Published:Updated:

மூஷிக வாகனத்துக்குச் சிறப்பு வழிபாடுகள் உண்டா?

ஆலய வழிபாடு
பிரீமியம் ஸ்டோரி
ஆலய வழிபாடு

ஆன்மிகக் கேள்வி பதில்கள் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

மூஷிக வாகனத்துக்குச் சிறப்பு வழிபாடுகள் உண்டா?

ஆன்மிகக் கேள்வி பதில்கள் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

Published:Updated:
ஆலய வழிபாடு
பிரீமியம் ஸ்டோரி
ஆலய வழிபாடு

? ஆலய வலம், தீப உபசாரம் முதலாக பல ஆன்மிக விஷயங்கள் `மூன்று’ என்ற எண்ணிக்கையில் நிறைவடைவதாக உள்ளனவே, ஏன் அப்படி?

- கே.கல்பனா, காரைக்குடி

நமது சமயத்தில் ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் ஒரு சிறப்பு உள்ளது. மல, கர்ம, மாயா எனும் மூன்று பாசங்கள் விலகினாலே பசுவாகிய நாம் ‘பதி’ எனும் இறைவனை அடைய முடியும் என்பது விதி. நாம் யாராக இருந்தாலும் எங்கு பிறந்திருந்தாலும் இந்த மூன்று பாசங்களையும் விலக்கியே ஆகவேண்டும். எளிமையான வகையில் நம் கர்மவினைகள் அழிக்கப்பட ஆலய வழிபாடு உதவும். ஆலயத்தைத் நாம் வலம்வந்து வழிபட, நம் கர்மவினைகள் பொசுக்கப்படுகின்றன. ‘யானி கானி ச பாபானி... ப்ரதக்ஷிண பதே பதே...’

ஓம்காரம் அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. மூன்று முறை தீப உபசாரம் செய்யப்படும்போது அனைத்துக்கும் மூலமான ஓம்காரம் அங்கு பதியப்படுகிறது. மட்டுமன்றி, உபசாரம் செய்பவரின் சிந்தையிலும் ‘ஓம்காரமே இந்த உலகத்தின் விதையாக நின்று இவ்வுலகைப் பரிணமிக்கச் செய்கிறது’ என்ற எண்ணம் அழுத்தமாகப் பதியும்.

பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளும் சரஸ்வதி, லட்சுமி, துர்கை ஆகிய சக்திகளூம் மூன்று மூன்று வடிவங்களில் இருந்து அருள்பாலிக்கிறார்கள். ஆக, ஆன்மிகத்தில் எதையும் மூன்று மூன்று முறை செய்யும்போது, இந்த சக்திகளை வழிபடுவதாகவும் அவர்களின் அருளாற்றலைப் பெறுவதாகவும் நம்பிக்கையும் திருப்தியும் உண்டாகிறது.

மனம், உடல், சொல் இவற்றால் நாம் செய்யும் பாவங்கள், கடவுளர்களுக்கு நாம் மூன்று முறை வலம் வருவதாலும் பணிவிடைகள் செய்வதாலும் மறைகின்றன. பூஜைக்கு முன்னதாக ஆசமனம் செய்யும்போது மூன்று முறை தண்ணீர் பருகுவதும், தெய்வ சக்திகளை நம்முள் இருக்கச் செய்யும் செயலே!

மூஷிக வாகனத்துக்குச் சிறப்பு வழிபாடுகள் உண்டா?

? அஷ்டபந்தனம் செய்வதன் தாத்பர்யம் என்ன? அதில் என்னென்ன பொருள்கள் சேர்க்கப்படும், எப்படித் தயாரிப்பார்கள். அஷ்டபந்தனம் என்பது வெறும் சடங்கு அல்ல, விஞ்ஞானப் பூர்வமானதும்கூட என்கிறார் நண்பர். இதுகுறித்து விளக்கம் தாருங்களேன்.

- கே.பாலாஜி, விருதுநகர்

அஷ்ட எனில் `எட்டு’; பந்தனம் - `கட்டப்படுதல்’ என்று பொருள். எட்டுவித பொருள்களால் செய்யப்பட்டதை அஷ்டபந்தனம் என்று கூறுவர். சுக்கான்கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, குங்குலியம், தேன் மெழுகு, எருமை வெண்ணெய், நற்காவி ஆகிய எட்டுப் பொருள்களைக் கொண்டு அரைத்து உருவான சாந்து போன்ற பொருளையே அஷ்டபந்தன மருந்து என்பார்கள்.

ஆலயத்தில் எல்லாம்வல்ல பரம்பொருள் சிலாரூபமாக அருள் பாலிக்கும்போது, அவரின் ஆற்றலை நாம் முழுமையாகப் பெறுவதற்கு அஷ்டபந்தன மருந்து மிக அவசியம் என்று ஆகமங்கள் கூறுகின்றன. சிலை வடிவில் உள்ள தெய்வ மேனியை விக்ரஹம் என்று கூறுவர். அவை வெறும் கல் அல்ல; புனிதமானவை. மந்திர சக்தியை ஈர்த்து பக்தர்களையும் உலகையும் காப்பாற்றக்கூடிய வல்லமை படைத் தவை.

அப்படியான தெய்வ மூர்த்தத்தையும் அந்த மூர்த்தம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் பீடத்தையும் தொடர்புபடுத்தக் கூடியதாக அஷ்டபந்தனம் திகழ்கிறது. எனவே, அவை சிறிது விலகியிருந்தாலும் அந்த இடம் சரியசெய்யப்படவேண்டும்; கும்பாபிஷேகம் செய்யப்படும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆகமங்கள் கட்டளையிடுகின்றன.

ஆக, தெய்வ ஆற்றலை நமக்குள் பரவச் செய்யும் அஷ்டபந்தனத்தின் சிறப்பு மிக முக்கியமானது என்பதை நீங்கள் இப்போது உணர்ந்திருக்கலாம்.

மூஷிக வாகனத்துக்குச் சிறப்பு வழிபாடுகள் உண்டா?

? நந்திதேவருக்குப் பிரதோஷம், கருடனுக்கு கருடபஞ்சமி போன்று விநாயகரின் மூஷிக வாகனத்தை வழிபடுவதற்குப் பிரத்யேக தினங்கள், வழிபாடுகள் ஏதேனும் உண்டா?

- பி.மணிவேல், மதுரை-3

அனைத்து பூஜைகளிலும் முதன்மையான இடத்தைப் பெறும் விநாயகப்பெருமானை வழிபடும்போதே, அவர் வாகனத்தையும் நாம் சேர்த்தே வழிபடுவதாகிவிடுகிறது.

மூலாதாரத்தில் இருந்து நமது சக்தியை த்வாதசாந்தம் பெருவெளியை நோக்கிச் செல்லவைக்கும் ஆற்றல் கொண்டவர் விநாயகப் பெருமான். நமது உடலிலேயே அவர் இருந்து நமக்கு ஆற்றல் வழங்குவதால், விநாயகரை வணங்கும்போதே அவர் சம்பந்தப்பட்ட சகலத்தையும் - மூஷிகத்தையும் வணங்குவதாகவே கொள்ள வேண்டும்.

‘தூம்ரவர்ண:... கணராட் வாஹனோத்தம:...’ என்று ஆகமங்கள் சித்திரிக்கின்றன; தமது குரு மீது மிகுந்த பக்தி உடையது என்பதால் வாகனங்களில் உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது மூஷிகம்.

? எங்கள் அப்பார்ட்மெண்டில் சிறியளவிலான கோயில் போன்றே சிறு விநாயகர் சந்நிதி உள்ளது. எனினும் விமானம், கலச அமைப்பு இல்லை. இந்தச் சந்நிதிக்கும் 12 வருடங்கள் கழிந்தால் கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமா? வழிகாட்டவும்.

- சோ.சுப்ரமணியன், கோவை-12

தாங்கள் கோயில் போன்ற சந்நிதி உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். சுவாமி விஷயத்தில் சிறியது பெரியது என்று இல்லை. நெருப்பில் சிறியது பெரியது என்று உள்ளதா என்ன!

தெய்வ சக்திகள் நிலைத்திருந்து காக்கும் கோயில் விஷயங்களில் கிரியைகள் முக்கியமானவை. தங்கள் ஆலயத்தின் சக்தி - சாந்நித்தியம் உயர்வுபெற இறையருள் பெருகிட, கும்பாபிஷேகம் அவசியம் நடத்தப்பட வேண்டும். மிகவும் எளிமையாக தகுந்த ஆசார்ய பெருமக்களை வைத்து ஆகமப்படி செய்யுங்கள். வினைகளை அகற்றும் விநாயகப் பெருமான் உங்களை ஆசீர்வதிப்பார்.

? விரத காலத்தில் மட்டும்தான் துளசிமணி மாலை அணிய வேண்டுமா அல்லது எல்லோரும் எல்லா காலங்களிலும் துளசி மாலை அணிந்துகொள்ளலாமா?

- வீ.குமாரதேவன், தாழையுத்து

நாம் தூய்மையாக இருக்கும் அனைத்து காலங்களிலும் துளசி மாலை அணியலாம். குறிப்பிட்ட இடம் அல்லது சூழல் தூய்மையற்றது என்ற எண்ணம் வந்தாலே, மாலையை தூய்மையான இடத்தில் வைத்துவிட வேண்டும். தாமரை, துளசி, வில்வம் போன்றவை தெய்விக ஆற்றல் கொண்டவை. சிலர் `தூய்மையற்றதையும் தூய்மையாக மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டது துளசி மணி மாலை’ என்று எண்ணி எப்போதும் அதை அணிந்திருப்பதைக் காணலாம். தாங்கள் தங்களின் குருவிடம் கேட்டு, அதன்படி நடப்பது சிறப்பானது.

- பதில்கள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism