திருக்கதைகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 78

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

தேசிகர் தனது கிரகத்துக்குள் நுழைந்து ஆலோசித்தார். இஞ்சிச் சாறு மற்றும் கற்பூரவல்லித் துணுக்குகளுடன் ஒரு பாத்திரத்தில் பசுமோரைக் கொண்டு வந்து கொடுத்தால்

ற்போதைய நிலைமை, இறைவன் நமக்கு வைத்திருக்கும் சோதனை. இதில் வெல்ல அவனிடமே மன்றாடுவோம். அவனைக் காத்திட அவனிடமே அருளை வேண்டுவோம். மஹா சுதர்சனம் நமக்குத் துணையாக நின்று வழிகாட்டும்.’’

இந்திரா சௌந்தர்ராஜன்
இந்திரா சௌந்தர்ராஜன்தேசத்தின் நடப்புச் சூழலில் இறையருள் துணையிருக்கும் என்று வேதாந்த தேசிகர் கூறி முடிக்க, விஜயாபதி அந்தத் தகவலைக் கூறினான்.

``சுவாமி! தாங்கள் திருவரங்கத்துக்கு வந்து துணை நிற்கவேண்டும் என்பது ஸ்ரீபிள்ளைலோகாசார்யரின் விருப்பம்.''

``அதை நானும் அறிவேன். நான் திருவரங்கம் செல்வதற்குரிய ஏற்பாடு களை நீயே செய். நான் அங்கு வரப் போகும் தகவலையும் சேர்த்துவிடு.''

``எனில், இங்கே காஞ்சிக்கு...''

``இப்போதைக்குத் திருவரங்கத்துக்கே சிக்கல். எங்கு நோயின் தாக்கம் அதிகமோ, அங்கேதானே மருத்துவன் முதலில் செல்லவேண்டும்?''

``நல்லது. நான் இப்போதே தகவல் அனுப்பிவிடுகிறேன்''

என்ற விஜயாபதி அங்கிருந்து நகர்ந்தான்.

தேசிகர் தனது கிரகத்துக்குள் நுழைந்து ஆலோசித்தார். இஞ்சிச் சாறு மற்றும் கற்பூரவல்லித் துணுக்குகளுடன் ஒரு பாத்திரத்தில் பசுமோரைக் கொண்டு வந்து கொடுத்தால், அவரின் தர்மபத்தினியான திருமங்கை. அப்போதைக்கு அந்தத் தாகசாந்தி பரம சுகமாக இருந்தது. மோர் பாத்திரத்தைத் திரும்பத் தருகையில், திருமங்கையின் முகத்தில் தொனித்த வாட்டத்தைக் கவனித்தார் வேதாந்ததேசிகர்.

``என்ன மங்கை... ஏன் இந்த வாட்டம்?''

``நீங்கள் பேசியதைக் கேட்டபடி இருந்தேன். திருவரங்கம் போகப் போவதாக கூறினீர்களே...''

``ஆம்! சென்றாக வேண்டும். பாவம் அங்கே பிள்ளை லோகாசார்யர் தனித்த மனிதராய்ப் போராடிக்கொண்டிருக்கிறார்.''

``நீங்கள் சென்றுவிட்டால் நானும் இங்கே தனித்துப் போராட வேண்டி வருமே... யோசித்தீர்களா?''

கணவரை மடக்கிவிட்டதுபோல கேட்டாள் திருமங்கை.

திருவரங்கப் பெருமாள்
திருவரங்கப் பெருமாள்``மங்கை! இக்கட்டான இந்தக் காலகட்டத்தில் நீ இப்படியெல்லாம் யோசிக்கக் கூடாது. யாத்திரை நோக்கம் எனில் உன்னையும் உடன் அழைத்துச் செல்வேன். இப்போதைக்கு என் பயணம் காலத்தின் கட்டாயம். முக்கியக் கடமையும்கூட.''

``புரிகிறது. நான் என் வருத்தத்தை ஜீரணிப்பேன். நீங்கள் நல்லபடியாக சென்று வாருங்கள்.''

``உடனே புரிந்துகொண்டு வழிவிட்டு விட் டாய். உன்னை மனைவியாக அடைந்ததற்குப் பெருமைப்படுகிறேன்''- என்ற தேசிகர் தன் பயணத்தையும் அன்றே தொடங்கினார்.

திருவரங்கம்
திருவரங்கம்திருவரங்கம் -கொள்ளிடக்கரை!

காவிரியின் கிளையான கொள்ளிடக்கரை முழுக்க மணல்வெளி மேல் சுல்தானிய படை வீரர்களின் புரவிகள் திரண்டு நின்றன. சிலர், புரவிகளை ஆற்றில் இறக்கிவிட்டு அவற்றை நீந்தச் செய்தும் புரவிகளின் மீது அமர்ந்து எக்காளமிட்டுக் கொண்டும் இருந்தனர்.

நித்திய கடமையின் நிமித்தம் ஆற்றுக்கு நீராட வந்த பிள்ளை லோகாசார்யர் காட்சிகளைக் கண்டு மிரண்டு போனார். புனிதமான ஆறு, குதிரைக் கொட்டாரமாகி, குதிரைகளின் சாண வாசனையோடு கிடந்தது. பிள்ளை லோகாசார்யர் குளிக்காமல் திரும்பி நடக்கத் தொடங்கினார். எதிரில் சிலர், சட்டிப்பானை தவலைகளுடன் வண்டி கட்டிக்கொண்டு வந்தனர். ஊரைவிட்டு வெளியேறிவிடுவது என்பது அவர்களின் நோக்கமாக இருந்தது. பிள்ளை லோகாசார்யரைக் கண்டதும் அந்த வண்டி நின்றது. வண்டியில் இருந்தவர்கள், தொடர்ந்து வந்தவர்களின் கண்களில் நீர்.

``என்ன ஆயிற்று... எங்கே போகிறீர்கள்?''

``அது தெரியாமல்தான் போய்க் கொண்டிருக் கிறோம்.''

``புரிகிறது! இப்படி ஊரைவிட்டுப் போவதால் பிரச்னை தீர்ந்துவிடுமா? எதிர்த்துப் போராட வேண்டாமா?''

``ஏன், நாங்கள் உயிருடன் இருப்பது உங்களுக் குப் பிடிக்கவில்லையா?''

இந்தக் கேள்வி பிள்ளை லோகாசார்யரின் நெஞ்சில் அறைந்தது.

``மிலேச்சர்கள் ஊருக்குள் புகுந்துவிட்டனர். உயிர் பிழைக்க வேண்டும் என்றால் நம்நெறியை கைவிட்டு, அவர்களின் நெறியைப் பின்பற்ற வேண்டும் என்கின்றனர். எனவேதான் எங்கள் வழியே செல்கிறோம்...'' அவர்கள் கூறிவிட்டு திரும்ப நடந்தனர். பிள்ளை லோகாசார்யர் கண்கள் கலங்க, அந்த இடத்திலிருந்தபடியே வடக்குக் கோபுரத்தைப் பார்த்தார்.

``அரங்கா! இது என்ன சோதனை? மனிதர்களால் மனிதர்கள் அழியலாமா... அதுவும் இந்த அருள் பூமியில் அவ்வாறு நடக்கலாமா? இவ்வாறெல்லாம் நடக்கும் என்றுதான் நீ உறக்கத்தில் கிடப்பதுபோல் கிடக்கிறாயோ?'' என்று கசிந்து உருகியவர், ஆலயம் நோக்கி நடந்தார். அரங்கனின் சந்நிதிக்குச் செல்லாமல் தாயாரின் சந்நிதிக்குச் சென்றார்.

சீடர் ஒருவர் கேட்டார்: ``சுவாமி! எப்போதும் எம்பெருமானை அல்லவா முதலில் தரிசிப்பீர்கள்?''

``ஆம்! ஆனால் இன்று நான் தாயாரிடம்தான் மன்றாடப் போகிறேன். தாயுள்ளம் மிகக் கருணையானது. எம்பெருமானிடம் வேகமாய் எடுத்துச் சொல்லி நல்வழி காட்ட வழி செய்வாள் அரங்கநாயகி...''

பிள்ளை லோகாசார்யர் இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வேதாந்த தேசிகர் புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாக செய்தி வந்து சேர்ந்தது.

பிள்ளை லோகாசார்யர் மனம் மகிழ்ந்தார். ``அற்புதம்! அந்தத் திருவேங்கடமுடையானே நேரில் வருவதாக உணர்கிறேன்'' என்றார்.

``அப்படியானால்..?''

``ஆம்! தேசிகர் திருவேங்கடமுடையானின் திருவாராதனை மணியான கண்டத்தின் அம்சம். ஹயக்ரீவனின் ஞான விலாசம். கருடனால் மந்திர பூர்வ பலம் பெற்ற பெரும் மந்திரர்.''

``அவரால் பகைவர்களை ஒடுக்க முடியுமா?''

``நிச்சயமாக ஏதாவது செய்வார். நான் தாயாரை பிரார்த்திக்கும் முன்பே யந்த்ர, மந்த்ர, தந்த்ர ஆகிய மூன்றின் கலவையான வேதாந்த தேசிகர் வரப் போவதாக கிடைத்திருக்கும் தகவல் என்னுள் நம்பிக்கையை உருவாக்கிவிட்டது.''

``ஆனால் ஊரில் எல்லோரும் நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.''

``கலியுகத்தில் சாமானியர்கள் இவ்வண்ணமே இருப்பர். எவரையும் குறை கூறக்கூடாது. இந்தச் சூழலுக்கு நடுவில்தான் நாம் நம் காரியத்தைச் சாதிக்க வேண்டும்''

``என்ன செய்யப் போகிறோம்?''

``நான் சில திட்டங்கள் வைத்திருக்கிறேன்'' என்ற பிள்ளை லோகாசார்யர், ஒரு திட்டத்தை விவரிக்கத் தொடங்கினார்!

- தொடரும்.

புத்தரின் வாழ்வில்...

புத்தர்
புத்தர்

புத்தர் தினமும் ஒரு கிராமத்தின் வழியாகப் பயணிப்பார். அவரை வெறுத்த அந்த கிராம மக்கள் தினமும் அவரை அடிப்பார்கள். அனைத்தையும் வாங்கிக்கொண்டு புத்தர் புன்னகையோடு கடந்து செல்வார்.

அன்றும் அப்படித்தான் நடந்தது. எல்லோரும் அடித்து முடித்தும் புத்தர் அங்கிருந்து நகரவில்லை. ``ஏன் இன்னும் இங்கேயே நிற்கிறீர்?'' என்று கேட்டனர் மக்கள்.

அதற்குப் புத்தர், ``வழக்கமாக என்னை அடிக்கும் உங்களில் ஒருவர் இன்று என்னை அடிக்கவில்லை. அவரும் அடித்துவிட்டால் நான் கிளம்பி விடுவேன். ஒருவேளை என்னை அடிக்காததால் இன்று அவருக்கு வருத்தம் வந்துவிடலாம்'' என்றார்.

மக்கள் தங்களுக்குள் விசாரித்த போது, அன்று ஒருவர் வரவில்லை என்பதை அறிந்தனர். அந்தக் கணம் அவர்களுக்குள் வெட்கம் பிறந்தது. அடித்தவர்களையும் மன்னித்து ஏற்கும் புத்தரின் ஞானத்தைக் கண்டு கிராம மக்கள் நெகிழ்ந்தனர்; அன்றே புத்தரின் பாதங்களைச் சரணடைந்தனர்.

நல்ல நோக்கத்துக்காக நாம் படும் துன்பங்கள் எதுவும் வீணாகாது என்பதற்குப் புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த இந்த சம்பவம் உதாரணம்.

- ஆர்.கீதா, சென்னை-44