மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 47

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

இதற்கான சான்று சிதம்பரத்தில் உள்ள சுப்ரமணிய பிள்ளையார் கோயில் வடக்கு சுவர்க் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

சுந்தரபாண்டியனின் கஜ துலாபாரம் விசித்திரமானது. அசாத்தியமானது. பொன்னால் ஒரு படகு செய்து அதில் தன் பட்டத்து யானையை நிறுத்தி, அதில் அவன் அமர்ந்த நிலையில் - அருகில் மற்றொரு படகை நிறுத்தி - தன் படகு நீரில் அமிழ்ந்த அளவுக்கு அந்தப் படகில் தங்கக் கட்டிகளை வைத்து கஜ துலாபாரம் செலுத்தினான். 19 அடி உயரமுள்ள யானை மேல் அமர்ந்து (ஏழு தச்சு முழ அளவு) அவன் கஜ துலாபாரம் அளித்ததை அப்போதைய ஸ்தானீகர்கள் ‘கோவிலொழுகு’ எனப்படும் கோயிலுக்கான பதிவில் குறித்தும்வைத்தனர்.

இத்தங்கத்தைக்கொண்டே அரங்கப் பெருமானின் பிரணவாகார விமானத்துக் குப் பொற்கூரையும் வேயப்பட்டது. இதனால் இவனை சாஸ்திர பண்டிதர்கள் ‘ஹேமச்சந்தன ராஜா’ என்று அழைத்தனர். இவனுக்கும் தன்னுடைய உருவத்தைப் பொன்னாலேயே செய்து அதை கோயிலில் வைத்து பிறர் தன்னை புகழ வேண்டும் என்கிற வேட்கை உண்டானது. ஆனால், வீரசோமேஸ்வரனுக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறி ஸ்தானீகர்களும் மந்திரிப் பிரதானிகளும் தடுத்து விட்டனர்.

ஆகவே, அந்த விருப்பத்தைச் சற்று மாற்றி ‘ஹேமச்சந்தன ராஜஹரி’ என்கிற விஷ்ணு விக்கிரகத்தைத் தங்கத்தால் செய்து திருக்கோயிலில் எழுந்தருளச் செய்தான். இவன் செய்த காரியங்களில் மகத்தானது ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்திடச் செய்த முயற்சிதான். பழைய செல்லரித்த சுவடிகளில் உள்ளவற்றைப் புதியதில் படியெடுத்தான். அதற்கெனப் பல பண்டிதர்களை நியமித்தான். இவர்கள் விக்கிரமச் சோழன் திருக்கை ஒட்டி என்னுமிடத்தில் அமர்ந்து இத்திருக்காரியங்களைச் செய்தனர். அத்துடன் வரலாற்றை அறிய வருபவருக்கு வாசித்துக் காட்டுதல், அவர்களுக்கு ஓலையில் எழுதி வழங்குதல் போன்ற பணிகளைச் செய்தனர். இதனால் ஓலைப்பண்டிதர்கள் என்றொரு கூட்டமே வாழ்வு பெற்றது. இவர்கள் வசிக்க வீடும், நிவந்தமாக நிலங்களையும் வழங்கி அவர்களைப் போஷித்தான்.

இதற்கான சான்று சிதம்பரத்தில் உள்ள சுப்ரமணிய பிள்ளையார் கோயில் வடக்கு சுவர்க் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

திருவரங்கச் சிறப்புகளுள் பிரதானமான சிறப்போடு பல ஆச்சர்யங் களையும் தன்னகத்தே கொண்டதுதான் ஆயிரங்கால் மண்டபம். பெயர்தான் ஆயிரங்கால் மண்டபம். ஆனால், எண்ணினால் 979 தூண்களே இருக்கும். மீதமுள்ள 21 தூண்களுக்குப் பதிலாக தென்னை மரத்தண்டுகள் தூண்களாக நிறுவப்பட்டு உற்சவம் இங்கு நடைபெறுகிறது. விண்ணில் பரமபதத்தில் 1000 கால்களுடன் திருமாமணி மண்டபம் இருப்பதால், மண்ணில் கூடாது என்பதாலோ என்னவோ 21 மரத் துண்டுகள் கொண்டு 1000 ஆக்கப்படுகிறது.

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

இதன் பின்புலத்தில் வேறுசில சங்கதிகளும் உண்டு.

பொதுவாக ‘ஆயிரங்கால் மண்டபம்’ என்பதைச் சிற்ப சாஸ்திரம் அறிந்த வல்லோர், ‘ஆயிரம் கால மண்டபம்' என்றும் கருதுவர். அதாவது அது ஆயிரம் ஆண்டுக் காலத்துக்கு உறுதி குன்றாது திகழ்ந்திடும் என்பது நுட்பப் பொருள்.

இப்படி ஒரு மண்டபத்தைக் கட்டுவதைவிட, கட்டியதைத் தூய்மையுடன் உற்சவங்கள் நிகழ்த்திப் பேணுவது மிக முக்கியம்.இல்லாவிட்டால் துஷ்ட சக்திகள் இதனுள் நுழைந்துவிடும். அவ்வாறு நுழைந்துவிட்டால் அவற்றை விரட்டுவது மிகக் கடினம். அவை மண்டபத்தின் இருண்ட மூலைகளை விடாது ஆக்கிரமிக்கும். இதனால் மண்டபத்துக்குள் வவ்வால்கள் அடைந்து கழிவு நாற்றம் மிகும். வவ்வாலை விழுங்கிட அரவங்கள் உள் நுழையும். பெரும்பாலும் மலைப் பாம்புகளே இதுபோன்ற இருண்ட கதகதப்பான பகுதிகளைத் தேடி வரும்.இதனால் ஆயிரங்கால் மண்டபம் உள்ள ஊரே தீய சக்தி மிகுந்ததாகி ஒருகட்டத்தில் மனிதர்கள் வாழவே முடியாத ஓர் ஊராகிப் பாழடைந்து போகும்.

இதே மண்டபத்தில் தினமும் உற்சவங்கள் நடந்து, மேளதாள சப்தங்கள் பரவி, கந்தப் புகைவாசம் வீச, பலரும் வந்து நிம்மதிப் பெருமூச்சுவிடும் நிலையில் அந்த மூச்சின் வெப்பமும் பரவி, அதன் காரணமாய் நல்ல மழைப் பொழிவு உண்டானால் அந்த ஊர் சுபிட்சமாக இருக்கும். இதனால்தான் நிறைந்த விழாக்கள் தொடர்புடைய கோயிலில் இம்மாதிரி மண்டபங்கள் கட்டப்பட்டன. இப்படிப்பட்ட மண்டபங்கள் பெருமழைக் கால வெள்ளத்தின்போது மக்களைக் காப்பாற்றும் இடங்களாகவும் திகழ்ந்தன. திருவரங்கத்தில் இம்மண்டபம் வருடம் முழுக்க ஜகஜ்ஜோதியாய் திகழ்ந்தது. அதேவேளை, ஆட்சி மாற்றம், கால மாற்றம் நேரும் தருணங்களில் சற்று தேக்கம் ஏற்பட்டதும் உண்டு. அப்படியான நிலை ஏற்படும்போது கெடுதல் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று எண்ணிய சாஸ்திரம் அறிந்த மனிதர்கள் சிலர், மண்டபத் தின் கால்களில் 21 தூண்களை எவரும் அறியாதபடி நீக்கி, சிறு ஊனம் செய்து, இந்த ஊனம் ஒன்று போதும்; பெரிய ஊனம் வந்திடக் கூடாது என்று செயற்பட்டனர் என்பதாகவும் தகவல் உண்டு.

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

இவை எல்லாம் ஆதாரங்களற்ற செவிவழிச் செய்திகளே. இயல்பாய் கலவைச் சாந்து உதிர்ந்து, சில தூண்கள் வலுவிழந்து விழுந்திருக்கவும் வாய்ப்பும் உண்டு. ஆனால் ஒன்று... திருவரங்கம், அரசர் பெருமக்களால் கொண்டாடப்பட்ட ஒரு பெருந்தலமாகவே விளங்கியது; விளங்கிக்கொண்டிருக்கிறது. இனியும் விளங்கிடும். ஏனெனில், உள் இருப்பவன் அப்படிப்பட்டவன்; அவன் ஆதியந்தம் கடந்த சர்வ வியாபி!

அரசர் பெருமக்களில் ஆழமாய் முத்திரை பதித்தவர்களில் சுந்தர பாண்டியனும் ஒருவன். இவனே சித்திரை மாதத்தில் தேர்த் திருவிழாவை ஏற்படுத்தியவன். ஒரு வைணவப் பெரியவர் அதற்குக் காரணமானவர் என்பர். இவர் தேர்த்திருவிழாவின் சிறப்பை மன்னனுக்கு முதலில் எடுத்துச் சொன்னார்.

“பாண்டிய மன்னா! விழாவென்னும் சொல்லை முதலில் நீ அறிவாயாக. விழுந்துவிடாமல் நிமிர்ந்தே இருப்பதையே ‘விழா’ என்னும் சொல் பொருளாய் உரைக்கிறது. இதன் காரணமாகவே விழாக்கள் உருவாக்கப்பட்டன. விழா என்பது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியும்கூட. கொண்டாட்டங்கள் ஒரு நாட்டுக்கு மிக அவசியம். அதிலும் தேர்த் திருவிழாக் கொண்டாட்டம் என்பது மிக மகத்தானது.

திருவிழாவின்போதுதான் ஓர் ஊரே கோயிலாகிறது. மற்ற நாள்களில் ஊருக்குள் கோயில் என்றால் இந்த நாளில் கோயிலுக்குள் ஊர் இருக்கிறது. நடமாட இயலாதவர்களைக் காண இறைவன் தேரேறி வீதியில் வருகிறான். அவனை ஒரு பக்தன் தன் வீட்டு வாசலிலேயே கண்டு வணங்கும் பாக்கியம் பெறுகிறான். இது எவ்வளவு பெரிய செயல்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஊர் கூடினால்தானே தேர் இழுக்க முடியும். தேர் அவ்வளவு வலியது. இது, மறைமுகமாக `வலிதான ஒன்றை தனிமனிதன் தனித்து அடைவது கடினம்; கூட்டு முயற்சி செய்தால் அதுவே பெரும் சுலபம்' என்கிற நற்செய்தியையும் உணர்த்தும். மட்டுமன்றி, இறைவன் ஒரு தனிமனிதனுக்கு மட்டும் உரியவனல்லன்.அவன் அனைவருக்கும் பொதுவானவன் என்பதையும் உணர்த்தும்.

தேர்வடத்தைத் தொட்டு ஊரார் இழுக்கும்போது, ஒட்டுமொத்த ஊரின் சக்தி அந்த வடத்தில் பயணித்துத் தேரை அசைத்து, அடையக் கடினமான இறைவனை அனைவருக்கும் அருகில் அழைத்து வந்துவிடுகிறது. இப்படித் தேர்த்திருவிழா ஊர் ஒன்றுபடவும், அருள்நெறி பரவவும், ஊரைக் கோயிலாக்கவும் பயன்படுகிறது. தேரோடும் ஊரே சீரோடும் சிறப்போடும் இருக்கும் என்பது ஆன்றோர் வாக்கு” என்று சொல்லி சுந்தரபாண்டியத் தேவனை தெளிவிக்கவும், அவனும் தேர்த் திருவிழாவைச் சிறப்போடு நடத்தினான்.

சித்திரையில் வெப்பம் மிகுந்திருக்கும். இந்த வெப்பம் விலகி நல்ல கோடை மழை பெய்தால் பயிர்கள் மட்டுமின்றி உயிர்களும் தழைத்திடும். இதன் பொருட்டு நிகழ்த்தப்படுவதே தெப்போற்சவம். இதற்காக, வறண்டு கிடந்த காவிரியில் குளம்போல் ஒரு நீர்நிலையை உருவாக்கி அதில் தெப்ப உற்சவத்தையும் இவன் நிகழ்த்தினான்.இவன் நிமித்தமே ஆலயம் சொர்ண மயமாகியது. தங்கக் கொடிமரம், தங்கத்தால் ஆன கருடன் சிலை, தங்க விமானம், தங்கத் திருவடிகள், பெருமாளுக்கான தங்கப் பாத்திரங் கள், கிரீடங்கள், தங்கப் பல்லக்கு என்று எம்பெருமானைத் தங்கமயமாக்கிப் பார்ப்பதில் பெரிதும் மகிழ்ந்தான். இவன் பொருட்டு எம்பெருமானும் பெரிதும் மகிழ்ந்தார்.

நித்ய ஆராதனை நிமித்தம் கொடி அஞ்சு, செடி அஞ்சு என்று மொத்தம் பத்து வகை காய்களால் நிவேதன உணவு தயாரிக்கப் பட்டது. அதாவது கொடிக் காய்கள் எனப்படும் புடலை, பூசணி, பாகற்காய், அவரை, வெள்ளரி போன்றவையும் செடிகளில் (மரங்களிலும்) காய்களாகவும் கிழங்குகளாகவும் கிடைக்கும் வாழை, கொத்தவரை, கருணை, சேனை, சர்க்கரைவள்ளி போன்றவற்றைக் கொண்டும் பத்து வகை காய்கறிகள் சமைக்கப்பட்டன.

நித்தியப்படி திருவாராதனம் எனும் பெயரில் மூன்று காலம் திருவாராதனமும் ஆறு காலம் அமுதபடிகளும் சமர்ப்பிக்கப்பட்டன. முதல் திருவாராதனத்தின்போது பொங்கலும் மதிய திருவாராதனத்தின்போது தளிகை எனப்படும் பெரிய அவசரமும் இரவு திருவாராதனத் தின்போது சம்பா அரிசி கொண்டு உப்புமா போன்ற உணவும் சமர்ப்பிக்கப்பட்டன.

அதேபோல், கீழ்க்காணும் விவரப்படி ஆறு கால அமுத படிகள் சமர்ப்பிக்கப்பட்டன.

முதல் காலம்: பால், ரொட்டி, வெண்ணெய், சர்க்கரை, பருப்புக் கும்மாயம் (குழைந்தது), பச்சைப்பால்.

இரண்டாம் காலம்: பொங்கல், தோசை, வடிசல், சுக்குவெல்லம், நெய், கூட்டுக்கறியமுதுடன் ஊறுகாய்.

மூன்றாம் காலம்: வடிசல், கூட்டுக்கறியமுது, சாற்றமுது, திருக்கண்ணமுது, அதிரசம்.

நான்காம் காலம்: சீரான்னம், கறியமுது, திருமாலை வடை, அப்பம், தேன்குழல், சம்பா தோசை.

ஐந்தாம் காலம்: சம்பா தளிகை, பருப்பு, வடிசல், சாதம்.

ஆறாம் காலம்: சர்க்கரைப்பொங்கல், பால் அன்னம், கறியமுது.

சுந்தர பாண்டியத் தேவனைப் போலவே குலோத்துங்கச் சோழனது கைங்கர்யமும் திருவரங்க வரலாற்றில் சிறப்பானது.

- தொடரும்

காசியை விட உயர்ந்ததா?

த்தரப்பிரதேச மாநிலத்தில், பிரதாப்கர் எனும் ஊரில் அவதரித்தவர் மகான் கபீர்தாஸ். ராமபக்தியில் திளைத்தவர். எளிய கவிதைகளால் நல்லறங்களை விதைத்தவர்.

இவர், தன் வாழ்நாளில் பெரும் பகுதியைப் புனித நகரமான காசியில் கழித்தார். இருப்பினும் தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் காசியில் மரணமடைய விரும்பாமல், பஸ்தி மாவட்டத்தில் கோரக்பூருக்கு அருகிலுள்ள மக்ஹர் என்ற கிராமத்துக்குச் செல்ல விரும்பினார்.

காசி
காசி

உடனிருந்தவர்கள் அனைவருக்கும் கபீர் தாஸின் செய்கை வியப்பை அளித்தது. பொதுவாக இந்துக்கள் எங்கு வாழ்ந்தாலும் தங்கள் வாழ்நாளின் இறுதியில் காசிக்கு வந்து உடலைவிட்டு முக்தியடைய விரும்புவர். ஆனால், கபீர் ஏன் இவ்வாறு மக்ஹர் கிராமத்துக்குச் செல்ல விரும்புகிறார் என்று கபீரிடமே கேட்டனர்.

அதற்கு கபீர், “காசியில் இறந்தால் உடனே முக்தி அடைந்து சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவோம். திரும்பவும் இந்தப் புண்ணிய பூமியில் பிறந்து பகவானின் நாம சங்கீர்த்தனத்தைப் பாடி ஆனந்தமடைய முடியாது.

ஆனால், மக்ஹரில் இறந்தால் கழுதைப் பிறவி கிடைக்கும். எனவே நான் கழுதையாகப் பிறந்தேனும் பகவானை நினைக்க வேண்டும் என்று கருதியே காசியைவிட்டுச் செல்கிறேன்” என்றார்.

- தேனி.பொன் கணேஷ்