ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

ரங்கராஜ்ஜியம்

ரங்கராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்கராஜ்ஜியம்

ரங்கராஜ்ஜியம் - இரண்டாம் பாகம்

இப்புவியில் அரங்கேசர்க் கீடளித்தான் வாழியே

எழில் திருவாய்மொழிப் பிள்ளை யிணையடியேன் வாழியே

ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே

அரவரசப் பெருஞ்சோதி யனந்தனென்றும் வாழியே

எப்புவியும் சீரிசைல மேத்த வந்தோன் வாழியே

ஏராருமெதிராச ரெனவுதித்தான் வாழியே

முப்புரி நூல் மணி வடமும் முக்கோல் தரித்தான் வாழியே

மூதரிய மணவாள மாமுனிகள் வாழியே...


ஶ்ரீமணவாள மாமுனிகள் திருவரங்கம் நோக்கி நடக்கையில், வானமாமலையைச் சேர்ந்த அழகியவரதர் என்பவர் வழியிலேயே அவரை இடைமறித்து, மாமுனிகளின் பல்லக்கின் முன் விழுந்து வணங்கி சேவித்து நின்றார். அவர் நின்றவிதமும் அவர் காட்டிய பணிவும் மாமுனிகளை மிகவே கவர்ந்தன.

அழகியவரதரை அருகில் அழைத்து விசாரித்தார். பன்னிருக் காப்போடு தென்பட்ட அழகியவரதர், ``சுவாமி அடியேன் திருநாமம் அழகியவரதன். நான் வானமாமலையில் பிறந்து வளர்ந்தவன். எம் முன்னோர் ஶ்ரீவைணவ மரபில் வந்தவர்கள். அவர்கள் காட்டிய வழியில் ஶ்ரீமந் நாராயணனையே நான் பரம் பொருளாகக் கொண்டு அவன் நாமத்தையே சிந்தித்து வாழ்கிறேன்.

இக்கலியில் என்னதான் பரமபாகவதனாகத் திகழ்ந்தாலும் குருவருள் இல்லாது கடைத்தேற முடியாது என்று என் தகப்பனார் உரைத்துள்ளார். ஆதலால் முதலில் அவரையே குருவாகக் கொண்டிருந்தேன். இப்போது அவரில்லை; பரமபதம் அடைந்துவிட்டார். எனவே உகந்த குருவைத் தேடி, தினமும் அந்த நாராயணனைப் பிரார்த்தித்தேன். ஒருநாள், தங்களிடம் தஞ்சம் அடைவது போல கனவு கண்டேன். அன்று முதல் உங்களைத் தேடிவந்தவன், இன்றுதான் கண்டுகொண்டேன். என்னைத் தாங்கள் சீடனாய் ஏற்று, நான் தங்களுக்குத் தொண்டாற்ற அனுக்கிரஹிக்க வேண்டும்'' என்று பிரார்த்தித்துக்கொண்டார்.

ஶ்ரீரங்கம்
ஶ்ரீரங்கம்

ஶ்ரீமணவாள மாமுனிகளும் அழகிய வரதரின் விருப்பம் அறிந்து, தன் யாத்திரை யில் பங்கேற்றிட பணித்தார். சில தினங்களிலேயே அவருக்குச் சந்நியாச தீட்சையை யும் அருளி, வானமாமலை ஜீயர் என்கிற சந்நியாச நாமத்தையும் சாற்றியருளினார்.

ஶ்ரீமணவாள மாமுனிகளின் சீடர்களில் வானமாமலையாரே முதலாகிறார்.பின் இவரைப்போல பல சீடர்கள் மாமுனிகளின் சிறப்பை உணர்ந்து, அவரைத் தங்களின் ஆசார்யனாக வரித்துக்கொண்டனர்.மாமுனிகள் அழகியவரதர் என்கிற வானமாமலை ஜீயருடன்தான் திருவரங்கத்தை அடைந்தார். அந்தப் பதிக்குள் கால் பதிக்குமுன் காவிரியில் நீராடும் வேட்கையே மாமுனிகளுக்குள் மிகுந்திருந்தது. அதற்கேற்ப, அவரும் அவரின் சீடர் குழாமும் காவிரிக்கரையை அடைந்து நின்றனர். இவர்கள் காவிரிக் கரையில் இருப்பதை அறிந்த திருவரங்கத்து வைணவர்களும் மாமுனிகளின் மகிமையை அறிந்தவர்களாய் பூரணக் கும்பத்துடனும், நிழல்வட்டக் குடை யுடனும், வேத முழக்கங்களுடனும், கோயில் யானை சகிதம் காவிரிக் கரைக்கு வந்து மாமுனிகளை வரவேற்று மகிழ்ந்தனர்.

காவிரியின் மடியில் நீராடிய நிலையில், முதல் காரியமாக அரங்கன் திருச்சந்நிதிக்குச் சென்று அவரை வணங்கிட திருவுள்ளம் கொண்டார் மாமுனிகள். பிறகே, தனக்கென திருவரங்கத்தார் அளிக்கவுள்ள மாளிகைக்குச் செல்வது என்றும் முடிவு செய்தார். அவர் விருப்பப்படியே எல்லாமும் நடந்தன. திருவரங்கக் கோயிலுக்குள் உள்ள சகல சந்நிதிகளுக்கும் மாமுனிகளை அழைத்துச் சென்று சேவை சாதித்தனர் திருவரங்க வைணவர்கள்.

ஶ்ரீரங்கம்
ஶ்ரீரங்கம்

இவ்வேளையில், அழகிய வரதராகிய வானமாமலை ஜீயரையும் அவர்கள் விட்டுவிடவில்லை. குருவுக்கு இணையாக அவரின் சீடரையும் கௌரவித்தனர். பிறகு, பிள்ளைஉலகச்சாரியன், அவரின் தம்பி அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஆகிய இருவரும் வைணவத்திற்கும் திருவரங்கத்திற்கும் ஆற்றிய தொண்டினை அறிந்தும் எண்ணியும் மகிழ்ந்ததோடு, அதுபற்றி அனைவரும் அறியும் வண்ணம் பிரவசனமாகவும் கூறலானார்.

மாமுனிகளின் சிறப்பே அவரது பிரவசனம் தான். ஒரு விஷயத்தை நன்கு கிரஹித்துக் கொண்டு, பின்னர் அதை எளிமையாக பிறருக்கு விளக்குவதில் நிகரின்றித் திகழ்ந்தார் மாமுனிகள். அதனால் அவரின் வசனம் என்றாலே பெரும் கூட்டம் திரண்டதோடு, அந்தக்கூட்டம் நன்கு தெளியவும் செய்தது.

திருவரங்கத்தில் இவர் ஆஸ்ரயித்திருந்த நேரத்தில் மிலேச்ச படையெடுப்பினால் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் பெரிதும் மீதமிருந் தன. சந்நிதிகளின் சேதம் ஒருபுறம் என்றால், வழிமாறிப் போய்விட்ட மாந்தர்கள் மறுபுறம். உயிருக்குப் பயந்து பலரும் மதம் மாறி விட்டிருந்தனர். அவர்களின் பெயர் உடை கலாசாரம் என சகலமும் மாறி போயிருந்தன.

அவர்களை மிலேச்சர்கள் அந்த அளவுக்கு மாற்றியிருந்தனர். அத்துடன் `இனி தாங்கள் சார்ந்த மதமும் கலாசாரமுமே இந்த உலகை ஆளும். ஏனையவை அனாசாரங்கள். அவை வீழ்ந்து படும்' என்று கூறி அவர்களையெல்லாம் சம்மதிக்க வைத்திருந்தனர்.

