திருத்தலங்கள்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 81

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

திருவரங்க சரிதம்

த்திகிரியருளாள ரனுமதியோன் வாழியே

ஐப்பசியில் திருவோணத் தவதரித்தான் வாழியே

முத்திநெறி மறைத் தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே

மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே

நித்தியம் நம் பிள்ளை பதம் நெஞ்சில் வைப்போன் வாழியே

நீள்வசன பூடணத்தால் நியமித்தான் வாழியே

உத்தமமாம் முடும்பை நகருதித்த வள்ளல் வாழியே...

உலகாரியன் பதங்களூழி தொலும் வாழியே...

 - பிள்ளைலோகாசார்யர் வாழித் திருநாமம்.


``ங்கும் அவன் வியாபித்திருந்தாலும்… பசுவின் உடலிலுள்ள அதன் பால், மடிக் காம்புகளின் வழியாக வெளிப்படுவது போல், இறைவனின் பேரருள் திருவரங்கம், காஞ்சி, திருமலை, திருவஹீந்திரபுரம் என்று தலங்கள் வழியாக வெளிப்படுகிறது. இதில் திருவரங்கம் இதயம் போன்றது.

இதயத் துடிப்பு நின்று போனால், உடம்பில் மற்ற பாகங்கள் செம்மையாக இருந்தாலும் பயனில்லை. அதேவேளை, மற்ற பாகங்களில் ஏதாவது குறை இருந்தபோதிலும் இதயம் சீராக இயங்கும்பட்சத்தில், அந்தக் குறையைக் காலத்தால் சரி செய்துவிடலாம். என் வரையிலும் திருவரங்கம் இதயம் போன்றது. காஞ்சி எனக்கு ஒரு கண் என்றால், திருமலை இன்னொரு கண். திருவஹீந்திர புரம் என் மூச்சுக்காற்று. இப்போது இதயத்தில் பிரச்னை!

முன்பும் திருவரங்கம் மிலேச்சக் கூட்டத்தால் கொள்ளைக்கு ஆளானது. அப்போது ராமாநுஜர் இருந்தார். அவர், மிலேச்சர்களால் கவர்ந்து செல்லப்பட்ட அழகிய மணவாளப் பெருமாளையும் சேரகுலவல்லித் தாயாரையும் டெல்லிக்கே சென்று மீட்டு வந்தார்.

இப்போது மீண்டும் அதேபோல் ஒரு சோதனை. சோதனையில் நான் என்ன செய்யப் போகிறேன் என்று பார்க்கப் போகிறான் வரதன்.

திருவரங்கத்தில் உள்ள மூர்த்தி ஆதிமூர்த்தியா வார். பிரம்மன் வழிபட்ட மூர்த்தி அவர்.  காஞ்சி வரதனோ பிரம்மன் வேள்விப் பயனாக பெற்ற மூர்த்தி. இப்போது பெரும் சோதனை திருவரங் கத்துக்கே. திருவரங்கத்தைக் காப்பாற்றி விட்டால், மற்ற தலங்கள் தானாகவே காக்கப் பெற்றிடும்.’’

தேசிகன் அளித்த விளக்கத்தால் கிருஷ்ண பாண்டனுக்குத் தெளிவு பிறந்தது!

ரங்கநாதர்
ரங்கநாதர்திருவரங்கம்!

அந்த இரவுப் பொழுதில், காட்டழகிய சிங்கர் சந்நிதியின் புற மண்டபத்துக்கு, அளவில் பெரிய மரப்பெட்டி ஒன்று பூட்டுப் போடப் பட்ட நிலையில், சிலரால் எடுத்துவரப்பட்டிருந் தது. கூடவே சில தச்சர்களும் இருந்தனர். அவர்கள் வசம் இழைக்கப்பட்ட மரத்துண்டு களும் பலகைகளும் இருந்தன.

அவர்களை வரவேற்ற பிள்ளை லோகாசார்யர், தன் தள்ளாத முதுநிலையிலும் அவர்களிடம் திடமாக உரையாடினார். அவர் களோடு பிள்ளைலோகாசார்யரின் சகோதரர் அழகிய மணவாளப் பெருமாள் இருந்தார். மேலும் மணப்பாக்கத்து நம்பி, கோட்டூர் அண்ணன் சொல்லிக் காவலதாசன், திருக் கண்ணக்குடிப் பிள்ளை ஆகிய பல சீடர்களும் உடனிருந்தனர்.

தச்சர்களிடம் பிள்ளை லோகாசார்யர், ``கவனமாகச் சென்று அளவெடுத்து வர வேண்டும். இது உங்களுக்குக் கிடைத்திருக்கும் பெரும் பாக்கியம்’’ என்றார்.

திருவரங்கச் சந்நிதிக்குள் உற்சவ மூர்த்தியா கக் கோயில்கொண்டிருக்கும் அழகிய மணவாளனை அளந்து, அதற்கேற்ப பெட்டி செய்யவேண்டும். அதற்காகவே அவர்கள் வந்திருந்தனர். ஏற்கெனவே கைவசம் இருக்கும் பெட்டி, சாளக்ராமம் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் மற்றும் பாத்திரங்களை வைத்துக் கொள்ளவும், அவர்கள் செய்யப் போகும் புதிய பெட்டி, அரங்கனைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்காகவும் பயன்படும்.

அவ்வேளையில், உத்தமன் என்பவன் ஒரு மணிப் புறாவுடன் வந்து சேர்ந்தான். அவன் பிள்ளைலோகாசார்யரின் திருமுன் தரையில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான். பின்னர் ``வேதாந்த தேசிகர் திருவரங்கத்தின் எல்லையை எட்டிவிட்டார்; சமயபுரத்துக்கு அருகே வந்துவிட்டார்’’ என்றான்.

அதைக் கேட்டதும் பிள்ளை லோகாசார்யர் முகத்தில் ஒரு பிரகாசம்.

``வரதனின் துணை கிடைக்கப்போகிறது. பேரருளாளனின் சகாயம் பொங்கி வழியப் போகிறது. நீங்கள் எல்லோரும் வேகமாய்ச் சென்று அளவெடுத்து வாருங்கள்’’ என்றார் மிக உற்சாகமாய்!

அவர்களும் அந்த இரவில் அளவுக் கருவி களை மடியில் மறைவாகக் கட்டிக் கொண்டு, திருவரங்கத் திருவீதிகளுக்குள் மெள்ள நுழைந்தனர். வடக்கு வாயில் வழியாக உள்ளே சென்று, பின் தெற்கு வாசல் வழியாக உட்புகுந்து, நேராக திருச் சந்நிதிக்குள் நுழைய வேண்டும்.

மிலேச்ச பயத்தால் கதவுகள் தாழிடப்பட்டுப் பெரும் பாறைகளைக் கொண்டு எளிதில் கதவு களைத் திறக்கமுடியாதபடி செய்யப் பட்டிருந்தது. பல இடங்களில் நுழைவாயில்கள் மூங்கில் சாரங்களால் மூடப்பட்டிருந்தன. அவற்றின் முன்னால் அந்த வாயில்களின் இருப்பு தெரியாதபடி வைக்கோல் போர் குவிக்கப்பட்டிருந்தது.

வெள்ளைக் கோபுரம் மற்றும் கிழக்குக் கோபுரத்திம் மீது இருந்தபடி பிள்ளை லோகாசார்யரின் சீடர்கள் மிலேச்சப் படைகள் வருவதைக் கண்காணித்தபடி இருந்தனர்.

அன்று மாலைப் பொழுதில், திருவரங்க வேடுபரி வேட்டை நடக்கும் மணல் தளத்தில், பிள்ளைலோகாசார்யர் தலைமையில் ஒரு சங்கக் கூட்டம் நடந்திருந்தது. அதில் ஐயாயிரம் வைணவ தாசர்கள் பங்கேற்றிருந்தனர். அப்போது பேசிய பிள்ளை லோகாசார்யர் நிறைவாகக் கூறியது ஒன்றைத்தான்.

``உயிரைக் கொடுத்தேனும் அரங்கனைக் காப்போம். அரங்கத் திருமேனிமேல் தூசி படக்கூட அனுமதியோம். முன்னிலும் தீவிர மாக அரங்கனின் திருநாமம் உரைப்போம’’[. என்றவர் ``ரங்கா...’’ என்று உரத்தக் குரல் எழுப்ப, `ரங்கா’ என்று ஒட்டுமொத்த கூட்டமும் ரங்க நாமம் முழங்கியது.

மாலைவேளையில் இப்படியான ஆர்ப்பரிப் புடன் திகழ்ந்த ஆலயவெளி, இப்போது தச்சர்கள் உள்நுழைய காத்திருந்தது.

தச்சர்கள் வைணவக் குடியிருப்பு மிகுந்த தெருக்களில் நடந்தனர். பல குடியிருப் புகளுக்கு வெளியே புரவிகள் கட்டப்பட்டிருந்தன. உள்ளே புலால் சமைக்கும் வாடை மூக்கை நிரவிற்று. அங்கிருந்தவர்கள் வெளியேறிவிட்ட நிலையில், வாய்ப்பு கிடைத்த இடத்திலெல்லாம் சுல்தானின் படைகள் உட்புகுந்து இருந்தனர்.

மேலும் பெரும் படை வந்து கொண்டிருப்ப தாகத் தகவல். அது திருவரங்கத்தை நெருங்கி னால்… அவ்வளவுதான்... அவர்களின் இலக்கு ஆலயத்தை நிர்மூலமாக்குவதுதான்!

அடுத்து அவ்வளவு பேரையும் கைது செய்வார்கள். எவர் மிலேச்ச ராஜ்ஜியத் திற்கு  உடன்படுகின்றனரோ, அவர்களை விடுவித்து அவர்களுக்குப் பரிசுகளும் பதவிகளும் வழங்கப்படும். ஏற்றுக்கொள்ள மறுப்போரைச் சிரச்சேதம் செய்வார்கள்.

இதுவே மிலேச்சர்களின் திட்டம் என்பதாக ஒரு கருத்து ஊர் முழுக்கப் பரவி இருந்தது.  

அங்ஙனம் பெரும்படை திருவரங்கத்தை அடைந்து, அது கோயிலை நிர்மூலமாக்கும் முன், அனைத்துத் திருச்சந்நிதி மூர்த்திகளையும் இடம் மாற்றி விடவேண்டும். அரங்கனின் சொத்தில் செப்புக் காசைக் கூட மிலேச்சன் கொண்டு சென்றுவிட இடம் கொடுத்துவிடக் கூடாது.

தங்கக் குடங்களில் தொடங்குகிறது அவனு டைய பொக்கிஷங்கள்!

ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்தாடங்கம் என்ன… காசுமாலை என்ன… தங்கப் பூணூல் என்ன… இன்னும் நவரத்தினக் கிரீடம், ஆரம் சேரம் பூண், தோள்வளை, மணிக்காப்பு, புல்லாக்கு, ஒட்டியானம், சூரிய பிரபை, சூடாமணி, சூளாமணி, சூழி, சேகரம், தலைப்பட்டம், புல்லகம், சூடிகை, பொற்றாமரை முகச்சரம், கொப்பு, ஓலை, கொந்திளவோலை, டோலாக்கு செவிப்பூ, தண்டட்டி, நெல்லிக்காய் மாலை, கடுமணி மாலை, மாங்காய் மாலை, காரைப்பூ  அட்டிகை, கண்டசரம், கோதை மாலை, கோவை பவழத்தாலி, மாம்பிஞ்சுக் கொலுசு, அத்திக்காய் கொலுசு, கான்மோதிரம், பாம்பாழி, சதங்கை, அரைஞாண்கொடி, வீரவளைப் பதக்கம், குண்டலம் என்று அவற்றின் பட்டியல் மிக நீளமானது.

அரங்கனை வணங்கிப் பணிந்து அரசர் பெருமக்கள் உவந்து கொடுத்த எளிய காணிக்கைகள் அவை. அவை எல்லாவற்றையும் பாதுகாத்திட வேண்டும். மணப்பாக்கத்து நம்பியுடன் கோட்டூர் அண்ணனும், சொல்லிக் காவலதாசனும் தச்சர்களுடன் நடந்து செல்கையில், எம்பெருமானின் திருமேனிச் செல்வங்களை எப்பாடு பட்டேனும் காத்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

ஒருவழியாக அவர்கள் உள்ளே சென்று திருச்சந்நிதி முகப்பை அடைந்தனர். திருச்சந்நிதியின் முன் மறைப்புச் சுவர் கட்டி முடிக்கப்பட்டு, திட்டிவாசல் அளவுக்கு சிறு நுழைவு வழி மட்டும் அந்தச் சுவரில் விடப் பட்டிருந்தது.

கோஷ்டியாக ஒரு நாற்பது பேர் நின்று பிரபந்த பாசுரங்களைப் பாடி வணங்கும் ஓர் இடம்... இன்று சுவரால் மூடப்பட்டுவிட்ட நிலை, கண்களில் நீரை வரவழைத்தது.

கோட்டூர் அண்ணன் தேம்பி அழலானார். சொல்லிக்காவல தாசரோ தலையில் அடித்துக் கொண்டார். மணப்பாக்கத்து நம்பி மனத்தைத் தேற்றிக்கொண்டு, தச்சர்கள் உற்சவ மூர்த்திப் பெருமாளாகிய அழகிய மணவாளனை அளந்து எடுக்க ஒத்தாசித்தார். உலகை அளந்த வனை அந்த வேளையில் அவர்கள் அளந்தனர். முன்னதாக தொழுது விழுந்தனர்.

``எம்பெருமானே உன்னைப் பாதுகாக்கவே பெட்டியைச் செய்யவுள்ளோம். மீண்டும் நீ இங்கே எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தரும் நாள் வரையிலும், நாங்கள் எங்கள் கையால் ஒரு மரத்துண்டைக் கூட தொட மாட்டோம். நாங்கள் இயங்கவேண்டும் என்றால், நீயும் இங்கே இயங்கியாக வேண்டும்’’ என்று பிரார்த்தித்துக் கொண்டனர் அந்தத் தச்சர்கள். பின், அங்கிருந்து தீப்பந்த ஒளி வழி காட்ட புறப்பட்டனர். கிளி மண்டபம் அருகில் நின்று கோபுர விமானத்தை ஒரு பார்வை பார்த்தனர். விண்ணில் நட்சத்திரங்களுடன் நிலாத் துண்டு தென்பட்டது. `இனி எப்போது இங்கே இப்படி நின்று சேவிப் போமோ’ எனும் ஏக்கத்துடன் அவர்கள் புறப்பட்டனர்.

திருவரங்க எல்லை. காலை வேளை!

கிருஷ்ண பாண்டன் ரதத்தைச் செலுத்திக் கொண்டிருந் தான். ஆங்காங்கே புரவிகளும் மிலேச்சர்களும் கண்ணில் பட்டனர். கிருஷ்ண பாண்டனுக்குள் அச்சம் எழுந்தது. எங்கே… தடுத்து நிறுத்தப்படுவோமோ என்கிற சந்தேகம் எழவும், திரும்பி தேசிகனைப் பார்த்தான்.

``அச்சமின்றி செல் பாண்டா. நான் இப்போது காப்புக் கவசம் சொல்லிக்கொண்டிருக் கிறேன். மிலேச்சர்கள் பார்த்தாலும் அவர்களுக்கு நாம் விரோதிகளாகத் தெரியமாட்டோம்’’ என்றார் தேசிகன். அந்த நொடியில், அவர் ஒரு சுத்த ஸ்வயம் பிரகாசர் என்பதுடன், யந்த்ர - மந்த்ர - தந்திரங்களைக் கசடறக் கற்றுத் தெளிந்தவர் என்பதும் கிருஷ்ண பாண்டனுக்குப் புலனாயிற்று.

தேசிகன் சொன்னபடியேதான் ஆயிற்று. அவர்களின் ரதத்தை எங்கும் எவரும் கண்டுகொண்டதாகவே தெரிய வில்லை. ஓரிடத்தில், தேசிகனை அழைத்துச் செல்ல பிள்ளை லோகாசார்யரால் அனுப்பப் பட்டிருந்த அனந்த பத்மன், விக்கிரமதாசன் ஆகியோர் நின்றிருந்தனர். அவர்கள் புரவி ரதத்தை அடையாளம் கண்டுகொண்டு, பிள்ளைலோகாசார்யர் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தேசிகன் திருவரங்க வீதிகளைப் பார்த்தவாறே பயணித்தார். திருமண் காப்புடன் காவிப் பூசப்பட்டு, முல்லைக்கொடி படர்ந்த வாசல்களுடன் கூடிய - மாக்கோலம் துலங்கும் வீடுகளுடன் எழிலோடு காட்சி தரும் திருவரங்க வீதிகள் அன்று சோபையிழந்து கிடந்தன.

- தொடரும்...

மருதமலையின் விசேஷம்!

மருதமலை
மருதமலை


சத்-சித்-ஆனந்தம் எனும் அற்புதத் தத்துவத்தை உணர்த்துவது சோமாஸ்கந்த திருவடிவம் என்கின்றன ஞானநூல்கள். அம்மை-அப்பனுக்கு நடுவில் முருகன் அருளும் இந்தத் திருவடிவைத் தியானித்து வணங்கினால் இல்லறம் இனிமையாகும் என்பது நம்பிக்கை.

முருகன் தலங்களில் மருத மலை சோமாஸ்கந்த அம்சமானது என்பார்கள் பெரியோர்கள்.

ஆம்! இத்தலத்தின் அருகிலுள்ள வெள்ளியங்கிரி ஈசனின் அம்சம்; நீலி மலை அம்பிகையின் அம்சம். இரண்டுக்கும் நடுவிலுள்ள மருதமலையில் முருகன் அருள்கிறான். ஆகவே இந்த அமைப்பு சோமாஸ்கந்த அமைப்பு என்று சிறப்பிப்பார்

`ராம நாமம் போதுமே!'

ராமா ராமா
ராமா ராமா


காந்திஜி ஒருமுறை, `அம்கி' எனும் ஊரில் தங்கியிருந்தார். அப்போது ஆட்டுப்பால் கிடைக்காததால், காந்திஜி தேங்காய்ப் பால் குடிக்க நேர்ந்தது. இதனால் அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்துவிட்டார் காந்திஜி. இதைக் கண்டு பதறிப்போன மதுபென், ``டாக்டர் சுசீலாவை உடனே அழைத்து வாருங்கள்'' என்று பரபரத்தார்.

அரை மயக்கத்தில் இருந்த காந்திஜி, ``வேண்டாம்! அதற்கு பதில், `ராமா ராமா...' என்று சொல்லு போதும். ராமனே சிறந்த மருத்துவன். என் ஒருவனுக்காக டாக்டர் சுசீலா இங்கு வந்துவிட்டால், அவரை நம்பி காத்திருக்கும் நோயாளிகள் ரொம்பவே அவதிப்படுவார்கள்'' என்றாராம்!

அவர் சொன்னபடியே `ராம் ராம்' என்று தொடர்ந்து ஜபித்தனர். காந்திஜியும் குணம் அடைந்தாராம்.

- எஸ்.மாரியப்பன், தேனி