மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 48

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

குலோத்துங்கச் சோழன் எனும்போதே முதலாம் குலோத்துங்கன் நினைவுதான் மிகுந்து வரும்.

வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழி லரங்கர் தன்னுள்

கள்வனார் கிடந்த வாறும் கமல நன்முகமும் கண்டு

உள்ளமே! வலியை போலும் ஒருவனென் றுணர மாட்டாய்.

கள்ளமே காதல் செய்துன் கள்ளத்தே கழிக்கின்றாயே!

- தொண்டரடிப்பொடியாழ்வார்

சுந்தரபாண்டிய தேவனைப் போலவே குலோத்துங்கச் சோழனது கைங்கர்யமும் திருவரங்க வரலாற்றில் மிகச் சிறந்த ஒன்றாகும். குலோத்துங்கச் சோழன் எனும்போதே முதலாம் குலோத்துங்கன் நினைவுதான் மிகுந்து வரும். இவன்தான் திருவரங்க ஆலயத்துக்குப் பல நிவந்தங்கள் அளித்தவன். இவன் சார்பிலான கல்வெட்டுச் செய்திகள் மட்டுமே 83 என்கிற எண்ணிக்கையில் உள்ளன.

இவன் காலத்தில்தான் சந்நிதியில் `திருப்பள்ளியெழுச்சி திருவாய்மொழி' ஓதப்படும் அன்றாட நிகழ்வுக்கு நிவந்தம் வழங்கப்பட்டது. அதாவது ஐம்பது கழஞ்சு பொன்கொண்டு வாங்கப்படும் நிலத்தின் வருமானமே இந்நிகழ்வுக்கான நிவந்தம்!

இதன் நிமித்தம் அரையர்கள் ஆலயம் சார்ந்து வாழ்ந்து இறைத் தொண்டாற்ற வழிவகை செய்யப்பட்டது. அந்த வகையில் வங்கிபுரத்து திருவரங்கத்து நம்பி, அவன் மகன் திருவரங்க நம்பி, வெண்ணெய் கூத்தனான திருக்கண்ணபுரத்து அரையர், திருவிண்ணகர் நம்பி, திருநாட்டு நம்பி ஆகியோர் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

ரங்க ராஜ்ஜியம் - 48

மேலும், திருச்சுற்றின் வடக்குப் பகுதியில் முதலாம் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டு பல அரிய தகவல்களைத் தருகிறது. ஆலய கைங்கர்யபரர்களான வடமதுரைப் பிறந்தான் நம்பி, செம்பியன் மாதேவி, அழகியமணவாள நம்பி, பெரும்புலியூர் நாராயண நம்பி, திருநாடுடைய நம்பி, ஸ்ரீபண்டாரவாரியம், ஆரிதந்திருவாய்க் குலமுடையான், ஸ்ரீராகவன், ஆரிதந் ஆராவமுது புண்டரீகன், ஆரிதந்கேசவன், தனி இளஞ்சிங்கம், காங்யபன் சிங்கம், திருவரங்க நாராயணன் ஸ்ரீவைஷ்ணவக் கணக்குத் திருவேங்கடவன் ஆகியோர். திருவாய்க்குலமுடையானான அதிகாரி வீரவிச்சாதிர மூவேந்திர வேளாளருக்குக் கேரள நாட்டில் பாழ்பட்டுகிடந்த ஒரு நிலத்தை தானமாகத்தந்து, அதை இவரும் திருத்திப் பயிர்செய்து இதன் மூலம் வந்த வருவாய், திருவரங்க ஆலயத்து இராப்பத்து நாளில் செலவிடப்பட்டது.

எப்படித் தெரியுமா? நூறு அப்பத்துக்கான அரிசி, பருப்பு, நெய், விறகு, வெல்லம் ஆகியவற்றுக்கு...

இதேபோல் ஐப்பசி மற்றும் பங்குனி தேர்த்திருநாளின் தீர்த்தவாரியன்று அரையர்கள் இசையுடன் பாடுவர். அவ்வேளை இவர்களுக்கு அப்பம், அரிசி, பருப்பு, நெய் அளிக்கப்பட்டன. இவர்கள் பொருட்டு காளிங்கராயன் எனும் சிற்றரசன் ஆறேகால் காசு தங்கத்தை நிவந்தமாகத் தந்தான். இதன் மூலம் வந்த வருவாய் இதற்குப் பயன்பட்டது.

இவையெல்லாமே முதலாம் குலோத்துங்கன் கால நிகழ்வு. குலோத்துங்கச் சோழனைத் தொடர்ந்து நாயக்கர் காலம் தொடங்குகிறது. நாயக்கர்களில் கம்பயதண்ட நாயக்கர் கைங்கர்யம் பதிவில் உள்ளது. ஆயிரங்கால் மண்டபத்துப் படிகளும், யானைகள், குதிரைகள் நிற்கும் இடத்து நீண்ட தாழ்வாரமும், சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு எதிரில் உள்ள நாலு கால் மண்டபமும் கம்பயதண்ட நாயக்கர் கைங்கர்யங்களாகும்.

இவர்களைத் தொடர்ந்து கரியமாணிக்கத்தண்ட நாயக்கர், மலைப்பெருமாள் எனப்படும் மலையாள தேசத்து அரசன் மற்றும் வீர நரசிங்கத் தேவர். ஆகுளூர் வரநாதராயர், தேவப் பெருமாள், திருவிக்கிரமச் சோழன், பள்ளிகொண்ட சோழன் என்று கைங்கர்யம் செய்தவர்களைத் திருவரங்க ஆலயம் மறக்கவில்லை. மறவாமல் தன்னுள் பதிவுசெய்து வைத்துள்ளது.

ரங்க ராஜ்ஜியம் - 48

இவர்களில் கலியுகராமன் என்னும் கடையவர்மன் வீரபாண்டியன் கி.பி 1297-ல் முடிசூடிக் கொண்டு ஆலய நிமித்தம் செய்த கைங்கர்யங்கள் மிக ஆழமானவை மட்டுமல்ல; அர்த்த பூர்வமானவையும்கூட! திருவரங்கம் அருகில் கலியுகராமன் சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரையே இவன் உருவாக்கினான். இதில் வேதம் பயின்ற வைணவர்களை மட்டும் குடியேற்றினான். இவர்களுக்குச் சில நிபந்தனைகளையும் விதித்தான்.

தினமும் வேதபாராயணம் புரிய வேண்டும். தங்கள் வழியில் தங்கள் வாரிசுகளையும் அழைத்துச் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் நிலத்தை விற்றுவிட்டு வேறு எங்கும் சென்றுவிடக் கூடாது. மீறி விற்பதாயிருந்தால் இவர்கள் தங்களுக்குள் கொடுக்கல் வாங்கல் புரியலாம். ஆனால், பிறருடன் விற்பது கூடாது என்பதே இவன் கட்டளை. இதன் மூலம் வேத முழக்கம் இடையறாது ஒலிக்கத் தொடங்கியது.

வேத முழக்கம் மட்டுமா ஒலித்தது...இவன் காலத்தில்தான் மிலேச்ச முழக்கமும் ஒலிக்கத் தொடங்கியது. மொகலாயர் வசம் அகண்ட பாரதம் அகப்பட்டுக் கொண்டுவிட்ட நிலையில் மாலிக்காபூரின் படையெடுப்பும் நிகழ்ந்தது.

கி.பி 1311... பாரதத்தின் தென்பகுதியில் மாலிக்காபூரின் படையெடுப்பு நிகழ்ந்ததைத் திருவரங்கக் கோயிலொழுகு பதிவு செய்துள்ளது. இவ்வேளையில் மதுரையை வீரபாண்டியன் ஆட்சி செய்துகொண்டிருந்தான். மாலிக்காபூரின் படையெடுப்பு நிகழவும் யுத்தம் மூண்டதில் வீரபாண்டியன் தோற்று ஓடும் நிலை ஏற்பட்டது. வீரபாண்டியன் தோற்க சில உள்நாட்டுக் குழப்பங்களும் காரணம். இந்த நிலையில் டெல்லி சுல்தானின் மேற்பார்வைக்கு ஆட்பட்டு மதுரை நகரை சுல்தானின் தூதர்கள் ஆட்சி செய்தனர். தப்பி ஓடிய வீரபாண்டியன் மனம் புழுங்கியதோடு, மீண்டும் தன் ஆட்சி மலர்ந்திட ரகசிய ஏற்பாடுகளில் இறங்கினான்.

அழகர்மலையில் ஒளிந்துகொண்டு நாலாபுறமும் தனக்கு ஆதரவாக வீரர்களைத் திரட்டினான். இவ்வேளையில் கேரளத்தைச் சேர்ந்த ரவிவர்மா என்கிற குலசேகரன் தமிழகத்தின் ஒரு பகுதியை, குறிப்பாக நெல்லை, சங்கரன்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.

சுல்தானைவிட இந்த ரவிவர்மாவை ஆபத்துக்குரியவனாகக் கருதிய வீரபாண்டியன், தன் தம்பி சுந்தரபாண்டியனோடு சேர்ந்து காகத்தியர்களைச் சந்தித்து அவர்கள் துணையைப் பெற்று ரவிவர்மாவைத் தமிழக எல்லைப்புறத்தை விட்டு விரட்டியதோடு அங்கெல்லாம் பாண்டிய வீரர்களை மீண்டும் நிலைப்படுத்தி, தன்னை பலப்படுத்திக்கொண்டதோடு டெல்லி சுல்தானுடன் ஒருபுறம் சமாதானப் பேச்சு நடத்திக்கொண்டே மதுரையில் மீண்டும் தன் ஆட்சியை நிலைப்படுத்தினான்.

இவனுக்குக் `கலியுகராமன்' என்கிற பெயரும் இருந்தது. இந்தப் பெயர் கொண்டே இவன் பல அறச்செயல்களைப் புரிந்தான். குறிப்பாக மீண்டும் பாண்டியன் ஆட்சி மதுரையில் மலர்ந்திட அரங்கநாதப் பெருமாளிடம் பிரார்த்தனைகள் செய்துகொண்டான். வெற்றிக்குப் பின் இவன் திருவரங்கத்தில் சித்திரை வீதியை உருவாக்கி, அந்த வீதியில் மாடமாளிகைகளை எழுப்பி நாற்புறமும் பெரும் செல்வச் செழிப்போடு, திருவரங்க மக்கள் வாழ்ந்திட வழிசெய்தான்.

இதற்கான சான்றுகள் சித்திரை வீதியின் கிழக்கு கோபுரத்தில் இன்றும் காணக் கிடைக்கின்றன. அக்கோபுரத்தில் `கண்டபேரண்ட பட்சி' என்கிற ஒரு பட்சியின் உருவம் பொறிக்கப்பட்டு, அந்த உருவத்தின் கீழ் கலியுகராமன் என்கிற பெயர் கிரந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது. கண்டபேரண்ட பட்சியென்பது மனித உருவமும் இருபுறம் பார்த்தபடி இருபறவைத் தலைகளும் கொண்ட வடிவமாகும். இது ஹொய்சாளர்களின் அரசுச்சின்னமும்கூட. தற்போது கர்நாடக அரசின் சின்னமாக இது விளங்குகிறது. இந்தக் கோபுரத்தில் பாண்டியர்களின் சின்னமான இரட்டை மீன்களும் காணப்படுகின்றன. இந்த இரண்டு மீன்களில் ஒன்று ஆண் மீன், மற்றொன்று பெண் மீன். நீளமானது ஆண் மீனாகவும் நீளம் குறைவாயும் பருத்த வயிறும் கொண்டது பெண் மீனாகவும் கருதப்படுகிறது.

இதேபோல திருவானைக்காவலில் உள்ள ஜம்புலிங்கேஸ்வரர் கோயிலின் கோபுரத்திலும் இச்சின்னங்கள் காணப்படுகின்றன. இவை ஹொய்சாளர் தொடங்கியதைப் பாண்டியர்கள் நிறைவு செய்தனர் என்ற கருத்தைத் தோற்றுவிப்பதாக உள்ளன. வீரபாண்டியனும் சுந்தரபாண்டியனும் மீண்டும் தங்கள் ஆட்சி மலர, திருவரங்கத்தில் பெரும் கைங்கர்யங்களைச் செய்தனர். மாலிக்காபூரும் இவ்வேளை மற்ற இடங்களில் இருந்தபடியால் ஒரு பெரும் யுத்தம் ஏற்படவில்லை.

திருவரங்க ஆலயத்தின் உபசந்நிதிகளில் தெற்கு ராஜ கோபுரத்தை ஒட்டிய திருக்குறளப்பன் சந்நிதி மிகவும் பிரசித்தியும் பல வரலாற்று நிகழ்வுகளுக்குப் பின்புலமாகவும் இருந்துள்ளது. எம்பெருமான் வாமன அவதாரம் எடுத்துவந்த காலத்தில் வாமனனுக்கு உபநயன கர்மா நடந்த இடம் இந்த திருக்குறளப்பன் சந்நிதியாகும்.

