Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 82

இந்திரா செளந்தர்ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
இந்திரா செளந்தர்ராஜன்

திருவரங்க சரிதம்

ரங்க ராஜ்ஜியம் - 82

திருவரங்க சரிதம்

Published:Updated:
இந்திரா செளந்தர்ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
இந்திரா செளந்தர்ராஜன்

ஸ்ரீதேசிகன், பிள்ளைலோகாசார்யரின் இருப்பிடத்தை அடைந்ததும், தன் தள்ளாமையையும் பொருட்படுத்தாது வேகவேகமாக ``வரவேண்டும் வரவேண்டும்... எம்பெருமானாரின் செல்லப்பிள்ளை வரவேண்டும்... திருமலை தந்த திவ்யதேவர் வரவேண்டும்...’’ என்று வாயார வரவேற்றார் பிள்ளை லோகாசார்யர். அத்துடன் ஸ்ரீதேசிகரைப் பணியவும் முற்பட்டார்.

அவசரமாய் அவரைத் தடுத்த தேசிகன், “இது அபசாரம். தாங்கள் நான் வணங்கிடும் வரதாம்சம்” என்று கூறி வணங்கினார். அவ்வாறு அவர் வணங்கி எழுந்த கணத்தில், ஒரு விநாடிப் பொழுது அவருக்கு பிள்ளைலோகாசார்யர் காஞ்சிப் பேரருளாளனாகவே காட்சி தந்தார். அல்லல் காலத்தில் ஓர் அருட்காட்சியாக அதை உணர்ந்த தேசிகன், அடுத்துச் சென்று வணங்கியது ஸ்ரீகாட்டழகிய சிங்கப் பெருமானைத்தான். பிறகு வைணவ தாசர்கள் புடைசூழ, பிள்ளை லோகாசார்யரின் எதிரில் அமர்ந்தார். அவர்களிடையே உரையாடல் ஆரம்பமானது.

முன்னதாக சிரமப் பரிகாரத்தின் பொருட்டு பானகமும் தேங்காய்ப்பூ வெல்லமும், மலைவாழைப் பழங்களுடன் வழங்கப்பட்டன. அவை ஸ்ரீகாட்டழகிய சிங்கருக்கான நிவேதனப் பிரசாதமாகும். பிரசாதத்தை உண்டு முடித்த நிலையில் பிள்ளை லோகாசார்யர் பயணம் குறித்து வினவினார். ``எம்பெருமானின் கருணையினால் யாதொரு தடையுமில்லை’’ என்றார் தேசிகன்.

``மற்றபடி எல்லோரும் நலம்தானே?’’ என்று தேசிகன் கேட்டிட, எல்லோரிடமும் ஒரு வகை அமைதி.

``புரிகிறது... உங்களின் மெளனமே பதிலாகிவிட்டது. நாம் நலமற்ற நிலையில் இருந்தாலும் நம் மனத்தை அவ்வாறு எண்ண விடக்கூடாது’’ என்றார் தேசிகன்.

``உங்கள் பக்குவம் எங்களுக்கில்லை சுவாமி’’ என்றனர்.

``இப்போதைய திருவரங்க நிலைப்பாடு என்ன... அதைச் சொல்வீர்களா?’’

``டெல்லி சுல்தானின் பிடிக்குள் சீராப்பள்ளி மலைக்கோட்டை வந்துவிட்டது. அங்குள்ள தாயுமானவர் சந்நிதி ஆயுதக் கிடங்காகிவிட்டது. தற்போது சில நூறுபேர்தான் உள்ளனர். ஆனால் இருபதாயிரம் பேர் கொண்ட ஒரு பெரும்படை வந்து கொண்டிருப்பதாக தகவல். அவர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் ஆலயங்களை இடித்து அழிப்பதை மட்டுமே தங்கள் செயலாகக் கொண்டவர்களாம்.

அப்படியே ஆலயச் செல்வங்களைக் கொள்ளையடித்து மூட்டை கட்டிக்கொண்டு போய், சுல்தான் முன் காட்டி நல்ல பெயர் பெற்று விடுவார்களாம். இப்படி அவர்கள் சீரழித்த ஆலயங்கள் பல! அப்போது கொன்று குவிக்கப்பட்ட பக்தர்கள் எண்ணிக்கைக்கும் ஓர் அளவில்லையாம்...’’ என்று வைணவ தாசர்கள் விவரம் பகிர்ந்தனர்.

ரங்கநாதர்
ரங்கநாதர்


அவர்களே மேலும் தொடர்ந்தனர்...

``சிராப்பள்ளியில்தான் இப்படி ஒரு நிலை. ஆனால் துக்ளக் எனப்படும் சுல்தானின் படையை, மதுரை சுந்தரபாண்டியன் அடக்கிப் புறமுதுகு காட்டி ஓடச் செய்துவிட்டார். அந்த யுத்தத்தில் அவர் தன் உயிரையும் இழந்துவிட்டார். வரலாறு இந்த 1323-ம் ஆண்டை ஒருபுறம் வெற்றி; மறுபுறம் தோல்வி என்று பதிவு செய்துகொள்ளும். இந்த இக்கட்டான தருணத் தில் ஆறுதலான ஒரு நல்ல விஷயமும் உண்டு. மதுரை சுந்தர பாண்டியனின் வாரிசான பராக்கிரமப் பாண்டியனுக்கு இப்போது பத்து வயதுதான் ஆகிறது. ராஜ்ஜியத்தை நிர்வகிக் கும் வயதோ ஆற்றலோ இல்லை. இந்த நிலையில் சுந்தர பாண்டியனின் ஆசார்யரும் பரம வைணவருமான திருமலை ஆழ்வார்தான் பராக்கிரமனின் அருகில் இருந்து வழிநடத்து கிறார். அதாவது இப்போதைக்கு திருமலை ஆழ்வாரே மதுரையின் மாமன்னர்.

என்ன ஒரு விசித்திரம்!

இங்கே சோழமண்டலம் மிலேச்சனுக்கு அடிமைப்பட்டு இங்குள்ள ஆசார்யர்கள் ஓடி ஒளியும் நிலை. ஆனால், மதுரையிலோ ஆட்சி புரியும் நிலை... இதை என்னவென்பது?’’

ஒருவர் இப்படிக் கூறி முடிக்க அடுத்தடுத்து வேறு சில அன்பர் களும் தொடர்ந்து பேசினர்.

``இப்படிப் பேசிக்கொண்டிருந் தால் அதற்கு முடிவிருக்காது. 20,000 பேர் கொண்ட மிலேச்சர் கொள்ளைப் படை திருவரங் கத்தை இன்னும் சில தினங்களில் அடைந்துவிடக் கூடும். இந்த வேளையில் நாம் செய்ய வேண்டி யது குறித்தே எண்ணவேண்டும்.’’

``ஆம்.. அதுபற்றி ஒரு முடிவுக்கு வருவோம். எம்பெருமானின் உற்சவர் திருமேனி, பெருமாட்டி யின் உற்சவத் திருமேனி மற்றும் சாளக்கிராமப் பூஜைப் பொருள் களைப் பாதுகாப்பாய் ஒரு பெட்டியில் வைத்து மிலேச்சன் பார்வையில் பட்டுவிடாதபடி நாம் எங்காவது கொண்டு சென்றுவிட வேண்டும். இது முதல் செயல்பாடு.

எக்காரணம் கொண்டும் எம்பெருமானுக்கான நித்திய பூசைகள் நின்றுவிடாது தொடர்ந்திட ஆவண செய்ய வேண்டும். இது அடுத்த செயல்பாடு. எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் ஆலயத்தில் சயன நிலையில் இருக்கும் மூல விக்கிரகத்தை மிலேச்சன் நெருங்கிவிடாதபடி காவல் காத்திட வேண்டும். அந்தப் பணிக்காக உயிரை இழக்க நேர்ந்தால், அதை உவகையுடன் ஏற்றிட வேண்டும். அவ்வாறு மரிப்போருக்கு எம்பெருமானின் திருவடி நிழலில் இடம் நிச்சயம்.’’

இங்ஙனம் எல்லோரும் தங்கள் கருத்துக்களைச் சொல்லி முடித்த நிலையில், தேசிகன் திருவாய் மலரலானார்.

``தாசர்களே! இதைவிட பதற்றமான தருணங்கள் நம் முன்னோர் வாழ்வில் வந்து சென்றுள்ளன. கம்சன் மற்றும் நரகாசுரனால் நம் முன்னோர் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். அரசர் பெருமக்களை எல்லாம் சிறைப்படுத்திக் கசையடி கொடுத்து அவர்கள் அழுவதைக் கண்டு இன்புற்றான் நரகாசுரன். இந்நிலையில்தான் நம்பெருமான் கிருஷ்ணனாக பாமாதேவியுடன் சென்று அவனை சம்ஹாரம் செய்தார்.

ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்


அதனால் தீபாவளி என்கிற ஒரு திருநாளும் நமக்கெல்லாம் கிடைத்தது. ஒரு பெரும் கொடூரம், பின்னர் பெரும் மகிழ்ச்சி யைத் தரும் ஒளி மிகுந்த நாளாகியது. அதுபோல், இப்போது நாம் சந்திக்கும் துன்பங்களும் பின்னாளில் பெரும் இன்பத் திற்குக் காரணமாகும். நாம் நம் கடமையை நம்பிக்கையோடு செய்வோம்’’ என்று தேசிகன் கூறிட, எல்லோருக்கும் அவரின் பேச்சு ஆறுதலாய் அமைந்தது.

பின்னர் தேசிகன் உரியோர் துணையுடன் திருவரங்க ஆலயத் தினுள் சென்று, அங்கு எழுப்பப்பட்டிருக்கும் சுவரின் சிறு துவார திட்டி வாசல் வழியே உள்ளே நுழைந்து, மூலவரைக் கண்குளிர வணங்கினார். அவர் வெளியே வரவும் அந்தத் துவாரமும் அடைக்கப் பட்டது. தொடர்ந்து அந்தச் சுவருக்குமுன் ஒரு மேடை அமைக்கப்பட்டு, அதன்மீது களி மண்ணால் செய்யப்பட்ட அரங்கனின் கொலுப் பொம்மை போன்ற உருவம் வைக்கப்பட்டு, அதுவே திருச்சந்நிதி எனும்படி செய்யப்பட்டது.

தேசிகன் ஆசிரமத்திற்குத் திரும்பியதும் பிள்ளை லோகாசார்யர் தான் எழுதிய `அஷ்ட தச ரகசியம்’ என்று வைணவர்களால் அழைக்கப்படும் 18 நூல் ஏட்டுக் கட்டுகளைத் தந்தார். அவற்றில் தத்வத்ரயம், முமூக்சுப்படி வசனபூஷணம், அர்த்த பஞ்சகம், நவரத்னமாலை, நவவித சம்பந்தம் என்று பலப் பல தலைப்புகளில் எம்பெருமானுக்கான துதிகள் அடங்கியிருந்தன.

அவற்றை தேசிகரிடம் ஒப்படைத்த பிள்ளை லோகாசார்யர் ``தேசிகரே! நீரே இந்நூல்கள் அழிந்திடாது காத்திட வேண்டும். நான் முதிர் நிலையில் இருக்கிறேன். எப்போது வேண்டுமானால் நான் பரமபதிக்கலாம். இதன் மதிப்பறிந்து காத்திட உம்மாலேயே முடியும். நாளை இந்த ஊரேகூட மிலேச்சரால் எரியூட்டப்படலாம். இலங்கைக்கு நேர்ந்த நிலை இந்தத் திருவரங்கத்துக்கு நேராது என்று சொல்வதற்கில்லை. எனவே இவற்றை இப்போதே ஒப்படைக்கிறேன்...’’ என்றார்.

பின்னர், சுதர்சனசூரி என்ற தன் அறத் தொண்டர் ஒருவரை தேசிகரின் முன் நிறுத்தி, ``இந்தச் சுதர்சனசூரி உமக்கு பெரும் துணையாக இருப்பான். நீங்கள் எனக்கு உதவ வேண்டியது ஒரு விஷயத்தில்தான். நானும் என் கோஷ்டியாரும் அரங்கனின் உற்சவ மூர்த்தி சிலைகளோடும் உபய நாச்சிமார் சிலைகளோடும் இந்தத் திருவரங்கத்தைவிட்டுச் செல்ல தீர்மானித்துவிட்டோம்.

இப்போதைக்கு மதுரைக்குச் சென்றால், அங்குள்ள திருமலை ஆழ்வாரால் பாதுகாப்பு கிடைக்கும் என்று தோன்றுகிறது. ஆகவே இன்று இரவே நானும் என் குழுவினரும் திருவரங்கத்தை விட்டு மதுரை நோக்கிப் புறப்பட சித்தம் கொண்டுள்ளோம். எமது பயணம் யாதொரு தடையுமின்றி வெற்றிப் பயணமாகத் திகழ தாங்கள் ஆசீர்வதிக்க வேண்டும்’’ என்றார்.

தேசிகன் அந்த ஏடுகளைக் கண்களில் ஒற்றிக்கொண்டு, பின்னர் அவற்றைச் சுதர்சன சூரி வசம் தந்துவிட்டுப் பேசலானார்.

``ஆசார்ய புருஷரே... சதம் கடந்தது உங்கள் முதுமை. ஆயினும் தாங்கள் எம்பெருமான் பொருட்டு ஆற்றும் தொண்டு பிரமிப்பிற்குரியது. தங்கள் எண்ணப்படியே தாங்கள் புறப்படுங்கள்.

