Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 43

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

விதியின் ஒரு கணக்கு உயிரைத் தந்தது; இன்னொரு கணக்கு கம்பருக்கு உதவத் தொடங்கியது!

ரங்க ராஜ்ஜியம் - 43

விதியின் ஒரு கணக்கு உயிரைத் தந்தது; இன்னொரு கணக்கு கம்பருக்கு உதவத் தொடங்கியது!

Published:Updated:
ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

வில்லாளரானார்க் கெல்லாமேலவன் வினிதலோருஞ்

செல்லாதிலங்கை வேந்தர்க் கரசெனக் களித்ததேவர்

எல்லாருந் தூசு நீக்கி எழுந்தவரார்த்த போது

கொல்லாத விரதத்தார் தங்கடவுள் கூட்ட மொத்தார்.

- கம்பர்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருச்சிற்றம்பலம்!

ன்பது நுழைவாயில்களோடும் நான்கு பெரும் கோபுரங்களோடும் திகழ்ந்த திருச்சிற்றம்பலம் என்னும் சிதம்பரம், கம்பரை வரவேற்றது. எங்கும் இல்லாதபடி, ஈசன் இங்கே லிங்க வடிவமாய்க் காட்சி தராமல் ஆடல்வல்லோனாய் நாட்டிய கோலத்தில் காட்சி தருவதன் பின்னே பல சிறப்புகள் உண்டு. கம்பர் அந்தச் சிறப்புகளையெல்லாம் எண்ணிக் களித்தவராக, தில்லை நடராசரையும் கோவிந்தராஜப் பெருமாளையும் வணங்கியவராய், தீட்சிதர்களின் தலையாய குருவைப் போன்ற ஒரு முதிய தீட்சிதரைச் சந்தித்து வணங்கினார். அவர், கம்பர் பெருமானை விபூதியிட்டு வாழ்த்தியவராய் வந்த நோக்கை வினவினார்.

“நான் தமிழில் ராமாயணத்தைக் காப்பியமாய் எழுதியதை தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று கருதுகிறேன்.”

“ஆம்! நன்முயற்சி. உங்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் ஆசீர்வாதங்களும் உரித்தாகட்டும்.”

“ஆஹா... என் உள்ளம் பெரிதும் மகிழ்கிறது. தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.”

“உங்களுக்குத்தான் சமயம் சார்ந்தோர் நன்றி கூற வேண்டும்; நீங்கள் கூறத் தேவையில்லை.”

“இது, உங்களின் பரந்த மனத்தைக் காட்டுகிறது. நான் வந்த நோக்கமும் இலகுவாய் ஈடேறிவிடும் என நம்புகிறேன்.”

“அந்த நோக்கம் யாது?”

“நான் எழுதியுள்ள ராமாயணத்தைத் தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரவரும் கேட்டு, அதில் பிணக்குக்கும் சுணக்குக்கும் யாதோர் இடமுமில்லை - அது செம்மை மிகுந்தது என சான்றளித்திட வேண்டும்.”

“கம்பன் தமிழுக்கு அந்தணர் சான்றா?”

“கொம்பன் தமிழேயானாலும் சான்றோர் ஏற்று சிறப்பித்தால் அல்லவா உலகோர் அதை ஏற்று வழிமொழிவார்கள்.”

“உண்மைதான். தாங்கள் இங்கு வந்திருப்பதும் ஒருவிதத்தில் போற்றுதலுக்குரியதே. தமிழின் சிறப்பைப் போற்றும் விதம், எம்பெருமானே வந்து மணிவாசகரின் (மாணிக்கவாசகர்) பொருட்டு அவரின் திருவாசகத்தைப் படி எடுத்துக்கொடுத்த மண்ணல்லவா இது. ‘இப்படிக்கு திருச்சிற்றம்பலம்’ என்று அந்த உலக நாயகன் தமிழில் கையொப்பம் இட்டுச் சிறப்பித்ததும் வேறெங்கும் நடந்திராத அதிசயமல்லவா!”

“தாங்கள் கூறுவதைக் கேட்கும்போது உள்ளம் பூரிக்கிறது. மொழிதான் அறிவின் விழி. அந்த விழி, வழி காண்பதும் கற்பதும் காலகாலத்துக்கும் ஆனதல்லவா?”

“உண்மை. முக்காலத்துக்குமான உண்மை. இப்போது நான் செய்யவேண்டியது என்ன என்று சொல்லுங்கள்...”

“இறைவன் பொருட்டு விண்டிசையிலிருந்து மண்டிசை வந்த மூவாயிரவர் எனப்படுவோர், நான் இயற்றிய ராமாயண காவியத்தைக் கேட்டு ஒருமனதாய்ச் சான்றளிக்க வேண்டும். அதற்குத் தாங்கள் எனக்கு உதவிட வேண்டும்.”

“மூவாயிரவரை ஒரு புள்ளியில் திரட்டுவதா... அது அத்தனை சுலபமில்லையே. சிலர் யாத்திரை யில் இருப்பர். சிலர் அனுஷ்டானங்களில் ஆழ்ந்திருப்பர். ஆகவே, மூவாயிரவரையும் தவறாது பங்கேற்கவைப்பது சாத்தியமில்லையே...”

“தலைமைப் பொறுப்பிலிருக்கும் தங்களால் கூடவா அனைவரையும் கூட்ட இயலாது.”

“இயலும்... ஆனால், அதற்கு ஒரு நிர்பந்தம் மிக முக்கியம். `ராமாயணம் கேட்க வாருங்கள்' என்றால், `சொல்பவர் யார்' என்பது முக்கியம். தாங்களோ இம்மண்ணுக்குப் புதியவர். நீங்கள் இதில் வித்தகர் என்பது இனிதான் தெரியும். இந்த நொடி அது உமக்கு மட்டும்தானே தெரியும்.”

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

“என்றால்... இதற்கு என்னதான் தீர்வு?”

“முயற்சி செய்யலாம். ஆனால், மூவாயிரவரும் தவறாது வருவர் என்று கூற இயலாது. வந்த வரையிலும் போதுமென்றால், நான் இப்போதே தண்டோரா போடச் சொல்கிறேன்.”

“இல்லை. என் காவியம் எப்படி பரிபூரணமானதோ, அதுபோல் இது சார்ந்த செயல்பாடுகளும் பரிபூரணமாகவே இருத்தல் வேண்டும்.”

“அப்படியாயின் அந்த ராமன்தான் உங்களுக்குத் துணை நிற்க வேண்டும். என் சக்தி ஓர் எல்லைக்குட்பட்டதே...”

அம்முதியவரின் கருத்தைக் கேட்டு வெகுநேரம் சிந்தித்த கம்பர், நேராக திருச்சிற்றம்பல ஆலயத்துக்குச் சென்று கோவிந்தராஜப் பெருமா ளின் திருமுன் நின்று மனதார வேண்டலானார்.

“எம்பெருமானே... உன் கருணையை நாடி வந்துள்ளேன். உன்னை என்னுள் வியந்தவன் நான். வியக்கவைத்தவன் நீ! அதிலிருந்தே ‘உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும், நிலை பெறுத்தலும் நீக்கலும், நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையவன் நீ’ என்று உன்னைப் பாடினேன்.

அப்படிப்பட்ட அளவிட முடியாத உன் விளையாட்டுகளில் ஒன்றாகவே, நான் உமது அவதாரத்தைக் காப்பியமாக்கியதையும் அதை அரங்கேற்ற அலையும் இந்த நிகழ்வையும் கருதுகிறேன். சடையப்ப வள்ளலைக் கொண்டு என்னைத் தூண்டிவிட்ட நீ, யாரைக் கொண்டு அரங்கேற்றம் செய்துகொள்ளப் போகிறாய். வைணவரோ, சைவரோ என்னைப் போற்றுவதில் குறையேயில்லை. ஆயினும் அரங்கேறத் தேவைப் படும் சான்றோரின் பார்வை இக்காப்பியம் மேல் விழுவதில் காலம் கடந்துகொண்டே இருக்கிறதே. அரங்கம், அம்பலம் என்று நானும் அலைந்து கொண்டே இருக்கிறேனே...

பேசாமல், இவர்கள் யார் என்னை அங்கீகரிக்க... தவறு தவறு... உன்னை அங்கீகரிக்க என்று கேட்டு விட்டுவிடவா. உனது அங்கீகாரம் போதாதா எனக்கு. அழிவே இல்லாத உன்னிடம் வராமல், அழியப்போகும் - ஒரு நூற்றாண்டுகூட முழுமையாக வாழ இயலாத இவர்களிடம் நான் வந்து நிற்பதுதான் பிழையோ?

என்னை இப்படி கேள்விகளிலேயே வைத்திருப்பது உனக்கு அழகா... என்னுடைய எல்லா கேள்விகளையும் உனது திருமுன் வைத்து விட்டேன். விழித்திருப்போரே தங்களுக்குள் விழிப்பின்றி உறங்கித் திரியும் இவ்வுலகில், உறங்குவதுபோல் எப்போதும் விழித்திருக்கும் நீ அறியாத ஒன்றும் உள்ளதா என்ன?

இனி இந்த ராமாயணம் உன் பாடு. நீ வனத்தில் பட்டதைவிட, இந்த தினத்தில் இது படும்பாடு பெரும்பாடு. இது அரங்கேறி உலகம் உள்ளளவும் சான்றோர்களால் சிந்திக்கப்பட வேண்டும் என்று நீ விரும்பினால், இந்தத் தில்லை வாழ் அந்தணர்களைக் கேட்கச் செய். இல்லாவிட்டால் மணிவாசகனை ஆதரித்த மகாதேவன் போல், எனக்கு நீயே வந்து சான்றளிப்பாயாக!

இது... என் தமிழ், தெய்வத்தமிழ் என்றாயின், முதுமொழி, முதல்மொழி என்பது நிஜமாயின், அதன் மேல் நின்று உன்மேல் நான் செய்யும் சத்தியம்!”

கம்பர் சத்தியம் செய்த கையோடு அப்படியே ஓர் ஓரமாக அமர்ந்துவிட்டார். விரைவில் அவரை உறக்கம் தழுவிக்கொண்டது; உறங்கச் செய்தவன் அந்த கோவிந்தராஜன். அப்படி உறங்கவைத்தவன் அவரின் உறக்கத்துக்குள் கனவிலும் புகத் தொடங்கினான்!

“கம்ப நாடனே! கவலைகொள்ளாதே.அலைவதும் திரிவதும் அனுபவம். உனது அனுபவம் உலகோர்க்கு ஒரு பாடம். உன் போன்ற கவிமணிகளைக் கொண்டல்லவா நல்ல பாடத்தை நானும் நடத்தமுடியும். நானே நரனாகி நடந்ததும் நடத்தியதும் அதனால்தானே. அறிந்திடு இந்த ரகசியத்தை...

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

விழித்தெழு! மூவாயிரவரில் ஒருவரின் பிள்ளையை அரவொன்று தீண்டி அவனாயுள் அவியப்போகிறது. செத்துப் பிழைக்கும் சித்த ஜாதகம் அவனுடையது. பிழைப்பிக்கப் போகிறவன் நீதான். அதனால்தான் திருவரங்க வைணவன் `திருச்சிற்றம்பலம் போ' என்றான். அம்பலத்து தீட்சிதனும் என் எல்லை சிறியதென்றான்.

செத்துக்கிடக்கும் அவனைக் காண மூவாயிரவரும் முனைப்போடு வருவர். வாழும் போது கூடாவிடினும் உடல் வீழும்போது கூடுவது உலகோர் வழக்கு. இல்லாவிட்டால், பித்ருசாபம் பெரும் நோயாகும் அல்லவா... எனவே, நீ அங்கே சென்று என் பொருட்டு நீ எழுதிய பாடலில் நாகபாச படலத்தில் வரும் `பல்லாயிரத்தின்' எனத் தொடங்கும் பாடலைப் பாடிடு.

ராமாயண வாழ்வு, ஒரு சத்திய வாழ்வு. ஆதலால் ராமாயணச் சிந்தனை, சத்திய சிந்தனை. ஆதலால் ராமாயண நாகபாசப் படலமும் சத்தியப் படலம். அந்தச் சத்தியப் படலத்துச் சொற்களெல்லாமும் மந்திரம்... மந்திரம்..!

அம்மந்திரம் அங்கோர் அற்புதம் நிகழ்த்தும். அதனால் துக்க வீடும் உனக்குத் தக்க வீடாகும். உன் பாடல்கள், வீடு பொருள் தருவன என்று எல்லோரையும் உணரச்செய்து, நீ கேட்ட சான்றை, நீ கேளாமலேயே தந்திடும்.

அதன் மூலம் கம்பனின் ராமாயணம் கம்பம் பிளந்து வந்த சிம்மனின் அம்சமென்பது உலகப் பொதுவாகும். வாணியின் மைந்தனே, உறங்கியது போதும் எழுந்திடு. இனி, உனக்கே காலம் புறப்படு!”

கம்பர் விழித்துக்கொண்டார். விழியில் நீர் மல்க, கோவிந்தராஜனை வணங்கிப்போற்றினார். அப்படியே அம்பலத்தானையும் சேவித்தார் ஒருபுறம் தூக்கமாய் தூங்குபவன், மறுபுறம் ஆட்டமாய் ஆடுபவன் - நடுவில் எனக்கொரு வழிப்போக்கு. என்னே இவர்களின் கருணை..!

விழிநீரைத் துடைத்தபடி வெளியே வந்தார். கண்ணீர் சிந்தியபடி ஓடும் அந்தணர்கள் மூலம், அரவம் தீண்டிய பாலகனின் வீடு எதுவெனத் தெரிந்தது. அங்கே சென்று நின்றபோது, மூவாயிரவரும் அங்கு கூடியிருந்தனர். மெளனமும் கண்ணீரும் மிகுந்திருந்த அந்த இடத்தில், அவர்கள் கம்பரைக் கண்டும் அவரை உணராத நிலையில் இருந்தனர்.

கம்பர், பிள்ளையின் உடலருகே சென்றார். அரவத்துளியால் அந்தப் பாலன் நீலன் ஆகியிருந்தான். வாழவேண்டிய வயது - சிலருக்கோ அது வாழ முடியாததாகி விடுகிறது!

எல்லாமே வினைப்பயன்! இல்லையெனில், முதுமைக்குப் பிறகே மரணம் என்று இளமை காட்டாறாக அல்லவா திரியும்!

கம்பர் அந்தப் பாலனின் தாய் தந்தையரைத் தேற்றி, “கண்ணீர் வேண்டாம். நல்லதே நடக்கும்” என்றார்.

பின்னர், “எம்பெருமான் சொல்லித்தான் இங்கே வந்துள்ளேன். அவனுடைய புகழைப் பாடும் ராமாயணப் பாடல்களில், நாகபாசப் படலம் என்றொரு கட்டம் உண்டு. ராவணனின் புதல்வன் இந்திரஜித் பிரயோகித்த நாகபாசம் எனும் அஸ்திரம், லட்சுமணனையும் சகல வானரர்களையும் வீழ்த்திய கட்டத்தைப் பொருளாய் கொண்டு பாடப்பட்டது.

ராமாயணத்தில் இந்தத் தருணத்தில் கருடன் அமிர்தத்துடன் வந்திட, அனைவரும் பிழைத்தெழுந்தனர். அன்று அங்கு நடந்தது உண்மையெனில், இங்கு இந்தப் பாலகனும் பிழைத்தெழுவான் கவலை வேண்டாம்” என்று கூறிவிட்டு, நாகபாசப் பாடலை பாடத் தொடங்கினார்.

`பல்லாயிரத்தின் முடியா தபக்க

மவைவீச வந்த படர்கால்

செல்லா நிலத்தினருளோடு சொல்ல

வுடனின்ற வாளி சிதறுற்

றெல்லாமவித்து முணர்வோடுமெண்ணி...'

கம்பர் உருக்கமாய்க் கரம் குவித்துப் பாடிய அப்பாடல், அங்கோர் அதிசயத்தை நிகழ்த்தத் தொடங்கியது.

எந்த அரவம் அந்தப் பாலகனைத் தீண்டியதோ, அது மூவாயிரவர் கூட்டம் நடுவே சரசரவென ஊர்ந்து வந்தது.

கூட்டத்தார் அஞ்சியும் துஞ்சியும் நிற்க, அது பாலகன் முன் வந்து படம் விரித்து நின்றது. பின்னர், பாலகனை முன்பு தான் தீண்டிய இடத்திலேயே தன் குறுவாயைப் பதித்து, தான் உமிழ்ந்த விஷத்தைத் தானே உறிஞ்சத் தலைப்பட்டது.

அந்தக் காட்சியைக் கண்டு அங்கு கூடியிருந்த அனைவரும் மெய்சிலிர்த்து நிற்க, பாலகன் பிழைத்தெழுந்தன். விஷத்தை உறிஞ்சிய அரவமோ சிறிது தூரம் சென்றபிறகு, அந்தப் பாலனின் பொருட்டு தன்னுயிரை விட்டது.

விதியின் ஒரு கணக்கு உயிரைத் தந்தது; இன்னொரு கணக்கு கம்பருக்கு உதவத் தொடங்கியது!

-தொடரும்...

சூரியனின் வழிபாடு

காஞ்சிபுரத்துக்கு தெற்கே 26 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வானவன் மாதேவிச்சுரம் வானசுந்தரேஸ்வரர் திருக்கோயில். தைப்பூச நாளன்று சூரியன் தனது ஒளிக்கதிர்களால் வானசுந்தரேஸ்வரரை தொட்டுத் தழுவி, பூஜிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்!

- எஸ். லதாசம்பத், திருச்சி-21

குழந்தை வரம் தரும் சந்தான ஸ்தம்பம்!

`காஞ்சியில் உள்ளோர் முனிவர்கள். அதன் கற்களெல்லாம் லிங்கங்கள். நீரெல்லாம் கங்கையே. அங்கு சொற்களெல்லாம் மந்திரங்களே. தொழில்களெல்லாம் இறைப் பணியே. ஆகையால் காஞ்சி, எமன் நுழைவதற்கு உரித்தன்று’ என்கிறது பழைய பாடல் ஒன்று.

காஞ்சி காமாட்சி
காஞ்சி காமாட்சி

காஞ்சி காமாட்சி, தேவர்களது பிரார்த் தனைக்கு இணங்க, பண்டாசுரனை அழிக்க பிலத் துவாரத்தில் இருந்து தோன்றினாள் என்கிறது தல புராணம்.

அன்னையின் ஆலயத்தில் உள்ள அஞ்சன காமாட்சி, சௌந்தர்ய லட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் சிறப்பானவை. பக்தர்கள், அம்பாளின் சந்நிதியில் பெறும் குங்குமத்தை அஞ்சன காமாட்சியின் சந்நிதியில் சமர்ப்பித்துவிட்டு, பின்னர் அங்கிருந்து குங்குமம் எடுத்து இட்டுக்கொள்வார்கள். தொடர்ந்து, செளந்தர்ய லட்சுமியையும் தரிசித்து வழிபடுவார்கள்.

அதேபோல், காமாட்சியம்மனின் கருவறை முன் மண்டபத்தின் தென்புறம் வராஹி அம்மன் எழுந்தருளியிருக்க, அவள் எதிரே சந்தான ஸ்தம்பம் உள்ளது. இதை வலம் வந்து வழிபாடு செய்யும் தம்பதிக்கு, வம்ச விருத்தி ஏற்படும் என்பது நம்பிக்கை.

- கீர்த்தனா ராமநாதன், சென்னை-4