திருத்தலங்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 5

ரங்கராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்கராஜ்ஜியம்

கம்பணரின் மந்திரிகளில் ஒருவர்தான் கோபணன். கோபணார்யன் என்றும் கூறுவர். இவர் கம்பணரின் தலைமையில் செஞ்சிக்கு அரசனாகத் திகழ்ந்தார்.

பிள்ளை லோகாசார்யரால் எடுத்துச் செல்லப்பட்ட உற்சவ மூர்த்தம், கோபணராயனால் மீண்டும் திருவரங்கம் சேர்ந்த சம்பவம், திருவரங்கத்தில் உள்ள கல்வெட்டில் மட்டுமன்றி, `மதுரா விஜயம்' என்ற ஒரு நூலின் மூலமாகவும் உறுதியாகிறது.

இந்த நூல் வடமொழியில் எழுதப் பட்டுள்ளது. இதை எழுதியது கங்கா தேவி என்கிற ஒரு பெண்ணரசி.

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 5

விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவிய ஹரிஹர புக்கர்களின் வாரிசான பெரிய கம்பண்ணன் என்பவரின் மனைவியான கங்காதேவி ஆச்சரியமூட்டும் ஒரு பாத்திரம் ஆவாள்!

இந்த நூல், முதல் பயணக்கட்டுரை இலக்கியமாகவும் சான்றோர்களால் கருதப்படுகிறது. இது, திருவரங்கம் மிலேச்சர்களால் சந்தித்த சிக்கல்களைத் தெளிவாக விவரித்து, அதன் மீட்சியையும் பதிவுசெய்து வைத்துள்ளது. இந்த வட மொழி நூல், தமிழில் வெகுசிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டு, இன்று நாம் வாசிக்கக் கிடைக்கிறது.

ஶ்ரீபிள்ளை லோகாசார்ய ரால் கொண்டுச் செல்லப்பட்ட விக்கிரகம் மதுரையிலிருந்து திருமலை வரை செல்கிறது. ஶ்ரீபிள்ளை லோகாசார்யரின் பிரதான சீடர்களில் ஒருவரான திருத்தாழ்வரைதாசர்தான் திருமலையில் எம்பெருமானை விடாமல் ஆதரித்தவர். அதன்பின் செஞ்சிக்கு வந்து, இம்மண்ணின் சிற்றரசனான கோபணாராயன் மூலமாக எம்பெருமான் திருவரங்கம் திரும்பி உற்சவங்களைக் காணத் தொடங்கினார் என்கிறது இந்நூல்.

கோபணராயனை நாம் அறியவேண்டும் என்றால், விஜயநகர சாம்ராஜ்ஜிய வரலாற்றையும் நாம் அறிய வேண்டி யது அவசியம். விஜயநகர சாம்ராஜ்ஜியம் என்று ஒன்று உருவாகாமல் இருந்திருந்தால், இன்று நாம் காணும் ஆலயங்கள் இப்போது உள்ளதுபோல் இருந்திருக்காது. பாரதத்தின் தென் பகுதி முழுக்கவும் நாம் காணும் ஆலயங்களின் எழுச்சிக்கும் பாதுகாப்புக்கும் பின்னால் பிரதானமாக இருப்பது விஜயநகர சாம்ராஜ்ஜியமே!

இதன் ஸ்தாபகர் வித்யாரண்யர். இவரைப் பற்றி விசித்திர மான கதையொன்று உண்டு. வித்தைகளைக் காடு போல பெரும் செழிப்பாய் தன்னுள் கொண்டிருப்பவர் என்கிற காரணத்தால்தான் இவருக்கு வித்யாரண்யர் என்ற பெயர் வாய்த்தது என்பார்கள். இவரிடம் எல்லாமும் இருந்தன. அதாவது, ஆயக் கலைகள் அறுபத்துநான்கும் இருந்தன. ஆனால் செல்வம் மட்டும் இவரிடம் இல்லை. அதனால் மன்னர்களை யாசித்து பொருள் பெற வேண்டியிருப்பதை எண்ணி மனம் வருந்தினாராம் வித்யாரண்யர்.

இத்தனை வித்தைகள் கற்ற தன் வசம் செல்வமும் இருந்தால், எவரிடமும் சென்று நிற்கத் தேவையில்லை என்று கருதியவர், செல்வத்தை மந்திர ஸித்தியால் அடைய முடிவு செய்தார். அதன்படி ஶ்ரீமகாலட்சுமியைத் தியானித்து தவம் செய்யத் தொடங்கினார்.

இவரது கடுமையான தவத்துக்கு மகிழ்ந்து மகாலட்சுமி காட்சி தந்தாள். அவளிடம் அள்ளக் குறையாத நிதிச்செல்வம் கேட்டார் வித்யாரண்யர். ஆனால் மகாலட்சுமி, ``இப்பிறப்பில் நீ கல்விச் செல்வங்களுக்குத்தான் அதிபதியாக இருக்க முடியும். பொருள் செல்வத்துக்கு இல்லை. ஆனாலும் உன் தவத்தை உத்தேசித்து, அடுத்த பிறப்பில் நீ பெரும் செல்வந்தனாக திகழ யாம் வரம் தந்தோம்'' என்று கூறினாள்.

அதைக் கேட்ட வித்யாரண்யர் கலங்கினார். ``நான் இப்போதைக்குக் கேட்டால், நீங்கள் அடுத்த பிறப்புக்குத் தருகிறேன் என்பது தகுமா?'' என்று மகாலட்சுமியிடம் கேட்டார். மகாலட்சுமியோ, ``என்ன செய்வது... இதுவே உன் விதி'' என்று கூறிவிட்டாள்.

இந்த நிலையில் வித்யாரண்யருக்கு அணுக்கமான ஒருவர் அவரிடம், ``நீ இந்த பிறப்பிலேயே செல்வத்தை அடைய ஒரு வழி உள்ளது. அதாவது நீ சந்நியாசி ஆகிவிட்டால், அது மறுபிறப்புக்குச் சமம். எனவே, சந்நியாசி ஆகி விடு. செல்வமும் கிடைத்துவிடும்'' என்றார்.

அதன்படியே வித்யாரண்யரும் சந்நியாசி ஆகிவிட்டார். மகாலட்சுமியும் வாக்கு தவறாமல் தான் சொன்னபடி அருள்செய்ய முன்வந்தாள். அப்படி அவள் வந்தபோது வித்யாரண்யரிடம் ஒரு கேள்வி கேட்டாள்.

``சந்நியாசியான உனக்குப் பெரும் செல்வம் எதற்கு. தனக்கென ஒரு திருவோடுகூட இல்லாதவன்தானே சந்நியாசி. நீ செல்வத்தைத் தொட்டால் சந்நியாசி இல்லை என்றாகி விடுமே?'' என்று அவள் கேட்ட கேள்வி, வித்யாரண்யரை சிந்திக்க வைத்தது.

செல்வத்தின் மேலுள்ள ஆசையால், சந்நியாசி ஆகிவிட்டோமே என்று யோசித்தவர், அதனாலேயே அதைத் தொடமுடியாத நிலைக்கு ஆளாவதையும் எண்ணி வருந்தினார்.

ஆனால், மகாலட்சுமியோ தான் வரம் அளித்ததுபோன்று, பெரும் நிதியைக் குவித்து விட்டாள். அவ்வளவு நிதிகளான... தங்கம், வைரம் முதல் நவரத்தின ஆபரணங்கள் அனைத்தையும் சந்நியாசியான வித்யாரண்யர் என்ன செய்யப் போகிறார் என்று எல்லோரும் உற்றுக் கவனித்து வந்தனர்.இந்தக் காலகட்டத்தில்தான் மிலேச்சர் களால் பாரதம் துண்டாடப்பட்டு, சகலரும் பெரும் துன்பத்தில் ஆழ்ந்திருந்தனர். ஶ்ரீவித்யாரண்யர் இதற்குத் தீர்வு காண விரும்பினார். ஹரிஹரன் - புக்கன் எனும் இரண்டு மாவீரர்களைக் கண்டறிந்து, அவர்களிடம் மகாலட்சுமியின் நிதியை அளித்து, விஜயநகர சாம்ராஜ்ஜ்ஜியத்தை உருவாக்கும்படி தூண்டினார். அவர்களும் துங்கபத்ரா நதிக்கரையில் விஜயநகரத்தை ஸ்தாபித்து, அதை நாலாபுறமும் விரிவுபடுத்தத் தயாராயினர்.

இவர்களின் பிள்ளைகளாய் பெரிய கம்பணன், சிறிய கம்பணன், சங்கமன் ஆகியோர் பிறந்தனர். இவர்களில் பெரிய கம்பணனின் மனைவியான கங்காதேவி வட மொழியில் புலமை பெற்றிருந்தாள். இவள் தன் கணவன் பெற்ற வெற்றிகளையும், அப்போது தான் கண்ட காட்சிகளையும் நூலாக்கினாள்.

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 5

கம்பணர் தெற்கே விஜயம் செய்து, குறிப்பாக தொண்டை நாடான காஞ்சிபுரத்தின் மீது படையெடுத்து, அங்கே அரசனாக விளங்கிய சம்புவரையனை வெற்றி கொண்டு காஞ்சிபுரத்தில் தன் முதல் வெற்றிக்கொடியை பறக்கவிட்டார்.

பின்னர் அவர் மதுரையை அடைந்தார். அப்போது அந்த நகரைத் தன் கைப்பிடியில் வைத்திருந்த முகமதியர்களுடன் போரிட்டார். இந்தப் போரில் சகலரையும் அவர் வெல்லும் வகையில், மதுரையின் காவல் தெய்வமான மடப்புரத்துக் காளி கம்பணனுக்கு அருளத் தீர்மானித்தாள்.

ஒருநாள் கம்பணனின் கனவில் தோன்றிய காளி, தன் வசமிருந்த ஒரு வாளை கம்பணனுக்குக் கொடுத்தாள். அத்துடன் அவரிடம், ``கம்பணனா! இது விஸ்வகர்மா விண்ணகத்தில் செய்த வாள். இது முதலில் பரமேஸ்வரனிடம் இருந்தது. பின்னர் இந்த வாளை பாண்டிய மன்னன் ஒருவன் தவம் செய்து பெற்றான். அதன் பிறகு அவனிடமிருந்து அகத்தியரிடம் சென்றது. அந்த முனிவர் இதை என் உடைமை ஆக்கிவிட்டார்.

அபூர்வமான இந்த வாளைக் கொண்டு, ஶ்ரீகிருஷ்ணன் வடமதுரையில் கம்சனைக் கொன்றது போல், தென்மதுரையில் நீ மிலேச்சர்களை அழித்து தர்ம ராஜ்ஜியத்தை உருவாக்கு'' என்று கூறி மறைந்தாள்.

கண் விழித்து பார்த்த கம்பணன் அருகில் வாளும் இருந்தது. மெய்சிலிர்த்த கம்பணர், பெரும் எழுச்சி பெற்று அந்த வாளை பிரதானமாகக் கொண்டு போராடி, மதுரையைச் சுல்தானிடம் இருந்து மீட்டார். பின்னர் ராமேஸ்வரம் வரையிலும் சென்று தன் வெற்றிக் கொடியைப் பறக்கவிட்டார்.

இந்தத் தகவலை எல்லாம் கங்காதேவி தன்னுடைய மதுரா விஜயம் என்ற பயண நூலில் குறிப்பிட்டுள்ளாள். இந்த நூலில்தான் திருவரங்கத்துக்கு எம்பெருமான் திருமலையில் இருந்து செஞ்சி வழியாக திரும்பிய சம்பவமும் காணக்கிடைக்கிறது.

கம்பணரின் மந்திரிகளில் ஒருவர்தான் கோபணன். கோபணார்யன் என்றும் கூறுவர். இவர் கம்பணரின் தலைமையில் செஞ்சிக்கு அரசனாகத் திகழ்ந்தார். அப்போது மதுரை சுல்தானின் படைத் தளபதி அப்போதைய கண்ணனூரில் (சமய புரம்) இருந்துகொண்டு, திருவரங்கத்தைத் தன் பிடியில் வைத்திருந்தான்.அவனிடமிருந்து கோபணன் திருவரங்கத்தை மீட்டது, ஒரு ரசமான வரலாறாகும்.

- தொடரும்...