மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 34

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

மாப்பிள்ளையாய் வந்த நாராயணனின் கால்விரல் மெட்டியைக் கழற்றுவதற்காக முயன்ற நீலன், அதன்பொருட்டு அவரின் பாதங்களைப் பற்றியதும், அவனுக்குள் பலவிதமான ரசவாதங்கள்; இனம்புரியாத பரவசத்தை உணர்ந்தான்!

செங்கமலத்து அயனனைய மறையோர்காழிச்

சீராம விண்ணகர் என் செங்கண் மாலை

அங்கமலத் தடவயல் சூழ் ஆலிநாடன்

அருள்மாரி அரட்டமுக்கி அடையார் சீயம்

கொங்குமலர்க் குழலியர் வேள் மங்கைவேந்தன்

கொற்றவேல் பரகாலன், கலியன் சொன்ன

சங்கமுகத் தமிழ் மாலை பத்தும் வல்லார்

தடங்கடல் சூழ் உலகுக்கு தலைவர் தாமே!

- பெரிய திருமொழி

மாப்பிள்ளையாய் வந்த நாராயணனின் கால்விரல் மெட்டியைக் கழற்றுவதற்காக முயன்ற நீலன், அதன்பொருட்டு அவரின் பாதங்களைப் பற்றியதும், அவனுக்குள் பலவிதமான ரசவாதங்கள்; இனம்புரியாத பரவசத்தை உணர்ந்தான்!

``என்னவாயிற்று நீலா’’ - மாலவன் கேட்டார்.

“என்னவோ தெரியவில்லை. என்னுள் இனம்புரியாத பரவசம்.”

“அப்படியானால் மெட்டி வேண்டாமா?”

“வேண்டும் ... வேண்டும்...”

“அப்படியானால் கழற்றிக்கொள்.”

அதற்கு மேலும் தாமதிக்காமல், கழற்றத் தொடங்கினான். அது வரவில்லை. வழுக்கிற்று, சறுக்கிற்று, உறுத்திற்று... சாதாரண மெட்டி!

நிமிர்ந்து எம்பெருமானைப் பார்த்தான். பெருமான் முகத்தில் குறுநகை. ‘இன்னுமா கழற்றுகிறாய்’ என்று கேலியான கேள்வி, அவர் பார்வையில்!

கைவிரல்கள் தோற்ற நிலையில், வேறொரு உத்தி. வாயால் பற்றி இழுக்க முனைந்தான். பார்த்துக்கொண்டிருந்த பிராட்டிக்கே சிலிர்த்தது. எம்பெருமானுக்கோ அவன் எச்சில் பாதங்களில் அமுதமாய் இனித்தது. மெட்டியும் கழன்றது.

`கால் மெட்டியைக் கழற்றவே இந்தப் பாடு என்றால், நீயெல்லாம் எப்படி இந்த நிலத்தை ஆள்கிறாயோ' என்பதைப்போல் எம்பிரான் பார்க்க, மெட்டியையும் சேர்த்து மூட்டைக்கட்டிக் கொண்டு தூக்க முயன்றான் நீலன். இங்கே ஆரம்பமானது நாடகத்தின் அடுத்த கட்டம்.

ரங்க ராஜ்ஜியம் - 34

மூட்டையைத் தூக்கவே முடியவில்லை. மலை போல் கனத்தது. முக்கி... முனகி... எப்பாடுபட்டும் தூக்கமுடியவில்லை. நீலனுக்குள் இப்போது ஒரு கேள்வி. இவன் வழக்கமான மானுடன் அல்லன்; சாமான்யனும் அல்லன். எனில், மாயாவியோ! கேள்வியோடு நிமிர்ந்த நீலன் உற்றுப்பார்த்தான்.

“என்னப்பா, அப்படிப் பார்க்கிறாய்?”

“யார் நீ?”

“நான் யாரா... பார்த்தால் தெரியவில்லை. மாப்பிள்ளையப்பா...”

“இல்லை நீ மாயாவி!”

“அப்படியும் சிலர் சொல்வார்கள்.”

“விளையாடாதே!”

“யார்... நானா விளையாடுகிறேன்.”

“ஆம்! மாய விளையாட்டு... என்ன மந்திரம் போட்டாய்?”

“மந்திரமா..?”

“இந்த மூட்டையை என்னால் தூக்கமுடிய வில்லை. ஆனால், போர்க்களத்தில் நான் யானை யையே தூக்கி வீசியவன்”

“ஒருவேளை, இப்போது வலிமை குன்றி விட்டதோ என்னவோ?”

“விளையாடாதே... வந்த நொடி முதலே உன்னை உணர்கிறேன். நீ சாமான்யனல்லன்!”

“என்னை என்னதான் செய்யச் சொல்கிறாய்?”

“இந்த மந்திரக்கட்டு நீங்க வழி சொல்.”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. மந்திரமா வது மாங்காயாவது.”

“இல்லை. நீ ஏதோ மந்திரம் போட்டிருக்கிறாய்.”

“விடமாட்டாய் போலிருக்கிறதே... சரி, காதைக் கொடு. உனக்கு ஒரு மந்திரத்தை உபதேசிக்கிறேன். அது இந்த மூட்டையை மட்டுமல்ல, உன் பிறவி எனும் மூட்டையைக்கூட தூக்கிவீசச் செய்து விடும்.”

“அப்படி ஒரு மந்திர உபதேசத்துக்காகவே நான் காத்திருக்கிறேன். எனக்கு எல்லாம் கிட்டியது. ஆனால் அது மட்டும் கிட்டவில்லை.”

“உலகிலேயே மேலான எல்லாவற்றையும் ஒரு சொல்லில் தருவது அஷ்டாட்சரம்தான். அதை நான் அறிவேன்.”

“அப்படியா... அதற்காகத்தான் நானும் காத்திருக்கிறேன். எனக்கு அது கிடைக்குமா!”

“காதைக் கொடு என்று நான் கூறிவிட்டேனே!”

நீலன் காதைக் கொடுத்தான். எம்பெருமானும் தன் பெயரை தன் வாயால் தன் பக்தனுக்காகத் தன்னையே குருவாக மாற்றிக்கொண்டு உபதேசித்தார்.

“ஓம் நமோ நாராயணாய!”

அந்த நொடி நீலனுக்குள் பரவசம். கண்களில் ஆனந்த பாஷ்யம். எம்பெருமான் சொன்னதை மெய்யுருகச் சொன்னபடி, மூட்டையைத் தூக்கினான். பஞ்சு மூட்டைபோல இருந்தது!

நன்றி கூறுவதற்காக அவன் நிமிர்ந்தபோது, எம்பெருமானும் மகாலட்சுமியும் கருடன்மீது அமர்ந்தபடி திருக்காட்சி அளித்தார்கள்.

“எம்பெருமானே! நீயா மாப்பிள்ளையாக வந்தாய். உன் பாதுகைகளையா நான் பற்றினேன். எத்தனை பெரிய பாக்கியசாலி நான்...” நீலன் உருகினான்.

“உண்மை நீலா. தன் பொருட்டு பக்தி புரிவோர் மத்தியில், தன்னையே பணயம் வைத்து நீ புரிந்த பக்தி போற்றத்தக்கது. நீ என் ஆழமான பக்தனாகியிருக்கிறாய். உனக்கு என்ன வேண்டும்?”

சிலவிநாடிகள் தடுமாறிய நீலன், “எம்பெருமானே! என் திருவாலி நாட்டு மக்கள் பசியின்றி இருக்கவேண்டும். அவர்கள் பொருட்டு மழை வேண்டும். களவுக்கு இடமின்றி நான் வாழ நின் அருள் வேண்டும்.”

நீலன் அப்போதுகூட முக்தி வேண்டும், மோட்சம் வேண்டும் என்று கேட்கவில்லை. தன்னை அவன் நினைக்கவே இல்லை. தன்னைத் துளியும் எண்ணாது நாடு, மக்கள் என்றே வரம் கேட்ட நீலனைப் பெருமிதத்துடன் பார்த்தான் எம்பெருமான். பெருமாட்டியோ “நீலா, உனக்கென நீ எதையும் கேட்கவில்லையே…” என்று எடுத்துத் தந்தாள்.

“அம்மா! எனக்கிருப்பதெல்லாம் ஓராசைதான்! அது என் தாயும் தந்தையுமான நீங்கள் கோயில் கொண்டிருக்கும் தலங்களுக்கெல்லாம் சென்று, அங்கே சேவிதம் புரியவேண்டும். அப்போது, என்னுள் பொங்கிடும் பக்தி உணர்வை என் மொழியாம் செழுந்தமிழாலே பாடி மகிழவேண்டும்!”

“எனில், எங்களோடு வைகுண்டம் வர உனக்கு விருப்பமில்லையா?”

“ஆஹா... எத்தனை பெரிய பாக்கியசாலி நான். எனக்கு வைகுண்டத்தில் இடமா?”

“உனக்கங்கு இடமில்லை என்றால், அது வைகுண்டமாகாது நீலா. வைகுண்டம் என்பது பரமபாகவதர்களின் வாசஸ்தலம்.”

“என்ன ஒரு தித்திப்பான வார்த்தை! அம்மா... இவ்வுலகில் பிறந்த உயிர்களின் இலக்கே வைகுண்ட வாசம்தான். ஆயினும், அங்கே நான் திருப்பணிகள் செய்ய வாய்ப்பு இருக்குமா?”

“திருப்பணியால் தேடி அடையும் இடத்தில், திருப்பணிக்கு ஏது இடம்? அங்கே பசியில்லை, தாகமில்லை, வியர்வையில்லை, அழுக்கில்லை. இவையெல்லாம் உடலுக்கு என்றால் உள்ளத் துக்கோ சலனமில்லை, துக்கமோ துயரமோ எதுவுமில்லை…”

“அப்படியென்றால், உம்மை நினைக்கத் தேவையே இல்லை என்றாகிவிடாதா?”

“பரமானந்தமே நான்தான்! அதுவாகவே ஆகிவிட்ட பிறகு, எதற்குத் தனியாக ஒரு நினைப்பு?”

“எம்பெருமானே, அந்தப் பரமானந்தத்தை நான் இங்கே உமக்குச் செய்யும் சேவையிலும் அடைய முடியும்தானே?”

“இதுவரை அதைத்தான் செய்தாய். இந்தக் களவேகூட எனக்கான ஒரு மாறுபட்ட சேவைதானே?”

“அதை நான் தொடரவே விரும்புகிறேன். பாவம் இவ்வையகத்து மாந்தர். பசியாலும் பிணியாலும் வருந்துவோர் எவ்வளவு பேர் தெரியுமா. அதுமட்டுமா, எது நல்வழி என்று தெரியாமல் எத்தனை பேர்! நான்கூட அவர்களில் ஒருவனாக இருந்தவன்தானே. எனக்கொரு குமுதவல்லி கிடைத்தாள்; என்னை மடைமாற்றம் செய்வித்தாள். அதுபோல் எல்லோருக்கும் கிடைப்பார்கள் என்று கூற முடியுமா...”

“அதனால்?”

“இம்மண்மிசை வைணவத் தொண்டனாய் நான் தொண்டூழியம் புரிந்து, பிறகு தங்கள் திருவடிகளில் அடக்கமாவதையே விரும்புகிறேன். இப்போது நான் திருந்தியிருக்கலாம். ஆனால், நான் குமுதவல்லியைக் காணும் முன் வாழ்ந்த வாழ்வு துளியும் பொருள் இல்லாத வாழ்வு. அதிகார மமதையோடு மது, மாது என்று வாழ்ந்தவனே நான்! எத்தனை பேரை நான் என் வாளால் கொன்றிருப்பேன் தெரியுமா. எம்பெருமானே... அதையெல்லாம் நினைக்க நினைக்க நெஞ்சம் நடுங்குகிறது. உயிர் என்பது எத்தனை மேலானது. அதைத் தலைமயிரெனக் கருதி வெட்டி வெட்டிக் கொன்ற பாவங்களை நான் அனுபவித்துத் தீர்க்க வேண்டாமா?”

“நீலா, உன் சுயதரிசனம் போற்றுதலுக்குரியது. எப்போது எம் தரிசனம் உனக்கு வாய்த்ததோ, அப்போதே உன் பாவங்கள் தீயினில் தூசாகி விட்டன…”

“அது உன் பெருங்கருணை பெருமானே! ஆயினும் நான் எனும் நீ... நீ எனும் நான்... இம்மண்ணில் தொண்டாற்றவே விரும்புகிறேன். இம்மட்டில் நான் உன் தொண்டனான அனுமன் வழியில் செல்ல விரும்புகிறேன். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக அனுமனை நீ வைகுண்டத்துக்கு அழைத்தபோது, ‘அங்கே யாதொரு பணிக்கும் இடமில்லையென்பதால், பூ உலகமே எனக்கு ஏற்றது’ என்ற அனுமன்வழியே என்வழி.”

“நல்லது… வாழ்க உன் தொண்டுள்ளம், வளரட்டும் உன்னாலே நன்னெறிகள்!”

நீலன் பெருமானை வணங்கிட, எம்பிராட்டி “நீலா… இனி நீ கள்வன் நீலனில்லை. ஒரு மங்கையால் மாணிக்கமான ‘திருமங்கை’ எனும் நாட்டின் மன்னன். அதன்பொருட்டு உன்னை மங்கை மன்னனாக நான் காண்கிறேன்” என்றாள்.

பெருமானோ ஒருபடி மேலேபோய், “தேவி! இந்த மங்கை மன்னனோடு நீயும் சேர்ந்து இரு. அப்படிச் சேர்ந்தால் திருமங்கை மன்னன் என்றாவான். நீலா, இனி நீ திருமங்கை மன்னனாகி நீ விரும்பும் தொண்டினைச் செய். வைகுண்டக் கதவுகள் உன் பொருட்டு எப்போதும் திறந்தே இருக்கும். என் உள்ளம்கவர் கள்வனே உனக்கு என் பூரண நல்லாசிகள்…” என்று அருளினார்.

திருமங்கை மன்னன் பூரித்துப்போனான். அரண்மனை திரும்பியதும் அவனை ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் சொரிந்து பாதம் விழுந்து பணிந்தாள் குமுதவல்லி. ஆனால் அப்போதும் “குமுதா, நான் ஒரு தவறிழைத்துவிட்டேன்” என்று சலனப்பட்டான் திருமங்கை மன்னன்!

- தொடரும்...