தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 46

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

மந்தாகினி! நீ சொல்வதைப் பார்த்தால், அருளவல்லவருக்குத் தான் சிலாரூபம் உகந்ததா?”

கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்

உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை

அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்

கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே

- திருப்பாணாழ்வார்

கிளி மண்டபத்தில் கிளிகளுக்கு இடையே சம்பாஷணை தொடர்ந்தது. சுபாஷினி என்னும் கிளி மந்தாகினி என்னும் கிளியிடம் கேட்டது: “மந்தாகினி! நீ சொல்வதைப் பார்த்தால், அருளவல்லவருக்குத் தான் சிலாரூபம் உகந்ததா?”

“ஆமாம். உன்னை வணங்குவோருக்கு நீ ஏதேனும் செய்ய வேண்டாமா?”

“அப்படியானால், இன்னாருக்குத்தான் சிலை வடிக்கவேண்டும் என்று சாஸ்திரம் ஏதாவது உண்டா?”

``ஏன் இல்லாமல்... `சிற்ப சிந்தாமணி' என்று விஸ்வகர்மா அருளி செய்த சிற்ப சாஸ்திர நூல் உரிய இலக்கணம் வகுத்துள்ளது. ஒரு சிற்பியைப் பொறுத்தவரையில், உருப்பெறாத கல்கூட தெய்வம். அவன் கல்லை மிதிக்க நேரும்போது... ஆற்றில் இறங்குவோர் முதலில் தங்கள் கரங்களால் ஆற்றைத் தீண்டிவிட்டுப் பின் ஆற்றுக்குள் கால் வைப்பது போல, கல்லைக் கைகொண்டு தொட்டு வணங்கிய பிறகே கால் வைக்கவேண்டும்.

அடுத்து உயிரோடிருப்போருக்குச் சிலை வடித்தல் கூடாது. படி, பீடம், தூண், விதானம், தளம், சுவர், கதவு, ஜன்னல் என்று எதை வடிக்கும் போதும் குரு வந்தனமும் உளி வந்தனம் எனும் கருவி வந்தனமும் புரியவேண்டும். உயிரற்றவர்களில் குருவாய் வாழ்ந்தவருக்கே சிலா ரூபம் எழுப்பலாம்.

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

வணங்கத்தகா ரூபங்கள் எனும் வகையில், கலா ரூபமாய் எதையும் வடிக்கலாம். எதை வடித்தாலும் உருவேற்றலும் கண் திறத்தலுமே சிலா ரூபத்துக்கு உயிரைத் தரும். இதில் 32 லட்சணங்களோடு வடிக்கப்படும் உயிர் ஜீவன்களின் சிலைக்கு மந்திரத்தால் உயிர் கொடுத்து எழுப்ப முடியும். 32 லட்சணம் பொருந்திய ஒரு நந்தி சிலைக்கு சித்தன் ஒருவன் அதன் மூக்கில் ஜீவ வாயுவை ஊதி, மந்திரம் ஜபிக்கவும் நந்தி உயிர்த்தெழுந்து நடமாடியது. நீ இதை எல்லாம் கேள்விப்பட்டதில்லையா?”

“அடேயப்பா... சிற்ப சிந்தாமணியை வாசித் தவள் போலவே பேசுகிறாயே, முடிவாகச் சொல்...

இந்தச் சிற்பி, ராணியின் விருப்பத்தை ஈடேற்றி னால் என்னவாகும்?”

“இவனால் ஈடேற்ற முடியாது. அஷ்டதிக் பாலகர்கள் இவனை ஈடேற்ற விடமாட்டார்கள். அழியும் தன்மை கொண்டோருக்கு, அழியாத் தன்மைகொண்ட சிற்பங்கள் எதிரானவை.”

“நம் பேச்சை அந்தச் சிற்பி கேட்கிறான்போல் தெரிகிறதே?”

“அதனால்தான் நானும் பேசுகிறேன். இந்த உலகில் எம்பெருமானுக்கு நிகராய் எதுவும் இல்லை. எனவே, விண்ணிலிருந்து மண்ணுலகம் வந்த அவனைக்கொண்டு ஒரு தனி ஆலயம் எழுப்பலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் ஒரே ஆலயத்தில் இரு சந்நிதிகளோ, நரஸ்துதியோ கூடவே கூடாது.”

கிளிகள் பேசி முடித்ததோடு பறந்து செல்லத் தொடங்கின. சிற்பிக்கு அவற்றின் பேச்சைக் கேட்டு தெளிவு பிறந்தது. அவன் கைவசம் இருந்த கருவிப் பெட்டகத்தில் மட்டக் கருவிகள், கோலாடி கோள், வட்டத் திகிரி, குழிக்காய்ச்சி, சிற்றுளி, பேருளி, சிகையுளி என சகலமும் இருந்தன.அந்தப் பெட்டகத்தைச் சுமந்தபடி பெருமானின் சந்நிதிக்குச் சென்றான்.

“ஐயனே.. என்னைக் கிளிகளின் வடிவில் வந்து தடுத்தாட்கொண்டாய். பெரும் பிழைபுரிய இருந்தேன். நல்லவேளை காப்பாற்றிவிட்டாய்” என்று வேண்டி கொண்டு புறப்பட்டான்.

சிற்பி சொல்லாமல் கொள்ளாமல் ஒருபுறம் செல்ல... வீர சோமேஸ்வரன் கனவில் அவனுடைய குருவின் பிரவேசம் நிகழ்ந்தது. மன்னர் தம்மை முன்னிறுத்திக்கொள்ளும் செயலை கைவிடச் சொன்னார். நீ வடிக்கும் கலைச் சிற்பங்களே உன்னை நினைக்கவைக்கும் என்று கூறிட, அதன்பின் உத்தமவல்லி அடம்பிடிக்கவில்லை.

அரங்கன் ஆலய அனுபவங்கள் பலவற்றில், சிற்பம் தொட்டு இப்படியோர் அனுபவம். பிற்காலத்தில் வீர சோமேஸ்வரனை முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் வெற்றிகொண்டு கர்நாடகம் நோக்கி ஓடும்படிச் செய்தான்.

கி.பி 1252 முதல் சுந்தரபாண்டியன் வசம் சோழ நாடு மட்டுமல்ல; தொண்டை நாட்டுத் தலைநகரான காஞ்சிபுரமும் வயப்பட்டது. அதனால் இவனுக்கு ‘எம்மண்டலமும் கொண்ட பெருமாள்’ என்கிற பெயரும் ஏற்பட்டது. இவன் தமிழகம் கடந்து நெல்லூர் வரை தன் ஆளுமையில் நாட்டை வைத்திருந்தான்.

இவனுக்குத் திருவரங்கப் பெருமான் மேல் அளவுகடந்த பக்தி இருந்தது. இவனே திருவரங்கப் பெருமான் கோயில் கோபுரத்தைப் பொன்னால் முதன்முதலில் வேய்ந்தவன். அதன் நிமித்தம் தனது எடைக்கு எடை துலாபாரம் அளித்தான். இவனை மையமாக வைத்து, ‘சுந்தரபாண்டியம் பிடித்தேல்’ என்றோர் `அருளப்பாடு' உருவானது. இதன் பின்புலத்தில் ரசமான சம்பவம் ஒன்றும் நடந்தது.

ஒரு திருநாளில் எம்பெருமான் திருவீதி உலா வந்து மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளும்போது, திருவாராதனை புரிவது வழக்கம். அப்போது அலங்கார ஆசனத்தில் திருக் கண்ணாடி காட்டுதல் என்றொரு சடங்கும் உண்டு. அன்று பெரும்பாலும் தூய வெள்ளித் தட்டுகள் கண்ணாடிகளாக முகத்தைப் பிரதிபலித்தன.

குறிப்பிட்ட வைபவ வேளையில் அர்க்ய, பாத்ய ஆசமனீயங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, பின் அந்தத் தீர்த்தங்கள் ஒட்டுமொத்தமாய் `திருப்படிக்கம்' என்னும் வெள்ளிப் பாத்திரத்தில் சேர்க்கப்படும்.

அவ்வாறு அர்க்ய பாத்ய ஆசமனீயங்கள் சமர்ப்பிக்கப்படும் ஒருநாள், திருப்படிக்கம் பாத்திரத்தைக் காணவில்லை. ஆராதனை புரியும் அர்ச்சகர் எங்கு தேடியும் கிடைக்காமல் தவித்து நின்றார். அப்போது அருகில் நின்று சிந்தித்தபடி இருந்த சுந்தரபாண்டியன் தன் ராஜ கிரீடத்தைக் கழற்றி, அதைத் தலைகீழாகப் பிடித்து அதில் அந்த ஆசமனீய தீர்த்தத்தை ஏந்திப் பிடிக்க முன்வந்தானாம்.

அரசர்களுக்கு ராஜகிரீடம் என்பது உயிரைப் போன்றது. அதை ஒருபோதும் எவருக்காகவும் இழக்கமாட்டார்கள். ஒரு பெண்ணின் திருமாங்கல்யம் போன்றது சிரசில் அமைந்திடும் ராஜ கிரீடம்.

அப்படிப்பட்ட கிரீடத்தை எம்பெருமான் பொருட்டு ஏந்திப்பிடித்து எம்பெருமான் முன் தன்னை ஒரு திவ்ய தொண்டனாக சுந்தர பாண்டியன் ஆக்கிக்கொண்டான். அதனால், அன்று முதல் எப்போது திருவாராதனம் நடந்து ஆசமனீய தீர்த்தம் பிடிக்கப்பட்டாலும் அந்தப் பாத்திரத்துக்கு ‘சுந்தர பாண்டியம் பிடித்தேல்’ என்கிற ஓர்அருளப்பாடு உருவாக்கப் பட்டு அழைக்கப்பட்டது.

திருவரங்கத் திருவாராதனத்தில் வேறு எந்த அரசனுக்கும் இந்த கௌரவம் கிடையாது. இத்துடன் சுந்தர பாண்டியன் அன்று அணிந்திருந்த கிரீடம் எனப்படும் கொண்டைவடிவ அணிகலனைத் தான் எம்பெருமானும் அணியலானான்.

மன்னனின் இந்த அரிய செயல்பாடுகளும் அரங்கன் மேலான பக்தியும் திருப்பூந்துருத்திக் கல்வெட்டில் காணப்படுகின்றன. இவனது புகழைப் பாடும் தமிழ் மெய்க்கீர்த்தி ‘பூமலர் வளர் திகழ’ என்று தொடங்குகிறது. இதுவே க்ரந்த மொழியில் ‘சம்ஸ்த ஜகத் ஆதார’ என்று தொடங்குகிறது.

இவன் பெரும் வீரனாகவும் வெற்றியாளனாகவும் திகழ்கிறான். நரசமண்டலக் கல்வெட்டு ஒன்று இவனை, ‘எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தர பாண்டியன்’ என்கிறது. கி.பி 1256-ம் ஆண்டு, திருப்பூந்திருத்தியில் இவனால் உருவாக்கப்பட்ட கல்வெட்டு பல அரிய செய்திகளைக் கூறுகிறது.

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

இவன் வரையில் ஒரு ரசமான இன்னொரு சம்பவமும் உண்டு. இவன் தனக்குக் கட்டுப்படாதவர் களை இரக்கமின்றி தண்டிப்பவனாகவும் இருந்தான். பல சைவர்கள் இவன் வைணவத்தை ஆராதிப்பதை விரும்பவில்லை. அவர்கள் இவனை சில காலம் தங்கள் கைகளில் வைத்துக்கொள்ள முயன்று தோற்றுப்போய் இவனை இகழ்ந்தனர். ஆயினும் இவன் அயர்ந்துவிடாமல் தன்னை எதிர்ப்போரைத் தண்டித்தான். தண்டித்தவிதம் அசாத்தியமானது. அவர்களுடைய பொருள்களை அரசாங்கச் சொத்தாக்கி, அவர்களில் பலரை நாடு கடத்தினான்.

அப்படி அபகரித்த சொத்துகளை எல்லாம் ‘திருவரங்கப் பெருமானுக்கே சேரட்டும்’ என்று மூட்டை மூட்டையாகக் கட்டி எடுத்துவந்து திருச்சந்நிதி முன் குவித்தான். அவை ‘எம்பெருமானுக்கே சொந்தம்’ என்றவன், அதன் நிமித்தம் ஓலை எழுதி அதை உரியோர் கொண்டு சாசனப்படுத்தினான்.

பொற்காசு, பொன்படி, பொன் மாலை, தங்க வைர கிரீடங்கள், காசு மாலை, அட்டிகை, கங்கணம், கடகம், ஒட்டியாணம், ரவிச்சுடர் மாலை, பவளச்சங்கிலி சிலம்பு, கொலுசு, மெட்டி, பட்டயம், பதாகை, மோதிரம், நகமேவி, தொப்புளாக்கி, அரைஞாண் தங்கப்பூண், செவிமாட்டி, தோடு, தொங்கட்டான், புல்லாக்கு, ரத்னச் சுட்டி, கவச கண்டி என்று வகை தொகையின்றி அவை இருந்தன. ஒருவர், எம்பெருமானுக்குக் காணிக்கையாகத் தருவதை, பல சான்றோர் முன்னிலையில் காட்சிப்படுத்தி, கோயில் பட்டயக்காரரைக் கொண்டு ஆவணப்படுத்திய பிறகே அதை ஏற்பது அன்றைய வழக்கம்.

பட்டயக்காரரால் கோயிலுக்கு வந்து தங்கத்தை எடையிட்டுக் கணக்கிட இயலாதபடி அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டால், அந்த மூட்டைகள் திருச்சந்நிதி முன்னால் உள்ள மண்டபத்தில் கேட்பாரற்ற பொருள் போல் பல மாதங்கள் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதை நல்ல சகுனமாய் கருதாமல் அரங்கனிடமே உத்தரவு பெற்றிட ஆலய ஸ்தானீகம் முடிவு செய்தது.

பூக்கட்டிவைத்துக் கேட்பது என்றொருமுறை. ஓர் ஆல இலையில் தாமரை இதழை வைத்துக் கட்டுவர். இன்னொன்றில் துளசியை வைத்துக் கட்டுவர். இரண்டில் ஒன்றை ஆலயத்துக்கு வரும் மூன்று வயதுக்கு மிகாத சிறுமியை அழைத்து அவளுக்குத் திருமண் காப்பிட்டு, அரங்கன் மேல் கிடந்த வஸ்திரத்தை எடுத்துச் சாத்தி, பாகை அணிவித்து அவளை ரங்கநாயகியாக பாவித்து எடுக்கச் சொல்வர்.

அவள் தாமரை இதழை எடுத்துத் தந்தால் ‘அதை ஏற்கலாம்.’ துளசி வந்தால் ‘அப்போது விருப்பமில்லை’ என்று பொருள்.

சுந்தரபாண்டியன் வரையில் துளசியே வந்தது. அந்தத் தங்கம் அவ்வளவும் மண்டபத்திலேயே பல காலம் கிடந்தன.

கிட்டத்தட்ட இரண்டாண்டுகள்...

இதனால் மனம் தளர்ந்த சுந்தரபாண்டியன், இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து அரங்கன் நிமித்தம் தன்னை வருந்திக்கொண்டு ஏகாதசி விரதம் இருந்து, காவிரியில் நீராடி தினமும் அங்கப்பிரதட்சணமும் புரிந்தான். அதன் விளைவாக அந்த ஆபரணங்களை ஒருநாள் அரங்கன் ஏற்றுக்கொண்டு அருளினான்.

பொன்னும் பொருளும் பக்தியைவிடப் பெரியதில்லை என்பதை உணர்த்துகிறார்போல் நடைபெற்ற இச்சம்பவம் திருவரங்க வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட ஒன்று. இவனே பத்து பேர் கொண்ட ஒரு வாரியத்தையும் அமைத்தான். இவர்கள் கோயில் நிர்வாகத்தைக் குறைவின்றி நடத்தினர். ஒரு கட்டத்தில் தன் சிம்மாசனத்தையே அவன் அரங்கனுக்கு வழங்கி, தான் அருகில் ஒரு தொண்டனாய் நின்றான். பன்னிரு காப்போடு அவன் நின்ற விதம் கண்டு அவ்வளவு பேரும் வியந்தனர். ராஜ மகேந்திரன் திருவீதியில் தெற்குத் திருவாசல் தொட்டு, சுற்றுத் திருநடை மாளிகைகள் உட்பட பல மண்டபங்கள் இவனால் உண்டாக்கப்பட்டவையே!

தொண்டில் இவன் செலுத்திய கஜ துலாபாரம் விசித்திரமானது!

- தொடரும்...