மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 80

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் ( ரங்க ராஜ்ஜியம் )

திருவரங்க சரிதம்

'அருள் தரு மாரண தேசிகனை

யெங்கள் தூப்புற்றேவே

வருகவி தார்க்கிக சிம்மமே வாதியர்

வாழ்வறுத்தா

இருகையுங் கூப்பி உரைக்குமிவ்

விண்ணப்பம் ஒன்று கேளா

யுருவ வெனக்கருளா எண்ணுமுள்ள

முன் தொண்டையே...'

- நயினாராச்சாரியார்


நெடிய பயணத்தில் `எண்ணாயிரம்' என்ற பெயர் கொண்ட ஊரின் எல்லைப்புறத்தில் வந்து நின்றது அவர்களின் ரதம். கிருஷ்ணபாண்டன் இறங்கவும், தேசிகன் திரைச்சிலையை விலக்கிப் பார்த்தார்.

``சாமி... நீங்க ஞாபகமா நிறுத்தச் சொன்ன எண்ணாயிரம்கற ஊர் வந்துடுச்சிங்க... இதுதான் ஊர் எல்லை'' என்றான் கிருஷ்ணபாண்டன்.

உடனே குனிந்து ஒரு சிட்டிகை மண்ணை எடுத்துத் தன் தலைமீது தூவிக்கொண்டு, கிருஷ்ணபாண்டனின் தலைப்பாகை மீதும் தூவினார் ஸ்ரீதேசிகன்.

பன்னிரு திருமண் காப்புடன், திவ்யமங்கள ரூபத்துடன் பச்சை மரகதக் கடுக்கன் காதுகளில் மின்னிட, கழுத்தில் துளசிமணி மாலைகள் மற்றும் பவித்ர மாலைகளுடன்... தோளில் பொறிக்கப்பட்ட சங்கு - சக்கர முத்திரைகள் பளிச்சென தெரியும் வண்ணம் நின்ற அவரைக் காண அப்போது ஒரு கூட்டம் கூடிவிட்டது.

அவ்வளவு பேர் நெற்றியிலும் திருமண் காப்பு. அவ்வளவு பேருமே வைணவ நெறியைப் பின்பற்றுபவர்கள் என்பது தெரிந்தது. அவர்களில் புண்டரீகாட்சன் என்பவர் முன்வந்து தேசிகனை வரவேற்கச் சித்தமானார்.

``வரவேண்டும்... வரவேண்டும்... ஸ்ரீஉபய வேதாந்த தேசிக ஸ்வாமிகளே, வரவேண்டும். தங்களின் திருப்பாதங்கள் இந்த மண்ணில் பட்டிட, நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்'' என்றார் புண்டரீகாட்சன்.

``மிக்க மகிழ்ச்சி! தாங்கள் யாரென்று நான் அறியலாமா?''

``நான் ஒரு பரம வைணவன். ஸ்ரீராமாநுஜ மகாத்மாவால் ஆட்கொள்ளப் பட்ட குலத்தில் வந்தவன். என் பெயர் புண்டரீகாட்சன்.''

``அப்படியா? இந்த எண்ணாயிரம்தானே அவரது கருணை மற்றும் வாதப் பிரதிவாதத்துக்குக் கட்டியம் கூறிய ஊர்?''

``ஆம்! நீங்கள் வந்த அதே வழியில்தான் காஞ்சியிலிருந்து அவரும் வந்தார். திருவரங்கம் தான் அவருக்கும் இலக்கு. நாங்கள்... அதாவது எங்கள் பாட்டன்மார்கள் அப்போது இம்மண்ணில் சமணர்களாய் இருந்தோம். நாங்கள் ஒருவர் இருவர் அல்ல... எண்ணாயிரம்பேர் அப்படி இருந்தோம். எங்களை தனது விசிஷ்டாத்வைத சித்தாந் தத்தால் ஆட்கொண்டு, சமணச் சார்பு வாதங் களையும் தவிடுபொடியாக்கிக் காட்டினார் ராமாநுஜர்.''

``உண்மை. அந்த வரலாற்றை நானும் அறிவேன். வாதப் பிரதிவாதத்தில் தோற்றால் அவ்வளவு பேரும் கழுவில் ஏறிட வேண்டும். அதற்கேற்ப, தோற்றுப்போன உங்கள் முன்னோர்களும் கழுவில் ஏறிட தயாராகி விட்டனர். ஆனால் ராமாநுஜ கருணாகரர் அதைத் தடுத்து உங்களையெல்லாம் ஆட்கொண்டார்...''

``கழுவிலேற்றி அபானம் பிளந்து உயிர் போகச் செய்வதைப் பெரும் பாவமாகக் கருதியவர், எங்களுக்கெல்லாம் யாக்கை தந்து, வைணவத் தைப் பின்பற்றி கழுவாய் தேடிக்கொள்ளச் செய்தார். தானே ஆசார்யனாக நின்று பூணூல் தரிக்கச் செய்து, எங்களுக்கு ரகஸ்யார்த்த மந்திர உபதேசத்தையும் செய்வித்தார்.

அன்று அப்படித் தழுவியவர்கள் வரிசையில் நான் இன்று நான்காம் தலைமுறையினன். மௌரியப் பேரரசனான சந்திரகுப்த மௌரியரின் ஆட்சியில், வடக்கில் வாழ்ந்த என் முன்னோர் இப்போது அஷ்டசகஸ்ரம் என்னும் பிரிவினராய் இங்கே அடையாளம் கொண்டிருக்கிறோம். இது எங்களுக்கான சுருக்கமான வரலாறு'' என்றார் புண்டரீகாட்சன்.

அந்த வரலாற்றைக் கேள்வியுற்ற நிலையில், நேரிலேயே கேட்கவும் பார்க்கவும் நேர்ந்த மகிழ்வுடன் “இம்மண் மீது நான் நிற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்” என்றார் வேதாந்த தேசிகன்!

அவ்வாறு அவர் நெகிழ்ந்த நொடியில், ``தங்களின் யாத்திரை நோக்கை நாங்கள் அறிய லாமா?'' என்று கேட்டார் புண்டரீகாட்சன்.

``திருவரங்கம் நோக்கி சென்றபடி இருக் கிறேன். வழியில் இத்திருமண்ணைத் தீண்டும் பாக்கியம் வாய்த்தது''

``அப்படியாயின் தங்கள் திருவடிகள் எங்கள் இல்லத் தில் படவேண்டும். தங்களுக்கு அமுது படைக்கும் பாக்கியத்தை எங்களுக்கு அருளவேண்டும்.''

``மன்னிக்கவேண்டும். மிலேச்ச பயத்தால் திருவரங் கத்தில் மிக மோசமான நிலை. ஸ்ரீபிள்ளை லோகாசார்யர் என் வருகையை உத்தேசித்துக் காத்துக் கொண்டிருக்கிறார்.''

``புரிகிறது... அதன் எதிரொலிகளை நாங்கள் இங்கும் உணர்கிறோம். தங்கள் விருப்பப்படியே தங்களின் பயணம் தொடரட்டும். அதேநேரம், எண்ணாயிர வருக்கும் யாக்கையை வழங்கிய ராமாநுஜரின் திருமண்பாடு என்னுமிடத்தைத் தாங்கள் கண்டு செல்ல வேண்டும்.''

``அதற்கென்ன... இப்போதே வருகிறேன். அப்படியே இந்த க்ஷேத்திரத்து நரசிங்கப் பெருமாளையும் வழிபட விரும்புகிறேன். வழி காண முடியாத இடங்களிலும் வழிகண்டது நரசிம்மம். அந்த நரசிம்மம் இப்போது வழிகாட்டட்டும்'' என்ற தேசிகன் ஸ்ரீபுண்டரீகாட்சனோடு திருமண்பாடு என்கிற அந்த இடத்துக்குச் சென்றார்

ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிற்கும் ஓர் அரச மரம். அதன் கீழே ஒரு கல் மேடை. அந்த மேடை முகப்பில் பெரிதாக திருமண் காப்பு சாற்றப்பட்டு, இருபுறமும் சங்கும் சக்கரமும் வரையப்பட்டிருந்தன. மேடைமேல் ராமாநுஜராக அவரின் பாதரட்சைகள் இருக்க, அவற்றுக்கு வழிபாடு நடத்தப்பட்டிருந்தது. அருகில் இரு அகல் விளக்குகள் செங்கல் மாடங்களுக்குள் நந்தா விளக்கு போல் எரிந்துகொண்டிருந்தன.

அந்தப் பாதரட்சைகளைப் பார்த்தமாத்திரத்தில் தேசிகனின் விழிகள் ஆனந்த பாஷ்யத்தைச் சொரியத் தொடங்கின. மானசீகமாய் அங்கே ராமாநுஜர் தன் பூத உடலோடு தோன்றி, தேசிகனை வாழ்த்துவது போலவும் ஓர் உணர்ச்சி ஏற்பட்டு அடங்கியது.

``இங்கே இந்தக் கல் மேடை மேல் அமர்ந்தே, எங்கள் முன்னோர்களை ஆட்கொண்டார் ராமாநுஜர். இதோ எதிரில் உள்ள இந்த இடத்தில்தான் நாங்கள் எண்ணாயிரவரும் அவரால் யாக்கை பெற்றோம். தெளிவாகச் சொல்லப்போனால் இன்னொரு ஜன்மம் உற்றோம். தெளிவில்லாத குழப்பமான வழியில் சென்றபடி இருந்த எங்களுக்கு மறுவாழ்வும் நித்திய வெளிச்சமும் சித்தித்தது இங்கேதான்'' என்று புண்டரீகாட்சன் சொல்லச் சொல்ல தேசிகன் உணர்ச்சிப் பிரவாகத்துக்கு ஆளானார்!

அந்த இடம் குறித்து விளக்கமளித்த ஸ்ரீபுண்டரீகாட்சன் ஸ்வாமி, ``அப்போதைய இருளிலிருந்து எங்களை ராமாநுஜர் ஆட்கொண்டார். அதுபோல், இப்போது வரும் இருளிலிருந்து எம்மை மட்டுமல்ல, எல்லோரை யும் ஆட்கொள்ள நீர் வந்திருப்பதாய் நாங்கள் கருதுகிறோம்'' என்று கூறவும், அவரின் திருக் கரங்ளைப்பற்றி கண்களில் ஒற்றிக்கொண்டார் தேசிகன்.

``காரணமில்லாமல் காரியங்களில்லை. காரண காரியங்கள் தெரிந்துவிட்டால் வருத்தங்கள் இல்லை. வாழும்நாள்களின் பயனாவது, அன்றைய கடமைகளை எப்படி செய்கிறோம் என்பதில்தான் உள்ளது. இம்மட்டில் அவனே கடமைகளை அளித்து அவற்றைச் செய்விக்கும் சக்தியையும் அளித்து வழிநடத்துகிறான்... இனியும் நடத்துவான். கவலையோ, கலக்கமோ வேண்டாம். நாம் நம் கொள்கையில் உறுதியாக இருப்போம். எவ்வளவு நாளைக்குத்தான் இனிப்பையே சாப்பிட்டுக் கொண்டிருப்பது. சிறிது கசப்பும் தேவைதான். அதீத இனிப்பிற்கான மருந்தே கசப்புதான். அம்மட்டில் இப்போது நடப்பது மருந்துக்கான மருந்து காலம்''

என்று வியாக்கியானம் அளித்த தேசிகன், அதன்பின் அனைவரையும் ஆசீர்வதித்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டார். சிறிது தூரத்திலேயே, வழியில் அநேக யானைகள் ரதச் சாலையின் மேல் நின்று கொண்டு பிளிறிக் கொண்டிருந்தன. கிருஷ்ண பாண்டன் ரதத்தை உடனேயே தேக்கி நிறுத்தி, சற்று அச்சத்தை எதிரொலித்தான். யானைகளும் கடிதுப் பிளிறி முழக்கமிட்டன.

``என்ன கிருஷ்ணபாண்டா... கஜப் படை அச்சுறுத்துகிறதா?''

``ஆம் சுவாமி! அவற்றின் முழக்கத்தைக் கேட்டால், மதக் கஜங்களோ என்று கருதத் தோன்றுகிறது.''

``உண்மையான மதக் கஜங்களை நாம் இனிதான் சந்திக்கப் போகிறோம். இவை பாவம். கவலைப்படாதே! அந்த நரசிம்மனை இப்போது துதித்திட, இவை தானாக விலகி வழிவிடும் பார்...'' - என்ற தேசிகன் ஸ்ரீநரசிம்ம ஸ்துதியை புரிந்திட யானைகள் விலகி வழிவிட்டன.

கிருஷ்ணபாண்டனும் ``ஆறறிவு இல்லாத இவையே தங்களின் பக்திக்குக் கட்டுப்பட்டு விலகிவிட்டன. அதேபோல், ஆறறிவு கொண்ட அந்த மத யானைகளும் அவ்வாறே நடந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?'' என்று கேட்டான்.

ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்



தேசிகன் புன்னகைத்தபடி கூறினார்...

``இந்த யானைகளுக்குத் தற்செருக்கு கிடையாது. தான் யார் என்பதும் தெரியாது. ஆனால், அவர்கள் அப்படியல்ல. தான் என்னும் செருக்கும் தனக்கென்று பிரத்யேக போக்கும் கொண்டவர்கள். ஆகையால் அவர்களோடு இந்த யானைகளை ஒப்பிடாதே!''

``அப்படியானால், அவர்கள் மிக ஆபத்தான வர்கள் என்பதுதானே உண்மை?''

``அதில் என்ன சந்தேகம் கிருஷ்ண பாண்டா?''

``நாம் எப்படி சுவாமி அவர்களை வெற்றிக் கொள்ளப் போகிறோம்?''

``எதற்கு இந்த கலக்கம்?''

``கலங்காது இருக்க முடியவில்லையே..?''

``அப்படியானால், நீ எம்பெருமானிடம் முழுமையான சரணாகதி புரியவில்லை என்று பொருள்.''

``இது என்ன பதில் சுவாமி?''

``இதுவே பதில்... சரணாகதி புரிந்தவர்கள், தங்களின் அன்றாட கடமைகளைச் செய்தபடி சென்றால் போதும். மற்றதை அவன் பார்த்துக் கொள்வான்.''

தேசிகன், கிருஷ்ண பாண்டனுக்கு அளித்த விளக்கம் அவனுக்கானது மட்டுமல்ல; அது எல்லோருக்குமான ஒன்றாகத்தான் இருந்தது.

தேசிகனின் ரதம் விரைவில் கஜப் படையின் தடையைக் கடந்து திருவரங்க பாதையில் செல்லத் தொடங்கியது. கிருஷ்ண பாண்டன் ரதத்தை செலுத்திக்கொண்டே, ``சுவாமி! எனக்குள் இன்னமும் பல கேள்விகள் விடை தெரியாது உள்ளன. தங்களிடம் நான் அவற்றைக் கேட்கலாமா?'' என்று கேட்டான்.

``தாராளமாய் கேள்... எப்போதும் பயணத்தின் போதுதான் மனது கூர்மை கொள்ளும்...''

``நாம் வசிக்கும் காஞ்சியும் திருவரங்கம் போல் ஒரு தலம்தானே? காஞ்சிக்கு எந்த பாதகமும் வராதா? திருவரங்கத்தின் மீது மட்டும் ஏன் இவ்வளவு கரிசனம் தங்களுக்கு?''

திருவரங்கம்
திருவரங்கம்



கிருஷ்ணபாண்டன் அப்படிக் கேட்ட போதிலும் அதை அவன் கேட்டதாகவே தேசிகன் கருதவில்லை. அந்தக் காஞ்சியம்பதி பேரருளாளனே கிருஷ்ணபாண்டன் வடிவில் கேட்டதாகக் கருதினார். அக்கேள்வி முன் சற்றே மந்தகாசமாய்ப் புன்னகைத்தவர், தொடர்ந்து பதில் சொன்னார்:

``கிருஷ்ண பாண்டா இக்கேள்வியை நீ கேட்க வில்லை உன் மூலம் அந்த வரதனே கேட்கிறான். பரவாயில்லை... நான் உணர்ந்திருப்பதை உரைப்பதற்கு இது ஒரு சந்தர்ப்பம்.