அஞ்சி ஓடுவதாகக் கருதாதீர்கள். அரங்கத் திருமேனி ஊர் உலா செல்வதாகக் கருதுங்கள். அரங்கன் இருக்கும் இடமே திருவரங்கம். அப்படிப் பார்த்தால் அரங்கன் உம்மோடு பயணிக்கும் இடங்கள் எல்லாம் திருவரங்கம் ஆகப்போகின்றன. திருவரங்கத்துக்குத் தேடி வந்து வணங்க வழியற்றவர்களைத் தேடி அந்த அரங்கனே செல்வதாக இந்தப் பயணத்தைக் கருதலாம். என்னைப் பற்றி கவலை வேண்டாம். தங்களைப் பற்றிய கவலையும் எவருக்கும் வேண்டாம். அரங்கன் நமக்கு பல வகையில் துணை வருவான்...’’ என்று வாழ்த்தி அருளினார்.

அன்று இரவில் அரங்கனின் உற்சவ மூர்த்தம் மரப்பெட்டிக்குள் அடங்கிய நிலையில், பஞ்சு மூட்டைகள் அடுக்கப்பட்ட ஒரு மாட்டு வண்டியின் நடுவில் வைக்கப்பட்டு, மதுரையை நோக்கிப் புறப்பட்டது. எம்பெருமானின் நகைநட்டுகள் திருவரங்கத்திலேயே சுதர்சனசூரியால் ரகசியமாய் ஓர் இடத்தில் வைக்கப்பட்டன.

அந்த முயற்சிக்கு சுதர்சன சூரியின் புதல்வர்களான மாலோலனும் அனந்தனும் துணை நின்றனர். மொத்தத்தில் ஆலயத்தில் வழிபாட்டுக்குரிய சகலமும் அகற்றப்பட்டன. வரலாற்றில், பூஜைகளற்ற மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு கதியைத் திருவரங்க ஆலயம் அன்று கண்டது. இதை அறியாமல் ஆலயத்தையே இடித்துத் தரைமட்டமாக்கிவிடும் வெறியோடு திருவரங்கம் நோக்கி வந்த வண்ணம் இருந்தது மிலேச்சப் படை.

தேசிகனும் பிள்ளை லோகாசார்யரின் அஷ்டதச நூல்களுடன் சுதர்சன சூரியின் பிள்ளை களான மாலோலனுடனும் ஆனந்தனு டனும் புறப்படத் தயாரானார்.

ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை என்பதுபோல், மிலேச்சப் படை திருவரங்கத் தைச் சுற்றி வளைத்து நின்றது. இந்நிலையில் பிள்ளை லோகாசார்யரின் மதுரை நோக்கிய பயணத்திலும் சில இடையூறுகள்!

கி.பி.1323-ம் ஆண்டின் தொடக்கமே இதுபோல் பெரும் சோதனைகளைக் கொண் டிருந்த நிலையில், பல ஆச்சரியங்களும் காத்திருந்தன!

அந்த ஆச்சரியங்கள், அதிசயங்கள், இதற்குப் பிறகான வரலாற்றுடன் மந் நாதமுனிகள் உள்ளிட்ட பலரின் செயல்பாடுகளை நாம் ரங்க ராஜ்ஜியம் இரண்டாம் பாகத்தில் காணலாம்.

(முதலாம் பாகம் நிறைவுற்றது!)

ஆலயங்கள் அற்புதங்கள்!

ஆலயங்கள் அற்புதங்கள்
ஆலயங்கள் அற்புதங்கள்


நான்கு முகங்கள் கொண்ட லிங்கத் திருவுருவை திருவதிகைக் கோயிலின் திருச்சுற்றில் காணலாம்.

திருமோகூர் தலத்தில் ஆதிசேஷனுக்குத் தங்கக் கவசம் சாத்தப்படுகிறது.

திருக்கோட்டியூர் நாச்சியாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் என்று மூன்று திருப்பெயர்கள் உண்டு.

மயிலாடுதுறை வள்ளலார் கோயிலிலும் சேத்தமங்கலம் ஆபத்சகாயேஸ்வர்ரர் கோயிலிலும், தட்சிணாமூர்த்தி காளையுடன் தரிசனம் தருகிறார்.

குழந்தை வடிவில் யாதவ குலத்துப் பாலகனாக வலக் கையில் மத்தும் இடக் கையில் கயிறும் ஏந்தி கண்ணன் அருள்வது உடுப்பியில் மட்டும்தான்!

- சு.இலக்குமணசுவாமி,

திருநகர்