மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 35

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

இந்திரா சௌந்தர் ராஜன்

சேற்றுக் கமல வயல்சூழ் அரங்கர் தம் சீர் தழைப்பப்

போற்றித் தொழும் நல்லவந்தணர் வாழ இப்பூதலத்தே

மாற்றற்ற செம்பொன் மணவாள மாமுனி வந்திலனேல்

ஆற்றில் கரைத்த புளியல்லவோ தமிழாரணமே!

- சம்பிரதாய சந்திரிகை

ணவாள மாமுனிகளின் மடத்துக்குத் தீ வைத்த எதிரிகளைச் சோழ அரசனின் காவலர்கள் கைது செய்து தண்டிக்க முனைந்தனர். அப்போது பெரிய ஜீயர் என்கிற ஸ்தானத்தில் இருந்த மணவாள மாமுனிகள், தான் தீ வைத்தவர்களை மன்னித்துவிட்டதாகவும் தாங்களும் மன்னித்து விட்டுவிடும்படியும் காவலர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இதை எவரும் எதிர்பார்க்கவில்லை. இம்மட்டில், தானொரு மாசுமருவற்ற சந்நியாசி என்று உணர்த்தியதோடு, பகைவர்களுக்கும் அருளிடும் தெய்விகத்தை மணவாள மாமுனிகள் கொண்டிருந்தார் என்பதை சகலரும் அறிந்து மகிழ்ந்தனர். மடத்துக்குத் தீ வைத்தவர்களும் அங்கேயே அவரின் திருவடியில் விழுந்து வணங்கி, அவரின் ஆசிகளுக்கு ஆளாகினர்; தங்களையும் சீடர் களாக ஏற்கும்படி வேண்டினர்!

தாம் ஆதிசேஷனின் அவதாரமாய் வந்துதித்த ராமாநுஜரின் தொடர்ச்சி என்பதை இந்தச் சம்பவம் வாயிலாக மட்டு மல்ல, வேறொரு சம்பவம் மூலமும் உலகுக்கு உணர்த்தினார் மாமுனிகள்.

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 35

இதுவரையிலும் திருவரங்கத்தில் கோட்டூரிலண்ணன் திருமாளிகை யில் வசித்து வந்தவர், இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, பல்லவராயன் மண்டபம் எனும் இடத்துக்குத் தன் ஜாகையை மாற்றிக் கொண்டார். அப்போது பல்லவராயன் மண்டபம் மிகவும் சிதிலமுற்றுக் கிடந்தது. மிலேச்சப் பாதிப்புத் தடயங்களும் காணப்பட்டன. அவற்றை நீக்கி, புண்யாவசனம் செய்து மண்டபத்தைப் புனிதப்படுத்தினார் மாமுனிகள்.

அத்துடன் பிரவசன மண்டபத் துக்குத் தன் குருவான திருவாய் மொழி பிள்ளையின் பெயரைச் சூட்டினார். மாளிகைக்குத் திருமலையாழ்வான் பெயரைச் சூட்டினார். அத்தோடு நில்லாமல் பிள்ளை லோகாசார்யர் முன்னம் தங்கியிருந்த மாளிகையில் இருந்து மண் எடுத்து வந்து, அதை ‘ரஹஸ்யம் விளைந்த மண்’ என்று கூறி, திருமாளிகைக்குத் திருமண் காப்பையும் சங்கு - சக்கர இலச்சினையையும் பொறித்து, சிறந்த குருகுல பீடமாக மாற்றினார்.

மட்டுமன்றி, சந்நிதி ஒன்றையும் உருவாக்கி, அதில் பிள்ளை லோகாசார்யர் மற்றும் திருவாய்மொழி பிள்ளையின் ரட்சைகளைக் கொண்டு வந்து வைத்து, ஆசார்ய பக்திக்கும் துதிக்கும் இலக்கணம் வகுத்தார். தினமும் அந்தத் திருமலரடிகளுக்குப் பூஜையும் நிகழ்த்தப்பட்டன. அங்கேயே தனது நித்ய த்யானத்தையும் வளர்த்துக்கொண்டார்.

ஒருநாள் அரங்க தரிசனம் புரிவதற்காக ஆலயம் ஏகிய மாமுனி, திருச்சந்நிதியை அடைந்தார். உள்ளே திருவாராதனம் நடந்து கொண்டிருந்தது. அவ்வேளையில், தாம் ஆலவட்ட கைங்கர்யம் புரிய விரும்பினார் மாமுனிகள்.

ஆனால், அப்போது சந்நிதியில் திருவாராதன கைங்கர்யம் செய்தபடி இருந்த உத்தம நம்பி, ``தாங்கள் தரிசித்துவிட்டுச் செல்ல லாம். இதையெல்லாம் செய்திட நாங்கள் இருக்கிறோம்’’ என்று கூறி சற்றே அலட்சியப் படுத்திவிட்டார். அது மாமுனிகள் மனதை வருத்திற்று. மேற்கொண்டு ஏதும் பேசாமல் சந்நிதியைவிட்டு நீங்கத் தொடங்கினார்.

அவர் வருத்தத்துடன் திரும்பியதைக் கண்ட பலரும் உத்தம நம்பியின் செயலை அறிந்து வருந்தினர். இதன் மூலம் உத்தமநம்பிக்கு ஆசார்ய அபசாரம் ஏற்பட்டதாகவும் கருதினர்.

குறிப்பாக, கோயிலண்ணன் உத்தமநம்பியைச் சந்தித்து அவரைக் கண்டித்தார். அத்துடன், மாமுனிகள் ஆதிசேஷனின் அவதாரம் என்பதையும் எடுத்துரைத்தார். அவர் சர்ப்ப வடிவம் எடுத்து தீப்பிடித்த மாளிகையிலிருந்து வெளியேறியதையும் பிறகு எவரும் அறியா வண்ணம் திரும்பி வந்ததையும் கூறினார். பெரிய ஜீயரிடம் அபசாரப்படுவதும் பெருமா ளிடம் அபசாரப்படுவதும் ஒன்று என்று கூறி, உத்தம நம்பி செய்த தவறை அவருக்கு உணர்த்தினார்.

ஆயினும் உத்தமநம்பியின் மனம் சமாதானம் ஆகவில்லை. எல்லோரும் மிகைப்படுத்திக் கூறுகின்றனர் என்றே கருதினார். அன்றிரவே உத்தம நம்பியின் கனவில் பெரிய பெருமாள் தோன்றினார். ``கோயிலண்ணன் சொன்னதில் உமக்கு நம்பிக்கை இல்லையா? பெரிய சீயன் எனது ஆதிசேஷன் அம்சம். இதை நீர் விரைவில் காண்பீர்’’ என்றுரைத்தார்.

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 35
Rangeecha

அடுத்த நொடி கனவு கலைந்து கண்விழித்த உத்தம நம்பிக்கு அதன் பின் உறக்கமே வரவில்லை. எப்போது விடியும் என்று காத்திருந்தவர், விடிந்ததும் காலைக்கடன்களையெல்லாம் முடித்துக்கொண்டு, நேராக கோயிலண்ணனின் இல்லத்துக்குச் சென்றார். சாஷ்டாங்கமாக அவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். கனவைப் பற்றி விவரித்தார். அப்போதே பெரிய ஜீயரை தரிசித்து அபசாரப் பரிகாரம் செய்ய விரும்புவதாகக் கூறினார்.

பின்னர், இருவருமாய் பெரிய ஜீயரின் புதிய இருப்பிடமான `பல்லவராயன் மாளிகை’ எனப்பட்ட திருமலையாழ்வார் கூடம் நோக்கிச் சென்றனர். அங்கே சென்றதும் மாமுனிகளின் காலில் விழுந்து வணங்கி, கண்ணீர் மல்கக் கனவு விஷயத்தை விவரித்தார் உத்தம நம்பி.

``மாமுனி... தங்களை அலட்சியம் செய்தேன். ஆயினும் அதனால் அரும் பயனே விளைந்தது. அதனாலேயே பெருமாள் என் கனவில் வந்தார். அவர் தரிசனமும் வாய்த்தது. தங்கள் மதிப்பையும் உணர முடிந்தது. இனி என்றும் தாங்களே என் ஆசார்யன். என் தவறை மன்னித்து அருளவேண்டும்’’ என்று உதடுகள் துடிக்க வேண்டினார்.

பெரிய ஜீயரான மாமுனிகள் நெகிழ்ந்தார். ``எனக்காக எம்பெருமான் உன் கனவில் வந்தானா? அவன் கருணையைத்தான் நான் என்னென்பேன்?’’ என்று கண்ணீர்மல்க பெருமாளைத் தொழுதவர், நம்பியையும் கோயிலண்ணனையும் ஆசீர்வதித்தார். அப்போது அவர் சிரசின் பின்னே ஆதிசேஷனின் நாக படம் விரிந்து, `இவர் வேறு நான் வேறல்ல’ என்பது போல அவர்கள் இருவருக்கும் காட்சியளித்தது. இருவரும் அந்த அரிய காட்சியால் மெய்சிலிர்த்துப் போயினர்.

இந்தத் திருக்காட்சியை இன்றும் திருவரங்க ஆலயத்தில், மணவாள மாமுனிகளின் சந்நிதியில் நாம் சித்திர ரூபமாகக்காணலாம். நடுவில் மாமுனிகள் இருக்க, இடப்புறம் உத்தம நம்பியும்; வலப்புறம் கோயிலண்ணனும் நின்று வணங்குவது போன்ற காட்சியை, ஒரு ஜன்னல் வழியாக சேவிக்கலாம்.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் பெரிய ஜீயர் எனப்பட்ட மாமுனிகளின் பெருமையும் திவ்யமும் பெரிதும் பரவி, திருவரங்கமே அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கத் தொடங்கியது.

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 35

ஒரு நாள், மணவாள மாமுனிகளுக்குத் திருமலை திருப்பதிக்குச் சென்று வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றிற்று. இந்த எண்ணத்தையும் அந்த அரங்கனே அவருக்குள் தோற்றுவித்தான். ராமாநுஜரின் வழித்தடத்தில் அவர் ஆற்றியது போலவே வைணவத்திற்கு மணவாள மாமுனிகள் அரும் தொண்டாற்றி வரும் நிலையில், திருவரங்கத்தைத் தொடர்ந்து மற்ற திவ்ய தேசங்கள் அனைத்துக்கும் செல்ல வேண்டும்; மங்களாசாசனம் புரியவேண்டும்; அங்கெல்லாம் புத்தெழுச்சியை உருவாக்கி சரித்திரத்தைத் தோற்றுவிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

வைஷ்ணவ குரு பரம்பரை என்பது ஒரு தொடர்கதை. ஆளவந்தார், ராமாநுஜர், வேதாந்த தேசிகன் எனும் தொடர்ச்சியில் தன்னையும் இணைத்துக்கொண்ட மணவாள மாமுனிகள், தன் பிரதான சீடரான வானமா மலை ஜீயர் எனும் பொன்னடிக்கால் ஜீயர் முதலாக நூற்றுக்கும் மேற்பட்ட சீடர்களுடன் திருமலை யாத்திரையை மேற்கொண்டார்.

வழியில் இடைப்பட்ட திருக்கோவிலூர், திருக்கடிகை எனப்படும் சோழிங்கபுரம் ஆகிய திவ்ய தலங்களுக்குச் சென்று தங்கினார். அங்கே பிரவசனமும் செய்தார். அங்குள்ள ஸ்ரீ வைணவ குலத் தோன்றல்களில், வாலிபப் பிராயம் தொடும் சகலருக்கும் தீட்சை வழங்கி ஒரு குருவாய் தன் கடமையை நிலை நிறுத்தினார். நிறைவாக திருமலையை அடைந்தார்.

சப்தகிரி எனப்படும் சேஷாத்ரி, நிலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடத்ரி எனும் ஏழு மலைத் தொடர்களின் அடிவாரத்தில் முகாம் அமைத்துத் தங்கினார்.

