திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 77

திருவரங்கம் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
திருவரங்கம் கோயில்

திருவரங்க சரிதம்

`அருள் தரும் ஆரண தேசிகனே எங்கள் தூப்புல் தேவே
வருகவிதார்க்கிக சிங்கமே வாதியர் வாழ்வறுத்தாய்
இருகையும் கூப்பி உரைக்கும் இவ்விண்ணப்பம் ஒன்று கேளாய்
உருவ எனக்கருளாய் என்றும் உள்ளம் உன் தொண்டரையே!

- ஶ்ரீநயினாச்சாரியார்'

காஞ்சி வரதனை வணங்கிவிட்டு, சீடர்கள் தொடர தனது பல்லக்கில் பயணித்து இல்லம் வந்து சேர்ந்தார் வேதாந்த தேசிகர். சீடர்கள் சோர்வுடன் அவரைப் பார்த்தனர்.

``உங்கள் பார்வை எனக்குப் புரிகிறது கவலை வேண்டாம். எம்பெருமான் கைவிட மாட்டான்'' என்றார் தேசிகன்.

``சுவாமி! தங்களிடம் ஒரு கேள்வி'' என்றான் ஒருவன்.

ரங்க ராஜ்ஜியம் - 77

``கேள்...''

``எம்பெருமான் கருணைக்குப் பெரிதும் ஆளானவர் நீங்கள். அந்நியர்களின் படையெடுப்பு ஏன் நிகழ்கிறது? எம்பெருமான் ஒருபுறம் நம்மைப் படைத்து விட்டு, மறுபுறத்தில் ஏன் இப்படி எதிரிகளையும் படைக்கவேண்டும். நாம் ஏன் ஏன் அவர்களிடம் போராட வேண்டும்? இந்த உலகமே வைணவ மயமாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?''

தேசிகன் புன்னகைத்தபடி கூறினார்...

``இப்படிப்பட்ட கேள்வியை, இந்த உலகில் பல இடங்களில் பலவிதங்களில் நாம் கேட்கலாம். பூவைப் படைத்தவன் ஏன் முள்ளைப் படைக்க வேண்டும், இனிப்பைப் படைத்தவன் ஏன் கசப்பைப் படைக்க வேண்டும்... இப்படி நாம் பல கேள்வி களைக் கேட்டுக்கொண்டே போகலாம்.

ஒரு நல்லதின் அருமை அல்லது அதன் தன்மை, தீயது என்று ஒன்று இருந்தால்தான் தெரியவரும். காரணம் இல்லாமல் இந்த மண்ணில் ஒரு காரியமும் இல்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.''

``சுவாமி! தங்கள் பதில் புரிவைத் தருகிறது. இதெல்லாமே நம் போன்ற மாந்தர்களுக்குப் பொருந்தும். ஆனால், இப்போது சோதனை எம்பெருமானுக்கே அல்லவா வந்துள்ளது.

ஆலயத்தை அழிப்பதே மிலேச்சர்கள் நோக்கு என்று அறிகிறோம். வடக்கில் அவர்கள் பல ஆலயங்களை நிர்மூலமாக்கிவிட்டதாயும் அறிகிறோம். அப்படியிருக்க உங்கள் கருத்து எம்பெருமானுக்கு எப்படி பொருந்தும்?''

``கவலைவேண்டாம். அவன் அழிவற்றவன். அவனை அழிக்க எவராலும் எதனாலும் முடியாது. இதுவோர் ஆன்ம சோதனைக்கான காலம். நாம் எதை உயிராகக் கருதுகிறோமோ, அதை உயிரைக் கொடுத்தும் காக்கிறோமா என்பதே கேள்வி. அவ்வாறு காத்திடவும், அதற்கான வழியை காட்டவும் அவனே ஆசார்ய புருஷர்களை அனுப்பித் தருவான்.''

``தங்களை நாங்கள் எங்கள் ஆசார்யராகவே கருதுகிறோம். இம்மட்டில் தங்கள் கருத்து?''

``தைரியமாக இருங்கள். எம்பெருமானை எண்ணியபடியே இருங்கள். இப்போது நாம் புரியும் பக்தி என்பது, மன உறுதி எனும் வடிவுக்கு மாறிவிட்டது; மாறவும் வேண்டும்.''

இங்ஙனம் ஶ்ரீவேதாந்த தேசிகர் கூறிய நேரத்தில், கோயில் ஸ்தானிகர் வேக வேகமாக வந்து வணங்கி நின்றார்.

``ஓ... ஸ்தானிகரா. ஏதும் செய்தி உண்டா?''

``ஆம் சுவாமி. நான் ஒரு கனவு கண்டேன்.

``அது இயற்கைதானே?''

``கனவுகள் வருவது இயற்கையே. ஆனால் சில கனவுகள் எண்ணக்கசிவாக இல்லாமல், இறைமொழியாகவே அல்லவா உள்ளன!''

``அப்படி எதை உணர்ந்தீர்?''

``நம் ஆலயத்துத் திருக்குளமான அனந்த சரசுக்குள் எம்பெருமான் இறங்கி மூழ்கி மறைந்து சென்றது போல் கண்டேன்.''

இதைக் கேட்ட தேசிகன், ஆழ்ந்த சிந்தனை யுடன் ``அற்புதம்'' என்றார்.

ஸ்தானிகருக்குப் புரியவில்லை. வேதாந்த தேசிகர் தொடர்ந்தார்...

``அந்தத் திருக்குளம் எம்பெருமான் உறங்கிடும் திருக்குளம் என்றாகிறது. இனி அதில் துளியும் அசுத்தம் கூடாது. காலத்தால் அந்தக் குளம் பெரும் பெயர் பெறப் போகிறது என்று என் உள்ளுணர்வு கூறுகிறது.''

இவ்வாறு ஶ்ரீவேதாந்த தேசிகர் கூறிய வேளையில், கையில் ஒரு கிளி மற்றும் ஒரு புறாவுடன் வந்த விஜயாபதி என்ற தூதுவன் அவரை வணங்கினான்.

``மகா மகா வந்தனம்'' என்றபடி, எண்சாண் உடம்பையும் ஶ்ரீதேசிகரின் எதிரில் கிடத்தி அவரின் கால்களில் விழுந்து வணங்கினான் விஜயாபதி.

``எழுந்திரு விஜயாபதி. நலமாக இருக்கிறாயா?''

ரங்க ராஜ்ஜியம் - 77

விஜயாபதி பதில்பேசாது மௌனம் காத்தான்.

“புரிகிறது... ஏதாவது பிரச்னையா? இல்லை, உனக்கு ஏதேனும் உடல் உபாதையா?''

``பிரச்னை, உபாதை இரண்டும்தான். ஆனால் எனக்கல்ல; நம் நாட்டுக்கு.''

``நானும் அறிவேன். கவலை வேண்டாம். காலத்தால் எல்லாம் சரியாகும்.''

``இம்முறை அப்படித் தோன்றவில்லை. நமக்கெல்லாம் காலமே இல்லாமல் போய், நம் நாடே காலமாகிவிடுமோ என அஞ்சுகிறது என் மனது...''

``அப்படியானால், உனக்கு எம்பெருமான்மீது நம்பிக்கை இல்லை என்றாகிறது. இப்போது, பெரும் சோதனை எம்பெருமானுக்குத்தான். மிலேச்சர்களின் குறியும் நாமல்ல; நம் ஆலயங்களே. அதை நாம் முறியடிக்க முனைவோம். நம் பக்தியால் நம் ஆலயங்களை நாம் காத்திடுவோம்.''

``மிலேச்சப் படை மிகப் பெரியதாய் உள்ளது. குறிப்பாக இப்போது பெரும் சோதனை பெரியக்கோயில் எனப்படும் திருவரங்கம் திருத்தலத்துக்குதான்.''

``உனக்கு ஏதும் தகவல் வந்ததா?''

``ஆம்! இருவிதங்களில் எனக்குத் தகவல் வந்தது. ஶ்ரீபிள்ளைலோகாசார்யர் சீடர்களில் சிலர் மூலமாகவும், ராஜாங்க முத்ராதிகாரியின் மூலமாகவும் எனக்குத் தகவல் வந்தது. ஶ்ரீபிள்ளை லோகாசாரியர், அவரின் சகோதரர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இருவரும்தான் இப்போது திருவரங்கத்தில் எம்பெருமானுக்குப் பெரும் காவலாக இருக்கிறார்கள்.''

``ஶ்ரீபிள்ளைலோகாசார்யர் இருக்கிறாரே... அது போதாதா?''

``என்ன சுவாமி... எதைவைத்து அவரை வியக்கிறீர்கள்... அவர் போதுமென்று கருதுகிறீர்கள்? அவர் முதிர்ந்த வைணவர். சதம் கண்டுவிட்டவர்‌; இளைஞரல்ல.''

``அறிவேன். நீ அவரின் உடற்கூற்றைப் பார்க்கிறாய். நானோ அவரின் ஆத்மக் கூற்றினைப் பார்க்கிறேன்.''

``இரண்டுக்கும் என்ன வேற்றுமை சுவாமி?''

``உடலானது நம் தாய் - தந்தையரின் மரபணுக்களின் கூட்டு. இந்த மண்ணில் இருந்து பெறப்பட்டு மண்ணிலேயே சேர்ந்துவிடும் வஸ்து. ஆத்மா அப்படியல்ல. அது ஒளிப் புனல்; ஒலிப் புனலும் கூட!''

``புரியும்படி கூறுங்களேன்...''

``நம் மனம் ஒலி வடிவானதுதானே?''

``ஆம்!''

``வேத மந்திரங்களும் ஒலி வடிவானவை தானே?''

``ஆமாம்.''

``எப்படி வேதங்கள் அழியாதவையோ, அப்படியே நம் மனத்தின் ஒலி வடிவமும் அழியாதது. அது உடலைத் துறந்த நிலையில், அடுத்தடுத்த கட்டங்களைக் கர்மாவுக்கு ஏற்ப காண்கிறது.''

``அவ்வகையில், ஶ்ரீபிள்ளைலோகாசார்யரின் ஒலிப் புனலாகிய ஆன்மா எதைச் சார்ந்தது?''

``அது அழிவற்றது. ஒன்றை நன்றாகப் புரிந்து கொள். இங்குள்ள காஞ்சிப் பேரருளாளன் வேறு, பிள்ளை லோகாச்சாரியார் வேறில்லை. வரதனின் மானுட சொரூபமே அவர்!''

``அப்படியானால், இந்த வரதன் அங்கே அரங்கனைத் துதித்துக்கொண்டிருக்கிறானா?''

``அழகாகச் சொன்னாய். `துதித்து' என்ப துடன் `காத்து' என்றும் சேர்த்துக்கொள்.''

``எனில், இங்கே வரதனுக்கு ஆபத்து இல்லையா?''

``எங்கும் அவனுக்கு ஆபத்து என்பதே கிடையாது. அவனே ஆபத்சகாயன்!''

``சுவாமி! பல கோயில்களில் மூர்த்தங்களை உடைத்துச் சின்னாபின்னமாக்கிவிட்டார்கள். இதை ஆபத்து என்று கூறாமல், என்னவென்று கூறுவது?''

``நீ சொல்வது புரிகிறது. வணக்கத்திற்குரிய மூர்த்திகளை வெறும் கல்லாகப் பார்க்கும் போது, அது அதன் தன்மையைத்தான் காட்டும். கல்லைக் கடந்து அதனுள் ஆவிர்பவிக்கும் தெய்விகத்தைப் பார்க்கும்போதுதான், அது அற்புதங்களைச் சாதிக்கும்.''

``அப்படியானால், உடைந்துபோன இடங் களில், அவற்றைக் கல்லாக மட்டுமே கருதிய வர்கள்தான் இருந்தனரா?''

``அப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும்.''

``எனில், மூர்த்தங்கள் உடைவதும் உடையாத தும் நம் கைகளிலா உள்ளது?''

``நம் பக்தியின் கைகளில் என்று சொல்...''

``பக்தி இல்லாமலா வழிபாடுகள் நடை பெறுகின்றன?''

``விஜயாபதி! பேசியபடியே இருப்பதால் பயன் இல்லை. ஒரு குழந்தை தெருவில் விளையாடுகிறது. அப்போது நாய் ஒன்று கடிக்க வருகிறது. நாம் என்ன செய்வோம்?''

``குழந்தையைத் தூக்கிக் கொள்வோம். நாயைத் துரத்துவோம்...''

``இப்போது நாம் செய்யவேண்டியதும் அதையே. குழந்தைக்கு எப்படி பாதுகாப்பு முக்கியமோ, அப்படியே நம் கோயில்களுக்கும் உள்ளிருக்கும் மூர்த்திகளுக்கும் நாம் பாதுகாப்பு அரணாக இருக்கவேண்டும்.''

``புரிகிறது சுவாமி. நம்மை இழந்தாவது நம் மூர்த்திகளை நாம் நிலைநிறுத்த வேண்டும். சரிதானே?''

``மிகவும் சரி. இந்தச் சோதனையில் வெல்ல அவனிடமே மன்றாடுவோம்!''

- தொடரும்.

உடுப்பி கிருஷ்ணர்
உடுப்பி கிருஷ்ணர்

மேற்கே திரும்பிய கண்ணன்!

ன்னட தேசத்தில் அவதரித்த மகான் கனகதாசர். இவர், நந்தனாரைப் போல திருக்குலத்தில் பிறந்து பக்தியால் உயர்ந்தவர்.

ஒருமுறை கனகதாசர் உடுப்பி கிருஷ்ணரை தரிசிக்கச் சென்றார். அக்கால வழக்கப்படி பூசாரிகள் தடுத்தனர். எனவே, கோயிலின் பின்புற வாயிலுக்குச் சென்ற கனகதாசர், அங்கிருந்தே கண்ணை நினைத்து மனமுருகிப் பாட ஆரம்பித்தார்.

அவ்வளவுதான்... அவருக்கும் ஶ்ரீகிருஷ்ண விக்கிரகத்திற்கும் இடையே இருந்த சந்நிதிச் சுவரில் கீறல் விழுந்து பிளந்து, ஜன்னல் அளவுக்கு இடைவெளி தோன்றியது.

அதேநேரத்தில் கருவறையில் இருந்த ஶ்ரீகிருஷ்ணரும் கனகதாசரை நோக்கித் திரும்பி தரிசனம் அளித்தார்.

உடுப்பி கோயிலின் வாயிலில் ‘கனகன கிண்டி’ எனும் பெயரில் அந்த ஜன்னல் இன்றும் இருக்கிறது. உடுப்பி கிருஷ்ணரும் மேற்கு நோக்கியே அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்!


- கே.மாதவன், வேலூர்