இதனால் திருவரங்கத் தீவுக்குள் புலால் உண்ணுதல் முதல் விலங்குகளை உணவுக்காக பலி கொடுத்தல் வரை அனைத்தும் நிகழத் தொடங்கியிருந்தன. இவை குறித்து அறிந்த மாமுனிகள், அத்தீவின் புனிதம் காப்பதே தன் முதல் கடமை என்பதையும், அதற்காகவே தன் குருவாகிய திருவாய்மொழிப்பிள்ளை தன்னைத் திருவரங்கம் செல்ல பணித்துள்ளார் என்றும் உணர்ந்துகொண்டார்.

அரங்கனைப் பிரார்த்தித்துக்கொண்டு வழிமாறிய அவர்களையெல்லாம் திருத்தி ஆட்கொள்ள திருவுள்ளம் கொண்டார். அவர்களைத் தேடிச்சென்று திரும்ப அழைத்து, புனர் தீட்சை அளித்து சிறப்பித்தார். அப்படியே ஆலயத் திருப்பணிகளையும் மேற்கொண்டார்.

இவ்வேளையில் ஆலயக் கைங்கரியங்களில் ஈடுபட்டிருந்த உத்தம நம்பி என்பவரின் கைங்கரியங்களில் குறைபாடுகள் இருப்பதை உணர்ந்தார். ஆகவே, தம் சீடர்களில் ஒருவரான பொன்னடிக்கால் ஜீயரிடம் அவரை திருத்தி ஆட்கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார்.

`ஒருவரிடம் பிழை கண்டால் ஒதுங்கிடக் கூடாது. அதை அவர் உணரும்படிச் செய்து திருத்தவேண்டும் என்பதே நம் நோக்கமாகவும் வழிமுறையாகவும் இருக்கவேண்டும்' என்றும் அனைவருக்கும் உரைத்தார்.

அத்துடன் ஶ்ரீராமாநுஜரின் அடியொற்றி தமிழ் பிரபந்தங்களை ஒன்று விடாமல் தொகுப்பது முதல் அதற்கான வியாக்கியானங் களைக் கூறுவதையும் தன் முதல் கடமையாகக் கொண்டார். குறிப்பாக ஶ்ரீராமாநுஜர் தமிழ் பிரபந்தங்களுக்க உரை எழுதவில்லை. அதை  மணவாள மாமுனிகள் தனக்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு,  ராமாநுஜரை மனதில் தியானித்தப்படி உரை எழுதலானார்.

இவரால்தான் இது சாத்தியமாகும் என்பதே இவரின் குருவான திருவாய்மொழிப் பிள்ளையின் விருப்பமாகவும் இருந்தது. இம்மட்டில் அவர் ஒரு கட்டளையையும் மாமுனிகளுக்கு இட்டிருந்தார்.

ஶ்ரீரங்கம்
ஶ்ரீரங்கம்

`ஶ்ரீராமாநுஜரின் ஶ்ரீபாஷ்யத்தை ஒருமுறை பிரச்சாரம் செய்தாலே போதும். ஆனால், ஆழ்வார்களின் பிரபந்தங்களை விடாமல் எடுத்துரைக்க வேண்டும். அந்தப் பிரபந்தங் களே வருங்காலத்தில் வைணவ பந்தமாய், தீப்பந்தமாய் திகழ்ந்து அனைவருக்கும் வழிகாட்டும்' என்று கூறியிருந்தார்.

அதை மாமுனிகள் சத்திய வாக்காக ஏற்று அதன்படியே நடந்தார். இதனாலேயே இவரைப் போற்றும்விதமாய் `மாற்றற்ற செம் பொன் மணவாள மாமுனிகள் வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே!' என்று பிறர் பாடிப்புகழும் நிலை தோன்றிற்று எனலாம்.

குறிப்பாக நம்பிள்ளையின் திருவாய் மொழி 36,000 படி ஈட்டையும் அதன் உள்ளர்த்தங்களையும் அழகிய தமிழில் இவர் விளக்கியதைக் கேட்டு வைணவ உலகமே சொக்கிப்போனது.

தன் ஆதிமூல குருவான ஶ்ரீராமாநுஜர் மேல் கொண்ட பக்தியாலும் ஈடுபாட்டாலும் அவர்பால் இராமாநுஜ நூற்றந்தாதி என்னும் பெயரில் நூறு பாடல்களைப் பாடி அதை காலத்தால் யாரும் மறந்தோ, துறந்தோ விடக்கூடாது என்பதன் பொருட்டு, ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தத்தோடு சேர்த்து, `நாலாயிர திவ்ய பிரபந்தம்' என்று இன்று நாம் அழைப்பதற்கு வழி செய்தார்.

ஶ்ரீராமாநுஜர் பேரால் நூற்றந்தாதி மட்டுமன்றி ‘யதிராஜவிம்சதி’ என்கிற ஸ்லோகத்தையும் இயற்றியருளினார். யதிராஜவிம்சதி, உபதேச ரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, இயல் சாத்து திருவாராதனக்ரமம், ஶ்ரீதேவராஜமங்கலம், ஆர்த்தி பிரபந்தம், ஶ்ரீகாஞ்சி தேவ பெருமாள் ஸ்தோத்திரம் என்று 19 நூல்களை - வைணவ உலகம் செழித்து வளர இயற்றி அருளினார்.

திருவரங்கம் ஏகிய நிலையில் அவர் செய்த இச்செயல்களாலேயே மிலேச்சனின் படையெடுப்பால் நிகழ்ந்த அநாசாரங்கள் மெள்ள மறைந்து மீண்டும் அந்த மண் பொன் மண்ணாய் அரங்க வைகுண்டமாய் மாறியது.

ஒரு திருவரங்கத்தை வளர்த்துக் காத்தால் போதுமா? எம்பெருமான் 108 திருப்பதிகளில் அல்லவா கோயில் கொண்டுள்ளான். இந்தப் பாரத தேசத்தில் அவன் கோயில் கொள்ளாத இடம்தான் ஏது? அங்கெல்லாமும் வைணவம் தழைக்கவேண்டும். அதற்கும் மாமுனிகள் வழி காணலானார். தன் சீடர்களில் எட்டு பேரை தேர்வு செய்து அவர்களை `அஷ்டதிக் கஜங்கள்' என்கிற ஆசார்யர்களாக ஆக்கி, அவர்கள் எட்டுத் திக்கும் சென்று வைணவ நெறியைப் பரப்பிட வழிவகை செய்தார்.

1. வானமாமலை ஜீயர்

2. பட்டர் பிரான்ஜீயர்

3. திருவேங்கட இராமாநுஜ ஜீயர்

4. கோவில் அண்ணா

5. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச் சாரியர்

6. எறும்பியப்பா

7. அப்பிள்ளை

8. அப்புள்ளார்

இவர்களே அஷ்டதிக் கஜங்கள் ஆவர். இப்படி முன்சிந்தையாக பல அறிய செயல் களைச் செய்த இவரே இனி எப்போதும் நம் பெரிய ஜீயர் என்று கருதி, திருவரங்கம் இவரை ‘பெரிய ஜீயர்’ என்கிற நாமத்துக்கும் உள்ளாக்கிற்று.

மாமுனிகளின் இந்தச் செயல்பாடுகளுக்கு எதிர்வினைகளும் இல்லாமல் இல்லை. இவரின் வளர்ச்சியும் கவர்ச்சியும், வைணவத் துக்கு எதிர் கருத்துக் கொண்டிருப்பவர்கள் இடையே பெரும் கோபதாபத்தை உருவாக்கி யிருந்தன. இவர் இருக்கும் வரையில் நம்மால் அங்குலம்கூட நம் கருத்துக்களைப் பரப்ப முடியாது என்கிற ஒரு முடிவுக்கு வந்த அவர்கள், மாமுனிகள் தங்கியிருந்த மாளிகைக்குத் தீ வைத்து சகலரையும் சாம்பலாக்க முடிவு செய்தனர்.

குறிப்பாக மாமுனிகள் இருக்கும் அறை முற்றாக எரிந்து, அவர் சாம்பலோடு சாம்பலாக ஆகிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர். ஒருநாள் இரவு பிரபந்தங்களுக்கான உரையை எழுதிய மாமுனிகள், ஏதோ உள்ளுணர்வின் உந்து தலால், சீடர் பொன்னடிக்கால் ஜீயரை அழைத்தார்.

``இதை நீர் நம் ஓலை திருத்தியிடம் கொடுத்து நாற்புறங்களையும் கத்தரித்து நறுக்கி நன்கு கட்டிக்கொண்டு வாரும். அதோடு இது செல்லரித்திடாது இருக்க, மயில் தூத்த தைலம் கலந்த மருந்தொன்று உள்ளது. அதையும் இதன் மேல் பூசிவிடும்'' என்று கூறி மொத்த ஓலைகளையும் கொடுத்தார்.

பொன்னடிக்கால் ஜீயர் ``இந்த இரவுப் பொழுதில் தாங்கள் இதைச் செய்ய சொல்வது ஏன்? நாளை காலையில்கூட இதைச் செய்யலாமே?'' என்று பணிவோடு கேட்டார்.

ஶ்ரீரங்கம்
ஶ்ரீரங்கம்
CHAO-FENG LIN

அப்போது ஒரு புன்னகையை மட்டுமே உதிர்த்த மாமுனி ``சீயரே... எப்போதும் குருவானவர் ஒரு கட்டளை இடும்போது, அதில் ஒரு அகக் காரணம் இருக்கும் என்ப தைப் புரிந்துகொள்ளுங்கள். அது பின்னர் தெரியவரும். என் உள்ளத்தில் இன்று இனம் புரியாத ஒரு சலனத்தை உணர்கிறேன். என் கடமைகளில் இன்று எந்தக் குறைவும் இல்லை. இருப்பினும் மனதில் சலனம் ஏற்படு கிறது என்றால், புறத்தில் ஏதோ ஒன்று என் பொருட்டு நிகழ்ந்தபடி இருக்கிறது என்பதே பொருளாகும். அதனாலேயே இவற்றை இப்போதே உம் வசம் ஒப்பவித்துக் காத்தருள வேண்டினேன்'' என்றார்.

அதன்பின் பொன்னடிக்கால் ஜீயர் மறுமொழி பேசாது மாமுனிகளின் வாச அறையில் இருந்த சகல கிரந்த பிரபந்தங்களை யும் எடுத்துச் சென்றார். அவ்வேளையில், அவர் மனைக்கு தீ வைக்க எண்ணிய எதிர் தரப்பினர், திருமண் காப்பிட்டுக் கொண்டு குரு தரிசனம் செய்ய காத்திருப்போர் போல், மாளிகையைச் சுற்றித் திரிந்தனர்.

பின்னர் தங்களின் திட்டப்படி நடுநிசியில் மாளிகையைச் சுற்றி வந்து தீயிடவும் செய்தனர். மாளிகையும் பற்றி எரிந்தது. இதனால் அலறி அடித்துக்கொண்டு வந்த அக்கம்பக்கத்தவர்கள் தீயிட்டவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்துவிட்டனர். மறுபுறம் தீயை அணைக்கவும் முயன்றனர். அப்போது ஓர் அதிசயக் காட்சி ஒன்றையும் கண்டனர்.

மாமுனிகளின் அறை திகுதிகுவென எரிந்தபடி இருக்க, அந்த அறையின் கழிவறை துவாரம் வழியே ஒரு ராஜநாகம் வெளிப்பட்டு எல்லோரும் பார்த்திட வெகுதூரம் சென்று இருளில் மறைந்தும் போயிற்று. இதைக்கண்ட சிலர் வியந்திட, வேறுசிலரோ மாமுனிகள் தீக்கிரையாகிவிட்டதாகக் கருதி கண்ணீர் சிந்தினர்.

பொழுது விடிந்தபோது, மாளிகை முற்றாக சாம்பலாகியிருக்க, மேனிமேல் சற்றே கரித் தீற்றல்களோடும் கைவசம் தண்டமுடனும் மாமுனிகள் அங்கு வந்து நின்றார்.

- தொடரும்...