ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 38

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

நம்மாழ்வார்! எவர் இப்பெயரைச் சொல்லினும் இந்த ஆழ்வார், அவரின் ஆழ்வாராகவும் ஆகிவிடக் காணலாம். இப்பெயரை எம்பெருமானே உவந்து இவருக்குச் சூட்டினார் என்பர்.

என்திரு மகள்சேர் மார்பனே என்னும்

என்னுடையாவியே என்னும்

நின்திரு எயிற்றால் இடந்துநீ கொண்ட

நிலமகள் கேள்வனே என்னும்

அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட

ஆய்மகள் அன்பனே என்னும்

தென் திருவரங்கம் கோயில்கொண் டானே

தெளிகிலேன் முடிவிவள் தனக்கே...

ம்மாழ்வார்! எவர் இப்பெயரைச் சொல்லினும் இந்த ஆழ்வார், அவரின் ஆழ்வாராகவும் ஆகிவிடக் காணலாம். இப்பெயரை எம்பெருமானே உவந்து இவருக்குச் சூட்டினார் என்பர்.

பன்னிரு ஆழ்வார் பெருமக்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு. இவர் சிறப்பு, இவர் பிறந்த சில நாள்களிலேயே தெரிந்துவிட்டதுதான் ஆச்சர்யம். சுருக்கமாகவும் அதேநேரம் சற்று விரிவாகவும் பார்த்துவிடுவோமா...

ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி. பாண்டிய நாட்டுக்குட்பட்ட நெல்லைச் சீமையில் உள்ள திருக்குருகூர்தான் இவரின் ஜன்ம ஸ்தலம். இப்பகுதியைப் பாண்டிய நாட்டுக்குக் கட்டுப்பட்டு குறுநில மன்னனாய் இருந்து, ஆண்டு வந்தான் பொன்காரி என்பவன். இவனுக்கும் இவன் மங்கை உடைய நங்கைக்கும் திருவருள் பிரசாதம்போலப் பிறந்தவர்தான் நம்மாழ்வார்!

வேளாளர் குடி - வீரம் செறிந்த மரபு. ஆயினும் திருமாலை வழிபடும் வைணவ நெறியில் வந்தவனாகத் திகழ்ந்தான் பொன்காரி.

நெடுநாள்களுக்குப் பிள்ளைப் பேறில்லை. பிள்ளை பெற என்ன வழி என்று தவித்தவர்களுக்கு ஒரு வைணவப் பெரியார் வழிகாட்டினார். ``மாதம் தவறாது ஏகாதசி விரதமும், பசுவுக்கு அகத்திக்கீரையும் தந்து, பெருமாள் தீர்த்தத்தை முதல் உணவாய்க்கொண்டு பக்தி செய்தால் அவன் கருணை செய்வான்’’ என்றார்.

அவனும் கருணை செய்தான்!

கருவுற்றாள் உடைய நங்கை... முன்னதாய் எம் பெருமான் உடைய நங்கையின் கனவில் தோன்றி, ‘நான் உன் வயிற்றில் வந்து பிறப்பேன்’ என்று தன் திருவடிகளை மட்டும் காட்டியிருந்தான். சிலிர்த்தாள் உடைய நங்கை. பின்னர் கருவுற்று ஒரு வைகாசி விசாகத்தன்று அழகிய ஆண்மகவை ஈன்றாள். அன்று பூரணமான பௌர்ணமி நாள்.

ரங்க ராஜ்ஜியம் - 38

வைகாசி விசாகம் பெரும் சிறப்புகளையுடையது. அருளாளர் பலருக்குப் பிறப்பும் ஞானமும் இந்த நாளில்தான் ஏற்பட்டது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாளில்தான் நம்மாழ்வாரும் பிறந்தார். ‘இறைவனையே பெற்றெடுத்துவிட்டோம்’ என்று பாகவதத்து தேவகியின் மனநிலையில் இருந்தாள் உடைய நங்கை. தேவகிக்கு கிருஷ்ணன் பிறந்தான். இவளுக்கோ நம் ஆழ்வார் பிறந்தார்.

பிறந்தது ஆழ்வார் மட்டுமில்லை. பெரும் சோதனையும்தான். பிறந்த பிள்ளையிடம் அசைவேயில்லை. ஆனால், உற்றுப் பார்த்தது - உடம்பில் உயிரும் இருந்தது. குழந்தை என்றால், முதலில் அழுதாக வேண்டும். இல்லையேல் கைகால்களை அசைத்து உதைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இந்தக் குழந்தை, கட்டைபோல் கிடந்தது. பசி எடுத்து அழவேண்டுமல்லவா?

ஊஹூம்!

குழந்தை தவழ்ந்து சந்நிதிக்குள் சென்று எம்பெருமானின் திருவுருவத் திருவடிகளை விரலால் தொட்டது. அந்த நொடி எம்பெருமான் மேல் கிடந்த ஒரு மாலை அவிழ்ந்து கீழே இருந்த குழந்தையின் கழுத்தில் விழுந்தது!

உடைய நங்கை உடைந்த நங்கையானாள். யாருக்கும் காரணம் தெரியவில்லை. ஆனால், குழந்தை பளிச்சென்று பார்த்தது. முகத்தில் எழில் துலங்கியது. ஒரு பெரியவர் மட்டும் இது உடம்பின் தசா வாயுக்களில் ஒன்றான சடவாயுக் குறைபாட்டின் விளைவு. அந்த வாயுதான் குழந்தைகளை அழவைப்பது அசைய வைப்பது எல்லாம் என்றார். இதையொட்டியே ‘சடகோபன்’ என்றொரு பெயரும் இவருக்கு அமைந்தது.

உடைய நங்கை, எம்பெருமான் ஆலயத்துக்குச் சென்று கதறிக் கண்ணீர் வடித்தாள். `விரதம் இருந்து பெற்ற பிள்ளை. ‘நானே வருவேன்’ என்று கனவில் வந்து சொல்லித் தந்த பரிசு. அது இப்படியா இருக்க வேண்டும். இது தகுமா. இந்தப் பிள்ளை உணவின்றி இவ்வுலகில் தங்குமா...’ என்று பலவாறு கேட்டாள். அப்போது குழந்தை சந்நிதி வாசலில் கிடத்தப்பட்டிருந்தான்.

என்ன ஓர் ஆச்சர்யம். உடைய நங்கையின் கண்ணீரைத் துடைப்பதைப்போல் அப்பிள்ளையிடம் உடனேயே ஓர் அசைவு.

13 நாள்கள்தான் ஆகிறது பிறந்து. ஆனால், புரண்டு விழுந்து தவழவும் செய்தது. உடைய நங்கையும் பொன்காரியும் பிரமித்தனர். குழந்தை தவழ்ந்து சந்நிதிக்குள் சென்று எம்பெருமானின் திருவுருவத் திருவடிகளை விரலால் தொட்டது. அந்த நொடி எம்பெருமான் மேல் கிடந்த ஒரு மாலை அவிழ்ந்து கீழே இருந்த குழந்தையின் கழுத்தில் விழுந்தது.

தற்செயலாய் நிகழ்ந்த ஒரு பொற்செயல்!

கோயில்பட்டர் அருகில் சென்று குழந்தையைத் தூக்க முயன்றார். மின்னல் வெட்டியது போல் உணர்ந்து திரும்பினார். ஆனால், குழந்தையோ கழுத்தில் கிடந்த மாலையோடு தவழ்ந்து கோயிலுக்கு வெளியே நெடுங்காலமாயிருக்கும் புளிய மரத்தின் பொந்தினை நோக்கி வந்தது. தரையோடு உள்ள அப்பொந்துக்குள் போய் தன்னை அடக்கிக்கொண்டது!

அந்த மரத்தின் பின்புலத்தில் புராணச் சம்பவம் ஒன்று உண்டு. வனவாசம் முடிந்து ராமர் அயோத்தி திரும்பி, நாடாண்ட வேளை. ஒருநாள் தனிமையில் ஏகாந்தத்தில் இருக்க விரும்பி, லட்சுமணனைக் காவலுக்கு நிறுத்திவிட்டுச் சென்று படுத்துக்கொண்டார் ராமர்.

‘யார் வந்தாலும் இப்போது சந்திக்க இயலாதென்று கூறு’ என்று தன் காவலருக்குக் கட்டளையும் இட்டிருந்தார். இப்படிச் சொன்னாலே வில்லங்கம்தான்.

ரங்க ராஜ்ஜியம் - 38

துர்வாசமுனி என்னும் கோபக்கார முனிவர் அப்போது பார்த்து ராமரைப் பார்க்க வந்திருந்தார். காவலில் இருந்த லட்சுமணன் அவரை உள்ளே விடமறுத்து, பின் அவர் பெரும் கோபக்காரர் என்று தெரிந்துகொண்டு விட்டுவிட்டான். துர்வாசரும் ராமரைச் சந்தித்துவிட்டுச் சென்ற பிறகு ராமர், லட்சுமணனை அழைத்து ‘நான் என்ன சொன்னேன் - நீ என்ன செய்தாய்?’ என்றும் கேட்டார். லட்சுமணன், `அவரின் பெரும் கோபத்துக்கு பயந்தே நான் அவரை உள்ளே விட்டேன்' என்றான்.

ராமரோ வருந்தியதோடு, “என்னால் ஆழ்ந்த யோக நித்திரையே கொள்ள முடியவில்லை. எனக்கும் சற்று ஆத்மசக்தி தேவைப்படுகிறது. இப்பிறப்பில் அது சாத்தியப்படாத ஒரு வாழ்வாக என் வாழ்வு அமைந்துவிட்டது. வரும் பிறவியிலா வது அது சாத்தியப்படட்டும். நான் ஒரு யோகியாக திகழ, நீ அப்போது எனக்குக் குறிப்பாய்... என் யோக நித்திரைக்குத் துணை செய்யும் புளிய மரமாய் பிறப்பெடுப்பாய்” என்று கூறினாராம்.

அதன்படி ராமர் திருவடி அம்சமாக நம்மாழ்வாராய் பிறப்பெடுக்கும் முன்பே லட்சுமணனின் அம்சம் புளியமரமாய் வந்து முளைத்துவிட்டது என்பர். இந்தப் புளிய மரமும் வழக்கமான புளிய மரமில்லை. பூக்காத, காய்க்காத ஓர் அதிசய மரம். பொதுவாக புளிப்புச் சுவை பற்றையும் பொறாமையையும் வளர்ப்பது. புளியமரக் காற்றும் நோய் தருவது. இரவில் புளிய மரத்தடியில் எவரும் தங்கமாட்டார்கள். வாழ்வு அலுக்கும்போது, ‘எல்லாமே புளித்துவிட்டது’ என்போம். புளியும் புளிப்பும் மனித உணர்வோடு பெரும் தொடர்புடையவை.

அப்படிப்பட்ட அந்தப் புளியமரத்தை நோக்கிச் சென்று அதன் பொந்தில் நுழைந்து சுருண்டு படுத்துவிட்டது, பொன்காரி பெற்றெடுத்த சடகோபன் என்கிற வரசித்தியுள்ள விசித்திரக் குழந்தை!

அந்த இடத்தைவிட்டுப் பதினாறு வருடங்கள் நகரவில்லை. தினம்தோறும் எம்பெருமானின் பூஜையொலி கேட்பதும், தியானமூர்த்தியாக அமர்ந்திருப்பதுமாகவே காலங்கள் சென்றன.

தொடக்கத்தில் உடைய நங்கை, ‘என்னடா இது’ என்று குழம்பி மனத்துயருற்றபோதிலும், ‘இது பெருமானின் விருப்பம்’ என்று பின் தேற்றிக்கொண்டாள். எல்லாப் பிள்ளைகளையும் போல ஓடி விளையாடி இனிப்பும் புளிப்பும் தேடி உண்டு, குறும்புகள் பல புரியும் குறும்பனாய் இல்லாமல் ஒரு பாலயோகிபோல் விளங்கிய சடகோபன் , ‘ஒரு மகத்தான ஞானி’ என்பதை உணர்த்திடும் ஒரு சம்பவமும் நடந்தது.

அதற்குமுன் நம்மாழ்வாரோடு பெரிதும் தொடர்புடைய, அவரின் சீடரும் ஆழ்வார் பெருமக்களில் ஒருவருமான மதுரகவி என்பவரைப் பற்றியும் இங்கே சிந்தித்தாக வேண்டும்.

இவர் வடக்கில் அயோத்தியைச் சேர்ந்தவராகச் சில குறிப்புகள் சொல்கின்றன. எல்லோரையும் போல் திருமணம், பின் குழந்தை என்று இல்வாழ்வு வாழ்ந்திடப் பிடிக்காமல், ஆன்மிக வாழ்வில் நாட்டம்கொண்டு தகுந்த ஒரு குருவைத் தேடி அலைந்தபடியிருந்தார் மதுரகவி.

குரு என்பவர் விஷயத்தில் ஓர் அசைக்கமுடியாத கருத்து ஒன்று உண்டு. ‘ஒருவன் நல்ல குருவுக்காகத் தனக்குள் தவித்தால் குருவே அவனைத் தேடி வருவார்’ என்பதுதான் அது. மதுரகவியும் அப்படித் தவித்தவரே - தென்புலத்தில் திருக்குருகூரை ஒட்டிய திருக்கோளூரில் அவதரித்தவர்; ராம தரிசனம் மற்றும் கங்கை ஸ்நானம் புரிய வடக்கே சென்றவர். அங்கே தினமும் சரயு நதியில் நீராடி ராமரை தரிசித்தவரை, அந்த ராமரும் கைவிடவில்லை. ‘நானே சடகோபனாய் திருக்குருகூரில் அவதரித்து யோக பாவனையில் உள்ளேன்' என்று ஒளிவடிவில் காட்டியருளினார்.

மதுரகவியும் திருக்குருகூர் நோக்கிவரத் தொடங்கினார். வானில் ஒளிப்புனல் வழிகாட்டிக் கொண்டே வந்து புளிய மரத்தில் முடிந்து நின்றது. மதுரகவியாரும் பாலயோகியான சடகோபனைக் கண்டு பல நிமிடங்கள் பேசுவதறியாது நின்றார்.

அவர் மனத்தில் ஒரு பேரமைதி.

‘இவரே நான் தேடிய குரு’ என்றும் ஓர் உள்குரல்

எந்த ஒரு நடமாட்டமுமின்றி, பெரிதாய் உணவின்றி பஞ்சபூதங்களை வெற்றிகொண்டு காற்றை மட்டும் உட்கொண்டு ஒரு பிள்ளை எப்படி வாழ முடியும். அது இறையம்சம் கொண்டிருந்தாலே சாத்தியம் அல்லவா!

மதுரகவி பெரிதும் நெகிழ்ந்து இவ்வுண்மையை உணர்ந்தார். தன் கைவசம் பட்டர் அளித்திருந்த திருத்துழாய் இருந்தது. அதை பாலயோகியான சடகோபன்மேல் தூவி கவனத்தை ஈர்க்க முனைந்தார். சடகோபனும் கண் திறந்து அவரை உற்று நோக்கினார்.

‘வந்துவிட்டாயா - உனக்காகத் தான் இதுநாள் வரைக் காத்திருந்தேன்’ என்பதுபோல் பார்த்தார்.

மதுரகவி பேச்சைத் தொடங்கினார்.

“அடியேன் திருக்கோளூர்காரன்... அயோத்தி வரை பயணித்து அலையோ அலை என்று குருவின் பொருட்டு அலைந்தவன். அந்த ராமரோ எனக்குக் குருவாய் உங்களைக் கை காட்டிவிட்டான். வந்துவிட்டேன். இனம்புரியாத இன்பமும் அமைதியும் வாய்த்ததுபோல் உணர்கிறேன். என்னைச் சீடனாய் ஏற்று அருள வேண்டும்” என்றார். எல்லோருக்கும் வியப்பு.

‘அசையாத, பேசாத, எதையும் செய்திராத, புரியாத ஒரு புதிர்தான் சடகோபன். இவன் குருவா?’

எல்லோருக்குள்ளும் இதுவே கேள்வி. ஆனால் மதுரகவியார் இப்படியான கேள்விகளில் சிக்கவில்லை. அவருக்குப் பலப்பல கேள்விகள்.

‘எதற்கு இந்த மானுடப் பிறப்பு. ஆணாய், பெண்ணாய், இல்லை ஏனைய உயிராய்ப் பிறக்க எது காரணம். பிறந்ததிலிருந்தே நான் இருப்பது தெரிகிறது. அதற்கு முன்பு நான் எங்கிருந்தேன்.ஏன் மனமானது அலைபாய்கிறது. இந்த உடம்பில் உயிர் என்கிற ஒன்று எங்கு உள்ளது. உயிர் உடம்பைவிட்டுப் பிரிவதைப் பார்க்க முடிகிறது. உடல் பிணமாகிறது - உயிர் என்னாகிறது...

இப்படி விசாரமாய் ஆயிரமாயிரம் கேள்விகள்... அனைத்தையும் தனக்குள் ஒரு மூலையில் வைத்துக் கொண்டு ஒரு கேள்வியை மட்டும் நம்மாழ்வாரைப் பார்த்து அதாவது சடகோபனைப் பார்த்துக் கேட்கலானார் மதுரகவி.

- தொடரும்...

அழகன் என் தலைவன்!

நாகப்பட்டினம் செளந்தர்ராஜப் பெருமாளும் அழகு, அவர் குடியிருக்கும் கோயிலும் அழகு.

ஜகுலு நாயகர் எனும் பக்தரால் இங்கே அமைக்கப்பட்ட ராஜகோபுரம் கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்ததாம். துருவன், ஆதிசேஷன், பூமிப்பிராட்டி, மார்க்கண்டேய மகரிஷி முதலானோர் வழிபட்ட தலம். திருமங்கையாழ்வார், இங்கே அருளும் பெருமாளைத் தலைவனாகவும், தம்மைக் காதலியாகவும், தன் மனைவி குமுத வல்லியைத் தோழியாகவும் உருவகப்படுத்திப் பாசுரங்கள் பாடியுள்ளார்.

ரங்க ராஜ்ஜியம் - 38

பொன் இவர் மேனி மரகதத்தின்

பொங்கு இளஞ்சோதி அகலத்து ஆரம்

மின் இவர் வாயில் நல்வேதம் ஓதும்

வேதியர் வானவர் ஆவர் தோழீ

என்னையும் நோக்கி எனல்சூலும் நோக்கி

எந்து இளங் கொங்கையும் நோக்குகின்றார்

அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்

அச்சோ ஒருவர் அழகியவா!

கருத்து: என் ஆருயிர்த் தோழியே, இந்தத் திருநாகையில் எழுந்தருளியுள்ள என் தலைவனின் திருமேனி தங்கமயமாக அல்லவா ஜொலிக்கிறது. அவரது மார்பைப் பார். மரகத மணி மாதிரி திகழ்கிறது. மார்பில் திகழும் ஆரம், மின்னல் போல் கண்கூசச் செய்கிறது. கண்களை இமைத்துப் பார்க்கிறேன்... யார் இவர்? காம வேதியரா, தேவரா, இவரை ஆலிங்கனம் செய்து வணங்க வேண்டும் போல் உள்ளது. இவரோ ஏகபத்தினி விரதன். எனவே, அருகிலிருக்கும் ஜகன் மாதா என்னைக் கோபிப்பாளோ என அஞ்சுகிறேன். இப்படியோர் அழகனா!

- வி.வேணு, கும்பகோணம்