மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 49

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் ( ரங்க ராஜ்ஜியம் )

திருமாலே முற்றான பரம்பொருள்

‘யாரோ பரம்பொருள் எதுவோ பரம்பொருள்?’ எனும் கேள்வி வல்லப பாண்டியனுக்குள் எழும்பியது. தன் கேள்விக்குச் சரியான பதிலளிப்போர்க்குப் பொற்கிழி பரிசளிப்பதாக நாடெங்கும் அறிவிக்கச் செய்தான். இந்த அறிவிப்பு திருவில்லிபுத்தூரில் மாலை கட்டி சேவை புரிந்துவந்த பெரியாழ்வாரின் காதிலும் விழுந்தது.

‘அந்தத் திருமாலே முற்றான பரம்பொருள், இதில் பாண்டியனுக்குச் சந்தேகம் வந்ததுதான் ஆச்சர்யம்’ என்ற கருத்துடன் உறங்கச்சென்ற பெரியாழ்வாரின் கனவில் திருமால் தோன்றினார்; மதுரைக்குச் சென்று பொற்கிழிக்கான போட்டியில் பங்குகொண்டு தன் கருத்தை நிறுவச் சொன்னார்.

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

பெரியாழ்வார், மாலவனின் கட்டளையை ஏற்று மதுரையை அடைந்து போட்டியில் பங்கேற்றார். ஆணித்தரமாய், ‘திருமாலே பரம்பொருள் - அவரே ஆதிமூலம். அவராலேயே புவனங்கள், சூரிய - சந்திர - நட்சத்திராதியர், ஏனைய கோள்கள் மற்றும் உயிரினங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அவரே அனைத்துள்ளும் ஜீவாத்மாவாய் விளங்கி ஆட்டுவிக்கிறார். அவர் ஆட்டுவிக்க நாம் ஆடுபவர்களாக உள்ளோம். அவரருள் இருந்தால்தான் இப்பிறப்பில் நாம் ஜீவன் முக்தி அடைய முடியும். பரமாத்மாவான அவரிடம் ஜீவாத்மாக்களான நாம் சரண் புகுந்தால் நமக்கு முக்தி கிட்டும். அவரே சதாசிவனாக, சக்தியாக, பிரம்மமாக, எல்லாமுமாகத் தோற்றம் கொண்டு படைத்தல், காத்தல், அழித்தல் என்கிற முவ்வினைப்பாடுகளுக்கும் காரணமாக உள்ளார்’ என்று நிறுவினார்.

பல பௌரானியர், ஞானியர், வேதியர் பங்கேற்று தங்கள் கருத்தைக் கூறியும் வளையாத பொற்கிழிக்கோல், பெரியாழ்வார் தன் கருத்தை நயம்படவைத்த நொடியில் வளைந்து, தான் பற்றிப் பிடித்திருந்த பொற்கிழியையும் பெரியாழ்வார் வசம் விட்டது.

பெரியாழ்வாரும் பரிசினைப் பெற்றவராய்ப் பெரும் மகிழ்வுடனும் நன்றி உணர்வுடனும் திருமாலைத் துதித்து ‘பல்லாண்டு பல்லாண்டு’ எனும் பாசுரத்தைப் பாடியருளினார்.

‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன்சேவடி செவ்வித் திருக் காப்பு...’ என்று பெரியாழ்வார் பாடவும் கூடலழகர் ஆலய கோபுரத்துக்கு நேர் மேலே விண்ணில் - மகாலட்சுமி சமேதராய்க் கருட வாகனத்தில் எழுந்தருளி எல்லோர்க்கும் காட்சியளித்தார் பெருமாள்.

இச்சம்பவம் வல்லபதேவனைச் சிலிர்க்கச் செய்துவிட்டது. பெரியாழ்வாரும் பொற்கிழிப் பரிசுடன் திருவில்லிபுத்தூர் திரும்பித் தன் நந்தவனத்தை மேலும் பெரிதாக்கிச் சீர்செய்து தன் மலர்த் தொண்டினைத் தொடர்ந்தார். பின்னர் ஆண்டாள் பிராட்டி அருட்பரிசாய் துளசி மாடத்திடையே அயோனியாகத் (கருவில் பிறக்காத குழந்தையாய்) தோன்றி அவரின் திருமகளானாள்.

நிலம் கோதக் கிடைத்தவள் என்பதால் அவளுக்குக் கோதை என்று பெயரிட்டு வளர்த்த பெரியாழ்வார், தானறிந்த சகல சாத்திரங்களையும் புராணங்களையும் நெறி முறைகளையும் அவளுக்கு உபதேசித்தார். மடந்தைப் பிராயத்திலேயே அவளை ஞானியர் அளவுக்குக்கொண்டு சென்றுவிட்டார்.

கோதையும் தான் அறிந்தவற்றால் `முற்றும் முதலுமானவர் அந்த திருமாலே' என்றுணர்ந்து, அவர் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணாவதாரத்தில் பெரிதும் மனத்தைப் பறிகொடுத்தாள். அவர் பொருட்டு மாலையைச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியானாள்.

நோன்பின் பெரும்பயனாக அரங்கன் கோதையைத் தான் மணந்துகொள்வதாகப் பெரியாழ்வார் கனவில் கூறியதோடு, அவளை மணப்பெண்ணாய் அலங்கரித்து திருவரங்கம் அழைத்துவரப் பணித்தார். அப்படியே வல்லப பாண்டியனின் கனவிலும் தோன்றி கோதை திருவரங்கம் வருவதற்கு உதவச் சொன்னார்.

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

மனம்சிலிர்த்த வல்லபதேவ பாண்டியன், திருவில்லிபுத்தூருக்கும் திருவரங்கத்துக்கும் இடையே வழிநெடுக வாழைமரம் கட்டி, தோரணங்களைப் பூட்டி, காவலர்களை நியமித்து, கட்டியக் குரலோடு வரவேற்று அழைத்துச்சென்றான்.

அப்போது காவிரி, தெற்குக் கோபுரத்தை ஒட்டி ஓடிக்கொண்டிருந்தது. தெற்குக் கோபுரப் பகுதி, காவிரிக்கு வடகரையா கத் திகழ்ந்தது. ஆக, காவிரி வரையிலும் திருப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து அழைத்துவந்த வல்லபன், பின் படகில் ஏற்றி வடகரையில் கோதையை இறக்கினான்.

அங்குள்ள தெற்குக் கோபுரத்தை ஒட்டிய திருக்குறளப்பன் சந்நிதியில் பிரார்த்தனை புரிந்து, பின் மண்டபம் ஒன்றில் தங்கவைத்து ஏராள சீர்வரிசைகளுடன் அரங்கநாதப் பெருமான் சந்நிதிக்குக் கோதைப் பிராட்டியை அனுப்பினான். பெருமாளும் அவளைத் தன்னுள் ஏற்று அனைவருக்கும் அருள்புரிந்தார்.

இப்போது கோதை, ஆண்டாள் என்ற திருநாமத்துக்கு உரியவளாகி அரங்கப் பெருமானுக்குள் ஆவிர்பவித்துவிட, அவள் தங்கியிருந்த மண்டபம் தற்போது வெளி ஆண்டாள் சந்நிதியாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீஆண்டாள் அரங்கனை தன் பூத உடலோடு அடைந்துவிட்ட நிலையில், அவளின் திருவுருவம் சிலை வடிவில், வெளி ஆண்டாள் சந்நிதியிலும் வைத்து வணங்கப்பட்டது. ஆண்டாளின் இந்தச் சிலாரூபம், சுல்தானியர் படையெடுப்பின்போது எந்தச் சேதத்துக்கும் ஆளாகிவிடக் கூடாது என்கிற முனைப்பில் பூமிக்குள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.

இச்சம்பவம் ஆண்டாள்மீது பக்தி கொண்ட சகலருக்கும் ஒரு பெரும் பரிசோதனையாகவும் அமைந்ததுதான் விந்தை!

நம் புராதன சமயத்துக்கு கி.பி 1311-ம் ஆண்டு மிகச் சோதனையானது எனலாம்.

பூமியில் ஆறறிவுகொண்ட ஒரே உயிரி மனிதன் மட்டுமே. மனிதனின் இந்த மேலான அறிவுதான் கடைத்தேறவும் வழி செய்கிறது; தடுக்கி விழவும் வைக்கிறது. இந்த அறிவு, ஒளி சார்ந்தது. ஒளி எனும்போதே அதில் கூடுதல், குறைச்சல் வந்து விடுகின்றன.

அகல் விளக்கு, கற்பூரம், தீப்பந்தம், வேள்வித்தீ எல்லாமே நெருப்புதான். ஆனபோதும் அதன் சுடரின் தன்மையைப் பொறுத்து அதன் சூழலில் வெளிச்சம் பரவுவதைப்போல், மனிதர்களின் அறிவொளியும் அவரவர் கல்வி, சார்பு நிலை, முன்வினை போன்றவற்றால் ஓர் அளவுக்கு உரியதாகிறது. அந்த அளவைப் பொறுத்தே அவரவர் மனம் தெளிவுள்ளதாக அமைகிறது. இதிலிருந்து ஓர் உண்மை தெளிவாகிறது.

ஆறறிவு கொண்டவர்களாய் மனிதர்கள் விளங்கிவிடுவதால் மட்டும் எல்லோரின் அறிவுத்திறனும் ஒன்றாகிவிட முடியாது. அவரவர் சூழல், கல்வி, முன்வினை இவற்றைப் பொருத்தே ஒருவரின் அறிவுத்தெளிவு இருக்கும்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளிடமே நிறைய பேத அபேதங்களை நாம் பார்க்கிறோம். சுருக்கமாகக் கூறுவதானால் இதுதான் சிருஷ்டி. இந்த சிருஷ்டி என்பது பல மாறுபாடுகளை உடையதே!

கோடானுகோடி பேர் இருக்கிறபோதிலும் ஒருவர் போல் ஒருவர் இருப்பது இல்லை - ஒருவர் குரல்போல் இன்னொருவருக்கு இல்லை. இது ஒரு பிரமிப்பான விஷயம்.இந்த வேற்றுமை உடல் மட்டும் சார்ந்ததல்ல… மனம் சார்ந்ததும்கூட. ஒருவருக்குப் பிடித்தது இன்னொருவருக்குப் பிடிக்காதுபோகலாம், ஒருவருக்குக் கைவரும் கலை இன்னொருவருக்கு வராமல் போகலாம். இதைக் கண்கூடாகக் காண்கிறோம்.

இதிலிருந்தே எல்லாவற்றுக்கும் ஒரு மாற்று இருப்பது புலனாகும். இன்பமென்றால் துன்பம், இனிப்பென்றால் கசப்பு, கறுப்பென்றால் வெளுப்பு, முள் என்றால் மலர்... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த வரிசையில்தான் நாம் நம்பும் ஒன்றும் நம்பாத ஒன்றும் வருகிறது; நாம் உண்டு என்று சொல்வதை இல்லை என்று மறுக்கின்றவர்களும் வருகிறார்கள். இதெல்லாம் சாமானியருக்கும் புரிய வேண்டும் என்றே நம் சமய சித்தாந்தத்தில் ‘தேவர் - அசுரர்’ என்ற இரு தரப்பை அமைத்தனர். எப்போதும் இவர்கள் ஒருவருக்கொருவர் ஆகாதவர். ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்தவும் ஆளவும் முனைந்தனர். இதில் வல்லமைமிக்கோர் வெற்றி பெற்றனர்.

இப்பிரபஞ்சம் உள்ளிட்ட சகலத்தையும் படைத்த பிரம்மத்துக்கும் மேலான பரம் பொருளை வைணவம் மகாவிஷ்ணு என்கிறது. அந்த விஷ்ணுவேகூட அசுரர்களை எதிர்த்து யுத்தம் புரிந்த சம்பவங்கள் நம் புராணங்களில் ஏராளம். அவை உணர்த்துவது ஒன்றைதான்.

எதிரிடையாக ஒன்று இருந்தாலே ஒன்றன் அருமை பெருமை விளங்கப்பெறும்.

நான் சர்வசக்தி படைத்தவன் என்றால் அதை எதைக்கொண்டு நிரூபிப்பது... இன்னொரு சக்தி படைத்தவன் இருந்து அவனோடு மோதும் போதுதான் வல்லமை தெரியவரும். இதை எம்பெருமானாகிய மகாவிஷ்ணுவிடம் கருடன் ஒரு கேள்வியாகவே கேட்கிறான்.

“எம்பெருமானே! நீதானே எல்லோரையும் சிருஷ்டித்தாய். அப்படி சிருஷ்டிக்கையில் எதற்காக அசுரர்களையும் படைத்தாய். அவர்கள் இல்லாவிட்டால் யாருக்கும் ஒரு துன்பமும் இருக்காதல்லவா?” என்று கருடன் கேட்டான்.

எம்பெருமான் அதற்கு உடனடி பதிலாக “இன்பமும் இல்லாது போகும்… பரவாயில் லையா?” என்று கேட்டாராம்.

கருடன் அதிர்ச்சியுடன் “அது எப்படி?” என்று கேட்கவும் கருடனை அருகில் அழைத்து செல்லமாய்க் கிள்ளினார் விஷ்ணு. ‘ஆ’ என்று கருடன் கத்தவும் ‘இதுவரை வலியின்றி இன்பமாக இருந்தது; இப்போது வலிக்கவும் செய்கிறதல்லவா...’ என்று கேட்டாராம் எம்பெருமான். சில உயர்ந்த சித்தாந்த ரகசியங்களை இப்படி எளிமையாகப் புரியவைப்பது சான்றோர் வழக்கம்.

இத்தனை பீடிகைகள் எதற்கு என்றால்...

1311-ம் வருடவாக்கில் மிலேச்சர்களின் படையெடுப்பால் நமக்கு சோதனை வந்தபோது, நாம் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதன் பொருட்டு அன்று தர்க்கரீதியாகச் சிந்திக்கப்பட்ட விஷயங்களே இவையெல்லாம்!

மிலேச்சர்களுக்கு நமக்கு எதிரான கொள்கை. நாம் உருவ வழிபாடு புரிபவர்கள் ; அவர்கள் இதற்கு நேர் எதிர். எனவே உருவ வழிப்பாட்டை மறுப்பது, சிதைப்பது மற்றும் தம் சித்தாந்தத்தை நிலைநிறுத்துவது என்பது அவர்களின் நோக்கமாகிப்போனது. கூடவே மண்ணாசையும் சேர்ந்துகொண்டது.

இதில் வலிமைமிக்கோர் வெற்றியடைவர் - அல்லாதோர் அடிபணிந்து செல்வர். இது போன்ற காலங்களில் மண் அடிமையாகலாம்; கலாசாரம் - பண்பாடு போன்றவை அடிமை

ஆகலாமா... கூடாது அல்லவா! அவற்றை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவதுதானே நல்ல மாந்தர்களது கடமை!

1311-ல் பிரசித்தி பெற்ற தலங்களில் எல்லாம் மாலிக்காபூரின் படையெடுப்பால் ஒருவித பயமும் பதற்றமும் ஏற்பட்டுவிட்டன.

அரசர்கள் பலர் போரிட்டுத் தோற்றும், பலர் போரிடாமல் ஓடி ஒளிந்தும், சிலர் சமரசம் செய்து கொண்டும் பலவாறு தங்களைத் தற்காத்துக் கொண்டனர்.

அப்போது, திருவரங்கத்தின் ஒருபுறம் சோழ நாடாகவும், மறுபுறம் பாண்டிய நாடாகவும் இருந்தது.

- தொடரும்...

ஆனையும் பூனையும் தின்பேன்!
ஆனையும் பூனையும் தின்பேன்!

ஆனையும் பூனையும் தின்பேன்!

புலவர் ஒருவர் தன் நண்பரிடம், ‘‘நான் சுத்த சைவம். ஆனால், ஆனையும் பூனையும் தின்பேன்!’’ என்றார்.

‘‘ஆனையையும் பூனையையும் தின்னும் நீங்கள், எப்படி சைவமாக இருக்க முடியும்?’’ என்று குழப்பத்துடன் கேட்டார் நண்பர். அதற்குப் புலவர், ‘‘உமக்குப் புரியும் என்று நினைத்தேன். சரி, விளக்கமாகவே சொல்கிறேன்!’’ என்றவர் தொடர்ந்தார்: ‘‘ஆனை = ஆ + நெய்: பசுவின் நெய்; பூனை = பூ + நெய்: தேன். இப்போது புரிந்ததா?’’ என்றார் புலவர். விளக்கம் கேட்ட நண்பர் புலவரின் திறன் அறிந்து வியந்தார்.

- மு.ஜெகந்நாதன், சென்னை-64.