Published:Updated:

நாத்திகர்களும் விரும்பிய வள்ளலாரின் 199-வது பிறந்த நாள் - ஞான தீபச் சுடரின் வாழ்க்கைக் குறிப்புகள்!

'இறைவன் ஒருவரே. அவர் அருள் பெருஞ்சோதி; அவரே தனிப் பெரும் கருணை கொண்டவர்' என்றார். வெறும் ஆன்மிகப் பணிகள்; சொற்பொழிவுகள்; எழுத்துப் பணிகள் என்று நின்றுவிடாமல் சமூகப் பணியிலும் தன்னை கரைத்துக் கொண்டவர் வள்ளலார். அவரின் பிறந்த நாள் இன்று!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சமூக சீர்திருத்தவாதி, ஆன்மிகச் சொற்பொழிவாளர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், மொழி ஆய்வாளர், சித்த மருத்துவர், பொதுத் தொண்டாற்றியப் புனிதர் என பன்முகங்களைக் கொண்டவர் வள்ளலார் எனும் ராமலிங்க அடிகளார். இவர் 1823-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 5-ம் நாள் சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூர் என்கின்ற கிராமத்தில் ராமய்யாப் பிள்ளை சின்னம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
வள்ளலார்
வள்ளலார்

பொன்னேரியில் சில காலம் வாழ்ந்த இவர், சென்னை ஏழு கிணறு பகுதியில் தன் அண்ணன் அண்ணியாரோடு 25 ஆண்டுகள் வரை வாழ்ந்தார். பிறகு ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு புனிதப் பயணம் மேற்கொண்டு 26 ஆண்டுகள் வடலூரில் வாழ்ந்தார்.

'இறைவன் ஒருவரே. அவர் அருள் பெருஞ்சோதி; அவரே தனிப் பெரும் கருணை கொண்டவர்' என்றார். வெறும் ஆன்மிகப் பணிகள்; சொற்பொழிவுகள்; எழுத்துப் பணிகள் என்று நின்று விடாமல் சமூகப் பணியிலும் தன்னை கரைத்துக் கொண்டவர் வள்ளலார். உலகம் யோசித்துக் கொண்டிருந்த பல மனித நேயப் பணிகளை முன் நின்று நடத்திக் காட்டியவர் இவர். உயிர் நேசத்தை, மனித நேயத்தை, சகல உயிர்களின் மீதும் கொண்ட பாசத்தை தனது சொல்லாலும் செயலாலும் போதித்துக் காட்டி தலைசிறந்த ஞானியாக வாழ்ந்தவர் இவர்.

திருஅருட்பிரகாச வள்ளலார்
திருஅருட்பிரகாச வள்ளலார்

1867-ல் சத்திய தருமசாலையில் இவர் ஏற்றிய அடுப்பு இன்று வரை விடாமல் எரிந்து எளிய மக்களின் பசிப்பிணியை நீக்கி வருகிறது. தாதுப் பஞ்சம் தென் ஆற்காடு மாவட்டத்தில் உருவாக்கிய பசிப்பிணியை தனி ஒருவராக நின்று விரட்டியவர் வள்ளலார். அதனால்தான் நாத்திகர்களும் விரும்பும் ஞானியாக இவர் விளங்கினார். உயிர்க் கொலை அடாத செயல்; அதிலும் இறைவனின் பெயரைச் சொல்லி உயிர்க் கொலை செய்வது கூடவே கூடாது என அந்த காலத்திலேயே மக்களிடம் எடுத்துச் சொல்லி ஆதரவும் எதிர்ப்பும் கண்ட புரட்சி மகான் இவர்.

திருக்குறளை பிரபலமாக்கி மக்களிடையே கொண்டு சேர்த்த மகத்தான பணியைச் செய்தவர் திருஅருட்பிரகாச வள்ளலார் எனலாம். மக்களிடையே மறந்து போய் இருந்த உலகப் பொது மறையாம் திருக்குறளை பட்டிதொட்டி எங்கும் 'திருக்குறள் வகுப்புகள்' என நடத்தி அதை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் இவரே.

போலி சமயவாதிகளையும் அர்த்தமற்ற சடங்குகளையும் எதிர்த்த வள்ளலாரின் கருத்துகள் பெரியாரை மிகவும் கவர்ந்தது. அதனால்தான் 1935-ம் ஆண்டு திருவருட்பா நூலின் ஆறாம் திருமுறையை குடியரசு பதிப்பகம் வெளியிட்டது. 'இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு' என்ற பெயரில் குடியரசுப் பதிப்பகத்தின் மூன்றாவது வெளியீடாகப் பெரியார் வெளியிட்டார்.
வள்ளலார்
வள்ளலார்

உருவ வழிபாட்டை மறுத்து, உள்ளெழும் ஜோதி வழிபாட்டை பிரபலமாக்கி மக்களை அறிவு வழியே ஆற்றுப்படுத்திய ஞான வள்ளல் இவர். கறுமை, நீலம், பசுமை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு என ஆன்மாவை மறைக்கும் ஏழு திரைகளின் வழியே அருள்பெரும் ஜோதியை வழிபடச் மெய்ஞ்ஞான குரு இவர். 'சாதி, சமயம், இனம், மொழி, நாடு என எந்த பாகுபாடும் நம்மில் கூடாது. எல்லா மக்களையும் சகோதர நோக்குடன் நேசிக்கவேண்டும், ஏனெனில் எல்லா உயிரிலும் இறைவனே வசிக்கிறார்' என்ற இவரின் உயரிய கருத்துக்கள் எல்லா மக்களையும் கவர்ந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சி - ஊறும் வரலாறு - 12: சுழலில் சிக்கிய ஆளுமை, வ.வே.சு ஐயரின் வரலாறு!

ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ள வள்ளலாரின் திருவருட்பா, சிறப்பான வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பும் மனிதர்களுக்கு ஒரு கையேடு என்றே போற்றப்படுகின்றது. திருவருட்பா வள்ளலாரின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டன. பிறகு மற்ற இரு திருமுறைகள் வெளியாகின. தனது வாழ்க்கை முழுவதும் தான் போதித்த அத்தனை நல்ல கருத்துகளையும் தாமும் தம் குழாமும் அப்படியே கடைப்பிடிக்கவும் செய்தார். எல்லா உயிரிலும் இறைவனை தரிசித்து மரணமில்லாப் பெரு வாழ்வுப் பெறுவதும் எளிது என்று உபதேசித்த வள்ளலார், இறுதியில் காற்றில் கரைந்த கற்பூரமாய் இறைவனோடு ஒன்றிணைந்து கலந்தார்.

அருள் பெருஞ்சோதி
அருள் பெருஞ்சோதி
வள்ளலார் ஏற்றிய ஞான தீபம் இன்றும் உலகெங்கும் பல மக்களால் அணையாமல் பாதுகாக்கப்படுகின்றன. அவர் ஆற்றிய பசிப்பிணி நீக்கும் அற்புதப் பணியை இன்றும் பல மக்கள் சிரமேற்கொண்டு செய்து வருகிறார்கள். வள்ளலார் என்ற தூய ஆன்மா நம்மிடையே இல்லை என்றாலும் அவரது கொள்கைகளும் தூய பணிகளும் இன்றும் மக்களிடையே நிலவி வருகின்றன. அதுவே அவரின் வாழ்வுக்கும் கிடைத்த வெற்றி எனலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு