
இரண்டாம் பாகம் இந்திரா செளந்தர்ராஜன்
மச்சணியும் மதிலரங்கம் வாழ்வித்தான் வாழியே
மறை நான்கு மோருருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே
பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே
பாடியத் தோனீடேறப் பார்வை செய்தோன் வாழியே
கச்சிநகர் மாயனிருகழல் பணிந்தோன் வாழியே
கடகவுத் தராடத்துக்காலுதித்தான் வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளினை களனவரதம் வாழியே
- ஆளவந்தார் வாழித்திருநாமம்

தூதுவளைக் கீரையைச் சமர்ப்பித்ததுடன், ``இனி, தினமும் இப்படித் தருவது என் கடமை’’ என்று சொன்ன மணக்கால் நம்பியைக் கண்டு வியந்த பரிசாரகர், நம்பியை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.
``என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?’’
``இப்படி ஒரு கைங்கர்யமா என்று வியக் கிறேன். ஆமாம்... இதனால் உங்களுக்கு ஆகப் போவதென்ன?’’
``ஒன்றே ஒன்றுதான். ஆளவந்தாரின் பூரண உடல் நலமும், அவரின் மனதிருப்தியும் மட்டும்தான்...’’
``ஆளவந்தார் மீது அவ்வளவு பற்றுதலோ?’’
ஆம்! பெரும் புலவனின் செருக்கறுத்து, வைணவம் தழைத்திட வாழ்ந்து வரும் ஒரு தெய்வப்பிறவி அல்லவா நம் ஆளவந்தார்?''
``அடேயப்பா என்ன ஒரு கணிப்பு! உம்மைப் பார்த்தால், முதிர்ந்தவராகத் தெரிகிறது. ஆளவந்தாருக்கோ இளம் பருவம். இருப்பினும் அவரைக் குருவாய்க் கருதுவதுபோல் தெரிகிறதே?''
``குரு ஸ்தானம் என்பது வயதுக்கு அப்பாற் பட்டது; ஞானத்தால் உருவாவது. அதை லௌகீகப் பார்வை கொண்டு பார்ப்பதும் சிந்திப்பதும் பிழையில் முடியும்.''
``நன்றாகப் பேசுகிறீர். வாய்ப்பு கிட்டும்போது உம்மைப் பற்றி ஆளவந்தாரிடம் சொல்கிறேன்.''
``வேண்டாம்... ஒன்றை எதிர்பார்த்துத் தொண்டு செய்யக் கூடாது. அது நாம் உண்பது, உறங்குவது போன்ற ஒரு கடமை.''
``எப்படிப் பேசினாலும் ஒரு பதிலைச் சொல்கிறீர். மிக ஆழங்கால் பட்டவராய்த்தான் தெரிகிறீர். திருத்தமான நெற்றித் திருமண் காப்பு... என் வரையில், அரங்கன் திருச்சந்நிதி முன் நிற்கும் ஜய - விஜயரை ஞாபகப்படுத்துகிறது.''
``ஆம்... நானும் அவர்களைப் போல ஒரு வைணவர் காவலனே. நல்ல உதாரணத்தையே கூறியுள்ளீர். நல்லது நான் வருகிறேன்.''
மணக்கால் நம்பி பரிசாரகரிடம் பேசியது போதும் என்பதுபோல் உணர்ந்து புறப்பட்டார். தூதுவளைக் கீரை சமர்ப்பிக்கும் தொண்டு தொடர்ந்தது. இந்நிலையில் எதனாலோ சில நாட்கள் நம்பியால் வரமுடியாதபடி ஆயிற்று.அதனால் பரிசாரகரால தூதுவளைத் துவையல் செய்ய இயலாது போய், அது ஆளவந்தாரையும் கேள்வி கேட்கச் செய்தது.
``ஏன் இன்று தூதுவளைத் துவையல் இல்லை?''
``வழக்கமாய்க் கொண்டு வந்து தருபவர் வரவில்லை ஸ்வாமி.''
``இது என்ன விந்தை? இவ்வளவு நாளும் ஒருவர் கொடுத்தா நான் உண்டு வந்திருக்கிறேன்?''
``ஆம் ஸ்வாமி! மணக்கால் நம்பி என்றொரு முதியவர். தங்களுக்கு தூதுவளை பிடிக்கும் என்று அறிந்து, தவறாது கொண்டு வந்து கொடுத்தார். அதை அவர் ஒரு கைங்கர்யமாகவே செய்து வருகிறார். எதனாலோ இரண்டு நாட்களாக அவரைக் காணவில்லை. அதனால்தான் தளிகையில் தூதுவளையைச் சேர்க்க இயலாது போயிற்று. அதற்காக மன்னிக்க வேண்டும்.''
``ஒரு தூதுவளைக்கு பின்னால் இப்படி ஒரு செய்தியா? என் மேல் அவருக்கு பக்தி என்பதை எண்ணும்போது... நான் அவரை அறியாமல் இருந்து விட்டது வருத்தம் அளிக்கிறது. நான் அவரைப் பார்க்க வேண்டுமே?''
``அடுத்து அவர் எப்போது வந்தாலும் உங்கள் திருமுன் கொண்டு வந்து நிறுத்துகிறேன்''
``நல்லது. உப்பிட்டவரை மட்டுமல்ல, உளமாற தொண்டு செய்பவரையும் உள்ளளவும் நினைத்துப் போற்ற வேண்டும்.''
``புரிகிறது ஸ்வாமி. அவர் வரா விட்டாலும் அவரைத் தேடிப் பிடித்தாவது உங்கள் திருமுன் கொண்டு வந்து நிறுத்துவேன்.''
பரிசாரகர் உறுதிப்பட சொன்னார். மறுநாளே மணக்கால் நம்பி தூதுவளையுடன் வந்து நின்றார்.
``வாரும் ஐயா வாரும். ஏன் இரு தினங்களாக வரவில்லை?''
``உடல் நலமின்றி படுத்த படுக்கையாகி விட்டேன். இப்போதும் உடல்நலம் பூரணம் எனச் சொல்ல முடியாது. ஆயினும் தூதுவளை பறித்துக் கொண்டு வந்துள்ளேன்.''
``அப்படியா சங்கதி... இன்று நீர் வரா விட்டால் நானே தேடி வருவதாய் இருந்தேன். ஆளவந்தார் உம்மைக் காண பெரும் விருப்பத் தோடு உள்ளார்.''
``அப்படியா அவர் என்னை அறிந்திருக் கிறாரா?''
``தூதுவளைக் கீரை அறியச் செய்து விட்டது. வாருங்கள்... இப்போதே அவரைக் காண்போம்.''
``அவருக்கு இருக்கும் அநேக பணிகளில் என்னால் இடையூறு நேரிட்டு விடாதே?''
``இப்படியெல்லாம் பேசக்கூடாது. முதலில் வாருங்கள் என்னோடு...''
பரிசாரகர் மணக்கால் நம்பியை ஆளவந்தா ரிடம் அழைத்துச் சென்றார். ஆளவந்தார் ஊஞ்சலில் அமர்ந்திருந்த நிலையில், நம்பி வரவும் எழுந்து நின்றார். நம்பியோ அவரை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்க முற்பட்டார். நம்பியைத் தடுத்தாட்கொண்ட ஆளவந்தார், வெகுநேரம் அவரை உற்றுப் பார்த்தார். நம்பியும் பரவசமாக பார்த்த வண்ணமே இருந்தார். பின் இருவரும் பேசலாயினர்.
``தாங்கள்தான் மணக்கால் நம்பியோ?''
``ஆம் ஸ்வாமி. தங்களை தரிசிக்க நேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி...''
``எவ்வளவு பெரியவர் தாங்கள். என்னவொரு பணிவான பேச்சு... நான் வணங்க வேண்டியவர் நீங்கள். அப்படியிருக்க, நீங்கள் என்னை வணங்கியது முறையா?''
``நான் சாமான்யன். தாங்களோ பெரும் கல்விமான். எப்போதும் ஸ்தானமே பெரிது. அதன் முன் வயது ஒரு பொருட்டில்லை.''
``இது விதிவசத்தால் நேர்ந்தது. கல்விஞானம் கை கொடுக்கிறது. ஆயினும் அறிய வேண்டி யவை இன்னும் எவ்வளவோ உள்ளன.''
``அதுதான் உண்மை. சகலமும் அறிந்தவன் என்கிற கர்வமே ஆக்கியாழ்வான் கவிழக் காரணம். அறிந்துகொள்ளும் முனைப்பே நீங்கள் உயரவும் காரணம்.''
“நன்று சொன்னீர்... உங்களுடன் பேசுவதால் என் பட்டறிவு மேலும் பளிச்சிடும் என நம்பு கிறேன். தாங்கள் தினமும் என்னைச் சந்திக்கவேண்டும் என்று விரும்புகிறேன். தாங்கள் சம்மதித்தால் என் மாளிகையிலேயே தங்கலாம்.''
``பெரிய மனது உங்களுக்கு. எனக்கும் அந்த விருப்பம் உண்டு. நான் அறிந்த... நீங்கள் அறியாததைப் பகிர விரும்புகிறேன். அடுத்து, பரம்பொருளினைத் தாங்கள் பெரிதாய் உணர வேண்டும் என்றும் விரும்புகிறேன்.''
``என் வேட்கையும் அதுவே. இன்றே இப்போதே நம் சத்சங்கம் தொடங்கட்டுமே!''
``இதுவே அரங்கனின் விருப்பம் என்றால், எனக்கும் அதில் மகிழ்வே!''

முதல் சந்திப்பிலேயே மணக்கால் நம்பியும் ஆளவந்தாரும் பசைப்போட்டது போல ஒட்டிக்கொண்டனர். அன்றே மணக்கால் நம்பி, தன்னுள் இருக்கும் கீதா விலாசத்தை - அதன் பதினெட்டு அத்யாயங்களுடன் எடுத்துரைக்கத் தொடங்கினார். ஆளவந்தாரும் அதைக் கேட்டு இன்புற்றார். அப்படியே, வேதசாரமான அதன் உட்பொருளை நுட்பமாக உணர்ந்த ஆளவந்தார், நம்பியிடம் நெகிழ்வோடு பேசலானார்.
``ஸ்வாமி... கண்ணன் அர்ஜுனனுக்குச் சொன்ன சாக்கில் உலகுக்குச் சொன்னதை, நீங்கள் எனக்குச் சொல்லி என்னை கடைத்தேற்றி விட்டீர். இக்கருத்துக்கள் என்னுள் வேட்கை ஒன்றை உருவாக்கிவிட்டன. ஆதிப் பரம்பொருளின் அம்சமே ஶ்ரீகிருஷ்ணன். அவனது கீதாசாரத்தின் மையம் சரணாகதி. `நல்லதோ, கெட்டதோ என்னிடம் விட்டு விடு. என்னைப் பிடித்த பிடியை விட்டுவிடாதே. நான் பார்த்துக்கொள்வேன் உன்னை' என்கிறான். சரிதானே?''
``சரியாகச் சொன்னீர். அவனது ஆதிமூல வடிவமே அரங்கப் பெருமானாய்க் கோயில் கொண்டுள்ளான். அவனைப் பற்றிக்கொள்வதும்கூட, கிருஷ்ணனைப் பற்றிக் கொண்டது போலத்தான்.''
``ஆஹா! அரங்க தரிசனம் புரிந்து, அங்கே திருச்சந்நிதியில் உம் மூலமாகவே ரகஸ்யார்த் தங்களை அறிந்துகொள்ள விரும்புகிறேன். அறிவிப்பீரா?''
``உம்மைப் போன்ற தகுதியுடையோருக்கா கவே காத்திருக்கிறேன். வாருங்கள் செல்லலாம்.''
அப்போதே மணக்கால் நம்பி ஆளவந்தா ருடன் திருவரங்க ஆலயத் திருச்சந்நிதி ஏகி நின்றார். நின்ற கோலத்தில் உற்சவ மூர்த்தி யையும், கிடந்த கோலத்தில் அரங்கன் பாம்பணை மேல் கிடக்கும் கோலத்தையும் தரிசித்த நிலையில் பரவசமானார்.
கண்கள் ஆனந்தக் கண்ணீரைப் பெருக்கின. தொடர்ந்து ரகஸ்யார்த்தங்களை மணக்கால் நம்பியும் உபதேசித்திட, ஆளவந்தாரிடம் ஓர் உறுதி தோன்றியது.
- தொடரும்...

`ராமாயண' தலங்கள்...
அயோத்தி ஶ்ரீராமரின் அவதார ஸ்தலம். முக்தி தரும் ஏழு தலங்களில் ஒன்று. ராமாயணத்துடன் தொடர்புடைய வேறு தலங்களும் உண்டு.
பக்ஸார்: கௌதமரது ஆசிரமம் இருந்த இடம். அகலிகைக்கு மோட்சம் கிடைத்த இடம்.
ஸோனேபூர்: ஜனகர் ஏர் உழும்போது சீதையைக் கண்டெடுத்த திருத்தலம்.
பரத குண்டம் (நத்தி கிராமம்):ஶ்ரீராம பாதுகையை பரதன் வழிபட்ட இடம்.
சித்திரகூடம்: ஶ்ரீராமனும், பரதனும் சந்தித்த இடம். அலகாபாத் அருகில் உள்ளது.
பஞ்சவடி: சீதை, ராமர், லட்சுமணன் மூவரும் தங்கிய இடம். இங்குள்ள கால ராமர் கோயில் மிகப் பிரசித்தம்.
தொட்குருகாட்: ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் சண்டை நடந்த இடம்.
பத்ராசலம்: தண்ட காரண்யத்தில் ஶ்ரீராமர் எழுந்தருளி இருந்த இடம். இங்குள்ள ஶ்ரீராமனின் பாதச் சுவடுகளை தரிசிப்பது புண்ணியமாகக் கருதப்படுகிறது.
- சி.மகேஷ், சென்னை-6