இன்னொரு ரசமான சங்கதியும் உண்டு. முன்பு காவிரி இந்தத் தெற்குக் கோபுரத்தை ஒட்டியே ஓடிக்கொண்டிருந்தது. இதனால் வெள்ளக் காலத்தில் திருக்குறளப்பன் சந்நிதி மூழ்கிப்போகும். இதை மாற்றிட எண்ணி, திருவரங்கத் தென்பகுதியை அகலப்படுத்திக் கொஞ்சம் தொலைவில் ஓடச் செய்துள்ளனர் என்பர். இதற்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் கூர்நாராயண ஜீயராவார்.

அதன்பின் திருக்குறளப்பன் சந்நிதியானது அரங்கனை தரிசிக்க வருவோர், முன்வழிபாடாக திருக்குறளப்பனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டனர்.ஆண்டாள் பிராட்டி திருவரங்கம் வந்த வேளை, இக்கோயிலுக்கு வந்து மங்களாசாசனமும் செய்துள்ளாள்.

'பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று

எல்லாவுலகும் அளந்து கொண்ட எம் பெருமான்

நல்லார்கள் வாழும் நளிர ரங்க நாகனையான்,

இல்லாதோம் கைப் பொருளும் எய்துவானொத்துளனே.'

என்று தன் நாச்சியார் திருமொழியில் திருவரங்கத் திருப்பதிகத்தில் பாடியுள்ளாள்.

ஆண்டாள் பிராட்டிபோலவே திருமங்கை யாழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளார். இச்சந்நிதியில்தான் நம்மாழ்வாரும் அர்ச்சா ரூபமாக எழுந்தருளியுள்ளார்.

இத்திருக்குறளப்பன் சந்நிதி குறித்துச் சிந்திக்கையில் எட்டாம் நூற்றாண்டுக்கும் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த ஆண்டாள் பிராட்டி பாவை நோன்பு நோற்று அதன் பயனாக அரங்கனையே மணாளனாய் அடைந்த சம்பவமும், அவ்வேளை பாண்டிய மன்னனாக இருந்த வல்லபதேவன் புரிந்த கைங்கர்யங்களும் கட்டாயமாய் திருவரங்க வரலாற்றில் சிந்திக்கப்பட வேண்டியவையாகும்.

பாண்டிய மண்ணில் அரசாட்சி புரிந்தவர்களில் வல்லபதேவப் பாண்டியன் மற்ற பாண்டிய மன்னர்களினின்றும் பெரிதும் வேறுபட்டவன். பாண்டியன் பரம்பரையே சைவத்தின் வழிச்சென்ற பரம்பரைதான். இதில் மலயத்துவஜப் பாண்டியன் மகளாகப் பிறந்தவளே அங்கயற் கண்ணியான மீனாட்சி. சிவபெருமானையே மணாளனாய் அடைந்து மதுரைக்கே அரசியாக விளங்கிப் பெரும் வாகை சூடினாள். இவள் தொட்டு உருவான பரம்பரையில் விதிவிலக்காக வைணவத்தைப் பெரிதும் ஆராதிப்பவனாக வல்லபதேவப் பாண்டியன் விளங்கினான்.

வைணவத்தை இவன் புறச் சமயமாகக் கருதவில்லை. `என் தாயான மீனாட்சியின் சகோதரன்தானே அந்தத் திருமால்... அப்படி இருக்க வைணவம் எப்படிப் புறச் சமயமாகும்... என் தாய்வழிச் சமயம் வைணவம் - தந்தைவழிச் சமயம் சைவம்' என்று கருதி இரண்டையுமே பேணி வளர்த்தான். இருப்பினும் இவன் பெரியாழ்வார் நிமித்தம் பெரும் வைணவப் பற்றாளனாக மாறி ஆண்டாள் பிராட்டி அரங்கப்பெருமானை கைத்தலம் பற்ற விழைந்தபோது இவனே சீர் பொருள்களை எல்லாம் அளித்தான்.

பெரியாழ்வார் இவன் பொருட்டு நிகழ்த்திய ஓர் அற்புத சம்பவமே ஸ்ரீகூடலழகப் பெருமான் திருக்கோயிலில் நிகழ்ந்த `எதுவோ பரம்பொருள்?' என்னும் கேள்விக்கான நிகழ்வாகும். சுவாரஸ்யமான அந்த சம்பவம் திருவிளையாடல் புராணத்தின் சாயலில் திருவிளையாட்டாக முடிவுற்றது. அது...!

தொடரும்...