பொழுது விடிந்தால் மலை ஏறவேண்டும். அந்த இரவில் திருமலைக்கு மேல் வேங்கடவன் ஆலயத்தில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த `பெரிய கேள்வி அப்பன் ஜீயர்’ எனப்படும் ஜீயரின் உறக்கத்தில் ஒரு கனவு தோன்றியது. அந்தக் கனவு அதுவரை கண்டிராதது மட்டு மல்ல, பிரமிப்பு அளிப்பதாகவும் இருந்தது.

திருமலை எவ்வளவு பெரியது... எவ்வளவு நீளமானது? அவ்வளவு பெரிய உருவில் கிரகஸ்தர் ஒருவர் பன்னிரு திருமண் காப்புடன் திருவரங்கநாதர் போலவேபடுத்திருந்தார். காவி உடுத்திய சந்நியாசி ஒருவர் அவரின் காலடியில் அமர்ந்து, கால்களைப் பிடித்துவிட்டுத் தொண் டாற்றிக் கொண்டிருந்தார். இந்தக் காட்சியுடன் ஓர் அசரீரியும் ஒலித்தது.

`ஜீயரே! கால் நீட்டி கம்பீரமாய் என்னைப் போல் படுத்திருப்பவன் உம்மைப் போன்ற ஜீயர்களுக் கெல்லாம் ஜீயரான பெரிய ஜீயன் எனப்படும் அழகிய மணவாளன். ஆழ்வார் திருநகரியில் ராமாநுஜனின் புனரவதாரமாகத் தோன்றியவன். அழகிய மணவாளப் பெருமாள் எனும் நாமம் கொண்ட இவனே, எமது பெரிய கோயிலாகிய திருவரங்கத் திருப்பதியைத் திருத்தி ஆட்கொண்டு பணிபுரிந்து வருபவன். இன்று எமது வேங்கடவக் கோலம் கண்டு வணங்க வந்துள்ளான்.

ஏழுமலைக்குக் கீழே முகாமிட்டிருப்பவன், நாளையே இங்கு வருவான். அவனால் இத்திருமலையும் பல சிறப்புகள் பெறவுள்ளது. அந்த ஜீயனின் காலடியில் தொண்டாற்றும் துறவிதான் பொன்னடிக்கால் ஜீயன் எனும் வானமாமலை ஜீயன். வருங்காலத்தில் அவனாலும் வைணவ நெறி உயர்வுகளைப் பெறப் போகிறது. இதை உணர்ந்து நீ அவர்களை வரவேற்றுச் சிறப்பிப்பாய்’ என்று ஒலித்து அடங்கியது அந்த அசரீரி!

- தொடரும்...

திங்கள் கிழமையில் வெண்பொங்கல்!

திருக்கார்த்திகை, முருகனுக்கும் உகந்த திருநாள். சரவணப் பொய்கையில் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டதால், கார்த்திகேயன் என்ற திருநாமமும், திருக்கார்த்திகைத் திருநாளும் முருகப்பெருமானுக்கு உரியதாயிற்று. இந்தத் திருநாளில் மட்டுமல்ல... கார்த்திகை மாதம் முழுவதும், கந்தனை முறைப்படி வழிபட்டால், எல்லா நலன்களும் கைகூடும்.

முருகப் பெருமன்
முருகப் பெருமன்

திங்கட்கிழமைகளில் வெண்பொங்கல் படைத்து முருகனை வழிபடுவது சிறப்பு.

செவ்வாய்க்கிழமை களில் எலுமிச்சை சாதம் சமர்ப்பிக்கலாம்.

புதன்கிழமைகளில் வெள்ளை உளுத்தம் பருப்பு சாதமும், வியாழனன்று தயிர்சாதமும் நைவேத்தியம் செய்வது சிறப்பு.

வெள்ளிக்கிழமைகளில் கற்கண்டு மற்றும் சர்க்கரைப் பொங்கல் படைக்கலாம்.

சனிக்கிழமைகளில் சாம்பார் சாதமும், ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் சாதமும் சமர்ப்பித்து முருகனை வழிபடுவதால், எண்ணங்கள் ஈடேறும்.

- கா.ருத்ரா, தூத்துக்குடி