
ரங்க ராஜ்ஜியம்
தவம் தரும் செல்வம் தகவும் தரும் சலியாப் பிறவிப்
பவம் தரும் தீவினை பாற்றித் தரும், பரந்தாமமென்னும்
திவம் தரும் தீது இல் இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர்கட்கு
உவந்தருந்தேன், அவன் சீரன்றியா னொன்றும் உள்மகிழ்ந்தே!
- இராமாநுச நூற்றந்தாதி (94)


வில்லிப்புத்தூர் சென்ற ராமாநுஜர், அங்கே வடபெருங் கோயிலுடையானை முதலிலும், பின்னர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத் தினமும் தரித்து மகிழ்ந்த மன்னாரையும், உடன் நிற்கும் வினதைச் சிறுவன் என்கிற கருடனையும் சேவித்தார்.
அந்த வேளையில்தான் ஆண்டாள், தன் வழியில் நூறு தடா அக்கார அடிசிலைத் தன் பொருட்டு சமர்ப்பித்த ராமாநுஜரை `எம் கோயில் அண்ணாரே வாரும்’ என்று அழைத்து அருளினாள்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருப்புளியங்குடி, வரகுணமங்கை, வைகுண்டம், திருக்குருகூர், திருக்கோளூர், திருத்தொலைவில்லி மங்கலம் (இரட்டை திருப்பதி), தென்திருப்பேரையில் திருக்களங்கை ஆகிய நவ திருப்பதிகளை அடைந்து, அங்குள்ள மூர்த்திகளை எல்லாம் வணங்கி மங்களாசாசனம் செய்தருளினார் ராமாநுஜர்.
இந்த நவதிருப்பதி யாத்திரையின்போது, குறிப்பாக திருப்புளிங் குடியிலிருந்து நம்மாழ்வாரின் அவதாரத் தலமான திருக்குருகூர் நோக்கிச் செல்கையில் சில விசேஷ அனுபவங்கள் ராமாநுஜருக்கு ஏற்பட்டன. அவர் வழியில் எதிர்ப்பட்ட பெண்கள் இருவரைப் பார்த்து ``திருக்குருகூர் இன்னும் எவ்வளவு தொலைவில் உள்ளது?’’ என்று கேட்டார்.
பெண்களில் ஒருத்தி, ``சுவாமிக்குத் திருவாய்மொழி பாடமாகி விட்டதா?’’ என்று கேட்டாள். ராமாநுஜரும் ``ஆயிற்று அம்மா’’ என்றார்.
உடனே அவள் ``கூவுதல் - வருதல் பாசுரத்தை அறிவீர் அல்லவா?’’ என்று கேட்டாள்.
அந்தப் பெண்கள் இருவரும் தன்னுடைய கேள்விக்கு நேரடியாகப் பதில் கூறாமல், பதில் கேள்விகளை எழுப்பி திருவாய்மொழி பற்றி எல்லாம் வினவவும், `இவர்கள் சாதாரணப் பெண்கள் இல்லை’ என்று புலப்பட்டது ராமாநுஜருக்கு.
ஆகவே அவர் அந்தப் பெண் கேட்ட கேள்விக்குத் `தெரியும் தெரியும்’ என்று இரண்டு முறை கூறி, அவர்களை வணங்கவும் செய்தார். இவ்வாறு ராமாநுஜர் கூறியதன் பின்னால் அவரின் விநயமும் உள்ளது. ஆம் அவருடைய முதல் `தெரியும்’ என்ற பதில் அந்தப் பாசுரத்துக்கானது. இரண்டாவது `தெரியும்’ என்பது, அந்தப் பாசுரத்தின்படி திருக்குருகூர் கூப்பிடு தூரத்தில்தான் உள்ளது என்ப தைக் குறிப்பது!
பின்னர் ராமாநுஜர் திருக்குருகூரில் இருந்து திருக்கோளூர் சென்றபோது, அவ்வூரிலிருந்து எதிரே வரும் பெண் ஒருத்தியைக் கண்டார். அவளின் நடை-உடை பாவனைகளில் ஒரு யோகியின் தன்மைகளை உணர்ந்தார். அவளிடம் பேச விழைந்தார்.
அந்தப் பெண் திருக்கோளூரிலிருந்து வருபவள் ஆயிற்றே. ஆகவே அவளிடம், ``நம்மாழ்வார் பாசுரப்படி திருக்கோளூர் எல்லோருக்கும் புகும் ஊராக இருக்க, உனக்கு மட்டும் அது போகும் ஊர் ஆகிவிட்டதே?’’ என்று கேட்டார்.
இந்தக் கேள்வி வேறு எவரிடமேனும் கேட்கப்பட்டிருந்தால், `எதற்கு இப்படியொரு கேள்வியைக் கேட்கிறார்’ என்ற சிந்தனைக்குள் அவர் சிக்கியிருப்பார். ஆனால் இந்தப் பெண்மணியோ விநாடியும் தாமதிக்காமல் பதில் சொன்னாள்:
``முயல் புழுக்கை வரப்பில் கிடந்தால் என்ன, வயலில் கிடந்தால் என்ன? ஞானம் இல்லாத அடியவளாகிய நான் கோளூரில் இருந்தால் என்ன, வேற்றூரில் இருந்தால் என்ன?’’
இந்தப் பதிலானது அவளையும் ஓர் அசாதரணப் பெண்ணாகக் காட்டியது ராமாநுஜருக்கு.
``என்னம்மா இப்படிச் சொல்லிவிட்டாய்? அப்படியென்ன குறையைக் கண்டுவிட்டாய் உன்னிடத்தில். நானும் அறியலாம் என்றால் சொல்...’’ என்றார் ராமாநுஜர்.
``சுவாமி! தங்களைப் பார்க்கும்போது வைகுண்டபதியையே பார்ப்பது போல் உள்ளது. தங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். இன்று நேரில் தரிசிக்கும் வாய்ப்பும் பெற்றேன். அம்மட்டில் நானொரு பாக்கியசாலி. ஆனால், அர்த்தமுள்ள ஒரு பெருவாழ்வை நான் வாழ்ந்தேனே என்றால், அதுதான் இல்லை என்றே என் மனம் எண்ணுகிறது. நம் வாழ்வு பிறருக்கு ஓர் உதாரணமாக இல்லா விட்டாலும் என் வரையிலாவது ஓர் அர்த்தம் இருக்கவேண்டும் அல்லவா?’’
இவ்வாறு அந்தப் பெண் சொல்லவும், ``எந்த வகையில் உன் வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விட்டதாக நீ கருது கிறாய்?’’ எனக் கேட்டார் ராமாநுஜர். உடனே அந்தப் பெண் தனக்கே உரிய நாட்டார்குடிக்கான மொழி நடையில்...
`அழைத்து வருகிறேன் என்றேனா
அக்ரூரரைப் போலே...?
அந்தரங்கம் சொன்னேனா
திரிச்சடையைப் போலே...?
பிஞ்சாய்ப் பழுத்தேனா
ஆண்டாளைப் போலே...?
அவன் சிறியன் என்றேனா
ஆழ்வாரைப் போலே...?
ஆயனை வளர்த்தேனா
அசோதயாரைப் போலே...?’
- என்று 80 கேள்விகளை எழுப்பினாள். இந்த 80 கேள்விகளுக்குள் வைணவம் சார்ந்த பெருமக்களின் வாழ்வும் நோக்குமே நிரம்பிக் கிடந்தன. மேலும் அவளுக்கு பாகவதம் முதல் ராமாயணம், மகாபாரதம் வரையிலும் சகலமும் அணு பிசகின்றி தெரிந்திருப்பதையும் ராமாநுஜர் உணர்ந்துகொண்டார்.
ராமாநுஜர் அவளிடம் பேசியிருக்கத் தேவையே இல்லை. அவர் பேசியிருக்காவிட்டால், அவளின் இத்தகு ஞானம் பிறருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை!
ஏதோ ஒரு உள்ளுணர்வாலோ அல்லது ஞானத்தாலோ, அவளை உலகம் அறிந்திட வேண்டும் என்று எண்ணியே ராமாநுஜர் அவளோடு பேசினார்; அவளையும் பேசச் செய்தார். அதனால் வைணவ உலகுக்கு `திருக்கோளூர் பெண்பிள்ளை இரகசியம்’ என்ற ஒரு நூல் கிடைத்தது. அந்த நாளிலேயே பெண்கள் எவ்வளவு ஞானத் தோடு திகழ்ந்தனர் என்பதற்கும் இந்நூல் சான்றாக விளங்குகிறது.
ராமாநுஜர் நவதிருப்பதி யாத்திரையைத் தொடர்ந்து திருவெண்பரிசாரம், திருவட்டாறு, திருவனந்தபுரம், குட்டநாட்டு திருப்புலியூர், திருவல்லவாழ், திருவாறன்விளை, திருவண்வண்டூர், திருச்செங்கனூர், திருக்கடித்தானம், திருமூழிக்களம், திருக்காட்கரை, திருவித்துவக்கோடு, திருநாவாய் மற்றும் குலசேகர ஆழ்வாரின் அவதாரத் ஸ்தலமாகிய திருவஞ்சிக்களம் ஆகிய மலையாள திவ்ய தேசங்களை சேவித்து மங்களாசாசனம் புரிந்தார். அப்படியே மேற்குக் கடற்கரை ஓரமாகச் சென்று வடமதுரை, துவாரகை ஆகிய திவ்ய தேசங்களையும் தரிசித்தார். பின்னர் காஷ்மீரம் சென்றடைந்தார்.
காஷ்மீரத்தில் அத்வைத பண்டிதர்களோடு மோதி விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலைநிறுத்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
அது ஓர் அரிய வாய்ப்பு... பெரிய சம்பவம்!
குளிர் மிகுந்த காஷ்மீரத்தை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனைச் சுற்றி வேத பண்டிதர்கள் மிகுந்து காணப்பட்டனர். மாபெரும் பண்டித பூமியாகவே காஷ்மீரம் விளங்கிற்று.
ஆதிசங்கரர் இங்கே எழுந்தருளி தனது அத்வைத சித்தாந்தத்தைப் பரப்பியிருந்தார். அந்த சித்தாந்தமே காஷ்மீரப் பண்டிதர்கள் ஒப்புக் கொண்டு பின்பற்றும் சித்தாந்தமாகவும் இருந்தது.
எங்கும் பனி படர்ந்த சூழல், சலசலவென பாயும் நதிகள், பூத்துக் குலுங்கும் மலர்கள், கனிகள், திரும்பிய பக்கமெல்லாம் பசுமை என்று காஷ்மீரம் பூலோக சொர்க்கமாக ஜொலித்தது. உடலுக்கும் மனதுக்கும் மிக இதமாக விளங்கிய காஷ்மீரம், அறிவார்ந்த விஷயத்தில் அத்வைதத்தையே தனது வழியாகக் கொண்டிருந்தது.
ராமாநுஜரோ ஆதிசங்கரரின் அத்வைதத்தை மேலும் மேன்மைப் படுத்தி, பல தர்க்கங்களுக்கு அதை ஆட்படுத்தி, அத்வைதத்தை விசிஷ்டாத்வைதம் என்றாக்கினார். இதற்கான தர்க்க வாதங்கள் காஷ்மீர அரசன் முன்னிலையில், சரஸ்வதிதேவி எழுதருளிய கோயில் ஒன்றின் மண்டபத்தில்தான் நிகழ்ந்தது.
`இரண்டல்ல ஒன்று’ என்பது அத்வைதம். அதாவது ஒரு கயிறு இருக்கிறது... அது காற்றில் அசைந்தாடுவதை சற்றே இருளிலிருந்து பார்க்கும்போது, பாம்பு ஒன்று நெளிவது போல் இருக்கிறது. ஒன்றாகிய கயிறே பாம்பாகவும் தெரிகிறது. ஆக அந்த இரண்டும் ஒன்றே. இதுவே அத்வைதம். அதாவது பிரம்மம் மட்டுமே உள்ளது. அதுவே, உலகாகத் தோன்றுகிறது என்கிறது அத்வைதம்.
இங்கே ஒரு கேள்வி எழுகிறது. ஒன்றாகிய பிரம்மம், உலகமாகத் தோன்றுவது யாருக்கு? அதைக் காணும் ஒருவர் இருக்கிறார் எனும்போது... பிரம்மம், உலகம், காண்பவர் என்று ஒரு வரிசை உருவாகி விடுகிறது அல்லவா? இதில் பிரம்மமும் உலகமும் ஒன்று; அதைக் காண்பவன் மற்றொன்று. ஆக, `ஒன்றில்லை இரண்டே’ என்பதுதான் விசிஷ்டாத்வைதம்.
