
இரண்டாம் பாகம் -14
ஆரப்பொழில் தென்குருகைப் பிரான், அமுதத் திருவாய
ஈரத் தமிழின் இசையுணர்ந்தோர்கட்கு, இனியவர்தம்
சீரைப்பயின் றுய்யும் சீலங்கொல் நாதமுனியை நெஞ்சால்
வாரிப்பருகும், இராமாநுசன் எந்தன் மாநிதியே!
- இராமாநுச நூற்றந்தாதி

ஆச்சார்ய அனுக்கிரகத்தால் வடுக நம்பி ஶ்ரீராமாநுஜரின் வரலாற்றையே எழுதும்படியும் ஆனது. ‘யதிராஜ வைபவம்’ என்ற அந்நூல் 114 ஸ்லோகங்களைக் கொண்டதாய் ராமாநுஜரின் வரலாற்றைச் சுருக்கமாய் விவரிக்கிறது. இதுவே எம்பெருமானார் சரிதம் குறித்த முதல் நூல்.
பின்னர் வந்த பலர், இதனை அடியொற்றியே தங்கள் நூல்களை வடிவமைத்தனர். (இந்த நூலின் தமிழாக்கம் - ஶ்ரீவைஷ்ணவ சுதர்சனம் ஆசிரியர் ஶ்ரீஉ.வே.கிருஷ்ணசாமி ஐயங்கார் எழுதிய நூல் விளக்கஉரையுடன் பதிப்பிக்கப் பெற்று இப்போதும் கிடைக்கிறது).
இதுமட்டுமன்றி, வடுக நம்பி ஶ்ரீயதி ராஜமங்கலம் என்கிற 21 அனுஷ்டுப் ஸ்லோகங்களையும் அருளிச் செய்துள்ளார். மேலும் 28 ஸ்லோகங்களுடன் அஷ்டோத்திர சத நாமஸ்தோத்ரம் என்கிற நூலினையும் வடுகநம்பி எழுதினார். ஶ்ரீராமாநுஜருக்கான நூல்களில் ‘இராமானுச நூற்றந்தாதி’ தனித்த சிறப்புகள் பல கொண்டது. இதை எழுதியவர் திருவரங்கத்தமுதனார்.
திருவரங்கத்தமுதனாரின் தொடக்கம் அவ்வளவு போற்றுதலுக்குரியதன்று. இவர் தொடக்கம், மிகுந்த செருக்குடன்தான் காணப் படுகிறது. இவரது திருநாமம் முதலில் கோயில் நம்பி என்றே காணக்கிடைக்கிறது. திருவரங்கச் சந்நிதியில் கோயில்நம்பி திருப்பணி செய்த காலத்தில், ஆசாரத் தெளிவு இல்லாமலும் தோரணையான தோற்றத்திற்கு முக்கியத்துவம் தருபவராகவே விளங்கினார். இவருக்கு இன்னோர் இணை கூரத்தாழ்வான்!
கோயில் நம்பியின் கோயில் செயல்பாடுகள் பெரிதும் விமர்சனத்தையும் எதிர்ப்பையும் சந்தித்தன. பக்தர்களிடம் இவர் காட்டிய பாரபட்சம், பெருமாளிடம் இவர் காட்டிய அளப்பரிய பக்தி போன்றவை பெரிதும் விவாதப் பொருளாயின.
ஶ்ரீராமாநுஜரின் சீர்திருத்த செயல்பாடுகளை இவர் முதலில் ஏற்கவில்லை. ராமாநுஜரையும் புரிந்து கொள்ள முயலாமல், முடியாமல் இவர் திருச்சந்நிதியில் நடந்துகொண்ட விதம் ராமாநுஜர் முன்னிலையில் பெரும் புகாராகத்தான் போய் முடிந்தது.
தவறு செய்பவர்களைத் தன் கருணையாலும், அன்பாலும் அரவணைத்துத் திருத்தும் பேருள்ளம் கொண்ட ஶ்ரீராமாநுஜருக்குக் கோயில்நம்பி மட்டும் சற்று சவாலாகவே இருந்தார்.

ஒரு நாள் இவரிடம் ``இனி நீ ஆலயப் பணி செய்யக்கூடாது. உள்ளே நுழையக் கூடாது” என்றும் கூறிவிட்டார் ஶ்ரீராமாநுஜர்.
ஆனால் அதன் பிறகே அற்புதமும் நிகழ்ந்தது!
அன்று திருவரங்க திருக்கோயிலுக்குள் அழகிய மணவாளனுடைய புறப்பாடு. அதன் நிமித்தம் பெரும் பக்தர் கூட்டம் திரண்டு வந்து நாற்புறமும் அடைத்துக்கொண்டு நின்றிருந்தது.
கோயில் நம்பியே புறப்பாட்டின்போது முன் நின்று வழி நடத்தும் பொறுப்பாளராவார். மத்தளம் முழக்கி ஒருபுறம் மத்து வாசித்தபடி இருக்க, தீப்பந்தத் தாங்கிகள் நாற்புறமும் பந்தங்களைத் தாங்கி சுற்றி வந்துகொண்டிருக்க... அரங்கனடிமையாகத் தன்னை வடிவமைத்துக் கொண்ட சாத்தாரர் ஒருவர் குங்கிலியப் புகையை எழுப்பி, சூழலையே மணக்கச் செய்தபடி இருந்தார். அழகியமணவாளனும் பல்லக்குத் தாங்கிகளின் உபயத்தில் பல்லக்கினுள்ளே மலர் மாலைகளுடன் எழுந்தருளி, தன்னை தரிசிப்போர்க்கெல்லாம் அருளிட தயாராக இருந்தார்.
நாகஸ்வரக்காரரும் மேளக்காரரும் வாத்திய இசையில் கல்யாணி ராக ஆலாபனையில் இருந்தனர். கோயிலின் தக்காரும், மிராசுவும் உடையவராகிய ஶ்ரீராமாநுஜரின் வருகை நிமித்தம் காத்திருந்தனர்.
ஶ்ரீராமாநுஜர் வந்த மாத்திரத்தில் அவருக்கு முதல் மரியாதை அளித்த நிலையில், அழகிய மணவாளனின் புறப்பாடு நிறைந்திட வேண்டும்.
ஶ்ரீராமாநுஜர் - கூரத்தாழ்வான், முதலியாண்டான், வடுகநம்பி, மாறனேரி நம்பி ஆகியோருடன் வெள்ளைக் கோபுரம் வழியாக வந்துகொண்டிருந்தார். ஶ்ரீராமாநுஜரின் வருகையைக் கட்டியக்காரர் முன்மொழிந்த படியே வந்து கொண்டிருக்க, அதைக்கண்ட கோயில் நம்பியின் முகத்தில் கோபமும் தாபமும்தான் உண்டாயிற்று.
ஶ்ரீராமாநுஜருக்காக எம்பெருமான் காத்திருப்பதா என்கிற கேள்வியும் அவருக்குள் எழும்பி உறுத்திக் கொண்டிருந்தது. அடுத்து ஶ்ரீராமாநுஜரோடு பிராமணரல்லாத பல சீடர்களும் வெகு சகஜமாய் இருந்ததும், அவர்களும் அவருக்குச் சமமாய் வந்து தரிசனம் செய்ததும், கோயில்நம்பியை என்னவோ செய்தன. அதைக் கூரத்தாழ்வான் உணர்ந்து கொண்டவர் போல் அவரருகில் வந்து “என்ன ஓய்... உம்மைத்தான் உடையவர் விலகியிருக்கச் சொல்லிவிட்டாரே. விலகாது இருந்து அவரைக் கண்டு கோபமும் கொள்வது போல் தெரிகிறதே?'' என்று கேட்டார்.
கோயில் நம்பியும் அதற்குப் பதில் தரலானார்.
``நான் எனக்கு நினைவு தெரிந்த நாளாக அரங்க சேவை செய்பவன். என்னை நீக்கிட இந்த உடையவர் யார்? அவர் பேச்சை நான் கேட்க சித்தமாய் இல்லை. நீர் இதனை அவரிடம் கூறிவிடும்.''
``அப்படியெல்லாம் சொல்லாதீர்... உடையவர் ஆராயாது எதையும் செய்பவரல்ல, அவர் ஒதுங்கியிருக்கச் சொன்னால் பொருள் இருக்கும்.''
``என்ன பொருள்? அவரை நான் மதிக்காத காரணமன்றி வேறு என்ன?''
``அதுவும் ஒரு காரணம்.. அதைக் கடந்தும் பல காரணங்கள் உள்ளன. அதை அவரே அறிவார்...''
``என் வரையில் எனக்கு அந்த அரங்கன்தான் எல்லாம். அவனுக்கான திருப்பணியில் நான் சிறு பிழையும் இதுவரை செய்ததில்லை. இனி செய்யப் போவதுமில்லை. எனவே, அரங்கனன்றி என்னை ஆட்கொள்ளவோ இல்லை மறுதலிக்கவோ எவருக்கும் அருகதை இல்லை. எவர் பேச்சையும் நான் கேட்கச் சித்தமாயில்லை.''
``இப்படியெல்லாம் பேசாதீர். நம் உடையவர் வாராது வந்த மாமணி. நெருங்கிப் பழகிப் பாருங்கள்... புரிந்துகொள்வீர்.''
``எங்கே பழக..? வெளியே போ என்று சொல்லிவிட்ட நிலையில் அவரை எப்படி நெருங்குவது?''
``அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். இப்போதைக்குச் சந்நிதி பணிகளில் இருந்து விலகியிருங்கள்.''
``முடியாது... அரங்கனன்றி எவர் பேச்சையும் கேட்கமாட்டேன்.''

``இப்படிக் கோபமாகப் பேசிடும் உமக்காக அரங்கன் வந்து பேச மாட்டான். அதை முதலில் புரிந்துகொள்ளும். தான் என்கிற செருக்கு, ஆச்சார்ய அவமதிப்பு இதெல்லாமே வைணவத்திற்கு எதிரானது புரிந்துகொள்ளுங்கள்.''
``எனக்குச் செருக்கெல்லாம் இல்லை.. உடையவரை அவமதிப்பதும் என் நோக்கம் இல்லை. ஆனால் அவரோ `எல்லோரும் ஓரினம் எல்லோரும் சமம்' என்று சொல்லிச் செய்திடும் செயல்பாடுகளில்தான் நான் வேறுபடுகிறேன்.''
இப்படி இருவரும் ஒருபுறம் உரசிக் கொண்டிருக்க, ஶ்ரீராமாநுஜர் தரிசித்த நிலையில் அழகிய மணவாளனின் உலாவும் தொடங்கியது. பல்லக்கு நெடுந்தூரம் சென்று விட, கோயில்நம்பியோ கூரத்தாழ்வானை விட்டு ஓடிப்போய் பல்லக்கோடு ஒட்டிக்கொண்டார்.
அதைக் கண்ட கூரத்தாழ்வானுக்கு கிலேசமாகிவிட்டது. மெள்ள அவர் ஶ்ரீராமாநுஜரை நெருங்கிய நிலையில் ஶ்ரீராமானுஜரே புரிந்ததுபோல கேட்டார்.
``ஆழ்வானே! எதனால் இந்த கிலேசம்?''
தங்களின் கட்டளையைக் கோயில் நம்பி பொருட்படுத்தத் தயாரில்லை. தங்கள் திரு உள்ளத்தையும் புரிந்துகொள்ள விரும்பவில்லை. அதுகுறித்து கிலேசம் சுவாமி...''
“என்றால் அரங்கனின் திருப் பணியை அவர் தொடரப் போகிறாரா? அங்கே வேறு ஒருவரை என்னால் நியமிக்கலாகாதா?''
``தங்களின் கட்டளைக்கு மறுப் பேச்சா... தக்காரும், மிராசும், ஏனைய கோயில் காப்போரும் சேர்ந்து முடிவெடுத்து அவரைக் கண்டிப்பாக நீக்குவதே ஒரே வழி...”
``அவ்வளவு தூரம் போக வேண்டாம். இந்த பிரச்னையில் சரியான தீர்வினை அந்த அரங்கனே வழங்கட்டும். நம்மை எல்லாம்விட அவனல்லவா கோயில் நம்பியை படைத்து இயக்குபவன்?''
``இப்படி பெருந்தன்மையாக முடிவு எடுக்க தங்களால் மட்டுமே முடியும். அதேநேரம் கோயில் நம்பிக்காக அரங்கன் முன்வருவானா?''
``எதற்கு இந்த ஐயம். என்னை அழைத்து தனக்கு உடையவனாக ஆக்கிக் கொண்ட வனுக்கு இதுதானா பெரிது? நிச்சயம் இதற்குத் தீர்வைத் தருவான் நம்புங்கள்.''
``இதே பதிலைத்தான் கோயில் நம்பியும் கூறினார்.”
``அப்படியானால் என்னைவிட நம்பிக்கு அரங்கன் மேல் அதீத பற்று இருப்பது புரிகிறது. அதுதான் இப்படிப் பேசவும் வைத்திருக்கிறது. இம்மட்டில் நம்பியை நான் பாராட்டுகிறேன். இப்படி ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை ஒரு அடியவனுக்கு மிகவும் அவசியம்.''
ஶ்ரீராமாநுஜர் கோயில் நம்பி மேல் கோபம் கொள்ளாமல் பாராட்டுமுகமாய்ப் பேசியது கூரத்தாழ்வானுக்குச் சிலிர்ப்பைத் தந்தது.
``சுவாமி தங்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தவரையும் தாங்கள் போற்றுகிறீர்கள். ஆனால் அவருக்கோ உங்களைப் புரிந்துகொள்ள திராணியில்லை. இதை என்னவென்பது?''
``ஆழ்வானே கவலைப்படாதே! கசப்பான பல பொருட்கள் பெரும் மருந்தாக மாறுவது உண்டு. நாளையே இந்தக் கோயில்நம்பியும் அதுபோல் ஆகலாம். யார் கண்டது? இதை அந்த அரங்கனே அறிவான்.
நான் இந்த நொடியே கோயில் நம்பி குறித்த விஷயத்தை அரங்கனிடம் விட்டுவிட்டேன். இனி எல்லாம் அவன் பாடு. நாம் திருமடத்திற் குச் சென்று மற்ற பணிகளைச் செய்வோம்'' என்ற ஶ்ரீராமாநுஜர் தன் சீடர் குழாமுடன் மடம் நோக்கித் திரும்பலானார். முன்னதாக கிளி மண்டபத்தை ஒட்டிய பகுதியில் சற்று இளைப்பாற அமர்ந்தார்.
``என்ன சுவாமி அமர்ந்து விட்டீர்கள்?''
``உலா சென்ற அழகிய மணவாளன் திரும்பி வரும்போது மீண்டும் ஒரு தரிசனம் செய்து பின் புறப்படுவோம்.''
``தங்கள் சித்தம்'' என்ற கூரத்தாழ்வான் ஶ்ரீராமாநுஜருக்குக் கவரி வீச முற்பட, அதைத் தடுத்த ஶ்ரீராமானுஜர், ``ஆலயத்துக்குள் சகல உபசாரங்களும் அரங்கனுக்கும், அந்த அரங்க நாயகிக்கும் மாத்திரமே நிகழவேண்டும். இங்கே நாம் எல்லோருமே சமம்'' என்றார். கூரத்தாழ்வானுக்குச் சிலிர்த்தது.
சற்றைக்கெல்லாம் ஶ்ரீராமாநுஜருக்குக் கண்ணயர்வு ஏற்பட்டது. எல்லாம் சில நிமிடங்கள்தான். அந்தச் சில நிமிடங்கள் மற்றவர்க்கு அவர் தியானம் புரிவதுபோல் தோன்றிட, அவருக்குள்ளோ அரங்கனின் திருக்காட்சி.
அவர்முன் தோன்றிய அரங்கன்...
``உடையவனே! கோயில் நம்பி என்னையே நம்பி எனக்கென்றே இருப்பவன். ஆகவே அவனை என்னைவிட்டுப் பிரித்திடாதே. அதேவேளை அறியாமையாலும் கிரகப் பாடுகளாலும் அவன் புரியும் பிழைகளைத் திருத்தி அவனை ஆட்கொள். உன்னைப் புரியாது எதிர்ப்பவன், புரிந்த அடியவன் ஆவான். உன் புகழைப் பாடுபவனாயும் ஆவான்'' என்று கூறி, தன் ஒளிப்புனலான தோற்றத்தை மேக மண்டலத்துக்குள் கரைத்துக் கொண்டது போல் மறைந்தார்.
ஶ்ரீராமாநுஜர் திடுக்கிட்டு கண் விழித்தார். தன் கோரிக்கைக்கு அரங்கன் அவ்வளவு சீக்கிரத்தில் ஒரு பதிலளித்தது கண்டு அவரின் கண்களிரண்டும் ஆனந்த நீரைச் சிந்தத் தொடங்கின.
அதைக் கண்ட முதலியாண்டான் ``சுவாமி என்ன ஆயிற்று. எதற்காக இந்தக் கண்ணீர். தாங்கள் அழலாமா? யார் காரணம்... நான் இப்போதே அவரை இரண்டில் ஒன்று பார்த்து விடுகிறேன்'' என்றான் மிக கோபமாய்.
``ஆண்டான்! இது ஆனந்தக் கண்ணீர். அழகிய மணவாளனாக செப்புச் சிலையாக சற்றுமுன் காட்சிதந்த அரங்கன், என் சிறு கனவில் தன் சுந்தர சொரூபத்தைக் காட்டி, கோயில் நம்பி நிமித்தம் மனமுவந்து பேசினான்.
நம்பியை யாம் விலக்கியது சரியல்ல. அதில் அரங்கனுக்கு உடன்பாடில்லை. எனவே இந்த நொடியே என் கட்டளையை நான் திரும்பப் பெறுகிறேன். அரங்கனடியவராக அவரே தொடரட்டும். மற்றதை அரங்கனே பார்த்துக் கொள்வான்'' என்றார் ஶ்ரீராமாநுஜர்.
அதை அருகிருந்து கேட்ட கூரத்தாழ்வான் மகிழ்ந்து ``சுவாமி.. தங்கள்வரையில் அரங்கன் காலதாமதமே புரிவதில்லை'' என்றார்.
``என் வரையில் என்று மட்டும் சொல்லாதே. எவர் வரையிலும் அவன் வள்ளல்பிரான்! அவனுக்கு உள்ளார்ந்த பக்தியே கணக்கு. சில குறைபாடுகள் நம்பியிடம் இருந்தபோதிலும் நம்பியின் அரங்க பக்தி நிகரில்லாதது.அதை நாம் போற்றியே தீரவேண்டும்.''
ஶ்ரீராமாநுஜர் இக்கருத்தைச் சொன்ன அதே தருணம், அழகியமணவாளனின் பல்லக்கு உலா முடிந்து திருச்சந்நிதிக்குத் திரும்ப வந்தது.
- தொடரும்...