ஜோதிடம்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 36

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

திருவிளக்குப் பிச்சன் திருமங்கையாழ்வார் குறித்துக் கோள்மூட்டவும் எம்பெருமானின் வதனத்தில் அதுவரை நிலவிவந்த மென் புன்னகை நீங்கிச் சற்றே கோபம் தெரிய தொடங்கியது.

“செங்கமலத்து அயனனைய மறையோர் காழிச்

சீராம விண்ணகர் என் செங்கண்மாலை

அங்கமலத் தடவயல்சூழ் ஆலிநாடன்

அருள்மாரி அரட்டமுக்கி அடையார் சீயம்

கொங்கு மலர்க் குழலியர்வேள் மங்கை வேந்தன்

கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன

சங்க முகத் தமிழ் மாலை பத்தும் வல்லார்

தடங்கடல் சூழ் உலகுக்குத் தலைவர் தாமே”

- பெரிய திருமொழி

திருவிளக்குப் பிச்சன் திருமங்கையாழ்வார் குறித்துக் கோள்மூட்டவும் எம்பெருமானின் வதனத்தில் அதுவரை நிலவிவந்த மென் புன்னகை நீங்கிச் சற்றே கோபம் தெரிய தொடங்கியது.

பாவம் திருவிளக்குப் பிச்சன்!

தான் சொன்னதன் நிமித்தம் திருமங்கையாழ்வார் குறித்துதான் அந்தக் கோபம் என்று திருவிளக்குப் பிச்சன் நினைத்திட, எம்பெருமானோ பிச்சனைக் கண்டிக்கலானார்!

“பிச்சா... பக்குவப்படாத மனிதர் களைப்போல நீ பேசுகிறாய். திருமங்கையானை நீ சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அவன் என் சேவை நிமித்தம் தன்னையே கள்வனாக்கிக் கொண்டவன். கள்வனாகிய போதும் களவாடிய பொருளால் சிறிதும் சுகம் காணாதவன். உச்சபட்சமாய் நான் வைகுண்டவாசியாக்க விழைந்தபோது அதைவிடப் பெரிது மண்ணில் செய்யும் நாராயணசேவை என்று கூறி, இந்த மண்ணில் திரிபவன். அவனைக் குறை சொல்ல உன்னால் எப்படி முடிந்தது?” என்று கேட்டார். இதைக் கேட்டுப் பிச்சன் இன்ப அதிர்வுக்குள்ளானான்.

“என்னைக்கூடக் குறை சொல்... இனி என் அடியார்களை மட்டும் குறைசொல்லிவிடாதே... பின் திருவிளக்குப் பிச்சனான நீ விலக்கப்பட்ட பிச்சனாகிவிடுவாய்” என்று எச்சரிக்கவும் செய்தார், எம்பெருமான்.

திருவிளக்குப் பிச்சன் எம்பெருமானிடம் திருமங்கையாழ்வார் தன் பெருமையைச் சொல்லிக்கொள்வதாக பாடிய பாட்டு பெரிய திருமொழியில் 3-4-10 பாசுர உரை கொண்டுள்ளது. இந்தப் பாடலைச் சொல்லியே திருவிளக்குப் பிச்சனும் வருந்தினான். எம்பெருமானே வக்காலத்து வாங்கவும், வருத்தம் நீங்கி திருத்தமும் செய்துகொண்டான்.

பின் எம்பெருமானின் பாராட்டையும் அனுக்கிரகத்தையும், கோயில் பட்டர்கள் தொட்டு எல்லோரிடமும் பிச்சன் கூறவும் மங்கை மன்னன் புகழ் பெரிதும் பரவியது. அப்படியே திருச்சந்நிதியில் தமிழ்மணம் கமழ்ந்திடும் பாசுரங் களுக்கு ஒரு தனியிடமும் வரவேற்பும் கிடைக்கத் தொடங்கின.

‘தேவமொழி’ என்று சம்ஸ்கிருதம் ஆலயப்பணி நிமித்தம் பிரதான இடத்தில் இருந்த நிலையில், தமிழ்ப் பாசுரங்கள் சம்ஸ்கிருத மந்திரங்களை ஒட்டி அருகில்வந்து நின்றுகொண்டன. குறிப்பாக, மங்கைமன்னனே இதன் பொருட்டு ஒரு பெரிய எத்தனம் புரிந்தான்.

ரங்க ராஜ்ஜியம் - 36

ஒரு திருக்கார்த்திகை அன்று திருவரங்க ஆலயத்திலே எம்பெருமானும், பெருமானுடன் ரங்கநாயகி தாயார் மற்றும் ஆண்டாள் உள்ளிட்ட நாச்சியார்களும் திருமஞ்சனம் கண்டனர். அபிஷேகத்தின் வைணவப்பதமே திருமஞ்சனம்! மிக விசேஷமான இந்த நாளில், எம்பெருமானும் பெருமாட்டிகளோடு பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலாக்காண விழைந்த தருணம், அந்த தரிசனத்தை அத்திருநாளில் கண்டிருந்த திருமங்கையாழ்வார் எம்பெருமானின் எழில்கோலத்தில் மயங்கி ‘திருநெடுந்தாண்டகம்’ எனப்படும் பிரபந்தப் பாசுரத்தை பாடிட, எம்பெருமானின் செவிப்புலன்களும் குளிர்ந்தன. இதன் எதிரொலியாக திருமங்கை யாரிடம் எம்பெருமானும் மகிழ்வை வெளிப்படுத்தினார்.

“மங்கைமன்னா... இசையின்பத்தோடு நீ பாடிய நெடுந்தாண்டகம் என்னைக் குளிரச் செய்தது. வளமான கற்பனை அற்புதமானச் சொற்கள், அதிலும் என் உருவம் குறித்த உன் பாடலில் நான் என்னையே மறந்தேன்” என்றார்.

`பாருருவில் நீர் ஏரி கால் விசும்பும் ஆகி

பல்வேறு சமயமுமாய் பரந்து நின்ற

ஏருருவில் மூவருமே யென்ன நின்ற

இமையவர்தம் திருவுருவேறெண்ணும் போது

ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ

ஒன்று மாகடலுருவம் ஒத்து நின்ற

மூவரும் கண்டபோது ஒன்றாம் சோதி

முகிலுருவம் எம்மடிகள் உருவம்தானே!”

- எனும் இப்பாடலே எம்பெருமான் கேட்டு நெகிழ்ந்த பாடல்.

‘நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என்று பஞ்சபூதமாயும் இருப்பவனை, பரந்தும் விரிந்தும் கிடப்பவனை, பிரமன், சிவன், விஷ்ணு ஆகிய மூவரும் கலந்த ஓர் உருவாய் இருப்பவனை, இமையவர்கள் நோக்கில் பொன்னிறமாயும், சிவந்த நெருப்புருவாகவும், நீலக்கடல் உருவாகவும் இம்மூன்றும் கலந்த ஒரு ஜோதி போலவும், கறுத்த மேகத்தைப்போலவும் உள்ளது எங்கள் நாரணன் உருவம்’ என்பது பாடலுக்கான எளிய பொருளாகும். இந்தப் பாடல் நெடுந்தாண்டக இலக்கணப்படி எட்டு சீர்கள் கொண்டு விளங்குகிறது.

ஒரு குறுநில மன்னனாய், வாள் கொண்டு பலரைக் கொன்றவனாய், மொழி, இலக்கியம் என்று கல்வி சார்ந்த தொடர்புகளே பெரிதும் இல்லாதவனாய் இருந்த திருமங்கைமன்னன், திருமங்கையாழ்வாராகி ஒரு பெரும் புலவனாக மாறி இலக்கணப் பிழையின்றி எழுதத் தொடங்கியது எம்பெருமான் தரிசனத்தாலும், அருட்கருணையாலுமே!

அப்படி எழுதிய நெடுந்தாண்டகத்தில் ஆறு பிரபந்தங்களை ஒரு திருக்கார்த்திகை நாளில் திருமங்கையார் பாடிட சொக்கிப் போனார் எம்பெருமான். ‘இதே போல் அநேகப் பாசுரங்களை நீ பாடுவாயாக’ என்று அருளவும் செய்தார். எம்பெருமான் இவ்வாறு அருளவும் திருமங்கை ஆழ்வாரிடம் பளிச்சென்று ஓர் எண்ணம்.

“எம்பெருமானே நானொரு விருப்பத்தைப் பகிரலாமா?” என்று கேட்டான்.

“தாராளமாகக் கேள்” என்றார் எம்பெருமானும்.

“என் தமிழ்ப் பாசுரமே தங்களை இவ்வளவு மயக்கினால் ‘சடகோபன்’ எனப்படும் திருக்குருகூர் ஆழ்வாரின் பாடல்கள் உங்களைப் பேரின்பத்தில் ஆழ்த்திவிடும். மாமதுரையில் சங்கப் புலவர்கள் முன்னிலையில், அப்பாசுர ஏடுகளைச் சங்கப்பலகையில் வைத்தபோது அது ஏற்றுக்கொண்டுவிட்ட வரலாற்றை உடையவர். அப்படிப்பட்ட உங்கள் அணுக்கத் தொண்டனின் பாசுரங்களையும் நீங்கள் கேட்டு இன்புறவேண்டும். இன்று மட்டுமல்ல, இனிவரும் நாள்களில் உங்கள் சந்நிதியில் தமிழ்மணம் பெரிதும் கமழவேண்டும். அது காலகாலத்துக்கும் தொடரவேண்டும்” என்றும் பிரார்த்தித்தான் திருமங்கையான்.

ரங்க ராஜ்ஜியம் - 36

எம்பெருமானும் புன்னகைத்தபடியே ``சடகோபன் உன்னைப் போலவே என் மனம்கவர்ந்த ஒருவனாவான். வைணவம் தழைக்கவென்றே பிறப்பிக்கப்பட்டவன். அப்படிப்பட்ட அவனுடைய பாசுரங்கள் ஊனைக் கிளறி உயிரில் பரவசமளித்திடும். அந்தப் பாசுரங்களைத் தாராளமாய் என் சந்நிதியில் பாடலாம். அப்படிப் பாடப்படுவதே எனக்கும் பெருமை'' என்றார்.

அதைக்கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த திருமங்கையான், “எம்பெருமானே! வரும் மார்கழி மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசித் திருநாளில் இருந்து சடகோபரின் திருவாய்மொழிப் பாசுரங்கள் பாடிட அருள்புரிய வேண்டும்” என்று கேட்கப் பெருமாள் அதற்கும் அருளியதோடு...

“என் திருச்சந்நிதியில் வேத மந்திர ஒலிக்கு நடுவில் பாடப்படும் இந்தத் தமிழ்ப் பாசுரங்கள் எந்தவிதத்திலும் வேத மந்திரங்களுக்குக் குறைவில்லாதவை” என்றும் அருளினார். இதன் மூலம் தன் தாய்மொழியான தமிழ்மொழிக்குத் திருமங்கையாழ்வார் தெய்விகச் சாந்நித்யம் கிடைக்கச் செய்தார் எனலாம்.

இவ்வாறு அழகிய மணவாளன் கருணையினால் அங்கீகாரம் கிடைத்த தருணத்தில், இன்னொரு அதிசயமும் நிகழ்ந்தது. திருமங்கையாழ்வாரின் பாசுரங்களைக் கேட்டுவியந்த திருச்சந்நிதி பட்டர் ஒருவர் எம்பெருமானுக்குத் திருச்சேவை செய்கையில், எம்பெருமானின் அசரீரிக் குரலுக்கு ஆட்பட்டார்.

“பட்டனே... இன்று யாம் மிக உவப்பாயுள் ளோம். காரணம், உனது பூஜைக்குரிய தொண்டு மட்டுமல்ல... திருமங்கையானின் பாசுர சேவிதம் என்னைக் கிறங்கச் செய்துவிட்டது. திருமங்கையானும் தன்னை மறந்து நல்ல இசை கலந்து உச்சஸ்தாயியில் பாசுரங்களைப் பாடி என் செவிகுளிரச் செய்தான். அதனால் அவனது மிடறு (தொண்டை) நொந்ததைக் கண்டேன்.

எனவே, அதற்கு மருந்தாக என் திருமேனி மேல் சாத்தியிருந்த தைலக்காப்பை எடுத்து திருமங்கையான் மிடறுமேல் நான் சொன்னதாகச் சொல்லி தடவிவிடுங்கள். அவனது நாவால் இன்னும் பல நூறு பாசுரங்களைப் பாட, அப்பாசுரங்களும் காலகாலத்திற்குமான ஒரு சிரஞ்ஜீவித்துவத்தை அடைய இருக்கின்றன” என்றார்.

அசரீரி கேட்ட பட்டர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். பெருமானின் விருப்பப்படியே திருமேனிமேல் சாத்தியிருந்த மருந்து கலந்த தைலக்காப்பை ஒரு சிறுபொன் வட்டிலில் எடுத்துக்கொண்டு திருமங்கையாழ்வாரைத் தேடிச்சென்றார். திருமங்கையாழ்வாரும் பட்டர் தேடிவந்தவேளை ஏடுகளில் பாசுரங்களை எழுதிக் கொண்டிருந்தார். பட்டர் எம்பெருமான் கட்டளை என்று கூறி தைலக்காப்பை ஆழ்வாரின் தொண்டையில் பூசிவிடவும் உள்ளம் பூரித்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். அநேகமாய் இத்தருணத்தில் பிறந்த பாசுரமே...

‘குலம் தரும் செல்வம் தந்திடும்

அடியார் படுதுயர் ஆயின எல்லாம்

நிலம் தரம் செய்யும் நீள் விசும் பருளும்

அருளோடு பெருநிலம் அளிக்கும்

வலம் தரும் மற்றும் தந்திடும்

பெற்றதாயினும் ஆயின செய்யும்

நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.’

என்னும் இப்பாசுரமாகும். திருமங்கையாழ்வார் பாசுரங்களில் இப்பாசுரம் மிக ஆழமானது, நுட்பமானது. இந்த உலகில் பிறந்துவிட்ட மனிதனுக்கு எதெல்லாம் தேவை என்பதை மிக அழகாய் பட்டியல் போடும் இந்தப் பாடல் ஒரு பெரும் சிந்தனையை ஏற்படுத்தும். அத்துடன், திருமங்கையாழ்வாரின் ஒரு நுட்பக் கருத்தும் ஒளிந்துள்ள பாசுரம் இது. அவனை வழிபட்டால் நாம் நல்ல குலத்தில் பிறப்போம்... குலத்தில் பிறப்பது அத்தனை பெரிய விஷயமா என்றால் ‘ஆம்’ என்கிற பதிலில்தான் நுட்பம் உள்ளது. நம் பிறப்பு நம் கர்மத்தின் பயன்களில் ஒன்று!

கொலை, கொள்ளை, மது, மாது என்று பேராசையுடன் வாழ்ந்த முன்னோர்களின் வம்சாவழியில் நாம் பிறக்க நேரிடும்போது, அவர்களின் பாவங்களெல்லாமும் நம் மேலும் இருக்கக் காணலாம். இந்த நிலையில் நல்ல இறையருளுக்குப் பாத்திரமாகி, கடைத்தேறுதல் மிகக் கடினம். அதுவே தானம், தவம், நற்கல்வி, பக்தி முதலான தன்மைகொண்ட குடிப்பிறப்பில் பிறக்க நேரிடும்போது, ஒருவரது வளர்ப்பே நெறிமிகுந்ததாக இருக்கும். இதனாலேயே நல்ல குலத்தில் பிறப்பது அவசியமாகிறது.

அதனால்தான் எடுத்த எடுப்பில் ‘குலம் தரும்’ என்று தொடங்கினார் திருமங்கையாழ்வார். தொடர்ந்து அவனருள் ‘செல்வம் தரும்’, துன்பங்கள் எந்த வடிவில் வந்தாலும் அதை போக்கும், ‘நீள்விசும்பு’ எனும் ‘புகழ் தரும்’, போதாததற்கு அருளோடு பெருநிலம் அளிக்கும். இதுபோக, வேண்டுவன எல்லாம் தரும் என்பவர் ‘பெற்ற தாயினும் ஆயின செய்யும்’ என்னும் வரிகளில் உலக உயிர்களுக்கெல்லாம் தாயன்பே பெரியது, கருணை மிகுந்தது. ஆனால், நாரணன் முன் அது சிறியது. அவன் அன்பும் கருணையும் தாயின் பாசத்தை விட பெரியது என்கிறார்.

இதற்கடுத்த வரியே நுட்பத்திற்கான வரி. ‘நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன், அது நாராயணா என்னும் நாமம்’ என்னும் இவ்வரிகளைக் கூர்ந்து நோக்கவேண்டும். ‘நலம் தரும் - நான் கண்டுகொண்டேன் அவனே நாரணன் என்பவன்’ என்று எழுதியிருக்கலாம். அப்படி எழுதியிருந்தால் அது பக்தர்களுக்குச் சற்று கடினமானது.

ஏன் என்றால் எல்லோரும் திருமங்கையார்போல் ஆகி அவன் அருளைப் பெற முடியாதே! அவன் அருள் எளிதாகக் கிடைக்கவேண்டும்; கிடைக்கவும் செய்யும். நீங்கள் சிரமமே பட வேண்டாம். அவன் யாரென்றுகூட உங்களுக்குத் தெரியத் தேவையில்லை. அவன் பெயரான ‘நாராயணா’ என்கிற பெயரைச் சொல்லுங்கள் போதும். ஆம்... உருக்கமாய் அவன் பெயரைச் சொன்னாலே போதும்... அவன் ஓடி வந்து நம்மை ஆட்கொள்வான் என்கிறார்.

தானேயோர் ஆழ்வாராக இருப்பினும் இவர் தொண்டரடிப் பொடியாழ்வாரை ஏந்திப் பிடித்ததுபோல், ‘சடகோபன்’ என்கிற நம்மாழ்வாரையும் பெரிதாக ஏந்திப் பிடித்தார். அதனால்தான் பெருமாளிடம் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை ஏகாதசி நாளில் திருச்சந்நிதியில் பாடிடும் வாய்ப்பைக் கேட்டுப் பெற்றார். இதுவே பின்னாளில் திருக்கார்த்திகையன்று நம்மாழ்வாருக்குத் திருமுகப்பட்டயம் அனுப்பும் ஒரு நிகழ்வாக வடிவம் பெற்றது.

இந்த நிகழ்வில் திருக்கார்த்திகையன்று அரையர் கானம் முடியவும், கோயில் ஸ்தானீகர் எம்பெருமானை நோக்கி வாசற்படி அருகே நின்றுகொண்டு, எம்பெருமான் காதில் விழும்படியாக “நாயிந்தே... ரகுநாதா...” என்று பெருமாளை விவரித்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்று கேட்கப் போக, சந்நிதி அர்ச்சகர், ‘ஏதத்த்ரைலோக்ய நிர்மாண தாரண சம்ஹாரகாரணம், ஸ்ரீமத் ரங்கநாதஸ்ய சாசனம் சாஸ்வதம்யரம்...’ என்று கூறுவார்.

அதாவது ‘மூவுலகைப் படைப்பதற்கும் காப்பதற்கும் அழிப்பதற்கும் காரணமான ஸ்ரீரங்கநாதனின் நிலையான சிறந்ததோர் கட்டளை இது’ என்பது இதன் பொருளாகும்.

இதைத் தொடர்ந்து எம்பெருமானின் மேனிமேல் சாத்திய சந்தனம், மலர்மாலை, இத்துடன் ஆடையும் சேர்த்து அரங்கப் பிரசாதமாய் நம்மாழ்வாருக்கு அளிக்கப்படும். இந்தப் பிரசாதம் திருவரங்கத்திலிருந்து, அப்போது ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்துவந்த ‘நம்மாழ்வாருக்கு தழையிடுவோர்’ எனும் திருப்பணி புரிபவர்களால் கொண்டு செல்லப்பட்டது.

இவை அவ்வளவையும் கணக்குப்பிள்ளை என்பவர் அன்றை நாள் கிழமை, நட்சத்திரமறிந்து எழுதி முடிப்பார். இதுவே ‘திருமுகப்பட்டயம்!’ இப்பட்டயத்தை வாதூல தேசிகர் என்பவர் பெற்றுக்கொண்டு ஆழ்வார் திருநகரியில் இருக்கும் நம்மாழ்வாராகிய சடகோபனுக்கு அளிக்க வேண்டி எடுத்துச்செல்வார்.

இடையில் பெருந்தூரம்!

ஆயினும் இந்நிகழ்வால் மானுடர்கள் நம்மாழ்வாரைப் பெரிதும் சிந்திக்கும் நிலை உருவாயிற்று. சடகோபனாகிய நம்மாழ்வாரும் எம்பெருமான் கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் சொரிந்து நின்றார். இவ்வேளையில் நம்மாழ்வாரையும் நாம் திருமங்கையாழ்வார் மனக்கண்வழி அறிந்துகொள்வது அவசியம்!

- தொடரும்...

பொய் சொல்லாப் பிள்ளையார்

ஞ்சாவூர் மாவட்டம், பூந்தோட்டத்துக்கு மேற்கே குடந்தை செல்லும் சாலையில் இருக்கிறது களஞ்சியூர். இங்கு அருள்புரியும் பிள்ளையாருக்கு `பொய் சொல்லாப் பிள்ளையார்’ என்று பெயர்.

ரங்க ராஜ்ஜியம் - 36

முற்காலத்தில், ஒரு வியாபாரி தன் மனைவியைக் கொன்றதாக வழக்கு ஒன்று மன்னனிடம் வந்தது. வழக்கை விசாரித்த மன்னன், அந்த வியாபாரிக்குத் தண்டனை விதித்தான். அன்று மன்னன் கனவில் தோன்றிய விநாயகர், `கொலை செய்தது வியாபாரி இல்லை’ எனக் கூறி வியாபாரிக்குக் கிடைக்கவிருந்த தண்டனையைத் தடுத்து நிறுத்தினாராம். அதற்கு நன்றிக்கடனாக அந்த வியாபாரி விநாயகருக்கு ஆலயம் எழுப்பி ‘பொய் சொல்லாப் பிள்ளையார்’ என்று பெயர் வைத்து வழிபட்டார். வீண் பழி மற்றும் பொய்வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து பொய்சொல்லாப் பிள்ளையாரை வழிபட்டுச் செல்வதன் மூலம் விரைவில் தங்களின் துன்பங்களில் இருந்து விடுபடுவார்கள் என்பது நம்பிக்கை.

தொகுப்பு: சி.வெற்றிவேல்