Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 23

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

இந்திரா செளந்தர்ராஜன்

ரங்க ராஜ்ஜியம் - 23

இந்திரா செளந்தர்ராஜன்

Published:Updated:
ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

திருவரங்கனின் கட்டளைப்படி `பகவத் குணதர்பணம்’ எனும் பாஷ்யத்தை அருளிச்செய்த பராசர பட்டர், நம்பெருமாளின் திருமஞ்சனக் காலங்களில் கட்டியம் கூறும் பழக்கத்தை உருவாக்கி அருளினார். அது இன்றும் தொடர்வதாகத் தெரிகிறது. இந்த கட்டியங்களுக்கு அவரே விரிவுரையும் செய்தார்.

'வெண்டிரை சூழ் திருவரங்கம்

செழிக்க வந்தோன் வாழியே

சீமாதவனென்னும் செல்வனார் வாழியே

பண்டை மறைத்தமிழ்ப் பொருளை

பகர வந்தோன் வாழியே...

பங்குனியிலுத்தர நாள் பாருதித்தான் வாழியே

ஒண்டொடியாள் கலவிதன்னை ஒழித்திட்டான் வாழியே

ஒன்பதினாயிரப் பொருளை ஓதுமவன் வழியே

எண்டிசையும் சீர்பட்டரிணையடியோன் வாழியே

எழில் பெருகும் நஞ்ஜீயர் இனிதூழி வாழியே!'

- ஓராண்வழி ஆச்சார்யர்கள் வாழித்திருநாமத்திலிருந்து.

வராஹ மூர்த்தி
வராஹ மூர்த்தி

இன்றும் நம்பெருமாள் திருமஞ்சனம் காணும்போது, கோயில் ஸ்தானிகர் எனப்படுபவர் ‘அருளப்பாடு பராசரபட்டர்’ என்று அருளப்பாடு சாதிப்பார். உடனே பட்டர் வம்சத்தவர்கள் அதை வழிமொழிந்து ‘நாயன்தே’ என்கிற பதில் வார்த்தையுடன் நம்பெருமாள் முன்பு பணிவாய் நிற்பர்.

பின்னாளில் பெரிய திருமந்திரமாகிய அஷ்டாட்சரத்துக்கும் விவரணமாக அஷ்ட ஸ்லோகீ என்கிற வடமொழி நூலை அருளிச் செய்தார் பராசர பட்டர். இவருடைய நூல்களிலிருந்தே வேதாந்த தேசிகன் அநேக மேற்கோள்களைப் பின்னாளில் எடுத்துக் காட்டி னார். எம்பெருமானை மட்டுமல்லாது, ரங்கநாயகி பிராட்டியையும் போற்றி துதி செய்து குணரத்ன கோசம் என்கிற நூலை இயற்றி அருளினார் பராசர பட்டர்.

மேலும் `க்ரியா தீபம்’ எனும் அநுஷ்டான நூல் ஒன்றையும் இவர் படைத்தார். எப்படி உடையவர் தன் அனுபவங்கள் தன்னோடு போய்விடாமல், அவற்றை எல்லோரும் உணரவேண்டும் என்று பல நூல்களை அருளிச் செய்தாரோ, அதேபோல் அவர் வழியில் இவரும் திகழ்ந்தார்.

பக்தியில் தோய்ந்த ஆசார்ய பெருமக்களின் முக்தி என்பது நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு நிகழும் வலி மிகுந்த மரணம் போன்றதன்று. அது கொடியில் இருந்து ஒரு பூ உதிர்ந்து விழுவதைப் போன்றது. பராசர பட்டரின் முக்தியும் அவ்வண்ணமே நிகழ்ந்தது!

திருவரங்க திருநாள்களில் கைசிக ஏகாதசி தனிச்சிறப்பு பெற்றது. மாதம்தோறும் இரண்டு ஏகாதசி திதிகள் வரும். இதில் மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கும் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசிக்கும் பெரும் சிறப்பு உண்டு. கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியே கைசிக ஏகாதசி எனப்படுகிறது. இந்த கைசிக ஏகாதசியின் சிறப்பை உபன்யாசம் மூலம் எல்லோருக்கும் எடுத்துரைப்பதில் பராசரபட்டர் தலைசிறந்து விளங்கினார்.

உபன்யாசமாக பராசர பட்டர் கூறும் கைசிக ஏகாதசி மஹாத்மியத் தைக் கேட்கக் கொடுத்துவைத்திருக்கவேண்டும். இதன் பெருமை வராஹ புராணத்தில் வராஹ மூர்த்தியே எடுத்துரைப்பதுபோல் உள்ளது. இந்த மஹாத்மியத்தைத் தான் கற்றுக்கொண்டு, பிறகு எல்லோருக்கும் வெறும் வியாக்கியானத்துடன் பராசர பட்டர் உபதேசித்தார்.

ஒரு முறை பூமி பிரளயத்திற்கு ஆளாகி முற்றாக மூழ்கிப் போனது. எம்பெருமான் மகாவிஷ்ணு வராஹ உருவம் எடுத்து வந்து பிரளயத்திலிருந்து பூமியைக் காப்பாற்றி பூமாதேவியின் ஆயாசம் தீர அவளைத் தன் மடியில் அமர்த்திக்கொண்டார். இதனால் பெரி தும் மகிழ்ந்த பூமித்தாய், இதுபோல இனி நிகழாதபடியும், பூமியிலுள்ள உயிர்கள் இனி இதுபோன்று துயரடையாமல் வாழ அருளும்படியும் பிரார்த்தித்தாள்.


பக்தி மிகும்போது அழிவு ஏற்படாது. பக்தி குறைந்து அதர்மம் பெருகும்போதுதான் பிரளயங்கள் உண்டாகும். அவ்வகையில் பக்தி உடையவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக பரம பாகவதன் ஒருவனின் பெருமையை விளக்கும் கைசிக புராணத் தைப் பூமிப்பிராட்டிக்கு எடுத்துரைத்தார் எம்பெருமான்.

பாரதத்தின் தென் பகுதியில் மகேந்திரகிரிக்கு அருகில் திருக் குறுங்குடி என்ற திவ்ய தேசம் உள்ளது. அங்கு அருளும் அழகிய நம்பி பெருமாள் மீது, தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த அன்பன் ஒருவன் அதீத பக்திகொண்டிருந்தான். அவன் பெயர் நம்பாடுவான். வீணை வாசிக்கக் கற்றுக் கொண்ட நம்பாடுவான், அழகிய நம்பியின் கோயில் வாசலில் நின்று கொண்டு வீணை வாசித்தபடியே மிக உருக்கமாகப் பாடுவான். பெருமாளைப் போற்றி அவன் பாடுவதைத் திருக்குறுங்குடி ஊரே கேட்டு அதிசயித்தது.

ஆனாலும் அவனால் கோயிலுக்குள் நுழையவோ, பெருமாளைக் கண்ணார தரிசிக்கவோ வாய்ப்பு கிட்டவே இல்லை. அவனும் அதைப் பற்றிக் கவலைகொள்ளாமல், கோபுரத்தையே பெருமாளாக எண்ணி வாசலில் நின்று பாடியும் வழிபட்டும் வந்தான். தனது பாடலைப் பெருமாள் கேட்கிறார் என்று உறுதியாக நம்பினான். அவன் பாடலின் பண் `கைசிகப் பண்’ எனப்பட்டது.

இந்த பக்தனின் பக்திச் சிறப்பையே பூமிப் பிராட்டிக்கு எடுத் துரைத்தார் வராஹ மூர்த்தி. இதுவே கைசிக புராணம் என்ற பெயரில் வராஹ புராணத்தில் உள்ளது. நம்பாடுவான் இப்படி பக்தி செய்தான் என்று சொல்வதில் எதுவும் இல்லை; தனக்கு ஏற்பட்ட இடையூறு களைப் பொருட்படுத்தாது அவன் பக்தி செய்தான் என்பதில்தான் சிறப்பே உள்ளது.

ஒருமுறை கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி மற்றும் துவாதசி இரவில் நடு ஜாமத்துக்கு மேல், பிரம்ம முகூர்த்தவேளையின்போது வீணையை எடுத்துக்கொண்டு கோயிலை நோக்கி நடக்கலானான் நம்பாடுவான். அப்போது ராட்ஸஸ பூதம் ஒன்று தோன்றி அவனைப் பிடித்துக் கொண்டது.

சோமசர்மா என்ற அந்தணன் பெரும் சாபத்துக்கு ஆளாகி, அதன் பலனாக பிரம்ம ராட்சஸனாக அலைந்து திரிந்தான். அவனுக்குப் பிடித்த உணவு நரமாமிசம். அந்த ராட்சஸனே நம்பாடுவானைப் பிடித்துக்கொண்டான். நம்பாடுவானை விழுங்கப் போவதாகவும் சொன்னான். நம்பாடுவான் தன் உயிருக்காகக் கவலைப்படவில்லை.

வராஹ மூர்த்தி
வராஹ மூர்த்தி


புண்ணியம் மிகுந்த நாளில், இறைவனைத் துயிலெழுப்பும் தன் பணி தடைப்பட்டுவிடுமே என்றுதான் கவலைப்பட்டான். ஆகவே, ராட்சஸனிடம் கெஞ்சினான். ``திருக்குறுங்குடி இறைவனைப் பாடி பணி செய்து வருகிறேன். இன்று அந்தக் காரியம் தடைப்பட வேண் டாம். வழக்கம்போல் கோயில் வாசலுக்குச் சென்று, பாடி வழிபட்டு விட்டு திரும்பி வருகிறேன். அதன் பிறகு என்னை விழுங்கி நீ பசியாறலாம்’’ என்றான்.

பிரம்ம ராட்சஸன் ஒருவாறு மனம் இரங்கினான். நம்பாடுவான் சொன்னதை ஏற்றுக்கொண்டான். ``ஒருவேளை நீ திரும்பி வராமல் என்னை ஏமாற்றினால், பெரும்பாவியாவாய். அப்போதும் நீ எங்கிருந்தாலும் தேடி வந்து உன்னைக் கொன்று புசிப்பேன்’’ எனக் கூறி அனுப்பினான் பிரம்மராட்சஸன்.

நம்பாடுவானோ ``இந்த உடலால் என்ன பயன் இருக்கப் போகிறது என்று எண்ணியிருந்தேன். அது உனது பசியைத் தீர்க்கும் என்றால் மகிழ்ச்சியே. ஆகவே நான் நிச்சயம் வருவேன்’’ எனக் கூறிச் சென் றான். சொன்னபடியே திருக்கோயில் வாசலை அடைந்து ஆனந்த மாய் அன்றைய வழிபாட்டை முடித்துவிட்டு, திரும்பி வந்தான். சாகப்போகிறோம் என்கிற கவலையோ பயமோ அவனிடம் துளியும் இல்லை!

ஆனால், தன் பக்தனுக்குச் சோதனை என்றால் பகவான் வேடிக்கை பார்ப்பாரா என்ன? நம்பாடுவானுக்கு திருவருள் புரிய திருவுளம் கொண்டார். ஓர் அந்தணர் வடிவில் வந்தார். ``இந்த வழியில் சென்று பிரம்ம ராட்சஸனுக்கு இறையாகாதே. வேறு வழி யைக் காட்டுகிறேன்; அவ்வழியே தப்பித்துக்கொள்’’ என்றார்.

நம்பாடுவான் அதை ஏற்கவில்லை. ``அந்தணராகிய தாங்களே என்னைத் தவறாக வழிநடத்தலாமா? கொடுத்த வாக்கு என்பது வாழும் வாழ்வைவிடப் பெரிதல்லவா?’’ என்றான்.

``அந்த வாழ்வை போயும் போயும் ஒரு ராட்சஸனின் ஒருவேளை பசிக்காக இழக்கலாமா? எதற்கு எது ஈடு? உன் உயிரின் மதிப்பு ஒருவேளை உணவுக்குத்தான் சமமா?’’ எனக் கேட்டார் அந்தண வடிவ அழகிய நம்பி.

``எத்தனை நாள் வாழ்கிறோம் என்பதா வாழ்வு? எப்படி வாழ்கிறோம் என்பதுதானே வாழ்வு? யாருக்கும் பயனின்றி நூறு ஆண்டு வாழ்வதை விடவும் ஒரு பயனுக்காக ஒருநாள் வாழ்வதே என்வரையிலும் மேலானது’’ என்று நம்பாடுவான் கூறிவிட்டு, பிரம்ம ராட்சஸன் முன்னால் போய் நின்றான்.

சொன்ன சொல்லைக் காப்பாற்றிய அவன் மேல் இரக்கம் உண்டானது பிரம்மராட்சஸனுக்கு. ``எனக்கு உன் உடல் தேவை இல்லை. உன்னைப் போன்ற சத்தியம் நிறைந்த பக்தன் நினைத்தால் எனக்கு விமோசனம் தர முடியும். நான் அந்தணனானக இருந்து சாபத்தால் இந்த நிலையை அடைந்தவன். மந்திரம் சொல்லி வேள்வி செய்யும்போது பிழையாகச் செய்ததால் இவ்வாறு ஆகிவிட்டேன்’’ என்றான் பிரம்ம ராட்சஸன்.

``சரி! நான் இப்போது என்ன செய்யவேண்டும்?’’ எனக் கேட்டான் நம்பாடுவான்.

``இதுவரையிலும் ஏகாதசி மற்றும் துவாதசி பொழுதுகளில் அழகிய நம்பியை துதித்து நீ பெற்ற புண்ணிய பலனை எனக்குத் தாரைவார்த்துக் கொடு’’ என்றான் பிரம்ம ராட்சஸன்.

``நான் புண்ணியத்தை எதிர்பார்த்து பாடவில்லை; அவனைச் சரணடைந்து பாடினேன்.சரணடைந்து விட்டவனிடம் என்ன இருக்க முடியும்?’’ என்று கேட்டான் நம்பாடுவான்.

``அப்பனே... உன்னோடு பேசப் பேச எனக்கு வியப்பு அதிகரிக்கிறது. அந்தணனாகப் பிறந்தும் நான் சரியாக செயல்படாமல் இந்த நிலையை அடைந்து விட்டேன். நீயோ பெரும் ஞானத்துடன் வாழ்ந்திருக்கிறாய். பிறப்பைவிட நடப்பே சிறப்பு என்பது உன்னால் தெரியவந்தது. நீ முயன்றால் எனக்கு விமோசனம் அளிக்க முடியும். எனக்காக அந்த அழகிய நம்பியிடம் மன்றாடி, விமோசனம் பெற்றுக்கொடு’’ என்றான் ராட்சஸன்.

அவனுடைய பேச்சும் பரிதவிப்பும் நம்பாடுவானை மனம் கசியச் செய்தன. எனவே திருக்குறுங்குடி கோயில் வாசலுக்குச் சென்று, பிரம்ம ராட்சஸன் பொருட்டு கைசிகப் பண் அமைந்த பாடலைப் பாடி பெருமாளை வேண்டி னான். அவனுக்கு அருள சித்தம் கொண்ட பெருமாள், தன்னை மறைக்கும்படி நின்றிருந்த கொடி மரத்தை விலக வைத்து நம்பாடுவானுக்குக் காட்சி தந்தார்.

``நம்பாடுவானே! பிரம்மராட்சஸனுக்கு மட்டுமல்ல, வருங்காலத்திலும் உனது பக்தியைச் சிந்திப்போருக்கும் யாம் முக்தியைத் தருவோம். குலத்தைவிட பத்தியே பெரிது என்பது உன்னால் நிரூபணம் ஆன இந்நாள் கைசிக ஏகாதசி எனப் போற்றப்படும். மானுட வாழ்வு எனும் மாய வலையில் சிக்கியிருப்போருக்கு இந்த நன்னாள் விமோசனம் அளிக்கட்டும்’’ என்று அருள்பாலித்தார்.

- தொடரும்...மூலவர் திருமேனிகளில் நாகர் உருவம்!

நெல்லை ஜங்ஷனில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது கீழத் திருவேங்கடநாதபுரம் என்கிற குன்னத்தூர்.

இந்த ஊரில் மலைக்குன்று இருப்பதால் குன்றத்தூர் என வழங்கப்பட்டு, இப்போது `குன்னத்தூர்' ஆனதாகச் சொல்கிறார்கள். மன்னர்கள் காலத்தில், 'குன்னத்தூர் கீழ் வெம்பநாட்டு செங்காணியான நவணி நாராயண சதுர்வேதி மங்கலம்' என்று கல்வெட்டுகளில் இவ்வூர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நெல்லைச் சீமையில் `நவ கயிலாய' வரிசையில், நான்காவது தலமாக திகழும் இந்தத் தலத்தை, தென் காளஹஸ்தி' என்று குறிப்பிடுகிறார்கள். இங்கு அமைந்துள்ள கயிலாசநாதர் ஆலயம், ராகுவின் சிறப்புடன் விளங்குகிறது. ஆக, இங்குள்ள ஒவ்வொரு மூலவர் விக்கிரகத்திலும் நாகர் உருவம் இருப்பதைக் காணலாம். ஆகவே, இந்த ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால் ராகு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை!

- சி.பாலு, தென்காசி