Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 27

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

ரங்க ராஜ்ஜியம்

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 27

ரங்க ராஜ்ஜியம்

Published:Updated:
ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

வாழியணி தூப்புல் வரும் நிகமாந்தாசிரியன்

வாழியவன் பாதாரவிந்த மலர் - வாழியவன்

கோதிலாத் தாண் மலரை கொண்டாடிக் கொண்டிருக்கும்

தீதிலா நல்லோர் திறள்!

- திருவோலக்கப்பாட்டு

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்


பெரியாயியும் அவரின் தந்தையான கந்தாடை தோழப்பரும் திருமழிசைக்குச் சென்றுவிட, சோழ மன்னன் தனக்குள் ஆறுதல் அடைந்தான். அதேநேரம், `தெய்வம் நின்று கொல்லும்’ என்பதை அவன் மிக விரைவாக உணரத் தொடங்கினான். கட்டியக் குரலை கேட்க விரும்பிய அவன் செவிகள் செவிடாகிப் போயின. வாத நோய் தாக்கியதால் கால்களும் கைகளும் செயலிழந்தன!

திருவரங்க ஆலயத்துக்குள் பெரியாயியை நடமாட விடாமல் செய்த பாவம், அவனையே நடமாட இயலாதபடி ஆக்கிற்று. இங்ஙனம் அவன் நலிந்ததால், எதிரிகள் சோழ அரியணையைக் கைப்பற்றினர்; பெரும் ஆட்சிமாற்றமே ஏற்பட்டுவிட்டது.

பின்னர், பஞ்ச திருவடி முத்து கிருஷ்ண ராஜா என்பவனால் சோழதேசம் நிர்வகிக்கப்பட்டது. இவன் நாயக்க வம்சத்தவன் என்பார்கள். வேறொரு கருத்தும் முன் வைக்கப்படுகிறது.

நாயக்கர்கள், விஜயநகரப் பேரரசின் தொடர்ச்சியில்... அதாவது 1336-க்குப் பிறகு, 250 ஆண்டுகள் கழித்து நாடாண்டவர்கள். பெரியாயி, சிறியாயி ஆகியோரின் காலமோ 1220-ஐ ஒட்டியது. ஆகவே இந்த முத்து கிருஷ்ணராஜா நாயக்கராக இருக்க வாய்ப்பில்லை; இவன் வேறு என்ற கருத்தைச் சரித்திர ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எது எப்படியோ... அரசனாக இருந்தா லும் ஆசார்ய அபசாரம் செய்தால் அழிந்து போவார்கள் என்பது பெரியாயி சம்பவம் மூலம் நிரூபணம் ஆகிறது. தொடர்ந்து கந்தாடை தோழப்பரும் பெரியாயியும் திருவரங்கம் திரும்பினர்.

இவர்களை அரங்கனின் கட்டளைப்படி அழைத்து வந்தவர் ஈயான் ராமாநுஜர் ஆவார். தன் சகோதரர்களான பெரியாயி, சிறியாயி யைத் தொடர்ந்து இவரின் திருப்பணிகளால் திருவரங்கம் பொலிவு பெற்றது!

ஈயான் ராமாநுஜாசார்யருக்குப் பிறகு, அவரின் திருக்குமாரரான திருகோபுரத்து நாயனார் கார்யமாக இருந்து திருக்கோயில் பணியினைச் செய்து வந்தார். அவருக்குப் பிறகு ஆவரின் குமாரர் சிற்றண்ணர் என்பவர் கார்யப் பணியினைப் பார்க்க நேரிட்டது. இந்தச் சிற்றண்ணரின் காலத்தில் பஞ்ச திருவடி கேசவ ராஜாவின் துணையுடன் அநேகக் காரியங்களைச் செய்ததாகத் தெரிகிறது.

இல்லையில்லை... இது முரண்பட்ட செய்தி! இவர் காலத்தில் பாண்டிய நாட்டின் கட்டுப்பாட்டில் திருவரங்கம் இருந்தது.

குறிப்பாக 1225-ல் இருந்து 1323 வரையிலும் பாண்டிய மன்னர்களான மாறவர்மன் முதலாம் சுந்தரபாண்டியன், இரண்டாம் சுந்தர பாண்டியன், சடைய வர்மன், வீரபாண்டியன் ஆகியோரே ஆட்சி செய்துள்ளனர்.

பஞ்ச திருவடி வீரப்ப ராஜா நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர். இவர்களின் காலம் பாண்டியர்களுக்குப் பிறகானது. எனவே, இக்குறிப்பு பிழையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்றும் கோயிலொழுகு தெரிவிக்கிறது.

சிற்றண்ணர் குமாரரான ரங்க ராஜநாதன் என்கிற வாதூல தேசிகர் மற்றும் அவரின் குமாரர் நரசிம்ம தேசிகர் காலத்தில்தான் மிலேச்சர் படையெடுப்பு நிகழ்ந்தது. அப்போதுதான் பிள்ளை லோகசார்யர் தன் சீடர்களின் துணையுடன், அழகிய மணவாளதாச விக்கிரகத்தை மதுரை கொடிக்குளம் நோக்கி எடுத்துச் சென்றார்.

இதுபற்றியும் அவருக்கு உறுதுணையாக வேதாந்த தேசிகர் திகழ்ந்த சம்பவங்களையும் இத்தொடரின் முதல் பாகத்திலும், 2-ம் பாகத்தின் தொடக்கத்திலும் பார்த்தோம்.

கி.பி. 1371-ம் ஆண்டு வாக்கில் அழகிய மணவாளப் பெருமாள் மீண்டும் திருவரங்கத்தை அடைந்தார். உற்சவங்களும் வழிபாடுகளும் தொடங்கின. இவ்வேளையில் எம்பெருமானின் பிரணவாகார விமானம், திருக்கோபுரங்கள், திருமதில்கள், திருமண்டபங்கள் போன்றவை மிலேச்சர்களால் இடித்துப் போடப் பட்டிருந்தன. அவற்றைப் புனர்நிர்மாணம் செய்யும் பணியை உத்தமர் நம்பி என்பவரின் வம்சத்தவர் மேற்கொண்டனர்.

இந்தக் காலகட்டத்திலும் அதற்கு முன்பும் நிகழ்ந்து வந்த பங்குனி பிரம்மோத்ஸவம் மிக விசேஷமானது. இந்தப் பிரம்மோத்ஸவத்தின்

குறிப்பாக இந்தப் பிரம்மோத்ஸவத்தின் எட்டாம் நாளன்று கிழக்கே எல்லைக்கரை மண்டபத்திற்கு நம்பெருமாள் எழுந்தருளுவார். இதன் பொருட்டு திருவானைக்கோவில் வடக்குத் தெருவில் உள்ள கோபுர வாசல் வழியாகவே எழுந்தருளுவார். இதன் காரண மாக இந்த வாசலுக்கு ‘ரங்க வாசல்’ என்றே பெயர்.

இவ்வாறு ரங்கவாசல் வழியாக எழுந்தருளும் நம்பெருமாள், திருவானைக்காவலின் நாய கியாம் அகிலாண்டேஸ்வரிக்கு தன் சேவையை அளித்து, பின்னர் அவள் சகோதரனான தனக்குப் பாசமுடன் தரும் இளநீரைப் பருகுவார். பின்னர், திருக்கோயிலில் உள்ள ஜம்பு தீர்த்தக் குளத்தில் கால்களைக் கழுவிக் கொண்டு, கிழக்குப் பக்கத்தில் உத்தமசீலி எனும் இடத்திற்கு அருகில் உள்ள திருமங்கை மன்னன் தோப்பில் எழுந்தருள்வது வழக்கமாக இருந்தது.

திருவரங்கம்
திருவரங்கம்
IVANVIEITO

இங்ஙனம் சைவ - வைணவ நெறியினர் அவரவர் வழியில் பக்தி செய்துகொண்டே நல்லிணக்கத்தோடு இருக்க இந்த எட்டாம் நாள் உத்ஸவம் பெரும் காரணமாக இருந்தது. ஆயினும், கலி மாயை சில சைவர்கள் மனதில் புகுந்தது. அவர்கள், நம்பெருமாள் திருவானைக்காவலுக்கு வந்து அகிலாண்டேஸ்வரி தரும் இளநீரைப் பருகிச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர், இவ்வேளையில் கலகங்களிலும் ஈடுபட்டனர்.

இதன் பிறகு, திருவானைக்கா சைவர்களோடும் அவர்களுடைய மடாதிபதி களுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தி, அதன் பயனாக நம்பெருமாள் தடைகளின்றி வந்து செல்ல பாதை ஒன்று வகுக்கப்பட்டு, சுதர்சனம் பொறித்த திருவாழிக் கற்கள் அப்பாதையில் ஸ்தாபிக்கப்பட்டன.

தொடர்ந்து, கிருஷ்ணாராய உத்தம நம்பியால் விஜயநகரப் பேரரசின் அரசனான புக்கராயன், அவன் குமாரன் ஹரிஹர ராயன், அவனுடைய பிரதிநிதியான செஞ்சியை ஆட்சி செய்த கோபண்ண உடையார் ஆகியோரிடமிருந்து 17,000 பொன் தானம் பெற்று, அதைக் கொண்டு கோயிலுக்கென்று 106 கிராமங்கள் வாங்கப்பட்டன.

இதுபோக, 1304-ல் விருப்பண்ண உடையார், கோபண்ண உடையார், முத்தைய தென்னாயகர், தம்மண்ண உடையார், பிரதானி சோமப்பர், காரியத்துக் கடவு அண்ணர் ஆகியோர் உதவியால் 5000 பொன் திரட்டி மேலும் 13 கிராமங்கள் ஆலயச் சொத்தாக்கப்பட்டன.

திருவரங்க ஆலயம் இவ்வாறு பலராலும் மீண்டும் பெரும் பொலிவும் வலிவும் பெற்று தன் பழைய சீர்மையை அடைந்தது. சகாப்தம் 1207-ல் (கி.பி.1375) திருவானைக்காவல் மக்களுக்கும், ரங்க மக்களுக்கும் இடையே எல்லை பிரச்னை ஏற்பட்டதையும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் மிகவும் சண்டை - சச்சரவுகள் நிகழ்ந்து வழக்குகளும் உருவாயின. இந்த வழக்குகள் பற்றி தாங்கள் விவரம் அறிந்துகொள்ளவும் இதற்கொரு நிரந்தர தீர்வு காணவும் விஜயநகரத்தார் ஒரு ஏற்பாட்டைச் செய்தனர்.

தங்களின் குருவான வியாச உடையாரை இந்தச் சச்சரவு தீர அனுப்பிவைத்தனர். அவரை, திருவரங்கம் கோயிலின் ஸ்தானாதி பதியான உத்தம நம்பி வரவேற்று நிரந்தர தீர்வு குறித்து விவாதித்தார். இதில் திருவானைக்காவலின் மடாதிபதிகளும் பங்கேற்றனர்.

திருவரங்க ஆலயம்
திருவரங்க ஆலயம்
JAYSPICTO

இறுதியாக ஒரு முடிவு எட்டப்பட்டது. அதன்படி உத்தம நம்பி ஈரப் பாவாடை உடுத்திக்கொண்டு, கையில் மழுவாயுதத்தை எடுத்துக்கொண்டு, தன் இரு கண்களையும் கட்டிக்கொண்டு அரங்கனைப் பிரார்த்தித்தபடி நடக்க வேண்டும். அவர் செல்லும் வழி அவ்வளவும் திருவரங்கத்தாருக்கும், நம்பெருமா னுடைய பிரவேசத்துக்கும் உரியதாகும் என்று முடிவாயிற்று.

அவ்வாறு நடக்கும்போது உத்தமநம்பி திருமந்திரத்தை ஜபித்துக் கொண்டே நடந்தார். அதனால் அவருக்கு `எல்லை நிலையிட்ட உத்தம நம்பி’ என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது. இந்தநிகழ்வுக்குச் சாட்சியாக நடந்து சென்ற இடத்தில், 16 கால் மண்டபம் ஒன்றைக் கட்டி அதை வரலாற்று சான்றாக்கினார் உத்தம நம்பி.

நம்பெருமாள் மற்றும் ரங்க நாச்சியார் பங்குபெற்றிடும் ஒவ்வோர் உத்ஸவத்தின் இறுதி நாளன்றும் ‘படிப்பு’ என்றொரு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

இதில் எம்பெருமான் பாற்கடலில் இருந்து தோன்றியது முதல், காவிரிக் கரையில் விபீஷணனால் எழுந்தருளி, பின் தர்மவர்மாவால் கோயில் கொண்டது வரையிலான சம்பவங்கள் எடுத்துக் கூறப் பட்டன. அப்படியே திருவரங்க ஆலயத்திற்கு உதவிய அரசர்கள், ஆசார்ய புருஷர்கள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.

இதன் நோக்கம் கோயில் வரலாற்றை ஊரார் உணர்ந்து பக்தி செய்ய வேண்டும் என்பதோடு, கோவிலுக்கு உழைத்தவர்களையும் நன்றியோடு எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதே!

இந்த `படிப்பு’ நிகழ்வை திருத்தாழ்வரை தாசரின் வம்சத்தவர்கள் சிரமேற்கொண்டு நடத்தி வந்தனர். (அரிய இந்நிகழ்வு இப்போது நிகழ்வதில்லை எனத் தெரிகிறது.) இன்று அந்த வம்சத்தவர் இல்லாததால், அவர்களோடு இது போய்விட்டது என்று காரணம் கூறப்படுகிறது.

கிருஷ்ணராய உத்தம நம்பி, தாம் இருந்தவரையிலும் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்வதில் பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். இவரே ஹரிஹர புக்கர்களின் உதவியோடு துலா புருஷ மண்டபத்தைக் கட்டினார். பின்னர் ரங்க விமானத்துக்குப் பொன் வேயவும் முடிவு செய்தார். அதற்குப் பெருமளவு பொன் தேவைப்பட்டது.

அதற்காக, ஹரிஹர ராயரையும், விருப்பண்ண உடையாரையும் சந்தித்து, அவர்கள் இருவரும் தங்களின் ஜன்ம நட்சத்திர நாளன்று திருவரங்கத்துக்கு வந்து துலாபாரம் சமர்ப்பிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவ்வாறு ஒருவர் துலாபாரம் சமர்ப்பிப்பதால், அவர்களின் பெரும் பாரங்கள் தீரும்; அத்துடன், `எப்படி துலாபாரம் இருபுறமும் சமமாக நின்று ஒரு சமநிலையை உருவாக்குகிறதோ, அப்படி ஒரு சமநிலை உங்கள் வாழ்விலும் உண்டாகும்’ என்றார்.

அவர்களும் துலாபாரம் சமர்ப்பித்தனர். இதனால் தேவைக்கும் அதிகமாக பொன் கட்டிகள் கிடைத்தன. அவற்றைக் கொண்டு ரங்க விமானத்தைப் பொன்னால் வேய்ந்து, அந்த விமானம் வைகுண்டத்தில் ஜொலித்தது போலவே திருவரங்கத்திலும் ஜொலிக்கும்படி செய்தார்.

பின்னர், இவரே சித்திரை மாதம் ரேவதி நட்சத்திர நாளில் திருத்தேர் உற்சவத்துக்கும் வழி கண்டார். சித்திரைப் பிரமோத்சவமும் இவரால் சீர்பெற்றது. இந்த பிரம்மோத்சவம் ‘விருப்பன் திருநாள்’ என்று இன்றும் பஞ்சாங்கங்களில் கோயில் கணக்குகளில் குறிப்பிடப்படுகிறது!

- தொடரும்...