திருத்தலங்கள்
Published:Updated:

'ஐந்து திருடர்கள்'

வள்ளலார்
பிரீமியம் ஸ்டோரி
News
வள்ளலார்

வள்ளலார்

`மாயை எனும் இரவில்என் மனையகத்

தேவிடய வாதனை எனுங்கள்வர்தாம்

வந்துமன அடிமையை எழுப்பி அவனைத் தமது

வசமாக உளவுகண்டு

மேயமதி எனும் ஒருவிளக்கினை அவித்தெனது

மெய்ந்நிலைச் சாளிகைஎலாம்

வேறுற உடைத்துள்ள பொருள்எலாங் கொள்ளைகொள

மிகநடுக் குற்றுநினையே

நேயம்உற ஓவாது கூவுகின்றேன்...’

வள்ளலார்
வள்ளலார்


வள்ளலார் அருளிய இந்தப் பாடலில் ஒரு கதை உண்டு.

அது அமாவாசை இரவு. ஒரு பெரிய வீட்டில், நடுவாக ஒரு விளக்கு ஒளிவீசிக் கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் ஒவ்வொரு அறையிலும் செல்வப் பொக்கிஷங்கள் குவியலாக இருந்தது தெரிந்தது. இவ்வளவு செல்வம் இருக்கும்போது, ஒரு பாதுகாப்பு வேண்டாமா?

அதற்காக, வாசலில் ஒரு பாதுகாவலரை நியமித்திருந்தார்கள். அந்த வீட்டில் என்னென்ன, எங்கெங்கே இருக்கின்றன என்பது அந்தப் பாதுகாவலருக்குத் தெரியும். அந்தப் பாதுகாவலையும் மீறி, அந்தச் செல்வங்களை அப்படியே கவர்ந்துகொண்டு போய்விடவேண்டும் என்ற எண்ணத்தில் ஐந்து திருடர்கள் கிளம்பினார்கள்.

அமாவாசை இருட்டு திருடர்களுக்கு உதவியாக இருந்தது. செல்வந் தரின் வீட்டை நெருங்கினார்கள். பாதுகாவலரை நெருங்கி மெள்ளப் பேச்சுக் கொடுத்து, அவரைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டார்கள். அதன்பிறகு, திருடர்களின் வேலை சுலபமானது. எந்தெந்த அறையில் என்னென்ன இருக்கிறது என்று, கள்வர்களுக்கு உளவு சொன்னார் அந்தப் பாதுகாவலர்.

விளக்கு எரியும்போது, எப்படித் திருட முடியும்? அதனால், அபூர்வமான அந்த விளக்கை அணைத்தார்கள். அப்புறம் என்ன..? கொள்ளைதான்! வீட்டுக்காரர் தகவல் தெரிந்து அலறத் தொடங்கி விட்டார். ஆனால், உதவிக்கு ஓடி வரத்தான் யாருமே இல்லை.

இந்தக் கதையில் வரும் அமாவாசை இரவு என்பது நம் அறியா மையைக் குறிக்கும். வீடு - நம் உடம்பு; செல்வங்கள் - அமைதி, நிம்மதி, சந்தோஷம், ஆற்றல் போன்றவை; ஐந்து திருடர்கள் - விஷய வாசனைகளைக் காட்டி, நம்மைக் கவிழ்க்கும் ஐம்புலன்கள்; காவலர் - மனது; விளக்கு - அறிவு.

அறியாமை வசப்பட்டு, ஐம்புலன்களும் காட்டும் விஷய சுகங்களில் ஆழ்ந்து போகிறோம். மனமும் ஐம்புலன்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு எங்கெங்கு, எது எது கிடைக்கும், அதை எப்படி யெல்லாம் அனுபவிக்கலாம் என்று பட்டியல் போட்டு நீட்டுகிறது. அறிவிழந்து போகிறது. அமைதி, நிம்மதி, சந்தோஷம், ஆற்றல் போன்றவை நம்மை விட்டு விலகி மறைந்துபோகின்றன.

உடல் வேதனைகளும் மனவேதனைகளும் அடித்துப் புரட்டி எடுக்கின்றன. தாங்காமல் நம் ஓலம் இடுகிறோம். ‘கடவுளே! நான் கத்தறது உன் காதிலேயே விழவில்லையா? என்னைக் காப்பாத்து!’ என்று அழுது முறையிடுகிறோம்.

இதைச் சொல்லி இப்படியான நிலையிலிருது மீள அருள்பாலிக்க வேண்டும் என்று அம்பிகையைச் சரணடைய நமக்கு வழிகாட்டுகிறார் வள்ளலார்.

- பி.சந்திரமெளலி