Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 20

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

ஶ்ரீராமாநுஜரின் சீர்திருத்தங்களும் வைணவ ஆலயங்களை அவர் நிமிர்த்தி நடத்திய விதமும், அவர் வாழ்ந்த நாளில் பலருக்கு வியப்பையும் சிலருக்கு கசப்பையும் அளிப்பதாக இருந்தன.

ரங்க ராஜ்ஜியம் - 20

ஶ்ரீராமாநுஜரின் சீர்திருத்தங்களும் வைணவ ஆலயங்களை அவர் நிமிர்த்தி நடத்திய விதமும், அவர் வாழ்ந்த நாளில் பலருக்கு வியப்பையும் சிலருக்கு கசப்பையும் அளிப்பதாக இருந்தன.

Published:Updated:
ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

வருத்தும் புறவிருள் மாற்ற, எம் பொய்கைப்பி ரான்மறையின்

குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்

திரித்தன் றெரித்த திருவிளக் கைத்தன் திருவுள்ளத்தே

இருத்தும் பரமன் இராமா னுசனெம் இறையவனே.

சோழனின் அவையில் வைதீகமானவர்களுக்கும் வேதம் கற்றவர் களுக்கும் ஒரு தனியிடம் இருந்தது. இவர்களில் நாலூரான் ஒருவர். இவரைப் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் காணக் கிடைக்கின்றன. இவர் ஶ்ரீகூரத்தாழ்வானின் சீடர். வைஷ்ணவ சீலர்!

சோழனோ சிவபக்தன். அது அவன் விருப்பம். ஆயினும் பிற வழிமுறைகளைப் பின்பற்றுபவர்களைத் தனக்கான சுதந்திரத்தோடு அனுமதித்தவன். அதனால்தான் நாலூரானால் சோழனின் அவை யிலும் இடம்பெற்றுச் செயல்பட முடிந்தது.

ஶ்ரீராமாநுஜரின் சீர்திருத்தங்களும் வைணவ ஆலயங்களை அவர் நிமிர்த்தி நடத்திய விதமும், அவர் வாழ்ந்த நாளில் பலருக்கு வியப்பையும் சிலருக்கு கசப்பையும் அளிப்பதாக இருந்தன. அப்படி கசந்துபோனவர்களே சோழ அரசின் காதுகளுக்கு ஶ்ரீராமாநுஜரைப் பற்றிய தவறான செய்திகளைக் கொண்டு சென்றனர். இந்தச் செய்திகளின் சாரம், `ஶ்ரீராமாநுஜரை இப்படியே விட்டால் சைவ சமயமே மிகச் சுருங்கிப்போய் விடும். ஶ்ரீவைஷ்ணவம் என்பதே நிலையானது என்றாகிவிடும்’ என்பதுதான்.

இதனால் சோழன் சஞ்சலம் அடைந்தான். தன்னைச் சார்ந்து நிற்கும் வைதீகர்கள் சகலரையும் அழைத்து, இதுகுறித்து அவன் விவாதம் மேற்கொண்டான். அந்த விவாதத்தின்போது நாலூரானும் இருந்தார். அக்கூட்டத்தில் சோழனுடைய சைவத்துக்கு ஆதரவாக பேசியவர்களே அதிகம். இந்நிலையில் நாலூரான் ஶ்ரீராமாநுஜருக்கு ஆதரவாகப் பேசினால், தான் ஒதுக்கப்பட்டு விடுவோம் என்று அஞ்சி மௌனமாக இருந்துவிட்டார். ஆக அவரும் மற்றவர்களின் கருத்தை அங்கீகரிப்பதாக சோழன் எடுத்துக்கொண்டுவிட்டான் என்று ஒரு கருத்து உண்டு.

ரங்க ராஜ்ஜியம் - 20இந்தத் தொடரின் முதல் பாகத்திலேயே இந்த விஷயம் குறித்து சுருக்கமாகப் பார்த்தோம். மொத்தத்தில் நாலூரான் குறித்து பல கருத்துக்கள்... அவரின் உறவினர் ஒருவர் வைணவ ஆலயம் ஒன்றில் அதிகாரமாக நடந்துகொண்டு பக்தர்களை அவமதித்தார். அதை அறிந்த ராமாநுஜர் அவரைக் கண்டித்து, அவரது அதிகாரத்தையும் போக்கினார். அதனால் நாலூரானுக்கு ஶ்ரீராமாநுஜர் மேல் வருத்தம் இருந்தது என்றும் ஒரு கருத்து உண்டு.

பொதுவில் நாலூரானை நல்லவிதமாக யாரும் சித்திரிக்கவில்லை. ஆனால், தன் சீடனான நாலூரான் நிச்சயம் மனதார ஒரு தவறும் செய்திருக்க மாட்டார் என்று கூரத்தாழ்வான் கருதினார். அதனால் தான் காஞ்சிபுரம் தேவராஜபெருமாள் திருமுன் `வரதராஜ ஸ்தவம்’ என்கிற ஸ்துதியை கூரத்தாழ்வான் இயற்றி துதி செய்த தருணம், எம்பெருமான், ‘என்ன வரம் வேண்டும் உமக்கு? என்று கூரத்தாழ் வானிடம் கேட்டபோது, `உமது திருவடி நிழல் எனும் மோட்சம்தான் வேண்டும். அதை எனக்கு மட்டுமன்றி என் சீடனான நாலூரானூக்கும் அனுக்கிரஹிக்க வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார்.

எம்பெருமானும் `அவ்வாறே ஆகட்டும்’ என்று அனுக்கிரஹித்தார். இதன் பின்புலத்தில் நாம் சிந்திக்க பல விஷயங்கள் உள்ளன.

நல்லதோர் ஆசார்யர் தன் சீடர்களை எந்த நிலையிலும் கைவிட மாட்டார். தன்னைப் புகழ்ந்தொழுகுபவன் மேல் அதிக அன்பும், அவ்வாறு அல்லாதார் மேல் அன்பற்றவராகவும் இருப்பார் என்று கருதுவது மிகத் தவறானது. சொல்லப்போனால், தன்னைச் சரியாக உணராமல் அறியா பிள்ளைகளாய் இருப்பவர்கள் மேல்தான் அவர்களுக்கு அதிக கருணை இருக்கும்.

ரங்க ராஜ்ஜியம் - 20இக்கருத்துக்கு ஶ்ரீராமாநுஜர் வாழ்வில் எவ்வளவோ சான்றுகள் உண்டு. கூரத்தாழ்வான் ஶ்ரீராமாநுஜரைப் பின்பற்றியவர் என்ற வகையில், தன் ஆசார்யரின் வழியிலேயே அவரும் சென்றார் எனலாம்.

சோழன் ஶ்ரீராமாநுஜரை தன் முன்னர் அழைத்துவரப் பணித்து, அவர் வாயால் சிவமே பெரிதென்று கூற வைத்திட விரும்பினான். தன் அதிகாரத்துக்கும் தான் தரப்போகும் தண்டனைக்கும் பயந்து ஶ்ரீராமாநுஜர் அவ்வாறு சொல்லிவிடுவார் என்பது சோழனின் எண்ணம். அப்படிச் சொல்லாதபட்சத்தில் அவரின் கண்களைப் பறிப்பது அல்லது நாடு கடத்துவது என்று அவன் கருதியிருந்தான்.

ஆனால் கூரத்தாழ்வானால் அவை எல்லாமே மாறிப் போயின. ஶ்ரீராமாநுஜரை முதலியாண்டானுடன் மேற்கு திசையை நோக்கி யுள்ள கர்நாடக மாநிலம் நோக்கி அனுப்பிவிட்டு, கூரத்தாழ்வார் ஶ்ரீராமாநுஜர் வேடம் தரித்து பெரியநம்பியோடு சோழன் முன் சென்று நின்றார். அங்கு நிகழ்ந்த விவாதத்தில் பங்கேற்று `நாரணனே ஆதிப் பரம்பொருள்’ என்று உறுதிபடக் கூறி, சோழனின் கோபத் துக்கு ஆளானார். மட்டுமன்றி, சோழனின் கட்டளைக்கிணங்க மற்றவர்கள் தண்டனையை நிறைவேற்றுமுன், தானே தன்னுடைய கண்களைத் தோண்டி எடுத்து, தன் மன உறுதியை நிரூபித்ததை முதல் பாகத்தில் கண்டோம்.

கூரத்தாழ்வானோடு சென்ற பெரிய நம்பியும் கண்களை இழந்து, பின்னர் தமது 105-வது வயதில் கூரத்தாழ்வான் மடியிலேயே தன் உயிரை விட்டதாகக் கோயிலொழுகு குறிப்பிடுகிறது. அதன் பின்னர், கண்களை இழந்த நிலையில் திருவரங்கம் திரும்பிய கூரத்தாழ்வானை சிலர் ஆலயத்துக்குள் செல்ல விடாது தடுத்து நிறுத்திவிட்டனர். சிலரோ `இவர் மிக நல்லவர். இவரை உள்ளே விடலாம்’ என்றனர்.

இந்த நிலையில் தன்னை தடுத்து நிறுத்தியவர்களிடம் ``எனக்கு இப்படி ஒரு நிலையா?’’ என்று கூரத்தாழ்வான் கேட்டார்.

``ஶ்ரீராமாநுஜருக்கு உற்றவர்கள் சோழ அரசனுக்கு எதிரானவர்கள். இது சோழன் உத்தரவு’’ என்று பதில் கிடைத்தது.

அதைக்கேட்ட கூரத்தாழ்வான் ``என் குரு ஶ்ரீராமாநுஜர் சம்பந்தம் உடையவன் நான். அவருக்கு எதிரான நீங்கள் எனக்கும் எதிரானவர்களே. எனவே, உங்கள் அனுமதியும் ஆதரவும் எனக்குத் தேவையில்லை. உங்கள் வசமுள்ள இக்கோயிலில் நான் பெரிய பெருமாளை சேவிக்க விரும்பவில்லை’’ என்று தெளிவாகவும் துணி வாகவும் கூறிவிட்டு, தன் மனைவி ஆண்டாளுடனும், ஆறு மாத குழந்தைகளான பராசரன், வேதவியாசனோடும் மதுரை அருகிலுள்ள திருமாலிருஞ்சோலைக்குச் சென்று விட்டார்.

அந்தத் தலத்தில்தான் கூரத்தாழ்வான் ஶ்ரீஸ்தவம், சுந்தர பாஹுஸ்தவம், அதிமாநுஷ ஸ்தவம், ஶ்ரீவைகுண்ட ஸ்தவம் முதலிய துதிகளை அருளிச்செய்தார். இங்கே பல காலம் கூரத்தாழ்வான் தங்கியிருக்க, மேற்கு நோக்கி சென்ற ஶ்ரீராமாநுஜர் கர்நாடகத்தில் ஆட்சி செய்து வந்த விஷ்ணுவர்த்தனின் உதவியோடு அங்கே திருநாராயணபுரம் என்ற ஒரு ஸ்தலம் உருவாகிடக் காரணமானார். (இதுகுறித்த விரிவான செய்திகளையும் முதல் பாகத்தில் கண்டோம்)

இவ்வாறு ஶ்ரீராமாநுஜர் திருநாராயணபுரத்தில் இருக்கும் செய்தி சிறியாண்டான் என்பவர் மூலம் திருமாலிருஞ்சோலையில் இருந்த கூரத்தாழ்வானுக்கும் தெரிவிக்கப்பட்டது. அங்கே ராமாநூஜர் அவருக்கான மதிப்புடனும் மாண்புடனும் இருப்பதை அறிந்து பெரிதும் மகிழ்ந்தார் கூரத்தாழ்வான்.

அதேபோல் இவருடைய நிலைமை குறித்தும் பெரியநம்பிகள் பரம பதித்துவிட்டது பற்றியும் ஶ்ரீராமாநுஜரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் தன் சீடர்களுக்கு நேரிட்ட துன்பங்களை எண்ணி வருந்தினார். இந்தத் தருணத்தில்தான் மனம் கசிந்து அபிசார அர்க்ய பிரதானம் எனும் ஜபத்தையும் மேற்கொண்டார். இது, நல்லோர்களைத் துன்புறுத்துவோரை, அவர்கள் வருந்தித் திருந்தும் வண்ணம் வீழ்த்தும்.

இதன் விளைவால், சோழனின் வினைப் பரிசாக அவன் கழுத்தில் பெரிய கட்டி உருவானது. அதிலிருந்து புழுக்களாகிய கிருமிகள் வெளிப்பட்டன. பின்னர் இதுவே அவன் அடையாளமாகி அவனை கிருமி கண்ட சோழன் என்று எல்லோரும் அழைக்கக் காரணமானது. கூடவே அவனுக்கு வயிற்று வலியும் ஏற்பட்டது. மருத்துவர்களாலும் அவன் நோயைக் குணப்படுத்த முடியவில்லை. ஒருநாள் அவன் துடிதுடித்து இறந்திட, அவனுக்குப் பின் வந்த அவன் எல்லோரையும் சமமாகக் கருதி, கோயில் நிர்வாகத்தை உரியவர்களிடம் ஒப்படைக்கச் செய்தான்.

அத்துடன் அவன் தன் தந்தையின் தவறுக்குப் பரிகாரம் காணவும் விரும்பினான். இந்தச் செய்தி, ஶ்ரீராமாநுஜரிடம் தெரிவிக் கப்பட்டது. மாறொன்றில்லா மாருதியாண்டான் என்பவர் மூலமாக ஶ்ரீராமாநுஜர் இதை அறிந்து, திருமலை வழியாக திருவரங்கத்துக்கு திரும்ப வந்தார்.

திருமலையிலே ஶ்ரீராமாநுஜர் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிகுந்த செயலைச் சாதித்தார். முந்தைய சோழனால் தில்லை நகரமாம் சிதம்பரத்திலிருந்து நீக்கப்பட்ட கோவிந்தராஜனை திருமலை அடிவாரத்தில் பிரதிஷ்டை செய்து கோயிலெழுப்பி, தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவரில் பலருக்கு தீட்சையளித்து அந்த ஆலயத் துக்கு அவர்களையே நியமித்தார். பிறகு திருவரங்கம் வந்தார்.

அங்கிருந்து, திருமாலிருஞ்சோலைக்குச் சென்று கூரத்தாழ்வானை ஆரத்தழுவி மகிழ்ந்தவர், பின் அவரோடுதான் திருவரங்கத்துக்குத் திரும்பினார். இவர்கள் இருவரும் வந்துவிட்டதை அறிந்த சோழனும் திருவரங்கம் வந்தான். எம்பெருமானாரைச் சேவித்து கோயில் அதிகாரம் உள்ளிட்ட சகலத்தையும் அவருக்கு ‘தான சாஸனம்’ செய்து அளித்தான். இந்தச் சம்பவம் உலகறிய வேண்டி, ஆரியபட்டாள் வாசலில் கல்வெட்டாகவும் பதிக்கப்பட்டது. ஶ்ரீராமாநுஜரின் வீர்யமிகு செயல்பாடுகள் மீண்டும் தொடங்கின!

- தொடரும்.

மீதமாகும் எண்ணெயை, மீண்டும் விளக்கேற்ற பயன்படுத்தலாமா?

விளக்கு
விளக்கு

! தாராளமாகப் பயன்படுத்தலாம். இயற்கை அளித்த பொருட்களை வீணாக்குவது தவறு. இவற்றை உரிய முறையில் பயன்படுத்துவதே சரி. அதேநேரம் எண்ணெயில் அதிகம் கசடு மண்டி, தூய்மை இழந்திருந்தால் மாற்றிவிடுவது சிறப்பு.? திருவிளக்கில்

? கோயிலில் உடைக்கப்படும் தேங்காய் குடுமியுடன் இருக்கவேண்டுமா?

தேங்காய்
தேங்காய்

! தென்னையில் இருந்து கிடைக்கும் முக்கண் கொண்ட தேங்காய், முக்கண்ணனான ஈசனுக்குச் சமம். ‘உனது குடுமி எனது துயரத்தைத் துடைக்கட்டும்!’ என்ற வேண்டுதலை முன் வைத்து, தேங்காயைப் போற்றும் செய்யுள் ஒன்று உண்டு. உடைக்கும்போது, தேங்காய், குடுமியுடன் இருக்க வேண்டும். உடைத்த பிறகு அதை அகற்றலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism