
திருவரங்கத்தின் சரிதம்
வேயர் புகழ் வில்லிப்புத்தூராடிப் பூரம்
மென்மேலும் மிகவிளங்க விட்டு சித்தன்
தூய திருமகளாய் வந்தரங்கனார்க்குத்
துழாய்மாலை முடி சூடிக்கொடுத்த மாதே!
- நிகமாந்த தேசிகனின் பிரபந்த சாரத்திலிருந்து...

சந்தியா வந்தனத்தின் மகிமைகளை அழுத்தம் திருத்தமாக உபதேசித்த அழகிய மணவாள மாமுனிகள், `இந்தக் கடமையை பிராமணர்கள் தவறாமல் செய்து வந்தால், அவரும் அவரைச் சார்ந்தோரும் நலம்பட வாழ்வார்கள்; அவர்களுக்கு எல்லா நன்மை களும் வந்துசேரும்’ என்றெல்லாம் எடுத்துரைத்தார்.
மேலும், ``இதேபோல் மற்றவர்களுக்கும் உரிய கடமைகள் உண்டு. அவரவர் தமக்குரிய கடமைகளைக் குறைவின்றி செய்தாலே போதும். ஒரு நாடு எந்தக் குறைகளுமின்றி சுபிட்சத்தோடு திகழும். இதையொட்டி நால்வகை தர்மங்கள் எனும் வர்ணாஸ்ரம தர்மங்கள் வார்த்தெடுக்கப்பட்டன. ஆயினும் இவற்றில் ஒன்று மேலானது ஒன்று சிறியது என்பதே கிடையாது. அப்படிச் சிந்திப் பதே பாவமாகும்.
வடிவில் பெரிதாக ஒரு மரம் இருக்கிறது. அதே வடிவில் சிறிய தாய் ஒரு கீரைச் செடி இருக்கிறது. இதனால் மரம் உயர்ந்தது கீரை தாழ்ந்தது என்றால் ஏற்போமா? வடிவில் ஏதுமில்லை. இதைப் புரிந்து உயர்வு தாழ்வு கருதாது ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்’’ என்றும் விளக்கினார் அழகிய மணவாள மாமுனிகள்.
ஶ்ரீமணவாள மாமுனி எனப்படும் அழகிய மணவாளருக்கு அவர் தந்தையைத் தொட்டு, ஆசார்யனாக இருந்து ஆஸ்ரயித்தவர் திருவாய்மொழிப்பிள்ளை. இவராலேயே நமக்கெல்லாமும் அழகிய மணவாளர் என்னும் மணவாள மாமுனிகள் கிடைத்தார் எனலாம்.
திருவாய்மொழிப்பிள்ளையின் அந்திமக் காலம் சற்றே நோய் மிக்கதாய் இருந்தது. ஓர் ஆசார்யனான இவரைச் சுற்றிலும் சீடர்கள் இருக்க அழகிய மணவாளரும் இருந்தார். பிள்ளையோ தளர்ந்த உடம்போடு, பலமாய் பேசக்கூட முடியாத பலவீனராய்க் கிடந்தார். அவரின் நிலை கண்டு சீடர்கள் மனம் கலங்கினர்.
சதாசர்வ காலமும் அரங்கனைச் சிந்தித்தும் அவன் புகழ் பாடியும் அருள்வாழ்வு வாழ்ந்தவர் திருவாய்மொழிப் பிள்ளை. அவரே உடம்பால் துன்பப்படுவதைக் கண்ட சீடர்கள் சிலருக்குள் `அரங்கன் கருணை இல்லாதவனோ?’ என்று கருதத்தோன்றியது. ஒருவன் அதுபற்றிக் கேட்கவும் செய்தான்.

``குருவே! அரங்கன் அருள் இருந்தும் தாங்கள் நோயால் துன்பப் படுவது எங்களுக்கு வேதனை தருகிறது. ஏன் இப்படியொரு நிலைமை?’’
இந்தக் கேள்விக்கு மிக அற்புதமான விளக்கத்தைக் கொடுத்தார் திருவாய்மொழிப் பிள்ளை.
``சீடர்களே! எனது உடல் என்று நீங்கள் பார்க்கும் இந்த உடல் என் முன்னோர்களால் உண்டானதாகும். இதில் என் ஏழு தலைமுறை பாட்டன் பாட்டிகளின் திசுக்களும் உயிர் அணுக்களும் உள்ளன. இது எனக்கு மட்டுமல்ல... உங்களுக்கும் அப்படித்தான்.
நம் முன்னோர்கள் நமக்கு வீடு, வாசல் என்று தாங்கள் சம்பாதித்த சொத்துக்களை மட்டும் விட்டுச் செல்வதில்லை. அவர்களின் பாவ புண்ணியங்களையும் சேர்த்து விட்டுச் செல்கின்றனர். இந்த வியாதியும் நோவும் என்னால் மட்டுமன்றி அவர்களாலும் கூட வந்திருக்கலாம்.
எம்பெருமான் நம்மை தீர்க்கமாகப் படைத்து, நமக்கு ஆறறிவையும் அளித்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று வேதங்கள் மூலம் சொல்லி நம்மை வாழப்பணிக்கிறான். நாம் அது போலவே வாழ்ந்து விட்டால் ஒரு பழுதுமில்லை. ஆனால் கலிமாயை காரணமாக நாம் சில பாபங்களையும் செய்து விடுகிறோம். சில கடமைகளைச் செய்யத் தவறிவிடுகிறோம். கூடுதலாக அறிவுச் செருக்கோடு பிறரை இகழ்ந்து பிறர் மனம் புண்படும்படிப் பேசுவது, நடந்துக் கொள்வது, ஜீவ இம்சைகள் புரிவது என்று பல பாவங்களை அறிந்தும் அறியா மலும் செய்துவிடுகிறோம்.
அப்படிப்பட்ட பாவங்களே பின்னர் வியாதியாய் வலியாய்த் திரும்ப வருகின்றன. அப்படி ஓர் அமைப்பை அவன் உருவாக்கி இந்த பூமி ராஜ்யத்தையும் இயக்கி வருகிறான். இதற்கு ஆண்டி முதல் அரசன் வரை சகலரும் கட்டுப்பட்டவர்களே! யாருக்கும் விதிவிலக்கு கிடையாது.
எனவே எனது இந்த உடல் நோவினை நீங்கள் அரங்கனின் கருணையின்மையால் வந்ததாகக் கருதிட வேண்டாம். இதை நான் அனுபவித்துத் தீர்ப்பதே சரியாகும். தாங்கும் வலிமையை அவன் தந்துள்ளான். அதனால் தான் என்னால் தெளிவாக சிந்தித்துப் பேச முடிகிறது. எனவே என் நிலைமையைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.... என்று ஓர் அழகிய விளக்கமளித்த திருவாய்மொழிப்பிள்ளை அந்த சீடர்களில் அழகிய மணவாளராகிய மணவாள மாமுனிகளைத் தான் மிகுந்த பரிவோடு தன் அருகில் அழைத்தார். மாமுனிகளும் ஆச்சார்யனை அருகில் நின்று தரிசித்தார்.
``மணவாளா! என் காலம் முடியப் போகிறது. நான் எம்பெருமானின் கழலடிகளில் துயில் கொள்ளும் நாள் நெருங்கி விட்டது. எனக்குப் பின் நீயே இந்த ஆச்சர்யப்பட்டத்தை ஆஸ்ரயிக்க வேண்டும். அது மட்டுமல்ல... இன்று திருவரங்கம் மிலேச்சர்களின் சிதைவுகளால் சிதைந்து போய் கிடக்கிறது. சிதைவு கட்டடங்களில் மட்டுமல்ல.. அங்கு வாழ்வோர் மனங்களிலும் கூட... பலர் மதமே மாறி ஊரைவிட்டு வெளியேறிச் சென்று விட்டனர். இருப்பவர்களோ திசை தெரியாது கிடக்கின்றனர்.
திருவரங்க விஷயத்தில் பழைய கோலாகலங்கள் திரும்ப வேண்டும். ஆறு கால பூஜை, ஆரவாரமான கூட்டம், அன்றாடம் உபன்யாசங்கள், அன்னதானம் என்று சகலமும் நிகழ்ந்தாக வேண்டும். திருவரங்கம் திவ்யமாக திகழ்ந்தால் இவ்வுலகமும் திவ்யமாக திகழ்ந்திடும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றதே திருவரங்க திவ்யமும்!
எனவே உன் கடமை இந்த ஆழ்வார் திருநகரியை சற்று விடுத்து திருவரங்கம் சென்று அமர்ந்து, நம் ஆச்சார்யன் ஶ்ரீராமாநுஜர் சென்ற வழியில் நீயும் நடந்து எல்லோரையும் நடக்க வைக்கவும் வேண்டும்..'' என்று கேட்டுக் கொண்ட நிலையில் தன் ஆன்மாவையும் வைகுண்ட பதத்தில் சேர்த்தார்.
ஶ்ரீமணவாள மாமுனிகளும் ஒரு பெரும் கடமை காத்திருப்பதை உணர்ந்து தன் ஆச்சார்யனுக்கான தசாங்க கார்யங்களை எல்லாம் முடித்த நிலையில், அவரது விருப்பத்தைக் கட்டளையாக ஏற்று திருவரங்கம் புறப்பட்டார். வழியில் ஶ்ரீவில்லிப்புத்தூரை அடைந்தார்.
அங்கே சில காலம் தங்குவது என்று திருவுள்ளம் கொண்டார். அதற்கேற்ப சகல ஏற்பாடுகளையும் அவரின் சீடர்கள் செய்தனர். வில்லிப்புத்தூரில் அம்மண்ணின் அரியகோயிலான வடபத்ரசாயி கோயிலுக்கும் ஆண்டாள் திருச்சந்நிதி உள்ளிட்ட ரங்கமன்னார் சந்நிதிக்கும் சென்று கண்ணீர்மல்க சேவை புரிந்தார். அப்போது அவரின் மேனியில் ஏராளமான பரவசத் திவலைகள். அவற்றைச் சீடர்களும், பக்தர்களும், ஆலய நிர்வாகிகளும் கண்டனர். மாமுனிகள், தன் சிலிர்ப்புக்கான காரணத்தைக் கூறத் தொடங்கினார்.

``ஆலயத்தினரே! நான் இப்போது மிகுந்த பரவச நிலையில் இருக்கிறேன். காரணம் இந்த ஆலயத்தின் சாந்நித்தியம் மட்டுமல்ல... என்னுள்ளே இப்போது பெரியாழ்வாரும் அவரின் திருமகளாம் ஆண்டாள் பிராட்டியும் பொங்கிப் பிரவாகித்தபடி இருக்கின்றனர். அவர்கள் நடமாடிய ஆலயம் இது. இப்பெருமாளின் அருளாலே அவர்கள் இன்று ஜீவன் முக்தர்களாகி, அவனை அடைந்து, நமக்கெல்லாமும் வழிகாட்டிவிட்டுப் போய்விட்டனர். அதிலும் பெரியாழ்வாரின் மலர்ச்சேவை பெரும் சிந்தனைக்கும் போற்றுதலுக்கும் உரியது...’’
மணவாள மாமுனியின் உரையைக் கேட்டவர்கள், அதில் லயித்தபடி அங்கேயே அமர்ந்துவிட்டனர். சந்நிதியின் கைங்கர்யரான பட்டர்பிரான் ``தாங்கள் பெரியாழ்வார் குறித்தும் ஆண்டாள் பிராட்டி குறித்தும் தங்களின் வாக்குப்பதிவை இங்கு செய்திட வேண்டும். அது வரலாற்றுப் பதிவாகி காலகாலத்துக்கும் நிலைத்திட வேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டார்.
மணவாள மாமுனிகளும் அவரின் வேண்டுதலை மகிழ்ச்சியுடன் ஏற்று, அங்கே அற்புதமான பிரசங்கத்துக்குத் தயாரானார்.

அப்போதே அங்கே ஒரு மேடை அமைக்கப்பட்டு அலங்கரிக்கப் பட்டது. ராஜமன்னார் திருச்சந்நிதியில் பெருமாள் தரித்திருந்த மாலை மாமுனிகளுக்குச் சூட்டப்பட, அவரும் தன் பிரவசனத்தைத் தொடர்ந்தார். அதில் முதல் கட்டமாக திருவில்லிப்புத்தூர் எனும் அந்தத் தலம் உருவான வரலாற்றையே கூறத் தொடங்கினார்.
``வில்லி, கண்டன் என்று இரண்டு வேடர்கள். மல்லிநாடு எனும் வனத்தில் வேட்டைக்குச் சென்றனர். அங்கே இருவரும் தனித்தனியே பிரிந்தனர். வில்லி, வனத்தில் ஓரிடத்தில் ஆளுயரப் புற்றுக்குள் இருந்து `ஓம் நமோ நாராயணாய...’ என்ற அஷ்டாட்சர மந்திரம் ஒலிப்பைதைச் செவிமடுத்தான்.
எங்கேனும் மண் புற்று இப்படி மந்திரத்தை முழங்குமா என்று ஆச்சர்யம் அடைந்தான். அதேநேரம் பெருமழையும் பெய்யத் தொடங்கியது. அதனால் புற்று கரைய, பன்னிரு திருமண் தரித்த முனிவர் ஒருவர் தென்பட்டார். அப்போதும் அவரின் தவக்குரல் அடங்கவில்லை. ஒரு பெரும் இடி இடித்தது. அப்போதும் அவரின் தவம் கலையவில்லை.
`அடேயப்பா! என்னவொரு மன உறுதி... என்னவொரு திடமான முயற்சி... சரி, யாரந்த நாராயணன்?’ என்றெல்லாம் வில்லிக்குள் கேள்விகள் தோன்றின. அவனுடைய அதிர்ஷ்டம் கடும் மழையும் இடியும் முனிவரின் தவத்தைத் தற்காலிகமாக கலைத்தன. கண் மலர்ந்தவர் எதிரில் நிற்கும் வில்லியைக் கண்டார். வில்லி கரம் கூப்பி அவரை வணங்கினான்.
``வேடுவனா நீ?’’
``ஆமாங்க சாமி. வேட்டைக்கு வந்தவன்... வழியில் இந்தப் புற்றையும் உள்ளே உங்களையும் பார்த்துத் திகைச்சுப்போய் நின்னுட்டேன்...’’
``நான் தவம்புரிகிறேன். நடமாடியபடியே இருக்கும் உனக்கு, ஓரிடத்தில் அமர்ந்து நான் புரியும் தவம் திகைப்பாகத்தான் இருக்கும்!’’
``அதுசரி சாமி... எதுக்காக இப்படித் தவம் செய்யணும்?’’
``இதற்கான பதிலைச் சொன்னால் உனக்குப் புரியாதப்பா!’’
``சும்மா சொல்லுங்க சாமி... புரிஞ்சுக்கிறேன். இப்படிப் புற்று முளைக்கிற அளவுக்கு ஒரே இடத்துல அசையாம உட்கார்றதுல்லாம் இயலாத காரியம்... ரொம்பவும் கஷ்டம்.’’
``ஆம், கஷ்டம்தான். இந்த மனிதப்பிறப்பேகூட கஷ்டம்தான்...’’
இவர்களின் உரையாடலை விவரித்தபடி மணவாள மாமுனிகளின் பிரசங்கம் தொடந்தது!
- தொடரும்...