Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 36

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

சற்றே யோசித்த தேவதேவி `அவர் பெயர் அழகிய மணவாள தாசன்’ என்று எடுத்துரைத்தாள். அதைக் கேட்ட விப்ரநாராயணரும் தாடையை வருடியபடியே யோசிக்கலானார்.

ரங்க ராஜ்ஜியம் - 36

சற்றே யோசித்த தேவதேவி `அவர் பெயர் அழகிய மணவாள தாசன்’ என்று எடுத்துரைத்தாள். அதைக் கேட்ட விப்ரநாராயணரும் தாடையை வருடியபடியே யோசிக்கலானார்.

Published:Updated:
ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

‘பச்சை மாமலைபோல் மேனி

பவளவாய்க் கமலச் செங்கண்

அச்சுதா அமர ரேறே

ஆயர் தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான் போய்

இந்திரலோக மாளும்

அச்சுவை பெறினும் வேண்டேன்

அரங்கமா நகருளானே...’

- தொண்டரடிப் பொடியாழ்வார்

ற்றே யோசித்த தேவதேவி `அவர் பெயர் அழகிய மணவாள தாசன்’ என்று எடுத்துரைத்தாள். அதைக் கேட்ட விப்ரநாராயணரும் தாடையை வருடியபடியே யோசிக்கலானார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``என்ன யோசனை..?’'

``இப்படி ஒரு தொண்டனா... அதுவும் எனக்கா என்றே யோசிக்கிறேன்...’'

``உங்கள் மலர் வனத்தில்தான் பலர் பணிபுரி கிறார்களே?’'

``பலரும் வந்து எனக்கு உதவுவது வழக்கம். ஆயினும் அழகிய மணவாள தாசன் என்கிற ஒருவரை நான் அறியேன்.'’

விப்ரநாராயணர் இப்படிச் சொன்ன தருணத்தில், சமையல்கட்டில் பாத்திரம் ஒன்று உருண்டு விழும் சத்தம் கேட்டது. அதனால், விப்ரநாராயணர் முனகியது தேவதேவியின் காதில் விழவில்லை. தொடர்ந்து அவர் யோசிக்கவும் அவள் விடவில்லை.

ரங்க ராஜ்ஜியம் - 36

``யோசனை போதும்... உங்களை இந்த இல்லத்தவர் அவமதித்துவிட்டனர். பொருளோடு வருபவருக்கே இங்கு மதிப்பு என்பதை நானும் விரும்பவில்லை. என்ன செய்வது? நான் மட்டுமா இங்கே இருக்கிறேன். என்னைச் சார்ந்து பலர்... எல்லோருக்கும் முதுமையை எண்ணி அச்சம். அதன் பொருட்டே இப்போதே பொருள் சம்பாதிக்கத் துடிக்கின்றனர்...’ என்று யதார்த்தமாகப் பேசியபடியே விப்ரநாராயணரின் கரம் பற்றினாள். அடுத்தநொடி காமன் பண்டிகை ஆரம்பமாயிற்று!

இங்கே இப்படி என்றால் திருவரங்கன் திருச் சந்நிதியில் ஒரே களேபரம். எம்பெருமானுக்குச் சோழ மன்னன் வழங்கியிருந்த பொன் வட்டிலைக் காணவில்லை என்பதால் ஏற்பட்ட களேபரம். ‘யார் திருடியது’ எனும் கேள்வியும் உடனேயே எழும்பிவிட்டது. ‘நானில்லை... நீயில்லை...’ என்று ஆளுக்கு ஆள் பதறினர். விஷயம் அரசன் காதுக்குச் சென்று அமைச்சர் வந்து விசாரிக்கலானார். அரங்கனின் திருச்சந்நிதி பட்டர்கள் கண்ணீர் பெருக்கி நின்றனர். `எப்படிக் காணாமல் போயிற்று என்றே தெரியவில்லை’ என்றனர்.

``இந்தப் பதிலை ஏற்க முடியாது. சந்நிதிக்குப் பொறுப்பாளர்களான நீங்களே பொன் வட்டிலுக் கும் பொறுப்பு'’ என்று கூறி அனைவரையும் சிறையிலடைக்க ஆணையிட்டார் அமைச்சர்.

சிறைக்குள் பட்டர்கள் புலம்பி அழுதனர். சிறைக்காவலன் அதைக் கண்டு வருந்தினான். காவல் பணி முடிந்து வீடு திரும்பியவன், தன் மனைவியிடம் பட்டர்களின் புலம்பலைச் சொல்லி வருந்தினான். அவன் மனைவி தேவதேவி வீட்டில் பணிபுரிபவள். காவலன் கூறவும் தேவதேவி வீட்டில் பார்த்த தங்க வட்டில் ஞாபகம் அவள் நினைவுக்கு வந்தது.

``நீ சொல்லும் அடையாளங்களோடு கூடிய தங்க வட்டில் தேவதேவி வீட்டில் இருக்கக் கண்டேன். அதைக் கொடுத்த பிறகே, விப்ரநாராயணருக்கு அந்த வீட்டில் உபசாரம் நிகழ்ந்தது'’ என்றாள். காவலன் இந்தச் செய்தியை அமைச்சரிடம் சொல்ல, அமைச்சர் அரசனிடம் சொல்ல, அரசனும் `‘உண்மை தெரிந்தாக வேண்டும். தேவதேவியின் இல்லத்துக்குச் சென்று பாருங்கள்'’ என்றான்.

பார்த்தனர்... அரசன் தந்த பொன்வட்டிலேதான்!

தேவதேவி விப்ரநாராயணரைக் கை காட்டி னாள். விப்ரநாராயணரோ ``எனக்கு எதுவும் தெரியாது. எல்லாம் அந்த அழகிய மணவாளதாசன் செயல்'' என்றார்.

ரங்க ராஜ்ஜியம் - 36

``யார் அந்த அழகிய மணவாள தாசன். அவன் நேரில் வந்து நடந்ததைச் சொல்லவேண்டும். வட்டில் என்ன விலங்கா, பறவையா... காலும் சிறகும் முளைத்து சந்நிதியைவிட்டுப் பறந்து செல்ல...'’ என்று அமைச்சர் விசாரணையைத் தொடங்க, விளைவு சிறைக்குள் விப்ரநாராயணர்.

அழகாய்த் திருப்பணி செய்து வாழ்ந்து வந்த வரையிலும் ஒரு குறையுமில்லை. ஆனால் இப்போதோ காமம் சிறைக்குள் தள்ளிவிட்டது. மதிப்பும் மரியாதையும் காற்றில் பறந்துபோயே போய்விட்டன. விப்ரநாராயணர், சிறையின் இருட்டறையில் தனக்குத் தானே பேசிக்கொள்ளத் தொடங்கினார்.

`புத்தி என்பதே பட்டால்தான் ஒளிருமா. தீயை உணர அதைத் தீண்டிப் பார்த்ததுபோல் ஆகிவிட்டதே! என்ன வாழ்வு இது. ஒரு நாள் இன்பம்; ஒரு நாள் துன்பம். நேற்று இதே நேரம் தேவதேவியின் வீட்டில் பஞ்சணை வாசம். இப்போதோ சிறையில் கல்தரை வாசம்!'

நினைத்துப் பார்த்த விப்ரநாராயணருக்குத் தான் படும் துன்பத்தை எல்லாம்விடப் பெரும் துன்பமாகத் தோன்றியது ஒன்றுதான்... யார் அந்த அழகிய மணவாளதாசன் என்பவன். எதற்காகத் தான் களவாடி என்னைக் களவாணி ஆக்கினான். அவனுக்கு நான் என்ன தீங்கிழைத்தேன்...தேவ தேவிக்காக நான் ஏங்கித் தவித்தது அவனுக்கு எப்படித் தெரியும்...

இப்படிக் கேள்விகள்... கேள்விகள்.. கேள்விகள்!

விப்ரநாராயணரின் கேள்விக்கு, அந்த அரங்கன் அரசன் கனவில் போய் பதில் கூறினான்.

``அரசனே! நானே அழகிய மணவாள தாசனாய் தேவ தேவியின் இல்லம் சென்று நீ எனக்கென தந்துவிட்ட என் பொன்வட்டிலைத் தந்தேன். இதில் விப்ரநாராயணனுக்கு எந்தப் பங்கும் இல்லை. நாள்தோறும் மாலை கட்டி என்னை மகிழ்ச்சிப் படுத்திய விப்ரனின் வருத்தம் என் வருத்தமல்லவா. அதைப் போக்கவே அவ்வாறு நடந்தேன். அவனை விடுவித்துவிடு'' என்றான்.

அரசன் கனவு கலைந்து மெய்சிலிர்த்துப்போனான். விடுவிக்கப்பட்ட விப்ரநாராயண ரிடமும் பெரும் சிலிர்ப்பு. தேவதேவிகூட விக்கித்துப் போனாள். விப்ரநாராயணரின் பொருட்டு, அரங்கனே அழகிய மணவாளதாசன் வடிவில் தன் இல்லம் ஏகியதை எண்ணியவள், அந்த நொடியே தன் இழிந்த உடல் சார்ந்த வாழ்க்கைக்கு ஒரு முழுக்கு போட்டாள். தன்னை ‘அரங்கனின் அடிமை’ என்று அறிவித்தாள்.

விப்ரநாராயணர் இம்மட்டில் சகலரையும் விஞ்சினார். `பாவியான எனக்கே இத்தனை கருணையை அந்த அரங்கன் புரிந்திருக்கிறானே... சில காலம் மலர்களை மாலைகளாய்க் கட்டிப் புரிந்த சேவைக்கே இந்த அரவணைப்பு என்றால், சதா அவன் நினைப்பாகவே இருந்தால் அவனோடு இரண்டறக் கலப்பதும் எளிதன்றோ. என் மூலம் இதை உலகம் உணர வேண்டும் என்பதற்காகத்தான் நானும் காம வயப்பட்டேனோ... தவறிழைத்தேனோ...’ என்று கதறிய விப்ரநாராயணர், உடம்பால் தான் செய்த தவற்றுக்குப் பரிகாரமாய் அந்த உடம்பையே நற்செயலுக்கு ஈடுபடுத்தத் தீர்மானித்தார்.

அந்தப் பரிகாரச் செயல்தான், நாரணன் அடியவர் பாதங்களைக் கழுவி அந்த நீரைத் தன் தலையில் தெளித்துக்கொள்வது என்பது. நாரணனின் அடியவர் பாதங்களே வணக்கத்திற் குரியவை என்றால், நாரணன் பாதங்கள்?!

அந்த நொடியே விப்ர நாராயணர் தொண்டர் அடி தொழும் சீலராகி... சீலன் என்பதில்கூட ஒரு கர்வம் தொனிப்பதுபோல் கருதி, ‘தொண்டர் அடிதொழும் தொண்டன்’ என்பதும்கூட சொல்லிடர் தருவது போல் உணர்ந்து, ‘தொண்டன் அடியின் தூசு நான்’ - அதாவது அடிப்பொடி - ‘தொண்டரடிப்பொடி’ என்று அறிவித்தார்.

இவரால் மூன்று விஷயங்கள் தெளிவும் திடமும் பெற்றன. பெருங்காமம் துயர் தரும், அதை பக்தியாக்கிட ஞானம் தரும், அந்த ஞானம் என்பது ‘இறைவன் அடியவரே பெரியவர்’ என்பதுதான்!

தொண்டரடிப் பொடியாக மாறிய பின் இவர் பாடிய பாசுரங்களே திருமாலை - திருப்பள்ளியெழுச்சி போன்ற பிரபந்தங்கள். திருமாலையில் 45 பாசுரங்கள் உள்ளன. திருப்பள்ளி யெழுச்சியில் 10. ஆக மொத்தம் 55. அளவில் குறைந்திருந்தாலும் பக்தி உருக்கத்தைக் காட்டுவதிலும், சிறப்பைக் காட்டுவதிலும் பாமரனையும் இவர் பாடல்கள் கவர்ந்து இழுத்தன எனலாம்.

திருவரங்கத்தை எண்ணும்போது, இவரோடு இவர் வடிவமைத்த நந்தவனத்தையும் எண்ணிட வேண்டும்.

திருமங்கை மன்னன், ராஜமகேந்திரன் திருச் சுற்றில் வடகிழக்கில் திருமாமணி மண்டபம் மற்றும் நூற்றுக்கால் மண்டபத்தினைக் கட்டி, பின் குலசேகரன் திருவீதியைச் சூழ்ந்த திருமதில் மற்றும் கோபுரங்கள் கண்டான். அத்துடன், திருவீதியின் தென் மேற்கில் - கன்னி மூலையில் திருமண்டபம் மற்றும் திருநடைமாளிகை ஆகியவற்றை அமைத்தான். மேலும், தென்கிழக்கான அக்னி பாகத்தில் மடைப்பள்ளி அமைத்துப் பல்வேறு திருப்பணி செய்த தருணத்தில், கிழக்கில் சந்திர புஷ்கரணிக் குளக்கரையில் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலைப் பலகை இருந்தது. அதன்மேல் அமர்ந்தே தொண்டரடிப் பொடியாழ்வார் மாலைகள் கட்டியருளினார். இதையறிந்த திருமங்கை மன்னன் அந்தத் தடயத்துக்குப் பங்கம் வரக்கூடாது என்று கருதியும், அதைப் போற்றும்விதமாகவும், அந்த இடத்தை விட்டு மதிலை வளைத்துக் கட்டி அங்கே விழுந்து வணங்கவும் செய்தார்.

அதனால் நெகிழ்ந்த தொண்டரடிப் பொடியாழ்வார், பதில் மரியாதையும் அன்பும் காட்டும் வகையில், தன் நந்தவனத்தைத் திருத்தும் மண்கெல்லிக் கருவிக்கு மங்கை மன்னனின் செல்லப்பெயர்களில் ஒன்றான `அருள் மாரி' என்கிற பெயரைச் சாற்றியருளினார்.

இப்படிச் சமகாலத்தில் திருவரங்கத்தில் இரு ஆழ்வார் பெருமக்களும் இருந்த சந்தர்ப்பத்தில், திருமங்கை ஆழ்வார் குறித்த பல சுவையான சம்பவங்களும் நிகழ்ந்தன.

ஒரு நாள், திருச்சந்நிதியில் திருவரங்கனுக்கும் திருவிளக்குப் பிச்சன் என்பானுக்கும் பரஸ்பர உரையாடல் நிகழ்ந்தது. (இத்திருவிளக்குப் பிச்சன், எம்பெருமானோடு சகஜமாய் உரையாடும் உரிமையும் வாத்சல்யமும் கொண்டிருந்ததைத் திருவரங்கக் கோவிலொழுகு நூல் வாயிலாகக் காண முடிகிறது). இதுவும் எம்பெருமானின் ஒரு திருவிளையாடற் செயலே. இதில் வேடிக்கையும் விஜயமும் மிகுந்திருந்தன.

``என்ன பிச்சா... எப்படி இருக்கிறாய்? இந்தத் திருவரங்கத்தில் உனக்குக் குறைகள் ஏதும் இல்லைதானே'’ என்று மானுட பாவனையோடு எம்பெருமான் திருவிளக்குப் பிச்சனிடம் கேட்டான். பிச்சனும் உற்சாகமாக மறுமொழி கூறத் தொடங்கினான்.

``எம்பெருமானே! குறைக்கு ஒரு குறைவுமில்லாத ஊரல்லவா உனது இந்தத் திருவரங்கப்பட்டணம்!’

``பட்டணமா?’'

``இல்லையா பின்னே! தினமும் எட்டுத்திக்கி லிருந்தும் மூட்டை கட்டிக்கொண்டு வரும் ஜனங்களால் நிரம்பி வழியும் அருள் நகரம் என்றும் கூறலாம்தான்...’`

``ஜனங்கள் எல்லோரும் மகிழ்வுடன் உள்ளனர் தானே?’'

``அப்படிச் சொல்ல முடியாது!’'

``என்றால்... வருத்தப்படுபவர்களும் எனது இந்த கோயில் நகரில் உள்ளனரா?’'

``நிறையவே...’'

``பிச்சா! நீ என்ன கூறுகிறாய். என் ரங்க ராஜ்ஜியத்தில் வருத்தமா?’'

``ஆமாம்.'’

``ஆமோதித்தால் போதாது. எதனால் அந்த வருத்தம் என்று கூறு...’'

``ஒரே வருத்தம்தான். திருச்சந்நிதிக்குள் கிடக்கும் உன் பள்ளிகொண்ட கோலத்தை விரும்புமளவு தரிசிக்க முடியவில்லையே எனும் வருத்தமே அது’'

``பிச்சா! ஒரு விநாடி நீ என்னையே உலுக்கி விட்டாய்.'’

பெருமாள் இப்படிச் சொன்னதும் ``இப்படிச் சொல்லி நீதான் என்னைப் பரவசத்தில் உலுக்குகிறாய்.'' என்ற பிச்சன் தொடர்ந்து எதையோ சொல்ல முனைந்தான். ஆனாலும் தயங்கினான்.

``பிச்சா! எதையோ சொல்ல வந்தாய். தயங்காமல் சொல்'' என்றார் பெருமாள்.

``ஒரு விஷயம் என்னைக் கொஞ்சம் உறுத்தவே செய்கிறது. எப்படிச் சொல்வது என்றுதான் யோசிக்கிறேன்...’'

``எதுவாக இருந்தாலும் சொல்...’'

``அப்படியானால் சரி... உமது அடியவன் தானே இந்த திருமங்கை மன்னன்...’'

``அவன் அடியவனுக்கெல்லாம் அடியவனப்பா...'’

``என்றால் தற்பெருமை கூடாதல்லவா?’'

``அப்படியா.. திருமங்கையானா தற்பெருமை கொண்டுள்ளான்?’'

``ஆமாம்... பெரிய திருமொழி எனும் உருக்கமான பாசுரங்களில்தான் நான் அதைக் கண்டேன். உம்மைத் துதிசெய்யும் சாக்கில் தன்னையும் சேர்த்துக்கொள்கிறார்!'’

- திருவிளக்குப் பிச்சன் எம்பெருமானிடம் சொன்ன விதத்தில் இளக்காரம் தொனித்தது!

- தொடரும்...

இடக் கையில் சக்கரம்!

காஞ்சிபுரம் மணிமங்கலத்தில் ராஜகோபால சுவாமி, செங்கமலவல்லித் தாயாருடன் கோயில் கொண்டுள்ளார். இங்கே, பெருமாள் இடது கையில் சக்கரமும் வலது கையில் சங்கும் ஏந்தியிருப்பது, அபூர்வ திருக்கோலமாகும்.

சென்னை ஆதம்பாக்கம், சாந்தி நகரில் உள்ள பாண்டுரங்கன் ஆலயம், பண்டரிபுரத்தில் உள்ள கோபுர அமைப்போடு திகழ்கிறது.

ரங்க ராஜ்ஜியம் - 36

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, ஒரு காதில் குண்டலமும் மறு காதில் தோடும் அணிந்து காட்சியளிப்பது விசேஷ அம்சமாகும்.

அம்பாசமுத்திரம் கோயிலில் உள்ள வேணுகோபாலன் சிலை, நேபாளம் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜயந்தியன்று இங்குப் பெருமாளுக்குத் கண்திறப்பு, சங்கில் பால் புகட்டும் வைபவங்கள் நடைபெறுகின்றன.

- க. ரேணுகா, கும்பகோணம்