Published:Updated:

ராமநாதபுரம் அரண்மனையில் 364 வருடங்களாகக் கோலாகலமாக நடக்கும் நவராத்திரி விழா!

நவராத்திரி விழா

ராமநாதபுரம் மாவட்டதிலுள்ள அரண்மனையில் உள்ளது ஶ்ரீராஜராஜஸ்வரி அம்மன் கோயில். இக்கோயில் 364 ஆண்டுகள் பழமையான கோயில்

ராமநாதபுரம் அரண்மனையில் 364 வருடங்களாகக் கோலாகலமாக நடக்கும் நவராத்திரி விழா!

ராமநாதபுரம் மாவட்டதிலுள்ள அரண்மனையில் உள்ளது ஶ்ரீராஜராஜஸ்வரி அம்மன் கோயில். இக்கோயில் 364 ஆண்டுகள் பழமையான கோயில்

Published:Updated:
நவராத்திரி விழா
ராமநாதபுரம் மாவட்டதிலுள்ள அரண்மனையில் உள்ளது ஶ்ரீராஜராஜஸ்வரி அம்மன் கோயில். இக்கோயில் 364 ஆண்டுகள் பழமையான கோயில் ஆகும். சேதுபதி மன்னர்களுள் ஒருவரான திருமலை ரெகுநாத சேதுபதி அவர்களால் இக்கோயில் கி.பி.1658-ல் கட்டப்பட்டது.

கி.பி.1650-ல் மதுரையின் மன்னராக இருந்த திருமலை நாயக்கர் வயது முதிர்வின் காரணமாக படுத்த படுக்கையாக இருந்தார். இந்த செய்தியை அறிந்த மைசூர் இராஜ்ஜியத்தின் பன்னிரெண்டாவது மகாராஜாவான காந்திரவ நரசராஜ உடையார் மதுரையைக் கைப்பற்றுவதற்காக பெறும் சைன்னியத்துடன் மதுரையை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

அப்பொழுது திருமலை நாயக்கருக்கு உதவுவதற்காக ரெகுநாத சேதுபதி போர் புரிந்து மைசூர் மன்னனை வெற்றிகொண்டு மதுரை நாயக்க அரசினை நிலை நிறுத்தினார். தன் தோல்வியை ஒப்புக்கொண்ட காந்தரவ நரசராஜ உடையார் திருமலை நாயக்கருக்கு மைசூரில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள உற்சவர் சிலை ஒன்றை காணிக்கையாக அளித்தார். அந்த சிலையை வெற்றிக்குக் காரணமாக இருந்த ரெகுநாத சேதுபதிக்கு திருமலை நாயக்கர் அளித்தார். அதுவே தற்போதும் ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள பொன்னாலான ராஜராஜேஸ்வரி திருமேனியாகும்.

ராமநாதபுரம் ஶ்ரீராஜராஜஸ்வரி அம்மன் கோயில்
ராமநாதபுரம் ஶ்ரீராஜராஜஸ்வரி அம்மன் கோயில்

பின் கி.பி.1658-ல் இந்த அம்மனுக்கு ஆலயம் எழுப்பினார் ரெகுநாத சேதுபதி. அன்று முதல் ராமநாதபுரம் அரண்மனையில் சேதுபதி மன்னர்களது குல தெய்வமாகப் போற்றப்படுகிறாள் ராஜராஜேஸ்வரி அம்மன். அம்பாளுக்கு விழா நடத்தும் வகையில் மன்னர் திருமலை ரெகுநாத சேதுபதி மைசூரில் நடைபெறுவதைப் போன்று புரட்டாசி திங்களில் பத்து நாட்களும் தசரா விழா நடப்பதற்கு ஏற்பாடு செய்தார். இவ்விழாவினை மகாநோன்பு என வழங்குவர். இந்த பத்து நாட்களும் ராமநாதபுரம் அரண்மனையேக் கோலாகலமாக இருக்கும்.

ராமநாதபுர அரண்மனை நவராத்திரி விழா
ராமநாதபுர அரண்மனை நவராத்திரி விழா

ரெகுநாத சேதுபதிக்குப் பின் வந்த பல சேதுபதி மன்னர்கள் இக்கோயிலை இன்னும் சிறப்பாக எழுப்பினார்கள். விஜயதசமி அன்று பிறந்ததால் விஜய ரெகுநாத சேதுபதி என்று பெயர் பெற்ற சேதுபதி மன்னர் அடிக்கடி மைசூர் சென்று அங்குள்ள மாதிரி பல அழகான கொலு பொம்மைகளை செய்வதற்கு மைசூரிலிருந்தே ஆட்களை வரவழைத்தார். பின் பாஸ்கர சேதுபதி மன்னர் அம்பாளின் கருவறையின் மேற்கோபுரத்தை பொன் தகட்டினால் வேய்ந்து மகிழ்ந்தார். இந்த நிகழ்வினை கோயிலின் கோபுரத்திலும் பொறித்து தங்கத்தால் ஆன சிம்ம வாகனத்தையும் வழங்கியுள்ளார்.

ஆரம்பத்தில் இந்த அம்பாளுக்கு எருமைக் கடாவை பலியிடும் வழக்கம் இருந்திருக்கிறது. பின் கி.பி.1894-ல் சைவ சித்தாந்தியான மன்னர் பாஸ்கர சேதுபதி உயிர்ப்பலி பூஜையை தவிர்த்து, வாம பூஜை எனப்படும் வகையில் பிற கோயில்களில் நடப்பதை போன்று அம்பாளுக்கு பூஜை, நைவேத்யம், அபிஷேகம் ஆகிய நடைமுறைகளை நடத்தி வர ஏற்பாடு செய்தார். அதற்காக சிருங்கேரி சாரதாமடத்தைச் சார்ந்த ஜகத்குரு சச்சிதாநந்த அபிநவ நரசிம்ம தீர்த்த பாரதி சுவாமிகளை வரவழைத்து அம்பாளின் ஶ்ரீசக்கரத்தை மாற்றி அமைத்து உயிர்ப்பலிக்குப் பதிலாக வாமபூஜை நடத்தும் முறையை ஏற்படுத்தினார்.

இதுமட்டுமின்றி இத்தாலி நாட்டில் மிலான் நகரிலிருந்து வெங்கலத்தால் ஆன ஒரு பெரிய மணியையும் வரவழைத்து ஆலயத்தில் நிறுவினார். மேலும் முத்து ராமலிங்க சேதுபதி தங்கக் கேடயத்தை அம்மனுக்கு வழங்கியுள்ளார். இப்படி பல சேதுபதி மன்னர்கள் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கோயிலை புனரமைத்து உள்ளனர். 364 ஆண்டுகள் கடந்து இன்றும் வரை இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் விஜயதசமி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு ராணி ராஜேஸ்வரி நாச்சியார் அவர்களின் தலைமையில் பத்து நாட்களும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. ஆன்மீக சொற்பொழிவு, மஹாபிஷேகம், திருவிளக்கு பூஜை, பரதநாட்டிய நிகழ்ச்சி, இன்னிசை கச்சேரி, பல்சுவை நிகழ்ச்சி, பட்டிமன்றம், பொம்மலாட்டம் என இந்த பத்து நாட்களும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.

தசரா விழா
தசரா விழா

10-ஆம் நாள், விஜய தசமி அன்று அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்வினை மகாநோன்பு என அழைப்பர். கேணிக்கரையிலுள்ள மகர்நோன்பு திடலில் இந்நிகழ்ச்சி நடைபெறும். ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற கோயில்களில் உள்ள தெய்வங்கள் எல்லாம் ஊரைச்சுற்றி அரண்மனை வழியாக வந்து பின் மகர்நோன்பு திடலை சென்றுவிடும். கடைசியாக அம்பாள் ஶ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷாசுரமர்த்தனி திருக்கோலத்தில் புறப்பட்டு மகர்நோன்பு திடலுக்கு சென்றவுடன், அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெறும்.

தலைமை குருக்கள் எய்தும் அம்பை பார்க்க ஏராளமான மக்கள் திரளுவர். அம்பு எய்தல் மூலம் நாட்டில் மழை பொழிந்து ஊர் செழிக்கும் என்பது ஐதீகம். குருக்கள் விட்ட அம்பை எடுக்க மக்கள் போட்டிபோடுவர். அந்த அம்பினை எடுத்து வீட்டில் வைத்தால் வீட்டில் பொன் பெருகும் என்பது ஐதீகம். அம்பாளை வழிபடுவதால் திருமண தடை, குழந்தையின்மை போன்ற தடைகள் நீங்கும். நினைத்தக் காரியம் கைக்கூடும். இதனால் தான் சேதுபதி மன்னர்கள் அம்பாளை வெற்றி தேவதையாக வழிபட்டனர் என்கிறார்கள் பக்தர்கள்.