திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

புத்தாடையில் புது மஞ்சள் பூசுவது ஏன்?

புத்தாடை...
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தாடை...

ஆன்மிகக் கேள்வி பதில்கள் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

? தீபாவளி போன்று பண்டிகை காலங்களிலும் சுபநிகழ்ச்சிகளிலும் புத்தாடைகளில் மஞ்சள் தீட்டுவது ஏன், திருநீறு பூசும்போது சிவ நாமம் சொன்னால் போதுமா?

- க.முருகவேல், சென்னை-56

‘வஸ்’ என்றால் தங்குதல்; ‘த்ரா’ என்றால் காப்பாற்றுதல் என்று பொருள். நம் உடலை மறைத்து, நம் மானத்தைக் காப்பாற்றுவதால், ஆடையை `வஸ்திரம்’ என்று கூறுகிறோம்.

புத்தாடையில் 
புது மஞ்சள் பூசுவது ஏன்?

வஸ்திரத்தைப் புதிதாக அணியும்போது மஞ்சள் தீட்டுவது வழக்கம். மஞ்சள் மங்கலத்தின் அடையாளம். நாம் உடுத்திக் கொள்ளும் புத்தாடையை மங்கலகரமானதாகச் செய்ய, சிறிது மஞ்சள் பூசிக் கொள்கிறோம்.

விபூதி இறை சாந்நித்தியம் வழங்குவது. சகலரும் திருநீறு தரிக்கும் போது, ‘சிவசிவ’ என்று கூறியபடி, பரமனை நினைத்து வணங்கி திருநீறு அணியலாம். தீட்சை பெற்றவர்கள், பஞ்சப்ரம்ம ஷடங்க மந்திரங்களை தீட்சையின் வாயிலாகப் பெற்று, குருவின் வழிகாட்டுதலுடன் அவற்றைக் கூறியபடி, அனைத்து ஐஸ்வர்யங்களின் இருப்பிடமான பஸ்மதாரணத்தை மேற்கொள்ளலாம். ஆசார்யரிடம் தீட்சை பெற்றுக் கொண்டவர்கள், விபூதி தரிக்கும் போது, ஒவ்வோர் இடத்திலும் அதற்கு உரிய மந்திரங்களைச் சொல்லி வைத்துக்கொள்வதே வழக்கம். இதுபற்றி குருவை அணுகி அறிந்து கொள்வதே சரியானது.

? எங்கள் குலதெய்வத்துக்குக் கோயில் எழுப்புகிறோம். கருவறையில் மின்சார விளக்குகள் இணைக்கலாமா அல்லது தீப விளக்குகள் மட்டும்தான் ஏற்றவேண்டுமா?

- கே.காசிவிஸ்வநாதன், தூத்துக்குடி

திருவிளக்குகள் தெய்வ சாந்நித்தியம் நிறைந்தவை. அவற்றின் சுடரொளி வெளிச்சம் தருவதுடன், சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் உள்ள தீயசக்திகளை விலக்கி இறையருளை வியாபிக்கச் செய்யும். ஆகவே, அனைத்து ஆலயங்களிலும் அனைத்துச் சந்நிதிகளிலும் நல்லெண்ணெய் அல்லது நெய்யினால் ஆன தீபத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது மரபு.

இறைவனுக்குத் தீபாராதனை செய்கிறோமே ஏன் தெரியுமா? அந்த ஒளியின் மூலம் தெய்வத்தின் திருவுருவம் பக்தருடைய மனதில் பதிந்துவிடுகிறது. அதன் மூலம் நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் தெய்வத்தின் தொடர்பு உண்டாகி நம்மை வழிநடத்தும். நம்முள் இருக்கும் ஆன்ம சக்தியைப் பெருக்கி, நமக்கு ஆனந்த நிலையை அளிக்கும் ஆற்றல் மூலவருக்குச் செய்யும் தீபாராதனைக்கு உண்டு. ஆக தீப தரிசனமும் ஆராதனையும் உசத்தியானவை. ஆகவே, மூலவர் கருவறையில் மட்டுமல்ல அனைத்து பரிவார சந்நிதிகளிலும், இயற்கையான தீப வெளிச்சத்தில் தெய்வங்களை தரிசித்து, அருள் பெறும்படிச் செய்ய வேண்டும். அதுவே உகந்தது; உயர்ந்ததும்கூட.

புத்தாடையில் 
புது மஞ்சள் பூசுவது ஏன்?

? கந்த சஷ்டி விரதம் கடைப்பிடிக்கவுள்ளோம். முருகப்பெருமானுடன் வேலையும் வழிபடலாமா?

- என்.கார்த்திகேயன், மதுரை

அவசியம் வழிபடுங்கள். வேல் உண்டு வினையில்லை’ என்பது நம் நம்பிக்கை. நம்முடைய கர்ம வினைகளை அகற்றி நல்வாழ்க்கையை நமக்கு அளிக்கக்கூடிய ஆற்றல், முருகப்பெருமானின் திருக்கரத்தில் திகழும் வேலுக்கு உண்டு.

அருணகிரிநாதர், நக்கீரர் போன்று பல மகான்கள் அருளிய நூல்கள் பலவும் வேலின் மகத்துவத்தை விளக்குகின்றன. வேல் விருத்தம், வேல் வகுப்பு, வேல்மாறல் போன்ற துதிப்பாடல்களைப் பாராயணம் செய்து வேல் வழிபாடு செய்யலாம். அதேபோல், நல்ல குருவை அடைந்து, வேலுக்கு உரிய மூல மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபம் செய்வது சிறந்த பலனை நல்கும்.

? எங்கேனும் பயணம் புறப்படும்போது வாகனங்களின் சக்கரங்களில் எலுமிச்சை வைத்து நசுக்கும் வழக்கம் உள்ளது. இதெபோல், தேங்காய் உடைப்பது, திருஷ்டி பூசணி உடைப்பது போன்றவற்றின் தாத்பர்யம் என்ன?

- எல்.பூர்ணிமா, சங்கரன்கோவில்

எலுமிச்சை, தேங்காய், பூசணிக்காய் ஆகியவற்றுக்குத் திருஷ்டி தோஷங்களை ஆகர்ஷித்து, நமக்கு நன்மையை அளிக்கக்கூடிய ஆற்றல் உண்டு. காந்தத்தின் அருகில் இரும்பு இருந்தால் அது அந்தக் காந்தத்துடன் ஒட்டிக்கொள்ளும். ஆனால், விலையுயர்ந்த தங்கத்தினால் இரும்பை ஆகர்ஷிக்க முடியாது. அப்படித்தான் எலுமிச்சை, தேங்காய், பூசணி போன்றவற்றுக்கு திருஷ்டியைப் போக்கும் தன்மை உண்டு! இன்னின்ன காரியத்துக்கு இன்னின்னவற்றை வைத்துச் செய்தால்தான் முடியும் என்ற சூட்சுமத்தை அறிந்து, அதன்படி செயல்பட்டு பயனடைந்தார்கள்.

? என் பாட்டனார் தீபாவளி தினத்தில் (சதுர்த்தசி திதி) மறைந்தார். இதுபோன்ற பண்டிகை தினங்களில், என் தந்தையார் அவருக்குத் தர்ப்பணம் செய்யலாமா?

- எம்.குமார், தென்காசி

ஒருவரின் பிறந்தநாளை, அவரது நட்சத்திரத்தின் அடிப்படையில் கொண்டாடுவதும், இறுதி நாளை அன்றைக்கு இருக்கும் திதியின் அடிப்படையில் வருடம்தோறும் அனுஷ்டிப்பதும் வழக்கம். அவர் மறைந்த மாதமும் திதியும் வரும் நாளில், வருடம்தோறும் சிராத்தம் செய்யவேண்டும். சிராத்தம் செய்வதைத்தான் `திவஸம்’ என்றும் `திதி கொடுத்தல்’ என்றும் குறிப்பிடுகிறோம்.

தங்களின் பாட்டனார் தீபாவளி அன்று மறைந்தார் எனில், அன்று தான் அவருக்குச் சிராத்தம் செய்யவேண்டும். கர்மா செய்பவருக்கு, ஏதேனும் தவிர்க்க முடியாத காரணத்தால் அதைச் செய்யமுடியாமல் போனால் மட்டுமே, வேறு நாள் பார்க்கவேண்டும். மற்றபடி குறிப்பிட்ட திதியன்று திவஸம் செய்வதே சிறந்தது.

இறந்தவருக்கு நாம் இங்கு செய்யும் கிரியைகள், அவர் எங்கு எந்த உருவில் இருந்தாலும் அவரைச் சென்றடையும். நமது சநாதன தர்மத்தில் செய்யக்கூடிய ஒவ்வொரு கிரியையும் அதற்குரிய பலனைத் தரவே செய்யும். இவை அனைத்தும் காலம் காலமாக நம் முன்னோர்களால் கடைப் பிடிக்கப்பட்டு வருபவையாகும். எனவே, ஒருவர் மறைந்த திதியில்தான் அவருக்குச் சிராத்தம் செய்யவேண்டும்.

- பதில்கள் தொடரும்...