மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 2

ரங்கராஜ்ஜியம்
News
ரங்கராஜ்ஜியம்

திருத்துழாய் பறித்து, அதனால் திருவரங்கன் திருவடிகளைத் தொழுத கைகள், வாள் பற்ற நேர்ந்ததும் அரங்கன் சித்தமே!

ராத வருளமுதம் பொதிந்த கோயில்

அம்புயத்தோ னயோத்தி மன்னர் களித்த கோயில்

தோலாத தனி வீரன் தொழுத கோயில்

துணையான வீடணர்க்குத் துணையாங் கோயில்

சேராத பயனெல்லாம் சேர்க்குங் கோயில்

செழு மறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்

தீராத வினையனைத்துந் தீர்க்குங் கோயில்

திருவரங்க மெனத்திகழுங் கோயில்தானே!

- தேசிகப் பிரபந்தத்தில்

ஸ்ரீநிகமாந்த மகாதேசிகன்


அந்த நாள் திருவரங்க வரலாற்றில் ஒரு கொடிய நாள் என்றே சொல்ல வேண்டும். திருவரங்கத்தை மிலேச்சப் படை சுற்றி வளைத்து விட்ட நிலையில், ஒரு போர்ச்சூழல் உருவாயிற்று. அரங்கன் ஆலயம் பொருட்டு தங்கள் இன்னுயிரை வைணவ தாசர்கள் பலரும் வாரித் தர முன்வந்து மிலேச்சரை எதிர்த்துப் போரிட்டனர் என்றே கூறவேண்டும்.

திருத்துழாய் பறித்து, அதனால் திருவரங்கன் திருவடிகளைத் தொழுத கைகள், வாள் பற்ற நேர்ந்ததும் அரங்கன் சித்தமே!

மனித வாழ்வென்பது வெந்ததைத் தின்று விட்டு வேளை வந்தால் முடிந்துபோகிற அற்ப உயிரின வாழ்வு போன்றதன்று. அதிலும் வைணவப் பிறப்பெடுத்தவனுக்கு, அவனுடைய வாழ்வு என்பதே இறைத்தொண்டுக்கும் மீண்டும் பிறவாதபடி பெருமாளின் காலடிகள் சேர்வதற்குமான ஒரு முயற்சியே ஆகும்.

அந்த முயற்சியின் நிமித்தம் வைணவர் தாசர்கள், தங்களின் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருந்தனர் என்பதே நிஜம். இதை, திருவரங்க வரலாறு காலமெல்லாம் உலகுக்கு எடுத்துக் காட்டவே, மிலேச்சன் உள் புகுந்தானோ என்று கருதத் தோன்றியது.

வாழும் நாளிலேயே எம் பெருமானின் அவதாரப் பெருமைகளை கேட்டு வளர்ந்தவர்கள், பல நிஜங்களைத் தெரிந்தவர்கள். அவற்றில் ஒன்றே `எந்நிலைக்கும் எதிராக ஒரு நிலை இருக்கும்' என்கிற யதார்த்தம். எம்பெருமானே அசுரரோடு மோதி அழித்து, `எனக்கும் எதிரி உண்டு' என்பதை உணர்த்தியிருக்கிறான்.

அப்பைத்தான் எதிரிகளான மிலேச்சர்களுடன் மோதிட திருவரங்கமே தயாராக இருந்தது என்றே கூற வேண்டும். அவர்களுக்குப் பணிந்து உயிர் வாழ்வதைவிடவும், எதிர்த்து உயிர் துறப்பதை மேன்மையாகக் கருதி, அவர்களுடன் மோதி உயிர் இழந்தவர்கள் ஆயிரமாயிரம் ஆவர்!

இதையே `பன்னீராயிரவர் கலகம்' என்று கோயிலொழுகும் எடுத்துரைக்கிறது. கங்காதேவி என்னும் அரசி பனை ஏடுகளில் எழுதிய `மதுர வியூகம்' என்கிற பயணக் கட்டுரை நூல் வடிவமும் சாட்சியாக நிற்கிறது.

திருவரங்கம்
திருவரங்கம்

ஆலயம் மிலேச்சர் வயப்பட்டுவிட்டது. ரங்கத்தைவிட்டுப் புறப்பட்ட பிள்ளை லோகாசார்யர், ஒரு மாட்டு வண்டியில் பஞ்சு மூட்டைகளின் நடுவில் எம்பெருமான் மற்றும் பெருமாட்டி உற்சவ மூர்த்தங்களை மறைத்து வைத்துக்கொண்டு பயணித்தார்.

தள்ளாத வயதில் சதம் கடந்துவிட்ட நிலை யில், எம்பெருமான் அவருக்குத் தெம்பையும் தைரியத்தையும் அளித்தான். அவருடைய பயணம் யாதொரு தடங்கலுமின்றி, மதுரை சென்று சேர்ந்திட வேண்டி மஹா சுதர்சன ஹோமத்தை நிகழ்த்தினார் வேதாந்த தேசிகர். அத்துடன், பிள்ளைலோகாசார்யருக்கு யாதொரும் தீங்கு நேராதிருக்க, திருவரங்க சுதர்ச சூரி என்பான் இல்லத்தில் கருட பஞ்சகம் கூறிக்கொண்டு உபாசனையில் ஆழ்ந்துவிட்டார்.

பிள்ளை லோகாசார்யரும் அவர்தம் தொண்டர் குழாமும் விவசாயிகள் போல வேடம் இட்டுக்கொண்டு காட்டு வழியின் சென்றனர். விண்மிசை ஒரு கருடபட்சியும் நான் இருக்கிறேன் என்பது போல துணைக்கு வந்தது.

இடையே நிலமிசை சில சோதனைகளும் நிகழவே செய்தன. அந்நாளில் கள்ளர் பயம் மிகவே உண்டு. சில வழித் தடங்களில் இரவுப் பயணங்களை மேற்கொள்ள அஞ்சி சத்திரம் சாவடிகளில் தங்கிவிட்டு, பகலில்தான் பயணம் மேற்கொள்வர்.

ஆனால் தற்போது மிலேச்சர் சுற்றிவளைத்து விட்ட நிலையில், இரவு பொழுதுதான் பயணிக்க தோதானதாகிவிட்டது. எனவே இறைவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, அவர்கள் மேற்கொண்ட பயணத்தில், விராலிமலை அருகே கள்ளர் கூட்டம் பிள்ளை லோகாசார்யரையும் பஞ்சு மூட்டை வண்டியையும் சுற்றி வளைத்தது.

முகத்தை முகக் கவசத்தால் மறைத்துக் கொண்டு வாளோடும், தீப்பந்தங்களோடும் சுற்றி வளைத்தவர்களைக் கண்டு பிள்ளை லோகாசாரியர் அஞ்சவில்லை. கள்ளர்களோ பஞ்சு மூட்டையைக் குத்தி பார்த்துவிட்டுப் பெரிதாக பொருள் இல்லை என்று எண்ணி, ``எதற்காக இப்படி இரவில் பயணிக்கிறீர்கள்?'' என்று கோபமாகக் கேட்டனர்.

``மிலேச்சர்கள் பார்த்தால் இதற்கு தீ வைத்து விடுவர். அவர்கள் முன் கள்ளர்களாகிய நீங்கள் மிக மேலானவர்கள் என்பது எங்கள் எண்ணம். இருப்பவர்களிடம் எடுத்து இல்லாமையைப் போக்கிக் கொள்ளும் சமதர்மவாதிகள் நீங்கள். எனவே, எனக்கு உங்கள் மேல் அனுதாபம் உண்டே அன்றி அச்சமோ வருத்தமோ இருந்ததில்லை'' என்றார் பிள்ளை லோகாசார்யர்.

அவரின் பேச்சு கள்ளர்களைக் கட்டிப் போட்டது. மிலேச்சர்களின் மேல் அவர்களுக்கும் பெரும் கோபம் இருந்தது. ``மிலேச்சர்களை இந்த நாட்டைவிட்டே விரட்ட வேண்டும். இந்த மண்ணுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? நாங்கள்கூட பசிக்குக் கொள்ளை அடிப்பவர்கள்... அவர்களோ பேராசையோடும் அதிகாரத் திமிரோ டும் தாங்கள் மட்டுமே வாழவேண்டும் என்று இருக்கின்றனர். அவர்களை வெல்ல எங்கள் குலதெய்வமான பதினெட்டாம்படி கருப்பன் எங்களுக்குத் துணை நிற்கவேண்டும்'' என்றான் கொள்ளையர் தலைவன்.

திருவரங்க கோபுரம்
திருவரங்க கோபுரம்


அதைக்கேட்ட  பிள்ளை லோகாசார்யர், ``அந்தக் கருப்பன் காவல் காக்கும் எம்பெருமானின் அழகர்மலை உள்ள மதுரையம்பதி நோக்கியே பயணிக்கிறோம். கள்ளர்களாயினும் உங்களிடமும் இறை நம்பிக்கை தெரிகிறதே?'' என்று வியந்தார்.

``என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள்... கருப்பன் எங்கள் குலதெய்வம் என்றால், அந்த அழகர்மலையான் எங்கள் இஷ்டதெய்வம்'' என்றான் கொள்ளையர்த் தலைவன்.

``ஆஹா... அவன் பக்தர்களா நீங்கள்?''

``அதிலென்ன சந்தேகம்? எங்கள் களவில்கூட முதல் பங்கு அவனுக்கே. பிறகே, நாங்கள் எங்களுக்குள் பங்குபோட்டுக் கொள்வோம்.''

``மிகவும் மகிழ்ச்சி... அந்த அழகன்தான் இவ்வேளை உங்களை எங்கள் துணைக்கு அனுப்பியுள்ளான்...''

``அப்படியானால் நீங்கள்..?''

``நாங்கள் திருவரங்கத்தைச் சேர்ந்தவர்கள். திருவரங்க ஆலய போஷகர்கள். எம்பெருமானின் பொருட்டு, அவருடைய அர்ச்சாவதார விக்கிரகத் துடன் மதுரை நோக்கி செல்கிறோம்.''

``அப்படியானால் அந்தப் பெருமாள் இப்போது இங்கு உள்ளாரா?''

``ஆம்! உலகைப் படைத்து, அதனுள் உன்னை யும் என்னையும் படைத்தவன், செப்பு வடிவில்... அவன் பொருட்டு நாம் என்ன செய்யப் போகிறோம் என்று பார்த்தபடி, இந்தப் பஞ்சு மூட்டைகளுக்கு இடையே ஒரு மரப் பெட்டிக் குள் இருக்கிறானப்பா...''

``இது என்ன விந்தை... உலகைக் காக்கும் எம்பெருமானுக்கே இப்படி ஒரு நிலையா?

அதுதானப்பா கலியின் விந்தை. மேல்நிலை, கீழ் நிலை, உயர்நிலை, நடுநிலை எல்லாம் நமக்குத்தான். அவனுக்கு எப்போதும் குணமற்ற ஒரேநிலைதான். அதனால்தான் ஆயிரமாயிரம் அன்பர்களால் தொழப்பட்டவன், இப்போது ஒரு மரப்பெட்டிக்குள் படுத்திருக்கிறான். எனக்கு அதுவும் ஒன்று... இதுவும் ஒன்று... என்று சொல்லாமல் சொல்கிறான்.''

``அவன் வேண்டுமானால் நிர்க்குணனாக அப்படி இருக்கலாம். நம்மால் எப்படி அப்படி இருக்க முடியும். என் நெஞ்சு துடிக்கிறது.''

``உன் நெஞ்சு துடிக்கிறது... எங்கள் நெஞ்சமோ கதறிக் கண்ணீர் வடிக்கிறது. மிலேச்சனுக்கு ஆயுத பலம் என்றால் எங்களிடம் இருப்பது ஆன்ம பலம். இப்போது இந்த இரண்டுக்கும்தான் யுத்தம் தொடங்கியுள்ளது.

ஆயுத பலம் எப்போதும் தற்காலிக வெற்றிதான் பெற்றிடும். அதோடு பெரும் பாவங்களைச் சேர்த்து, பல பிறவிகளை எடுக்க வைத்துவிடும். அப்படி எடுக்கும் பிறப்பும் இன்பம் தராது.

ஆனால் ஆன்மபலம் அப்படியல்ல. அது பொறுமையோடும் நுண்ணறிவோடும் நடக்க வைத்து, கடவுளின் திருவடி நிழலில் சேர்த்து, மீண்டும் பிறவாத நித்ய இன்பத்தை அளிக்கும்.''

``உங்கள் விளக்கம் அருமை. நாங்கள் கொள்ளையடிக்க வந்தோம். ஆனால் உங்கள் கருத்துகள் எங்களைக் கொள்ளைகொண்டு விட்டன. எம்பெருமானைக் காத்திடும் உங்களின் ஒப்பற்ற முயற்சிகளுக்கு நாங்கள் துணை நிற்க விரும்புகிறோம். உங்களுக்குச் சம்மதம்தானே?''

``இது அந்தக் கள்ளழகன் கருணை. உங்கள் வம்சாவளியை சேர்ந்த நீலனையே திருமங்கை ஆழ்வாராக ஆக்கியவனாயிற்றே''- பிள்ளை லோகாசார்யர் நெகிழ்ந்தார். கொள்ளையிட வந்தவர்கள், நண்பர்களாகி... பிறகு துணைவர் களாகி, தொண்டர்களாகிவிட்டனர்.

அவர்களில் கள்ளர் தலைவன், `` இனி, எம் பெருமானை மூடி எடுத்துச் செல்லவேண்டாம். அவனைப் பல்லக்கில் அமர்த்தி பூஜித்தப்படியே செல்வோம். அவன் அருட்பார்வை இந்த பூமி எங்கும் படட்டும். இடையே மிலேச்சர்கள் வந்தால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என்றான்.

``ஆஹா என்ன ஒரு கருத்து‌... மிலேச்சர்களால் இப்படியும் ஒரு நன்மையா?'' என்று சுதர்சன சூரி என்பவன் கூறவும், ``நாங்களே போய் ஒரு பல்லக்குடன் வருகிறோம்'' என்று சிலர் புறப்பட்டுச் சென்றனர்.

மேலும், பிள்ளைலோகாசார்யருடன் வந்தவர் கள், நீண்ட பயணத்தால் எழுந்த களைப்பால் அங்கே ஓர் இடத்தில் அமர்ந்தார்கள். அவர்கள் உண்ண கனி வகைகளைக் கொண்டுவர கொள்ளையர்களில் சிலர் புறப்பட்டுச் சென்றனர்.

அச்சத்துடனும் பெரும் பாரத் துடனும் தொடங்கிய பயணம், ஆதரவு மிக்கதாகவும் அருள் மிக்கதாகவும் மாறிவிட்டது.

எம்பெருமானின் அருட் பயணம் ஒருபுறம் இவ்வாறு நடந்திட, திருவரங்கத்தில் மிலேச்சப் படையின் ஆயிரமாயிரம் புரவிகள் காவிரியாற்றையே அதகளப்படுத்திக் கொண்டு உள்நுழைந்து ஆலயத்துக்குள்ளும் பிரவேசித்தது. எதிர் வருபவர்களை, எதிர்ப்பவர்களையெல்லாம் வெட்டிச் சாய்த்துக்கொண்டே சென்றது.

