Published:Updated:

ரங்க ராஜ்ஜியம்

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம்

ரங்க ராஜ்ஜியம்

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம்

Published:Updated:
ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

தென்னரங்கர் மைந்தனென சிறக்க வந்தோன் வாழியே!

திருநெடுந்தாண்டகப் பொருளை செப்புமவன் வாழியே!

அன்னவயல் பூதூரனடி பணிந்தோன் வாழியே!

அநவரதமும் எம்பாருக் காட்செய்வோன் வாழியே!

மன்னு திருக்கூரனார் வளமுரைப்போன் வாழியே!

வைகாசியனுடத்தில் வந்துதித்தான் வாழியே! பன்னுகலை நால் வேதப் பயன் தெரிவோன் வாழியே!

பராசரனாம் சீர்பட்டர் பாருலகில் வாழியே!


- ஓராண்வழி ஆசார்யர்கள் வாழித் திருநாமத்திலிருந்து...

தன் சிஷ்யர்களுக்கு அறிவுரை வழங்கிய நிலையில், எம்பார் எனும் சீடரின் மடியிலே தலை வைத்தும் வடுக நம்பியின் சிரத்தில் கால்களை இருத்தியும், திருவரங்கனையும் காஞ்சிப் பேரருளாளனையும் எண்ணியபடியே தன் இன்னுயிர் பிரிந்து, வைகுண்டம் ஏகிட திருநாடு அலங்கரித்தார் ராமாநுஜர்.

அதன்பின் சூழலே துக்கத்தில் இறுகிப் போனது. ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே தேறுதல் கூறிக்கொண்டு திருவரங்க ஆலய எல்லைக்குள்ளாகவே ராமாநுஜரை பள்ளிப்படுத்தத் தயாராயினர்.

அதன் பொருட்டு ஒரு பீடயாநமான ஒரு விமானம் செய்யப்பட்டு, அதில் ராமாநுஜர் அமர்ந்த கோலத்தில் வீற்றுவிக்கப்பட்டு, பள்ளிதா தளத்துக்கு அவரைச் சுமந்து சென்றனர். வில்லிபுத்தூர் ஜீயர் மற்றும் யதிவர ஜீயர் உள்ளிட்ட எழுநூறு பெருமக்கள்... ப்ரம்ம வல்லி, ப்ருகுவல்லி, நாராயணநுவாகம் முதலான உபநிஷத்துக்களை ஓதிய நிலையில், பராசரபட்டர், கந்தாடையாண்டான், நடாதுராழ்வான் உள்ளிட்டோர் பள்ளிப் படுத்தும் நிகழ்வுக்கான சாதனங்களுடன் உடன் சென்றனர்.

இந்த நிகழ்வில் உபவீதாரிகளான வைஷ்ணவர்கள் ஒன்பதாயிரம் பேருடன் தத்பாவரான வைஷ்ணவர்கள் பன்னிரெண்டாயிரம் பேரும் உடன் சென்றதாகக் கோயிலொழுகு விவரிக்கிறது. வடுக நம்பியும், கோ மடத்துச் சிறியாழ்வானும் உடையவர் ப்ரபத்தியை அனுசந்தித்துக் கொண்டு வர, திருவீதியெங்கும் பொரியும், புஷ்பமும் சிதறிட, நடை பாவாடை யிட்டு, கரும்பும், குடமும் ஏந்திய சுமங்கலிப் பெண்டிர் மங்கல தீபம் ஏந்தி முன் சென்றனர்.

ஶ்ரீராமாநுஜர்
ஶ்ரீராமாநுஜர்

திருவரங்கத் திருவீதிதோறும் ஶ்ரீராமாநுஜ விமானம் பயணித்துப் பின் இறுதியாக அது திருவரங்கத்துத் தென்கிழக்கு ஆலய பாகத்தில் பள்ளிப்படுத்தப்படும் இடத்தை அடைந்தது.

ஆழ்வார் திருமேனிகளை எவ்வண்ணமாக பள்ளிப்படுத்தினரோ, அதேபோல் ராமாநு ஜரின் திருமேனியும் பள்ளிப்படுத்தப்பட்டது. பூமிக்குள் அவரை அமர்ந்த கோலத்தில் ஐக்கியப்படுத்திய பின், மேலே அர்ச்சா ரூபமாகிய திருமேனியைக் கந்தாடை ஆண்டான் பின்னர் எழுந்தருளச் செய்தார். இந்தத் திருமேனியைத்தான் `தானான திருமேனி' என்றழைக்கின்றனர்.

இந்த `தானான திருமேனி' இயற்கையான மெழுகுகள் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் அச்சு அசலாய் நகங்கள் பொருத்தப்பட்டன. ஒரு விக்ரகம் என்பது ஐந்துவிதமானது. சாளக்கிராம திருமேனி, சுதை திருமேனி, வண்ணம் கலாபம், தாதுவால் ஆன மேனி, மெழுகால் ஆன திருமேனி என்பதே அவை.

திருவல்லிக்கேணி, தேரழுந்தூர் போன்ற திவ்யதேசங்களில் பெருமாளின் மூலவர் சாளக்கிராமத் திருமேனி; அதாவது உயர்ந்த கற்களால் ஆனது. சுதைத் திருமேனிக்குத் திருவரங்கம், வண்ணக்கலாபத்திற்குத் திருத்தங்கல், திருக்குறுங்குடி, வில்லிபுத்தூர் போன்றவை உதாரணங்களாகும். மரத்தாலான தாதுவிற்குத் திருக் கோவிலூர் உதாரணம்.

இயற்கை மெழுகுக்கு உடையவரின் திருமேனியே சான்றாகும். இதில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ ஆகியவற்றாலான குழம்பு பூசப் பட்டுத் திருமேனி பாதுகாக்கப்படுகிறது.

திருவரங்க பிரம்மோற்சவத்தின்போது, நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். அப்போது உடையவரின் உற்சவத் திருமேனி, ஶ்ரீபாதம் தாங்கிகளால் தூக்கி வரப்பட்டு உடையவர் சந்நிதி முகப்பில் எழுந்தருளச் செய்யப்படுகிறது. அதன்பின் எம்பெருமான் திரும்புகையில், உடையவர் சிறிது தூரம் பின்தொடர்ந்து சென்று பெருமாளை வழியனுப்பிவிட்டுத் திரும்பி வருவார்.

பாரிவேட்டைக்காக எம்பெருமான் செல்லும்போதும் இவ்வாறான நிகழ்வு நடை பெறுகிறது. மார்கழி 30 நாளும் பெரியபெருமாள் பொங்கல் தளிகை கண்டருளிய பிறகு, பெரிய கோயில் அர்ச்சகர்கள் உடையவர் சந்நிதிக்கு எழுந்தருளி உடையவருக்குத் தளிகை சமர்ப்பிப் பார்கள். திருப்பாவை கோஷ்டியும் உடையவர் சந்நிதியில்தான் நடைபெறும்.

ஶ்ரீராமாநுஜரின் பூர்வ பெயர் இளையாழ் வான். சந்நியாச பட்டத்தின்போது பெற்ற பெயர் யதிராஜர். திருவரங்கச் சந்நிதியில் எம்பெருமான் கூவி அழைத்த பெயர் உடையவர். திருக்கோட்டியூர் நம்பியாலே ஏற்பட்ட நாமம் எம்பெருமானார்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் சூட்டிய பெயர் கோயிலண்ணன். சாரதா பீடத் தில் சரஸ்வதி சாற்றிய பெயர் ஶ்ரீபாஷ்யகாரர். நூறு சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்த பிறகு அதன் பெருமையால் பெற்ற பெயர் யதிராஜர்.பெரியநம்பி சாதித்த திருநாமம் ராமாநுஜர். இந்த ஏழு திருநாமங்களில் ஶ்ரீராமாநுஜன், உடையவர் ஆகிய பெயர் களுக்கே திருவரங்கத்தில் அருளப்பாடு சாதிக்கப்படுகிறது.

ஶ்ரீராமாநுஜர் பரமபதம் அடைந்துவிட்ட நிலையில், அவர் இடத்தில் ஒருவர் இருந்து அவர் விட்டுச்சென்ற கடமைகளைத் தொடர வேண்டும் அல்லவா? அந்தப் பொறுப்பு உடையவராகிய ஶ்ரீராமாநுஜர் வாழ்ந்த நாளிலேயே அவரால் அடையாளம் காட்டப் பெற்று  பராசர பட்டர் என்கிற பட்டர் பிரானிடம் ஒப்புவிக்கப்பட்டது.

ஶ்ரீராமாநுஜர்
ஶ்ரீராமாநுஜர்

ஶ்ரீபராசரபட்டர் ஶ்ரீராமாநுஜர் காட்டிய வழியில் ஶ்ரீவைஷ்ணவ நெறியைப் பரப்பிய தோடு திருவரங்க ஆலயத் திருப்பணிகளிலும் கவனமுடைவராகத் திகழ்ந்தார்.

ஶ்ரீராமாநுஜரின் கீர்த்தியை உலகறியும் விதமாக, அவர் வாழ்வில் பல சோதனைகளும் சாதனைகளும் நிகழ்ந்தது போல, பராசர பட்டர் வாழ்விலும் நிகழத் தொடங்கின.

ஶ்ரீராமாநுஜரின் காலத்திலேயே கர்நாடகத்து திருநாராயணபுரத்தில் மாதவசூரி என்று ஒரு அந்தணர், பெரும் ஆச்சார்ய புருஷராக விளங்கினார்.

இளமையில் இருந்தே பல ஆச்சார்யப் புருஷர்களிடம் அநேக சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவர் மாதவசூரி. அதனால் உண்டான ஞானத்தால் பல ராஜ சபைகளுக்குச் சென்று அங்குள்ள அறிஞர்களிடம் வாதம் செய்து, தம் திறமையைக் காட்டிப் பெரும் பரிசுகள் பெற்றார். அதனால் பெரும் செல்வந்தராகவும் திகழ்ந்தார். இவரை வேதாந்தி மாதவசூரி என்றே அப்போதுள்ள எல்லோரும் அழைத்தனர்.

ஆறுவகை சாஸ்திரங்களைக் கற்று, அவற்றில் கரைகண்டவராகத் திகழ்ந்த மாதவசூரி, தன் மடத்தில் அந்த ஆறு வகை சாஸ்திரத்துக்குமான ஆறு நாற்காலிகளைச் செய்துவைத்திருந்தார். அவற்றில் தான் ஒருவரே மாற்றி மாற்றி அமர்ந்துகொண்டு, தன்னை வாதத்தில் வெல்ல முடிந்தவர் ஒருவரும் கிடையாது என்கிற செருக்குடனும் விளங்கினார்.

ஶ்ரீராமாநுஜர் அவரைப் பற்றி அறிந்திருந்தார். அவரோடு வாதத்தில் ஈடுபட்டு அவரை வெல்ல உத்தேசிப்பது என்பது தனது ஸ்தானத் துக்கு உகந்ததல்ல என்று கருதியதால், அவரை அம்மட்டில் லட்சியம் செய்யவில்லை. ஆனால் தன் சீடர்களில் ஒருவர் அவருக்குப் பதில் சொல்லி அவர் செருக்கை அடக்க வேண்டும் என்று விரும்பினார்.

இந்த விருப்பத்தை, தான் ஸ்தூல உடலோடு இருந்த நாளிலேயே பராசரபட்டரிடம் சொல்லி ``நீ அந்த மாதவசூரியை வெற்றிக்கொள்ள வேண்டும். உன்னால் அவர் செருக்கு நீங்க வேண்டும் என்பதே என் விருப்பம்'' என்று கூறியிருந்தார்.

குருவான  ராமாநுஜரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய விரும்பிய பராசர பட்டர் மாதவசூரியை எதிர்கொண்டு வாதம் புரிய தயாரானார். இதன் பொருட்டு பராசர பட்டருக்குப் பெரும் துணையாக நின்றது, திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகத்தில் பாடிய `மைவண்ண நறுங்குஞ்சி' என்கிற பாசுரமாகும்.

மைவண்ணம் நறுகுஞ்சி குழல் பின் தாழ

மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட

எய்வண்ணம் வெம்சிலையே துணை ஆ இங்கே

இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்

கைவண்ணம் தாமரை வாய்கமலம் போலும்

கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே

அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி

அவரை நாம் தேவரென்று அஞ்சினோமே!


-என்ற பாசுரத்தில் திருமங்கையாழ்வார் தன்னைக் கோபிகை போல் ஒரு பெண்ணாய் பாவித்துக்கொண்டு பாடியிருப்பார்.

ராமன் மிதிலை நகரத்துத் தெருவில் நடந்து வரும்போது, மாடத்திலிருந்து சீதை அவனைப் பார்த்து, பார்த்த பார்வையை எடுக்க இயலாதபடி ஸ்தம்பித்தாள். அவளை ராமனும் பார்க்கிறான். முதலில் சீதையை ஒரு தங்கச் சிலை என்றே எண்ணுகிறான். பின் அவள் விழி அசையவும்தான் அவள் ஓர் உயிருள்ள பெண் என்றுணர்கிறான். உடனே, தன் பார்வையை விலக்கிக்கொண்டு மனதுக்குள் சலனிக்கிறான்.

இவ்வளவு அழகான பெண்ணைப் பார்த்து விட்டு வேறு பெண்ணை நாளை மணக்க நேர்ந்தால் அது என் நெஞ்சுக்கு இழுக்கல்லவா? பார்த்ததும் ஒரு பெண்ணை கைப்பற்றியதும் அவளையே என்பதல்லவா எனக்கான தர்மம் என்று அவன் மனதில் சலன ஓட்டங்கள்!

இப்படி பலப்பல சிந்தனைகளை உள்ளடக் கிய இப்பாசுரத்திற்குப் பொருள் உரைப்பதில் பராசரபட்டர் மிகச் சிறந்து விளங்கினார். இவர் உரையில் வியந்தவர்களில் திருவரங்கப் பெருமாள் அரையரும் ஒருவர். இப்பாசுரத்தைக் கொண்டே மாதவசூரியை திருநாராயண புரத்தில் பராசரபட்டர் வெற்றி கொள்கிறார்.

இருவருக்குமான தர்க்க வாதத்தில் பராசரர் போல் நுட்பமான பொருளை மாதவசூரியால் கூற இயலவில்லை. அவரும் தம் தோல்வியை ஒப்புக்கொண்டு, அந்த நொடியே பராசர பட்டரைத் தன் குருவாக வரித்து, தன்னைச் சீடராக ஏற்க வேண்டினார்.

பட்டரும் மாதவசூரியைத் தன் சீடராக்கிக் கொண்டு, அவருக்குத் திருவாய்மொழி முதல் திவ்ய பிரபந்தங்களில் சகல விசேஷார்த்தங் களையும் எடுத்துரைத்து அவருக்கு நஞ்ஜீயர் என்கிற ஒரு புதிய பெயரையும் சூட்டினார்.

திருமங்கையாழ்வாரின் திருநெடுந் தாண்ட கம் மாதவசூரியை நஞ்ஜீயராக்கியதுடன், திருவரங்க ஆலயத்துப் பகல் பத்து உற்சவத்தின் போது, அதன் முதல் பாடல் பெருமாளுக்கு வெகு அருகில் - தாள வாத்தியங்களோடு சேவிக்கப்படுவதும் வழக்கமானது.

முதற் பாட்டுக்கு வியாக்யானம், அபிநயம் ஆன பிறகு, முதற்பாசுரமான `மின்னருவாய்' தொடங்கி பத்தாம் பாசுரமான `பட்டுடுக்கும்' வரையிலும் அமைந்த பாசுரங்களும் வியாக்யானத்தோடு சேவிக்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சி திருவரங்கம் கோயிலில் மட்டுமே நடைபெறும் சிறப்பு நிகழ்வு. ஶ்ரீபராசர பட்டர், மாதவசூரியாரைத் திருத்திப் பணி கொண்டதன் நினைவாகவே இது ஏற்படுத்தப்பட்டது!

இந்த நிலையில் வேதனையான சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தது. அந்த நாளில் பெரிய கோயிலின் ஆறாவது பிராகார மதில் சுவர், ஒரு பெரும் மழையில் சரிந்து விழுந்து விட்டது. அதனைச் சீர்படுத்தி எடுத்துக்கட்ட, வீரசுந்தர பிரம்மராயன் என்ற சிற்றரசன் முன்வந்தான்.

அந்த மதிலை எடுத்துக் கட்டும்போது கூரத்தாழ்வானின் தலையாய சீடர்களுள் ஒருவரான பிள்ளைப் பிள்ளையாழ்வான் என்பவரின் திருமாளிகை, நேர்க்கோடாக அந்த மதிலைக் கட்ட தடையாக இருந்தது.

முன்பு அந்த மாளிகையை விலக்கி, மதிலை சற்று வளைத்துக் கட்டியிருந்தனர். ஆனால் வீரசுந்தர பிரம்மராயன் அப்படிக் கட்டுவதற்கு இசையவில்லை. திருமாளிகையை இடித்து விட்டு, ஒரே நேர்க்கோடாக மதிலைக் கட்டும் படி கட்டளையிட்டான். இதனால் வெகுண்ட ஶ்ரீபிள்ளைப் பிள்ளையாழ்வான், பராசர பட்டரிடம் முறையிட்டார். பராசர பட்டரும் பிரம்மராயனை அழைத்து மாளிகையை இடிக்காமல் வளைத்துக் கட்ட வேண்டினார். பிரம்மராயன் ஒப்புக்கொள்ளவில்லை.

இந்தத் தருணத்தில், திருமங்கையாழ்வார் நான்காவது பிராகாரத்தைக் கட்டும்போது, தொண்டரடிப்பொடியாழ்வாரின் நந்தவனம் குறுக்கிட்டதையும் திருமங்கையாழ்வார் அந்த நந்தவனத்தைத் தகர்த்து மதில் எழுப்பாமல், அதை விட்டுவிட்டு மதிலை வளைத்துச் சென்று எடுத்துக்கட்டியதைப் பிரம்ம ராயனுக்குப் பராசர பட்டர் எடுத்துரைத்தார்.

ஆனால் அவர் சொன்னதை கேட்காமல், பிள்ளைப் பிள்ளையாழ்வான் திருமாளிகையை இடித்து மதில் சுவரை எழுப்பினான் வீரசுந்தர பிரம்மராயன். அவனுடைய இந்தச் செயலும் ஆலயத்துக்குள் அவன் தன் அதிகாரத்தை நிலைநாட்ட பார்த்ததும் பராசர பட்டரை மிக வருத்தம் அடையச் செய்தன.

அதன் காரணமாக பராசர பட்டர் அவனை விலக்கி, தனக்கான வழியில் சென்றதை பிரம்ம ராயனால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே தன் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் பயன்படுத்தி பராசர பட்டருக்குத் துன்பம் அளிக்கத் தொடங்கினான்.

அவருக்குத் துணையாய் இருப்பவர்களை அச்சுறுத்தி அவருக்கு யாரும் எந்த சகாயமும் செய்யக்கூடாது என்றான். ஒரு கட்டத்தில் அவர் திருக்கோயிலுக்குள் வரக்கூடாது என்பது போல் பேசிவிட, பராசர பட்டர் மிக வருந்தினார். எவரிடமும் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூருக்குச் சென்று விட்டார்.

அங்கு சென்றாலும் எப்போதும் திருவரங்கம் நினைவாகவே இருந்தார். உடல் கோட்டியூரில் கிடக்க, உள்ளம் திருவரங்கத்தை எண்ணிக் கொண்டிருந்தது. அதன் எதிரொலியாக வட மொழியில் சில பாடல்களையும் பாடினார்.

பராசரரின் வருத்தத்தைக் கண்ணுற்ற கோட்டியூர் சீடர்கள் அவருக்கு ஆறுதல் அளிக்க முற்பட்டனர். ``அரங்கனின் பிரிவை மையமாக வைத்தே நீங்கள் பாடல்கள் புனைய லாம். அப்படி நீங்கள் புனையப் போகும் பாடல்கள், திருவரங்கத்தில் வாழக் கொடுத்து வைக்காத ஶ்ரீவைஷ்ணவர்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதமாகவே அமையும்'' என்றனர்.

பராசர பட்டரும் அக்கருத்தை ஏற்று `பூதம் சரஸ்ய' என்று தொடங்கும் திவ்ய பிரபந்த அனுசந்தான பொதுத் தனியனையும், ஆண் டாள் தொட்டு `நீளாதுங்க ஸ்தனகிரி' என்று தொடங்கும் திருப்பாவைக்கான தனியனையும் அருளிச் செய்தார்.

காலம் இப்படியேவா செல்லும்? பராசர பட்டரை வருத்திய பயனோ இல்லை ஊழ்வினையோ... சிற்றரசனான வீரசுந்தர பிரம்மராயன் காலமானான். நோயுற்று மிக நொந்து அவன் இறந்துபட்ட செய்தி பராசர பட்டரை அடைந்தபோது, அவர் உள்ளம் அவனுக்காக வருந்தவே செய்தது.

அதன்பின் அவர் திருவரங்கம் நோக்கி வரத் தொடங்கினார். காவிரி ஆற்றங்கரையை அடைந்தவர், அப்படியே அதன் கரையில் நின்று திருவரங்கக் கோபுரங்களைக் கண்ணாரக் கண்டு இன்புற்றார். ஒருபுறம் அதுவரை பிரிந்திருந்ததால் ஏற்பட்ட சொகம், மறுபுறம் மீண்டும் அரங்கனோடு இயைந்து வாழப் போகிறோம் என்ற எண்ணத்தால் ஏற்பட்ட மகிழ்வு இரண்டும் கலந்து அவர் உள்ளத்தில் தோன்றியதுதான் ஶ்ரீரங்கராஜ ஸ்தவம் எனும் அற்புத ஸ்தோத்திரம்!

இதன் தொடர்ச்சியாக, பட்டர் ஒரு நாள் பெரிய பெருமாளை உருக்கமாய்ச் சேவித்து நின்றபோது பெருமாளின் திருக்கட்டளை ஒன்று கிடைத்தது. `உடையவர் ஶ்ரீபாஷ்யமும் கீதா பாஷ்யமும் செய்தது போல நீ நம் சஹஸ்ர நாமத்துக்குப் பாஷ்யம் செய்யவும்' என்று கட்டளையிட்டார் திருவரங்கன்.

உடனே அதை நிறைவேற்ற களத்தில் இறங்கினார் பராசரர். தேர்ந்த சொற்களில் அவர் எழுதிய பாஷ்யத்திற்கு `பகவத் குணதர்பணம்' என்கிற பெயரையும் இட்டார். அதோடு நில்லாமல் நம்பெருமாளின் திருமஞ்சனக் காலங்களில் கட்டியம் கூறும் ஒரு பழக்கத்தை உருவாக்கி அருளினார். அது இன்றும் தொடர்வதாகத் தெரிகிறது.

- தொடரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism