந்ததி அண்டத்தை உணர்த்த, மாவினால் ‘செப்பு’ என்ற மேல் பகுதியைச் செய்தாள். அண்டத்தின் உள்ளே பூரணமாய் நிறைந்திருக்கும் பிள்ளையாரைக் குறிக்கும் வகையில் இனிப்பான பூரணத்தை, மாவுக்குள் வைத்தாள். அதுவே, மோதகம் என்னும் கொழுக்கட்டை ஆனது. அருந்ததி உருவாக்கிய புதிய, இனிய மோதகத்தை கணபதியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாராம்.

தேங்காய் காணிக்கை

ஈசன் திரிபுரத்தை எரிக்கப் புறப்பட்டபோது, தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது விநாயகரை வேண்டிக் கொள்ளாமல் புறப்பட்டதால் ஏற்பட்ட இடர் இது என்பதை உணர்ந்த ஈசன், கணபதியை எண்ணினார். மறுகணம் அங்கு தோன்றிய கணபதிக்கு உகந்த காணிக்கையைத் தருவதாகச் சொன்னார் சிவனார்.

புராணங்கள் போற்றும் விநாயகர்

அப்போது, முக்கண்ணனையே தனக்குக் காணிக்கையாகத் தர வேண்டும் என்றார் கணபதி. எனவே ஈசன், தன்னைப் போல் மூன்று கண்களும், சடையும் கொண்ட தேங்காயைக் கணபதிக்குப் படைத் தருளினார். அன்று முதல், தடைகள் நீங்கிட விநாயகருக்குத் தேங்காய் உடைக்கும் வழக்கம் ஏற்பட்டதாம்!

பிள்ளையார் சுழி

எந்தவொரு வேலையைத் தொடங்கும்போதும் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குவது வழக்கம். பிள்ளையார் சுழி, கொம்பும் கோடும் சேர்ந்தது. இரண்டுமே விநாயகரின் தந்தத்தின் பெயர். ‘ஏக தந்தர்’ என்பதைத் தமிழில் ‘ஒற்றைக் கொம்பன்’ என்பார்கள். ‘ஓம்’ எனும் ஓங்கார எழுத்தின் தனித்தமிழ் வடிவம், ஏறத்தாழ யானை முகத்தின் வடிவம் போலக் காணப்படும். ஓங்கார ஒலியைக் காதால் கேட்கலாம்; அதை எழுதினால் கண்ணுக்குப் புலனாகும். காதால் கேட்பது நாதம்; கண்ணுக்குப் புலனாவது விந்து. நாத தத்துவத்தை வரி (கோடு) போலவும், விந்து தத்துவத்தை புள்ளியிலும் அமைப்பது உண்டு. இரண்டும் சேர்ந்ததே, ‘உ’ என்கிற பிள்ளையார் சுழி ஆகும்.