Published:Updated:

இழந்த பதவியும் சொத்தும் மீண்டும் கிடைக்கும்!

பூவேந்திய நாதர் திருக்கோயில்
பிரீமியம் ஸ்டோரி
பூவேந்திய நாதர் திருக்கோயில்

அபூர்வ விருட்சம் விசேஷ வழிபாடு!

இழந்த பதவியும் சொத்தும் மீண்டும் கிடைக்கும்!

அபூர்வ விருட்சம் விசேஷ வழிபாடு!

Published:Updated:
பூவேந்திய நாதர் திருக்கோயில்
பிரீமியம் ஸ்டோரி
பூவேந்திய நாதர் திருக்கோயில்

நம் குடும்பம் தழைக்கவும், சந்ததி சிறக்கவும் பித்ருக்களாகிய முன்னோரின் ஆசியும் அருளும் தேவை. ஜாதகத்தில் ஒருவருக்கு பித்ரு தோஷம் இருப்பின் வாழ்வின் சந்தோஷம் தடைப்பட்டுப் போகிறது. இந்த தோஷத்தைப் போக்கி முன்னோரின் அருளையும் ஆசியும் பெற்றுத் தரும் ஒரு திருத்தலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

பூவேந்திய நாதர் திருக்கோயில்
பூவேந்திய நாதர் திருக்கோயில்


ராமநாதபுரத்திலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியே திருச்செந்தூர் செல்லும் வழியில் சுமார் 55 கி.மீ. தூரத்தில் உள்ள ஊர் மாரியூர். இங்கே பவளவல்லி அம்பாள் சமேதராக பூவேந்திய நாதர் அருளும் திருக்கோயில் மிகப் பழைமையானது. இங்குள்ள லிங்கத்திருமேனி வருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ராமபிரானால் வதம் செய்யப்பட்ட மாரீசன் முக்திபெற்ற தலம் இது என்கின்றன புராணங்கள்.

முன்னொரு காலம் இந்தத் தலத்தில் துர்மகேந்திர மகரிஷி என்பவர் தவமும் வழிபாடும் செய்து வந்தார். குளக்கரையில் அவர் தவம் செய்த இடத்துக்கு அருகில் மாமரம் ஒன்றும் இருந்தது. அந்த மரத்தில் நாளொன்றுக்கு ஒரு மாங்கனி காய்க்குமாம். அந்தப் பழமே துர்மகேந்திர மகரிஷியின் உணவு.

ஒருநாள் பெண்ணொருத்தி குளத்தில் நீர் எடுக்க வந்தாள். மாமரத்தில் உதிர்ந்த மாங்கனி, நீர் எடுத்த பெண்ணின் குடத்துக்குள் சென்றுவிட்டது. அவளும் இதை அறியாமல் வீட்டுக்குச் சென்று குடத்தை இறக்கிவைத்தாள். அதில் மாம்பழம் இருப்பதைக் கண்ட அவளின் குழந்தைகள் அதை எடுத்துச் சாப்பிட்டுவிட்டனர்.

பூவேந்திய நாதர் திருக்கோயில்
பூவேந்திய நாதர் திருக்கோயில்


இந்த நிலையில் மரத்தில் மாங்கனி இல்லாததைக் கண்ட மகரிஷி, எவரோ திருடிவிட்டனர் என்று கருதி மாங்கனியைச் சாப்பிட்டவருக்கு மூக்கும் மார்பும் இல்லாமல் போகட்டும்’ என்று சாபம் கொடுத்தார். சாபம் பலித்தது. பெண்ணின் குழந்தைகள் அவலட்சணம் அடைந்தனர். காரணம் புரியாமல் தவித்த பெண், மாங்கனியின் மகத்துவத்தை அறிந்தாள். கோயிலுக்கு ஓடி, மகரிஷியிடம் விஷயத்தைக் கூறி, விமோசனம் அருளும்படி கேட்டுக்கொண்டாள். அவரோ சாபத்தைத் திரும்பப் பெறமுடியாது என்று கூறிவிட்டார்.

பவளவல்லி அம்பாள்
பவளவல்லி அம்பாள்

அதனால் கோபம் கொண்ட அந்தப் பெண் இறைவனைச் சாட்சியாகக் கொண்டு, `மண்மாரி பொழிந்து இந்த ஊரே மண்ணில் மூழ்கட்டும்’ என்று சபித்து விட்டாள். அது அப்படியே பலித்தது. ஊரும் கோயிலும் மண்மூடிப் போயின. வெகுகாலம் கழித்து இந்தப் பகுதியை ஆண்ட பாண்டியனும் அவன் அமைச்சரும், வேட்டைக்கு வந்தனர். ஓய்வு வேளையில் உறங்கினார் மன்னர். அப்போது அமைச்சர் தரையைக் கிளறிக்கொண்டிருக்க கோயில் கலசம் ஒன்று தட்டுப்படுவதைக் கண்டார்.

மண்ணில் கலசத்தைக் கண்ட அமைச்சர் மன்னரை எழுப்பினார். உடனடியாக அந்த இடத்தில் பூமி அகழப்பட்டது. திருக்கோயில் வெளிப்பட்டது. ஆனாலும் கதவைத் திறந்து உள்ளே போகமுடியவில்லை.

பூவேந்திய நாதர்
பூவேந்திய நாதர்


மன்னன் கலங்கினான். அன்று இரவு அவனுக்கு கனவு வந்தது. கனவில் தோன்றிய சிவபெருமான், இவ்வழியே என் அடியார்கள் நால்வர் யாத்திரையாக வருகிறார்கள். தோற்றத்தை வைத்து அவர்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. உரிய மரியாதையுடன் அவர்களை அழைத்து வந்தால், கோயிலுக்குள் நுழைய வழி பிறக்கும்’ என்று அருள்பாலித்து மறைந்தார்.

மன்னவனும் அப்படியே செய்தான். யாத்திரை வந்த அடியார்களை ஆலயத்தைத் திறந்து உள்ளே செல்ல உதவவேண்டும் என வேண்டிக்கொண்டான். நால்வரில் இருவர் யாத்திரையைத் தொடர, இருவர் மட்டும் மன்னனுடன் ஆலயத்தை அடைந்தார்கள்.

`ஆலயத்தை நெருங்கியதும் பைரவா அன்று கொடுத்த சாவியை இன்று கொடும்’ என அவர்கள் வேண்டிக்கொள்ள, அவர்களின் கைகளில் சாவிக்கொத்து வந்து விழுந்தது. கோயில் திறக்கப்பட்டது. பல வருடங்களாக மண்மூடிக் கிடந்த ஆலயத்தில்... அப்போதுதான் அபிஷேகித்து அலங்காரம் செய்தது போன்று வாடாத மலர் ஆரங்களைச் சூடியபடி பொலிவுடன் காட்சி அளித்தார்களாம் ஸ்வாமியும் அம்பாளும்!

கதவைத் திறக்க வழிகாட்டிய சிவனடியார்களிடம் என்ன காணிக்கை வேண்டும் என்று கேட்டாராம் பாண்டிய மன்னர். அதாவது சம்பளம் வேண்டுமா அல்லது உம்பளம் வேண்டுமா என்று மன்னர் கேட்டாராம். உம்பளம் என்றால் சொத்துக்களை விட்டுத் தருதல். அடியார்கள் உம்பளம் என்று சொல்ல, 7 கிராமங்கள் அவர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.

பித்ரு தோஷம் மட்டுமன்றி வேறுபல வேண்டுதல்களுக்காகவும் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். சந்ததி - வம்சம் தழைக்கவும் இங்குள்ள அம்மையும் அப்பனும் அருள் பாலிக்கிறார்கள். அதேபோல் இங்கு வந்து வணங்கி முன்னோரின் நினைவாக மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருதோஷம் நீங்கி முன்னோரின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்; நவகிரக தோஷங்கள் யாவும் மட்டுப்படும் என்கிறார்கள்.

இங்குள்ள கன்னிமூல கணபதி வரப்பிரசாதியானவர். மாரீசனை வதைத்ததால் ராமபிரானுக்கு உண்டான பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிய விருட்சம் இது என்பது நம்பிக்கை. கடலில் நீராடி, ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசித்து வழிபட்டால், கைவிட்டுப்போன சொத்துகள் இழந்த பதவிகள் ஆகியவை மீண்டும் கிடைக்கும் என்கிறார்கள். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று கடற்கரையில் நிகழும் திருக்கல்யாணம், வலை வீசும் திருவிளையாடல் வைபவம் ஆகியவை பிரசித்தம்.

எப்படிச் செல்வது? ராமேஸ்வரத்திலிருந்து, கிழக்குக் கடற்கரை மார்க்கத்தில் சாயல்குடி, கடலாடி வழியாக திருச்செந்தூர் செல்லும் பேருந்துகளில் பயணித்து மாரியூரை அடையலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism