Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 44

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

எம்பெருமாளே வந்து உங்களுக்கு உதவிசெய்து ஒப்புதலும் பெற்றுத் தந்துவிட்டார். நாங்கள்கூட இது அவ்வளவு சுலபத்தில் நடவாத ஒரு காரியம் என்று எண்ணியிருந்தோம்.

ரங்க ராஜ்ஜியம் - 44

எம்பெருமாளே வந்து உங்களுக்கு உதவிசெய்து ஒப்புதலும் பெற்றுத் தந்துவிட்டார். நாங்கள்கூட இது அவ்வளவு சுலபத்தில் நடவாத ஒரு காரியம் என்று எண்ணியிருந்தோம்.

Published:Updated:
ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

நாடிய பொருள் கை கூடும், ஞானமும் புகழுமுண்டாம்

வீடியல் வழிய தாக்கும், வேரியங் கமலை நோக்கும்

நீடிய வரக்கர் சேனை, நீலு பட்டழிய வாகை

சூடிய சிலையி ராமன், தோள்வலி கூறுவோர்க்கே!

- கம்பர்

அந்தணச் சிறுவன் பிழைத்தெழுந்த அந்தச் சூழலில் அதுவரை நிலவிவந்த துக்கமெல்லாம் பறந்துவிட, தீட்சிதர் பெருமக்கள் அனைவரும் ஆனந்தத்தில் திளைத்தனர். அதேநேரம், அச்சிறுவன் பொருட்டு தன்னுயிரை விட்டுவிட்ட பாம்பின் உடலை, சிறுவனை எரிக்கவென உருவாக்கியிருந்த எரிமேடை விறகில் கிடத்தி, அதற்குத் தீயிட்டு, பிறகு அதன் சாம்பலை முறைப்படி ஆற்றில் கரைத்துத் திரும்பி வந்தனர்.

கம்பர் காத்திருந்தார்! வயது முதிர்ந்த தீட்சிதர் அவர் வந்த காரணத்தைக் கூறி, ``கம்பன் கவிக்கு நாம் சான்றளிக்கவேண்டும்'' என்று முடித்தார்.

``சான்றா... நாமா...'' எனக் கேட்டு விதிர்த்தவர் களும், ``கம்பரின் பாடல் சத்தியமான பாடல் என்பதற்குப் பிழைத்தெழுந்த நம் பாலகனே சாட்சி... அப்படியிருக்க இனி என்ன தயக்கம்?'' என்று கேட்டு மூவாயிரவரும் கையொப்பக் கீறலிடத் தயாராயினர். ஆயினும் அதில் ஒருவர், ``பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், நாம் நம் பொருட்டு ஒரு பாடலையாவது கேட்டு அதன் பொருளையறிந்தபிறகு கையெழுத்திடுவதே சாலச் சிறந்த செயலாகும்'' என்றார்.

கம்பரும் அதன் பொருட்டுத் தயாராகிக் காண்டம் காண்டமாய்த் தாம் படைத்த ஏட்டுக் கட்டுகளை அவர்கள் முன் வரிசையாய் அடுக்கி வைத்து, ``இவற்றில் எதிலிருந்து எந்தப் பாடல் குறித்துக் கேட்டாலும் நான் விளக்கமளிக்கத் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடனேயே அக்கூட்டத்தில் ஆழ்புலமை மிக்க ஓர் அந்தணர் ஒரு பாடலை உற்று நோக்கி அதைக் கம்பரிடம் காட்டி, ``இதைப் பாடி, பின் பொருள் கூறுக'' என்று சொல்ல, கம்பரும் அந்தப் பாடலைப் பாடலானார்.

`நாடிய பொருள் கை கூடும்; ஞானமும் புகழுமுண்டாம்;

வீடியல் வழியதாக்கும்; வேரியங் கமலை நோக்கும்;

நீடிய அரக்கர்சேனை நீறுபட்டழிய வாகை

சூடிய சிலைராமன் தோள்வலி கூறுவார்க்கே'

என்று பாடலைப் பாடிய கம்பர், பின் வரி வரியாகச் சொல்லிப் பொருள் கூறலானார்.

``நாம் நாடுகிற பொருள் விரும்பியபடி கைகூடும். நல்ல ஞானமும் புகழும் உண்டாகும். மோட்சமும் லட்சுமிநோக்கும் கிட்டும்... பெரும் அரக்கக் கூட்டமானது சாம்பல் ஆகிபின் நீரில் கரைந்து போகும் வண்ணம் வெற்றியைச் சூடிய ராமனின் தோள்வலிமை கூறுவோர்க்கு இவை எல்லாம் சாத்தியமாகும் என்பதே பொருள்'' என்று கூற, கூட்டத்தார் முகத்தில் வியப்பும் புன்முறுவலும் பூத்தபோதிலும் சிலருக்குள் சில கேள்விகளும் கிளைத்தன.

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

அதில் ஒருவர், ``கம்பர் பிரானே... ஸ்ரீராமன் பரமபுருஷன்! அவன் திருவடிகளைப் போற்றாமல் தோள்வலிமை கூறுவோருக்கு இவையெல்லாம் சாத்தியமாகும் என்கிறீரே... அவன் திருவடிகளை விடவா தோள்வலி பெரிது?'' என்று கேட்டார்.

``தாடகை வதத்தில் தொடங்கி, சுபாகு வதம் புரிந்து, விஸ்வாமித்திர முனியின் வேள்வியைக் காத்து, பின் மிதிலையில் சிவ தனுசுவை ஒடித்து,

சீதையைத் திருமணம் முடித்து, அயோத்தி வரும் தருணம் பரசுராம னையும் வென்று, அதன் பின் வனவாசம் புரிந்த நிலையில் விராதன் என்பானை வென்று, தூஷணாதியரைக்கொன்று, மாய மானையும் கொன்று, கபந்த வதம் புரிந்து, ஏழு ஆச்சா மரங்களை ஒரு பாணத்தால் துளைத்து, வாலியை வதம் செய்து சுக்ரீவனுக்கு அரசப் பதவியளித்து, மகாராட்சசனை மடியச்செய்து, ராவணாதி இரட்டையர்களையும் வேட்டையாடி முடித்து, விபீஷணனுக்கு முடிசூட்டி என்று சகலத்தையும் சாதித்தது ராமனின் தோள்வலிதானே... அந்த வலிமையைச் சொல்வதுதானே ராமாயணம். எனவேதான் திருவடியைவிட தோள்வலியைக் குறிப்பிட்டேன். திருவடி சரணாகதிக்கே உரியது. தோள்வலிமை சாதனைகளுக்கும் சிலிர்ப்புக்கும் சிந்தனைக்கும் உரியதல்லவா...'' என்று கேள்வி கேட்டவரிடமே திரும்பக் கேட்டார் கம்பர்.

அதற்கு மேல் கேள்வி கேட்க அங்கு யாருக்கும் தெம்பும் இல்லை, திராணியும் இல்லை. ஆயினும் ஒருவர் மிக வேகமாக முன் வந்து, ``உம் பாடலில் `நீடிய அரக்கர்சேனை நீறுபட்டழிய' என்ற வரிக்கு நீங்கள் கூறிய பொருளை நான் ஏற்கப் போவதில்லை. எம்பெருமானின் திருநீற்று மகிமையை நீங்கள் குறிப்பிட்டதாகவே நான் கருதுகிறேன். ராவணன் சிவபக்தன். நீறணியும் சிவபக்தரே ஆனாலும் பாவச்செயல் புரிந்தால், நீறின் மகிமையே அவர்களைப் பஸ்மமாக்கிவிடும் என்று தாங்கள் மறைமுகமாக உணர்த்துவதாகவே நாங்கள் பொருள்கொள்கிறோம்; அதைக் கருதி பாராட்டுகிறோம்'' என்று ஒரு புதுவியாக்யானம் செய்ததோடு முதல் கையெழுத்தாகத் தன் கையெழுத்தை இட்டு, கம்பரின் கையில் தந்து `வாழ்க உம் கவித்தொண்டு' என்று வாழ்த்தவும் செய்தார். அதன்பின் அவ்வளவு பேரும் கையொப்பமிட்டு ஏடுகளை ஒரு கட்டாகக் கட்டி கம்பரிடம் தந்திட, கம்பரும் தான்வந்த காரியம் வெற்றிகரமாக முடிந்த திருப்தியோடு திருவரங்கத் துக்குப் புறப்பட்டார்.

திருவரங்கம்! தில்லை வாழ் அந்தணர்களின் கையொப்பக் கீறல்கொண்ட ஏட்டுக்கட்டைக் கண்டு திருவரங்கம் வாழ் அந்தணர் தொட்டு அனைத்து வர்ணத்தாரும் பூரித்தனர்.

``கம்பர் பெருமானே... இது ஒரு காலால் இமயம் ஏறியது போன்ற சாதனை... எப்படிச் சாதித்தீர்?'' என்று கேட்க, கோவிந்தராஜப் பெருமாள் பெருங்கருணை புரிந்ததை கம்பர் கூற எல்லோரிடமும் சிலிர்ப்பு!

``எம்பெருமாளே வந்து உங்களுக்கு உதவிசெய்து ஒப்புதலும் பெற்றுத் தந்துவிட்டார். நாங்கள்கூட இது அவ்வளவு சுலபத்தில் நடவாத ஒரு காரியம் என்று எண்ணியிருந்தோம். எம்பெருமான் கிருபையால் இனிது முடிந்தது. இவ்வேளை இன்னொரு கருத்தும் இதன் பொருட்டு தோன்றுகிறது அதை நான் கூறலாமா?'' என்று கேட்டார் ஒருவர்.

``தாராளமாகக் கூறுங்கள்'' என்றார் இன்னொருவர்.

``முதல் மொழியாம் நம் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட சிலர், காலத்தால் ஜைனர்க ளாகி நம் வழிமுறைகளிலிருந்தும் விலகிச்சென்று விட்டனர். அவர்கள் இப்போது திருநறுங்கொண்டை எனும் ஊரில் ஒன்றாகக்கூடி வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இந்த ராமாயணத்தைக் கேட்கும்பட்சத்தில் இதில் குறை கூற முற்படுவர். ஆனால், இதில் குறையென்று கூற ஏதுமில்லாததால் ஒப்புக்கொண்டே ஆகும் ஒரு நிலைக்கும் ஆளாவர். எனவே, அவர்களும் இதைக்கேட்டு குறை காண முடியாது தோற்று, கையெழுத்திடட்டுமே... அது இந்த நூலின் பெருமைக்கு மகுடம் போல் விளங்குமல்லவா?'' என்றார்.

``இது எனக்கு அத்தனை சரியாகப்படவில்லை. விட்டால் இந்த உலகில் வாழும் சகலசமயத்தவரும் இனத்தவரும் கேட்டுக் கையொப்பமிட வேண்டும் என்றும் கூறுவீரோ?'' என்று கோபித்தார் ஒருவர்.

``அப்படியல்ல... இது காலத்தால் நிற்கப்போகும் காவியம். இதன் தொடக்கம் ஒரு வரலாறு - எனவேதான் கூறினேன்'' என்றார் அவர்.

கம்பர் சளைக்கவில்லை.

``உங்களுக்குள் தர்க்கம் வேண்டாம். நான் ஜைனர்களிடமும் கையொப்பக்கீறலைப் பெற்று வருகிறேன்'' என்று திருநறுங்கொண்டை சென்று சேர்ந்தார்.

ஜைனர்கள் பேரன்போடு வரவேற்றனர். தில்லையில் நடந்த அதிசயமறிந்து, ``அதைவிடவா எங்கள் சான்று பெரிது'' என்றனர்.

``இது உங்கள் தமிழ் இலக்கணப் பொருளறி வுக்கான வாய்ப்பு'' என்றார் கம்பர்.

``அங்கனமாயின் ஒரு பாடல் எங்களுக்குப் போதுமானது'' என்றவர்கள் ஒரு பாடலை எடுத்துப் பாடினர்.

`உலகம் யாவையும் தாமுளவாக்கலும்

நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்!

அன்னவர்க்கே சரண் நாங்களே'

இந்தப் பாடலை வைத்தே கேள்வி கேட்டனர்.

``இந்த உலகம், இதில் கோடானு கோடி உயிர்கள், பஞ்ச பூதங்கள், விண்ணில் சூரியன், நிலவு, நட்சத்திரங்கள்... மேலும் பல கோள்கள் என்று நம்மால் எண்ணிப் பார்க்கவே இயலாத சர்வத்தையும் படைத்த இறைவனின் செயலைப் பொறுப்புள்ள செயலாகக் கருதாமல் விளையாட்டு என்று கூறக் காரணமென்ன?'' என்று கேட்டனர்.

``அப்படி அவர் விளையாட்டாய்ச் செய்வாராயின் அவரைச் சிறுபிள்ளையாக அல்லவா கருத வேண்டியிருக்கும்?'' என்றார் இன்னொருவர். மேலும் ஒருவர் முன்வந்து ``கீர்த்தி, சிருஷ்டி, திதி, சங்காரம், திரோபவம் என்று ஐவகை வினைப்பாடுகளை வேதம் சொல்கிறது. ஆனால் நீங்களோ படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்றை மட்டும் குறிப்பிடுகிறீர். எல்லாம் ஒரு பரம்பொருளின் செயல்தானே... அதாவது ஒன்றுதானே?'' என்று கேட்டு முடித்தார்.

கம்பரும் விளக்கமளிக்கத் தொடங்கினார்.

ரங்க ராஜ்ஜியம் - 44

``அண்ட சராசரங்களைப் படைத்தும் காத்தும் பின் அழிப்பது அல்லது மாற்றங்கள் விளைவிப்பது மான அனைத்தும் பரம்பொருளின் செயலே. ஆயினும், அதை அப்பரம்பொருள் எனும் எம்பெருமான் பாரமாகக் கருதாமல், விளையாட்டாகவே வினைபுரிகிறான். இவ்வாறு விளையாட்டாகப் புரியும் வினையே இத்தனை பெரியதெனில் அவன் தீர்க்கமாய்ப் புரியும் வினைப்பாடு எத்தனை வியப்புக்குரியதாயிருக்கும் என்று எண்ணவைப்பதே என் வரிகளின் நோக்கம்'' என்று கூறி, மற்ற கேள்விக்கும் பதில் கூற முனைந்தார். ஜைனர்கள் தடுத்து, ``இனியும் உம்மைச் சோதிப்பது தமிழுக்கு இழுக்கு சேர்ப்பதாம்'' என்று கூறி, அனைவரும் கையொப்பமிட்டு ஏடுகளைக் கம்பரிடம் தந்து வணங்கினர்.

கம்பர் பெரிதும் மகிழ்ந்து திரும்பும் வழியில் மாமண்டூர் எனும் ஊரில் ஓர் இரும்புக்கொல்லைக் கருமானின் தமிழ்ப்புலமையைப் பற்றி அறிந்து, அவரிடம் சென்று தன் பாடல் வரிகளில் கருமார்களின் செயல்திறனை உவமை காட்டும் விதத்தில் எழுதப்பட்ட ஒரு பாடலைப் பாடிக் காண்பித்தார்.

இருப்புக் கம்மியற்கு இழை நுழை ஊசி என்று இயற்றி

விருப்பின் கோடியால் விலைக்கெனும் பதடியின் விட்டான்

கருப்புக் கார்மழை வண்ணவைக் கடுந் திசைக் களிற்றின்

மருப்புக் கல்லிய தோளவன் மீளருமாயை'

கருமானும் பெரிதும் மகிழ்ந்து தன் கையொப்பத் தையும் இட்டுத் தந்தார்!

இவ்வாறு கம்பர் ஊர் ஊராகச் சென்று ராமாயண அரங்கேற்றம் பொருட்டுப் பலரையும் சந்தித்து வருவதையும் எல்லோரும் அவருக்குக் கையொப்பமிட்டுத் தருவதையும் அறிந்த தஞ்சையைச் சேர்ந்த அஞ்சனாட்சி என்கிற தாசி, கம்பரைத் தானும் காண விரும்பினாள்.

அதன்பொருட்டு, `எல்லோரிடமும் கம்பர் கையொப்பம் பெற்றுவிடலாம் - எனக்குப் பொருள் சொல்லி என்னை வெல்ல அவரால் இயலாது' என்று அவர் காதுக்குச் செல்லுமாறு பேசினாள். கம்பர் கலங்காது அவள் மனை வாசலுக்கே வந்து நின்றுவிட்டார்!

அஞ்சனாட்சி அதிர்ந்தாள். அவள் இதைத் துளியும் எதிர்பார்க்கவில்லை. கம்பரோ, `பொருள் சொல்ல வந்தேன்' என்றார். அவரைப் பணிந்து வரவேற்று ஆசனமளித்து அவர் திருமுன் மண்டியிட்டு அமர்ந்தாள் அஞ்சனாட்சி.

பின், ``நீங்கள் இங்கு வருவீர் என நான் துளியும் எண்ணவில்லை!'' என்றாள்.

``நான் எங்கே வந்தேன்... என் தமிழ் வந்துள்ளது. என் ராமன் வந்துள்ளான். அவன் கால்பட்ட கல்லே பெண்ணானது. கவிபட்டு நீயும் தூய பெண்ணானால் அதுதானே நல்விளைவு'' என்றார் கம்பர். அதைக்கேட்டுக் கண்கலங்கிய அஞ்சனாட்சி

`அம்பரா வணி சடையரனயன் முதல்

உம்பரால் முனிவரால் யோகராலுயர்

இம்பராற் பிணிக்கரு மிரம வேழஞ்சேர்

கம்பராம் புலவரைக் கருத் திருத்துவோம்'

என்று தானறிந்த தமிழில் பாட்டாகவே பாடி, அதை அவர் கையில் கொடுத்ததோடு காலில் விழுந்து வணங்கி, ``நான் இனி தாசியல்ல சந்நியாசி'' என்றாள்!

- தொடரும்