எங்கும் அவன் இருக்கிறான். அவன் இல்லாத இடம்தான் ஏது? அவனது பரந்துவிரிந்த தன்மையை நம்மாழ்வார் எப்படி யெல்லாம் அனுபவித்து இருக்கிறார் தெரியுமா?

`மாயா வாமனனே மதுசூதா நீயருள்வாய்.

தீயாய், நீராய், நிலனாய், விசும்பாய், காலாய்,

தாயாய், தந்தையாய், மக்களாய், மற்றுமாய்,

முற்றுமாய், நீயாய் நீ நின்ற வாறிவை

யென்ன நியாயங்களே' என்கிற அவரின் திருவாய்மொழிப் பாசுர வரிகள்தான் இப்போது என் நினைவுக்கு வருகின்றன.

எங்கும் அவன் வியாபித்திருந்தாலும், பசுவின் உடலில் உள்ள அதன் பால் மடிக் காம்புகள் வழியாக வெளிப்படுவது போல, அவனது பேரருள் திருவரங்கம், காஞ்சி, திருமலை திருவஹீந்திரபுரம் என்று தலங்கள் வழியாக வெளிப்படுகிறது. இவற்றில் திருவரங்கம் இதயம் போன்றது...''

தேசிகனின் விளக்க உரையாடல் தொடர்ந்தது.

- தொடரும்...

`கழுதை தந்த பாடம்!'

கழுதை தந்த பாடம்
கழுதை தந்த பாடம்
Therd oval



ஞானி ஒருவரிடம் அவரின் சீடன், ‘‘குருவே... நீங்கள் இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில் சோர்வோ அடைவதில்லை. இரண்டையும் சமமாக பாவிக்கும் பண்பு, உங்களுக்கு எப்படி வந்தது?’’ என்று கேட்டான்.

‘‘கழுதையிடமிருந்துதான்’’ என்றார் ஞானி.

‘‘என்னது... கழுதையிடம் இருந்தா?’’ என்று சீடர்கள் வியந்தனர்.

‘‘ஆமாம், கழுதையிடமிருந்துதான். காலையிலும், மாலையிலும் வீதி வழியே செல்லும் கழுதையை நீங்கள் பார்த்ததில்லையா? காலையில் அழுக்கு உடைகளை சுமந்து செல்லும் கழுதை, அதற்காக வருத்தம் கொள்வதில்லை. மாலையில் வெளுத்த துணிகளைச் சுமந்தபடி திரும்பும். அப்போதும் அது, ‘தூய்மையான துணிகளைச் சுமந்து வருகிறோம்’ என்று மகிழ்ச்சி அடைவதில்லை. இதைப் பார்த்துதான் இத்தகைய ஒரு பண்பை நான் கற்றுக் கொண்டேன்!’’ என்றார் அந்த ஞானி.

- உமா ராணி, கிருஷ்ணகிரி

ஆசையின் விளைவு அவஸ்தையே!

கபீர்தாசர்
கபீர்தாசர்



`பேராசை பெருநஷ்டம்’ என்பதற்கு கபீர்தாசர் கூறிய விளக்கம்:

`தேனீ ஒன்று தேன் குடிப்பதைப் பார்த்துவிட்டு ஒரு சாதாரண ஈயும் தேன் ததும்பும் மலரின் மீது உட்கார்ந்தது. அதன் சிறு இறகு தேனில் ஒட்டிக் கொண்டது. அதிலிருந்து விடுபடுவதற்கு ஆன மட்டும் முயற்சி செய்தது ஈ. உருண்டது, புரண்டது. அதனால் அதன் சிறு உடலும், கால்களும் கூட ஒட்டிக் கொண்டன.

பாவம் ஈ! ஒரு துளி தேனுக்கு ஆசைப் பட்டு, அது தன் இன்னுயிரை இழந்தது.'

- எம்.கீர்த்தனா, பெங்களூரு