படைப் புகுந்ததைக் கண்ட பெண்கள் தங்கள் இல்லங்களுக்குள் புகுந்து தாழிட்டுக்கொள்ள ஆடவர்கள் எதிர்த்துப் போரிட்டனர். உள்ளே கோயிலுக்குள் ஒரு சாரர், வராகர் சன்னதியில்... எம்பெருமான் திருவரங்கத்தை விட்டுச் சென்றதை அறியாதவர்களாக இருந்தனர்.

அவ்வளவு சாதுர்யமாக துளியும் சலசலப்பின்றி, பிள்ளைலோகாசார்யர் எம்பெருமானோடு சென்றுவிட, எம்பெருமானைச் சுமக்கும் பல்லக்கு மட்டும் திருச்சந்நிதி முன் இருந்தது. அதுவே, எம்பெருமான் கோயிலில் இருப்பதாகவே அங்குள்ளோரை நம்பும்படிச் செய்துவிட்டது.

இந்த நாள்களில் நிகழ்ந்த பல அரிய செயல் களைத் திருவரங்க ஆலய கோவிலொழுகு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

குறிப்பாக... சுவர் எழுப்பி மூடப்பட்ட மூலவர் சந்நிதிக்கு உள்ளிருக்கும் பள்ளிகொண்ட அரங்க பெருமானின் ரூபத்துக்கு யாதொரு தீங்கும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள், கோவில் தாசியான வெள்ளையம்மாள் என்பவள். அதன்பொருட்டு பெரும் திட்டம் ஒன்றையும் அவள் தீட்டினாள்.

வெள்ளையம்மாளுக்கு எம்பெருமான் மேல் அதீத பக்தி. ஒவ்வொரு நாளும் காலையில் எம்பெருமானை தரிசித்த பிறகே தண்ணீர்கூட அருந்துவாள். விழா காலத்தில் கரு மண்டபத்திலும் மங்கை மன்னன் மண்டபத்திலும் நிகழும் அவளின் நாட்டியம் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அப்படிப்பட்ட வெள்ளையம்மாள், தன் ஆத்ம பலத்தால் ஒரு பெரும் காரியம் செய்ய முடிவெடுத்தாள்.

சிவப்புக்கரை போட்ட நல்ல வெண் பட்டு சேலை உடுத்தி, கூந்தலை அள்ளிக்கட்டி அதில் ஏராளமான மலர்களை சூடிக்கொண்டு, அடர்வான மை விழிகளோடு கிறங்கடிக்கும் அழகுடன், கோயிலிலுள்ள ஆரியப்பட்டாள் வாயிலில் மிலேச்ச படை உள்நுழையும் வேளையில், அங்கு சென்று காத்திருந்தாள்!

- தொடரும் ...

`சிறந்த நண்பன் யார்?'

சிறந்த நண்பனாக எவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதற்கு புத்தர்பிரான் கூறும் வழிமுறைகள்:

கொடுப்பதற்கு எவை கடினமானவையோ, அவற்றைக் கொடுப்பவன்.

எவை செய்வதற்குக் கடினமானவையோ, அவற்றைச் செய்பவன்.

எவை எவை தாங்கிக் கொள்ள முடியாதவையோ, அவற்றைத் தாங்கிக் கொள்பவன்.

தனது ரகசியங்களை உங்களிடம் கூறி, உங்கள் ரகசியங்களைக் காப்பாற்றுபவன்.

சிரமமான நேரத்திலும் நீங்கள் தாழ்ந்திருக்கும் போதும், உங்களைப் புறக்கணிக்காதவன்.

- இந்த பண்புநலன்களைக் கொண்டவர்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுப்பதே சிறப்பு.

- கே.ராஜு, சென்னை-64