பரமாத்மாவாக இறைவன் ஒருவனே உள்ளார். அவனே மந் நாராயணன். அவரின் உடலாக இருப்பது ஜகம் என்ற உலகு. அந்த உலகில் மிகுந்து காணப்படுபவை ஜீவன்கள். அதாவது நாம் எல்லோரும். சூரியனிலிருந்து தொடர்ச்சியாக அதன் ஒளிக்கதிர்கள் பாய்வது போல, பரமாத்மாவிடம் இருந்து ஜீவன்களாகிய நாம் தோன்றி உலகில் வாழ்ந்த வண்ணம் உள்ளோம். அந்த நாராயணனே உயிர்கள் அனைத்திலும், உலகிலும் அந்தர்யாமியாய் நின்று எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டிருக்கிறான்.
எனவே ஆன்மாக்கள் பலவாயினும் ஆன்மாக்களுக் கெல்லாம் ஆன்மாவாக இருப்பது பரமாத்மா ஒன்று மட்டும்தான். பரமாத்மாவைப் பரிபூரணம் என்று அறிந்து, அவரை அடைய முயல்வதுதான் வாழ்வின் பிரதான நோக்கமாகும். இதுவே முக்தி எனப்படுகிறது. இந்த முக்தியை அடைய சரணாகதி புரிய வேண்டும். இல்லாவிட்டால் முக்தி எளிதில் சிக்காது.
இந்தக் கருத்தைக் காஷ்மீரத்துப் பண்டிதர்கள் நடுவில் பல வாத - பிரதிவாதங்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தினார் ராமாநுஜர். அவருக்கு சரஸ்வதிதேவியும் துணையிருந்து அருளினாள்!
- தொடரும்...
இத்தாலியில் சிவ லிங்கங்கள்!
வாடிகன் நகரத்தில் உள்ளது `பாண்டிபிகோ' மியூசியம். இங்கு கிரீடம் மற்றும் பாம்பு அணி களுடன் பஞ்சமுக லிங்கம் ஒன்றும் காணப்படுகிறது.
இத்தாலியின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில், கி.மு. 8 முதல் 4-ம் நூற்றாண்டு வரை வாழ்ந்திருந்த எட்ரூஸ்கர் காலத்தில் இத்தகைய லிங்கங்கள் வழிபாட்டில் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வடிவத்தை அவர்கள் ஐஸ் (ஈஸ்) அல்லது ஐச்வர் (AISWAR) என்று அழைத்தனராம்.
இந்திய வரலாற்று அறிஞர் டாக்டர் பி.என்.ஓக் என்பவர், இதனை ஈச்வரன் என்றும், இந்த வடிவம் சிவலிங்கமே என்றும் உறுதியாகக் கூறுகிறார். இந்தியர்களுக்கும் எட்ரூஸ்கன் மக்களுக்கும் வியாபாரத் தொடர்பு இருந்தபோது, அங்கு சிவலிங்க வழிபாடு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள்.
- சுந்தரி, சென்னை
வருமானத்தைப் பயன்படுத்துவது எப்படி?
`வருமானத்தை எந்த விதத்தில் பயன்படுத்த வேண்டும்?' என்ற வணிக அன்பர் ஒருவரின் கேள்விக்கு, அருமையான வழிமுறைகளைக் கூறினார் புத்தர்:
`வருவாயில் நான்கில் ஒரு பங்கை அன்றாட வாழ்விற்கும், நான்கில் இரண்டு பங்கை வணிக முதலீட்டிற்காகவும், நான்கில் ஒரு பங்கை ஆபத்துக் காலத் தேவைக்கான சேமிப்பிற்காகவும் பயன்படுத்த வேண்டும்.'
அதேபோல், `தனது ரகசியங்களை உங்களிடம் கூறி, உங்கள் ரகசியங்களைக் காப்பாற்றுபவனே சிறந்த நண்பன். அவன் சிரமமான நேரத்திலும் உங்களைப் புறக்கணிக்காதவன். இப்படியான நட்பு கிடைத்தவர்களுக்கு எதிலும் வெற்றியே!' என்பதும் புத்தர் தரும் அறிவுரை.
- மு.ராமு, சென்னை-73