தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 35

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

திருமாலின் திருவருளைப் பெற்றுத் திரும்பிய நீலனை ஆரத்தழுவி, ஆனந்தக்கண்ணீர் சொரிந்து பாதம் விழுந்து பணிந்தாள் குமுத வல்லி. ஆனால் அப்போதும் “குமுதா! நான் ஒரு தவறிழைத்துவிட்டேன்” என்று சற்று சலனப் பட்டான் திருமங்கை மன்னன்.

“இப்போதுமா” என்று விடைத்தாள் குமுதவல்லி.

“ஆம்! எனக்கு வாய்த்த எம்பெருமான் தரிசனத்தை உனக்கு வாய்க்கச்செய்யத் தவறி விட்டேனே… என்னை மன்னிப்பாயா குமுதா?”

“எதற்கு இத்தனை பெரிய வார்த்தைகள் எல்லாம். நீங்கள் வேறு, நான் வேறா? உங்களுக்கு வாய்த்தால் எனக்கும் வாய்த்தார்போல்தானே? அத்துடன், அத்தனை பாக்கியம் நான் செய்திருக்க வில்லை. `போதும் இந்தத் தொண்டு' என்று நிதி வற்றியபோது உங்களைத் தடுத்தவள் நான்! களவு புரிந்தாவது சேவகம் புரிய வேண்டுமா என்று கேட்டவள் நான். `இப்படிக் கள்ளனாக இவர் மாறவா இவருக்கு நான் உன் வழியைக் காட்டினேன்' என்று அந்த மாலவனின் சந்நிதியில் புலம்பி அழுதவள் நான்.

ஆனால் ஒட்டுமொத்த உலகமும் தாண்டத் திகைக்கும் அப்பள்ளங்களை நீங்கள் தாண்டினீர். எவ்வளவுதான் பக்தி இருந்தபோதிலும் என்னைப் பணயம் வைக்கும் துணிவு எனக்கு இல்லை. ஆனால், நீங்கள் அதைச் சாதாரணமாகச் செய்தீர்.

எனக்குள் என்னையுமறியாத ஒரு ‘நான்’ எனும் உணர்வு மீதம் இருந்து என்னைத் தடுத்தது.நீங்களோ உங்களையே வெற்றிகொண்டு, எல்லாம் அவன்செயல் என்பதற்கு இலக்கணம் வகுத்தீர்கள். அப்படியிருக்க எனக்கு எப்படி தரிசனம் வாய்க்கும்?”

ரங்க ராஜ்ஜியம் - 35

குமுதவல்லி வெகுநேர்த்தியாக விளக்கமளித்து, திருமங்கை மன்னனின் புருவத்தை வளையச் செய்தாள். “குமுதா… நீ என்னுள் விசுவரூபம் எடுத்துக்கொண்டே செல்கிறாய்…” என்று திரும்ப அவளை ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான். அதன்பின் ஆரம்பமாயிற்று அவன் தொண்டூழியம். அணையாத அடுப்பு அடியவர்க்குச் சோறிட்டது. எம்பெருமானின் ஆலய விளக்குகள் இரவு பகல் பாராது எரிய ஆரம்பித்தன. எங்கெல்லாம் அவர் கோயில் கொண்டிருந்தாரோ, அங்கெல்லாம் சென்றான். தீந்தமிழாலே பாசுரங்களைப் பாடி மங்களாசாசனம் செய்வித்தான்.

47 அடிகளில் திருவெழுக்கூற்றிருக்கை எனும் பாடல், 155 அடிகளில் சிறிய திருமடல், 297 அடிகளில் பெரியதிருமடல், திருநெடுந்தாண்டகம் என்று 30 பாடல்கள், திருக்குறுந்தாண்டகம் என்று 20 பாடல்கள், பெரிய திருமொழி என்று 1084 பாடல்கள்... இப்படி மொத்தம் 1351 பாடல்கள்!

இப்படி வகைதொகையாகப் பாடி தமிழ்க் கவிகளில் ஒருவனுமானான். இவனை வியந்த பல அறிஞர்கள், திருமங்கை மன்னனுக்கு ‘நாலுகவிப் பெருமாள்’ எனும் பட்டத்தையும் வழங்கினர். இதனை, இவர் சீடர்களின் குரலிலான பாடல் ஒன்றால் அறியலாம்.

“நாலுகவிப் பெருமாள் வந்தார், நம் கலியன் வந்தார், ஆலிநாடர் வந்தார், அருள்மாரி வந்தார், கொங்கு மலர்க் குழலியர் வேள் வந்தார், மங்கை வேந்தர் வந்தார், பரகாலர் வந்தார்”- எனும் அப்பாடல் திருமங்கை மன்னன் சீடர்களிடம் மிகப்பிரசித்தி!

இப்புகழ்ச்சியும் கட்டியமும் மிகையானது என்று அப்போதிருந்த சைவம் சார்ந்த சிலர் நிந்தித்ததாகவும் ஒரு கதை உண்டு.

ரங்க ராஜ்ஜியம் - 35

திருமங்கையாரின் திருப்பணிகளும் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக திருவரங்கப் பெரியகோயிலில் விமானம், மண்டபம், திருத்தளிகை திருமதில், கோபுரம் என்று ஆற்றிய பணிகள் முக்கியமானவை. இதற்காக நாகப்பட்டினத்தில், தான் சேமித்து வைத்திருந்த பொன்னைக் கொண்டுவந்து அதனால் வந்த பொருளில் இவற்றைச் சாதித்தார்.

குமுதவல்லியார், இவ்வேளையில் பெருந்துணையாக இருந்து உற்ற துணையாகவும் விளங்கினார். குமுதவல்லியாரை ஒட்டி ஒரு வரலாறும் உண்டு. குமுதவல்லியார் ஒரு அயோனிஜர்! பூர்வத்தில் ‘சுமங்கலை’ எனும் தேவ கன்னிகையாக விளங்கியவர். இமயமலைச் சாரலில் நடமாடித் திரிகையில் கபில முனிவரையும் அவரின் சீடர்களையும் ஒரு சோலையில் காண்கிறார்.

அந்தச் சீடர்களில் ஒருவர் விகார வடிவில் இருந்தார். அவரைக் காணவும் சுமங்கலை ஏளனம் செய்தாள். அதைக் கண்ட கபிலர் ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும் – தேவ கன்னி என்கிற மமதையா’ எனக் கேட்டு, `பூமியில் சென்று ஒரு மானிடப் பெண்ணாகப் பிறந்து ஒரு மனிதனுக்கு மனைவியாகப் பாடுகள்படக் கடவது’ எனச் சபித்து விடுகிறார். சுமங்கலை தன் தவற்றை உணர்ந்து மன்னிக்கவேண்டினாள். பின் கபிலரும் ‘பரகாலன் என்பவனின் மனைவியாகி, அவனைத் திருமாலடியவனாக்கி, அவனோடு வாழ்ந்து அவன் சேவைகளால் உன் குறையும் தீர்ந்து நீ விண்ணகம் அடைவாயாக…” என்றார்.

அதன்பின் சுமங்கலை, திருவாலி நாட்டின் வெள்ளக்குளப் பொய்கையில் பூத்த குமுத மலர்கள் நடுவில்... அவற்றைத் தாயாக்கித் தன்னைச் சேயாக்கிக்கொண்டு கிடந்தாள். அப்பக்கம் வந்த மருத்துவர் ஒருவர் குழந்தை கிடக்கக் கண்டு அள்ளி எடுத்துச்சென்று, குமுத மலர்களிடையே கிடைத்தவள் என்பதால் ‘குமுதவல்லி’ என்ற திருநாமம் சூட்டி வளர்த்து ஆளாக்கினார் என்பர்.

திருமங்கை மன்னன் திருச்சேவைகளில் ‘திருவரங்கத் திருச்சேவை’ பெரிது; கவனத்துக்குரியது. இவர் சேவை புரிந்த காலத்தில்தான் தொண்டரடிப் பொடியாழ்வாரும் திருவரங்கப் பெருமானின் திருச்சேவையில் தன்னை நிலைநிறுத்தியிருந்தார்.

பன்னிரு ஆழ்வார் பெருமக்களில் தொண்டரடிப் பொடியாழ்வாரும் ஒருவர். ஆழ்வார்களில் ‘தொண்டரடிப் பொடி’ எனும் விநோதப் பெயருக்கு உரிய இந்த ஆழ்வாரின் வரலாறு உலக மாயை எப்படிப்பட்டது, அதிலும் பெண் மாயை என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

ரங்க ராஜ்ஜியம் - 35

சோழவள நாட்டின் திருமண்டங்குடிதான் இவரின் அவதார ஸ்தலம். பிரபவ வருடத்தில், மார்கழி மாத கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தவர். ஆழ்வார் பெருமக்களில் பத்தாமவராகக் கருதப்படும் இவரின் இயற்பெயர் ‘விப்ர நாராயணன்’. இந்த விப்ரநாராயணன் திருவரங்கத்துக்கு வந்து அங்கே ஒரு நந்தவனம் அமைத்து, அதில் அன்றாடம் மலரும் பூக்களைப் பறித்து மாலை கட்டி, அதை எடுத்துச் சென்று அரங்கனுக்குச் சாற்றித் தொண்டு செய்துவந்தார். மாலைகளை விதம்விதமாய் கட்டுவதில் இவர் வித்தகராய் விளங்கினார்.

‘கண்ணி, கண்டம் தோள்விரி, தொங்கடம், செண்டு, கங்கணம் கொலுவணி, கிரீடம், கிரிநாகம்’ என்று மாலைகளில் பலவகைகளை உருவாக்கி, தினம் ஒன்று என்று கட்டி அரங்கனுக்குச் சேவை செய்து வந்த இவரின் பக்தியைச் சோதிக்க விழைந்தார் அரங்கன்.

‘தேவதேவி’ என்னும் தாசிக்குலப் பெண்ணொருத்தியை இவர் கண்ணில்படும் படிச் செய்ததோடு, இவரின் பக்திக்குரிய நெஞ்சில் மண்ணுயிர்களுக்கு உரித்தான காமத்தைச் சற்று கிளறியும்விட்டார். விப்ரநாரயணரும் தேவதேவியின் வீடே கதி என்றாகிவிட்டார். தாசிகள் தாசர்களை வெறுமனே தாங்குவரா என்ன? பொன்னையும் பொருளையும் இழந்தே தேவதேவியிடம் மூழ்கிக்கிடந்தார்.

ஒருநாள் கொடுக்க எதுவுமில்லை. பூக்கட்டும் சேவையையும் விட்டுவிட்ட நிலை! அரங்கச் சந்நிதி ஊழியர்கள் ‘விப்ரநாராயணன் இப்படி ஒரு தாசிப்பித்தனாவான் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்க வில்லை’ என்று புலம்பத் தொடங்கினர். ‘அரங்கன் எப்படிக் கைவிட்டான்’ என்று சிலர் கேட்டனர். ‘அரங்கன் என்ன செய்வான்’ என்றும் சிலர் கேட்டனர்.

ஒருநாள் பொருள் ஏதும் இல்லாமல் வந்த விப்ரநாராயணரை தேவதேவியின் தாய் வெளியேயே நிறுத்திக் கதவைத் தாழிட்டுவிட்டாள். மனம் வருந்தித் திரும்பினார் விப்ரநாராயணர். திரும்பியவர் கண்முன் அவரது நந்தவனமும் அவரைப் போலவே பொலிவிழந்து காட்சி தந்தது. மனமோ அந்த நந்தவனம் அப்படி ஆனதற்காக அழவில்லை. ‘தேவதேவி வெளியேதள்ளி கதவைத் தாழிட்டுவிட்டாளே’ என்றே மருகி அழுதது.

அப்போது அவர் மனைவாசலில் தேவதேவி வீட்டுப் பல்லக்கு ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து சேடி ஒருத்தி வெளிப்பட்டு “தங்களைப் பல்லக்கில் அமர்த்தி அழைத்து வரப் பணித்துள்ளார் தேவதேவியார்” என்றாள்.

“என்னையா?”

“ஆம் தங்களையேதான்.”

“அப்படியானால், நான் வந்தபோது ஏன் கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் கதவை மூடினார்கள்..?”

“அப்போது தாங்கள் பொருள் கொண்டுவரவில்லை. ஆனால் இப்போதுதான் அப்படி இல்லையே?”

“அப்படி இல்லை என்றால் எப்படி?”

“எனக்குத் தெரியாது. வந்து நீங்களே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.”

சேடியிடம் அதற்குமேல் விப்ரநாராயணரால் பேசமுடியவில்லை. பல்லக்கில் ஏறிக்கொண்டு தாசிவீட்டுக்கு அவர் செல்வதைத் திருவரங்கமே பார்த்து வாயடைத்துப்போனது! தேவதேவியும் அன்பாக வரவேற்றாள். விப்ரநாராயணருக்கு அவளது வரவேற்பு அதீதமாகப்பட்டது.

“தேவி… இன்று நீ என்பால் காட்டும் அன்பு, என்னை வெகுவாய் மகிழ்விப்பதோடு, சிந்திக்கவும் வைக்கிறது” என்றார்.

“இத்தனை நாட்கள் பொற்காசுகளால் படியளந்தீர்! இப்போதோ பொன்வட்டிலாலேயே அளக்கின்றீர். அளப்புக்கு ஏற்ப அன்பும் அரவணைப்பும் கூடினால்தானே அடுத்து இதைவிட பெரியதாய் ஒன்றைக் கொண்டு வருவீர்!”

“என்ன சொல்கிறாய் தேவி… நான் பொன் வட்டில் தந்தேனா?”

“நீங்கள் தந்தாலென்ன… உங்கள் சீடர் தந்தால் என்ன?”

“எனக்குச் சீடனா?”

“ஆம், அவர் அப்படித்தான் கூறினார். நீங்கள் மாலை கட்டும் அழகில் பெரிதும் மயங்கியவராமே..?”

“பெயர் என்ன என்று சொன்னாரா?”

தேவதேவி உடனே யோசிக்கலானாள்…

- தொடரும்...

கட்டுண்ட கண்ணன்!

சிஷ்ட முனிவர், பகவான் கண்ணனிடம் மிகுந்த பக்தி கொண்டு தினமும் வெண்ணெய் நைவேத்தியம் படைத்து வழிபடுவது வழக்கம்.

வசிஷ்டரைச் சோதிக்க நினைத்த கண்ணன், ஒரு நாள் சிறுவனாக வடிவம் எடுத்து வந்து அன்றைய நைவேத்தியத்துக்காக வசிஷ்டர் வைத்திருந்த வெண்ணெய் முழுவதையும் தின்று தீர்த்து விட்டார். இதைத் தற்செயலாகக் கவனித்துவிட்ட வசிஷ்டர், ‘‘ஏய், யாரது?’’ என்று உரக்கக் குரல் கொடுத்தபடி சிறுவனைப் பிடிக்க முயற்சித்தார்.

ரங்க ராஜ்ஜியம் - 35

கண்ணன் குடுகுடுவென ஓட, வசிஷ்டர் துரத்தினார். அப்போது அந்தப் பகுதியில் தவம் செய்து கொண்டிருந்த ரிஷிகள் சிலர், ஓடுவது இறைவனே என அறிந்து தங்களது தவ வலிமையால் கண்ணனைப் பாசக் கயிற்றால் கட்டிப் போட, கண்ணனும் அவர்களின் பக்திக்குக் கட்டுப்பட்டு அதே இடத்தில் நின்றார். பின்னால் ஓடி வந்த வசிஷ்டரும், உண்மையை உணர்ந்து, கிருஷ்ணனின் பாதங்களைப் பக்தியுடன் பற்றிக் கொண்டார்.

வசிஷ்டர் மற்றும் அங்கிருந்த முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று கண்ணன் அங்கேயே கோயில் கொண்டான். பக்திக்குக் கட்டுண்ட கண்ணன், நின்ற அந்தத் திருவிடம் ‘திருக்கண்ணங்குடி’ ஆயிற்று. திருவாரூரில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம்.

- கவிதா, மதுரை-2