Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 50

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

நம் பக்திக்கான சோதனை

மாலிக்காபூரின் படையெடுப்பு நடந்த காலத்தில், திருவரங்கத் தின் ஒருபுறம் சோழ நாடாகவும், மறுபுறம் பாண்டிய நாடாகவும் இருந்தது. பாண்டிய நாட்டைச் சுந்தரபாண்டியன் ஆண்டு வந்தான். சோழ நாட்டுத் திருவரங்கமும் இவன் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இந்தச் சுந்தரபாண்டியனுக்குத் தற்காலிகமாக ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டது. காரணம், மிலேச்சப் படையின் ஆதிக்கமும் சக்தியும்தான்!

குதிரைப்படை, வில்லம்புப்படை, யானைப்படை, வாட்படை என்று காபூரின் படைக்குள் பலப்பல பிரிவுகள். ‘இவற்றோடு போரிட்டு, தன் படைவீரர்களை இழப்பதற்கு ஓடிஒளிவதுமேல்’ என்று கருதிய சுந்தரபாண்டியன் தலைமறைவானான். ‘இல்லையில்லை… அவன் போரிடத்தான் விரும்பினான்... அப்படிப் போரிட் டால் உயிரிழக்க நேரிடலாம் என்பதால் அவனுடைய நலம் விரும்பிகள் அவனைத் தங்கள் பாதுகாப்புக்குக் கொண்டுசென்றுவிட்டனர்’ என்றும் ஒரு கருத்து உண்டு.

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

எது எப்படி இருப்பினும் பெரும் புனிதத் தலமான திருவரங்கத்துக்கு எந்த அளவுக்கு அரசாங்க தயவும் ஆதரவும் இருந்தனவோ... அவை அப்படியே இல்லாமல்போய் ஆலய ஸ்தானீ கர்களும் அரங்கன் அபிமானிகளும் மட்டுமே மீதமிருந்தனர். எனினும் அவர்களிடம் ஒரு பெரும் தெளிவிருந்தது.

இது நம் பக்திக்கான சோதனை. இச்சோதனையில் ஓடி ஒளிகிறோமா இல்லை உயிரை விடுகிறோமா அல்லது நம் பக்திக்குரியதைப் பாதுகாக்கப் போகிறோமா என்கிற மூன்று கேள்விகளுக்கு அவர்கள் ஆட்பட்டனர். இப்படியான கேள்விகளைக் கேட்கச் செய்து அவற்றின் விடைதேடி அவர்களை நடக்கச் செய்த ஒரு பெருமகனும் திருவரங்கத்தில் இருந்தார்.

அவர் பெயர் பிள்ளைலோகாசார்யர்; அவரைக் காஞ்சி வரதரின் அம்சம் என்பர். அந்த வரதனே பிள்ளை லோகாசார் யராகப் பிறந்து வந்திருப்பதாகக் கருதினர். இதற்குப் பிரமாணமான சம்பவங்களும் உண்டு. பிள்ளைலோகாசார்யர், திருவரங்கத்தில் ஆசார்யனாகத் திகழ்ந்த வடக்குத் திருவீதிப்பிள்ளை என்பாரின் புதல்வனாவார். அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இவரின் உடன்பிறந்தவராவார். இதனால் இவர்களைக் காண்போர் ராம லட்சுமணர் என்று சிறப்பிப்பர்.

பிள்ளைலோகாசார்யர் பெரும் ஞானியாகத் திகழ்ந்தவர். மேலெழுப்பிய பல கேள்விகளுக்குரிய பதிலைத் தன் சீடர்களுக்குப் பளிச்சென்று எடுத்துக் கூறியவர். தன்னைச் சார்ந்தோரை ஆற்றுப்படுத்தி வழிநடத்தியதில் மட்டுமன்றி, தானும் திடமாய்த் திகழ்ந்து, எவன் வைணவன் என்னும் கேள்விக்கும் எது வைணவம், எது பக்தி, எது முக்தி போன்ற பல கேள்விகளுக்கும் பதிலளித்தவர்.

இவருக்குப் பல சீடர்கள். அவர்களில் கூரகுலோத்தமதாசர், திருவாய் மொழிப் பிள்ளை மணப்பாக்கத்து நம்பி கோட்டூர் அண்ணர், திருப்புட்குழி ஜீயர், திருக்கண்ணங் குடிப்பிள்ளை, கொல்லிக்காவல தாசர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

பிள்ளைலோகாசார்யர் பல நூல்களையும் அருளியுள்ளார். ‘யாத்ருச்சிகப்படி, ஸ்ரியப்பதிப்படி, முமூஷீப்படி, பரந்தபடி, தனிப்ரணவம், தனித்வயம், தனிசரமம், அர்த்தபஞ்சகம், தத்வத்ரயம், தத்வசேகரம், சாரசங்க்ரஹம், அர்ச்சிராதி, ப்ரமேயசேகரம், சம்சார சாம்ராஜ்யம், ப்ரபன்ன பரித்ராணம், நவரத்னமாலை, நவவித சம்பந்தம், ஶ்ரீவசன பூஷணம்' ஆகிய இவருடைய நூல்கள் எது வைணவம் என்கிற கேள்விக்கு மட்டுமல்ல எது வாழ்க்கை, எது பக்தி, எது ஞானம், எது மோட்சம் என்னும் பல கேள்விகளுக்கும் பதில் தருபவை.

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

திருவரங்கத்தில் காட்டழகிய சிங்கர் அருளும் ஒரு கோயில் உண்டு. இது, திருவரங்கன் ஆலயத் துக்கு வெளியே கிழக்குப்பக்கத்தில் கிழக்கு அடையவளைஞ்சானுக்கு அருகில் இருக்கும் தனிச் சந்நிதியாகும். இந்தக் கோயிலையும் இதன் மண்டபங்களையும் தன் இருப்பிடமாகக் கொண்டு பிள்ளைலோகாசார்யர் தினமும் சீடர்களைச் சந்திப்பார். இங்கேதான் இவருடைய போதனைகளும் வழி நடத்தல் களும் சீடர்களுக்குக் கிடைத்தன.

இந்தக் காட்டழகிய சிங்கர் திருக்கோயில் பற்றியும் நன்கு அறிதல் வேண்டும். எம்பெருமானின் அவதார சொரூபங்களில் ஒன்றே நரசிம்மம். நாளை என்பதே நரசிம்மத்துக்குக் கிடையாது. அன்றே, அப்போதே அனுக்கிரகிப்பதுதான் நரசிம்மம். வீரம், கோபம், சாந்தம், கருணை என்கிற முரண்பட்ட உணர்ச்சிகளின் கலவை இந்த நரசிம்மம். இப்படிப்பட்ட நரசிம்மமானது அரங்கன் ஆலயத்துக்குள் வடக்கு நோக்கி மேட்டழகிய சிங்கர் எனும் பெயரில் கோயில் கொண்டிருப்பது போலவே, கோயிலுக்கு வெளியே கிழக்கில் காட்டழகிய சிங்கராகவும் கோயில்கொண்டுள்ளார்.

இக்கோயில் உருவான பின்புலம் சுவாரஸ்ய மான ஒன்று. ஒருகாலத்தில் கோயில் அமைந்த கிழக்குப்பகுதி பெரும் வனத்தை உடையதாயிருந்தது. வனத்தில் யானைகள் அதிகமிருந்தன. வெயில் காலங்களில் தண்ணீர் தேடி காவிரி ஆற்றங்கரைப் பகுதிக்கு வரும்போது, ஆற்றோரமாக வளர்க்கப்பட்டிருந்த வாழைத் தோப்புக்குள் புகுந்து துவம்சம் செய்யும் யானைகள். அவை அப்படியே ஊருக்குள்ளும் வரத் தொடங்கிவிட்டன. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் எம்பெருமானிடம் பிரார்த்தித்தனர். அப்போது, கோயில் ஸ்தானீகர் ஒருவரின் வடிவில் எம்பெருமான் விடை தந்தார்.

‘யானைகள் வந்திடும் கிழக்கின் மிசை நானே அழகிய சிங்கமாய் நரசிம்மனாய் கோயில் கொண்டிருக்கிறேன். கால வெள்ளத்தினாலும், காவிரி வெள்ளத்தினாலும் அந்தச் சந்நிதி மூழ்கிப்போனது. அதை வெளியே எடுத்து ஒரு பெரிய கோயிலைக் கட்டி வழிபாடுகள் நிகழ்த்தி, அவ்வழிபாட்டில் வாண வேடிக்கை யும், வெடி வழிபடும் செய்யுங்கள்’ என்றார்.

உடனேயே எல்லோரும் கிழக்குத் திசையில் மூழ்கிப்போன கோயிலைத் தேடிக் கண்டுபிடித்தனர். திருவரங்கன் சந்நிதியேகூட இதுபோல் மணலால் மூடப்பட்டுப் பின் காலத்தால் வெளியே எடுக்கப்பட்ட வரலாறுதான் நமக்கு முன்பே தெரியுமே!

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

அவ்வேளையில்தான் இக்கோயிலும் மூழ்கியிருக்க வேண்டும். பின் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில், 1297-ல் மூன்றாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் இதைப் பெரிதாக்கி நிர்மாணித்தான். அதோடு நில்லாமல் அங்கோர் அந்தணர்கள் குடியிருப்பையும் ‘சதுர்வேதி மங்கலம்’ எனும் பெயரில் உருவாக்கி நித்யப்படி ஆராதனை களுக்கும் வகை செய்தான்.

பின்னர் உத்தமாம்பி வம்சத்தில் உதித்த சக்ர ராயராலும், நாயக்க மன்னர்களாலும் இங்கே பல விருத்திகள் ஏற்பட்டன. இக்கோயில் உருவான பின் யானைகள் வருவது அடியோடு நின்று அவற்றால் ஏற்பட்ட உத்பாதங்களும் நீங்கின. அன்று முதல் இன்றுவரை காட்டழகிய சிங்காரை வழிப்படுவோருக்கு மலைபோல துன்பம் வந்தாலும் அது நீங்கிவிடும் என்பது தெளியவாயிற்று. அப்படி ஒரு சந்நிதி மண்டபத்தையே பிள்ளைலோகாசார்யர் தனக்கும் மிக உகந்த பாதுகாப்பான இடமாகக் கருதி வரித்துக்கொண்டதோடு அங்கேயே சீடர்களுக்குப் போதனைகளைச் செய்தார்.

இவர் முன்னிலையில்தான் மாலிக்காபூரின் படையெடுப்பும் விரித்துரைக்கப்பட்டது. இந்தச் செய்தி பிள்ளைலோகாசார்யர் காதுகளில் விழுந்தபோது அவர் வெளி ஆண்டாள் சந்நிதியில்தான் இருந்தார்.

ஆண்டாள் நாச்சியாரை அவர் தன் மானசிக குருவாகவும் வரிந்திருந்தார். பூமியில் அவதரித்து, பாவை நோன்பிருந்து இறைவனையே தன் பூத உடலோடு அடைந்து காட்டியவளல்லா ஆண்டாள்! எனவே, அவளைச் சிக்கெனப் பற்றிக்கொண்டால் அந்த அரங்கன் திருவடிகளில் விரைவில் அடைக்கல மாகி விடலாம் என்பது அவரது திருவுள்ளம்.

அப்படிப்பட்டவருக்கு மிலேச்சப் படையெடுப்பு குறித்த தகவல் வந்து சேர்ந்தது. அதிலும் அந்த மிலேச்சன் மிக சமீபத்தில் வந்துவிட்ட செய்தியும் தெரியவந்தது. எல்லோரும் பரபரப்போடு அடுத்து என்ன செய்வது, எங்கு செல்வது, எப்படித் தப்பிப்பது என்றெல்லாம் தங்களுக்குள் கேட்டுக்கொண்டதோடு பிள்ளைலோகாசார்யரிடமும் அதுபற்றி கேட்டனர்.

“சுவாமி, அடுத்து என்ன செய்வது... அந்த மிலேச்சன் சிலைகளை உடைத்து பொடிப்பொடியாக்குவதோடு நகைகளை அப்படியே களவாடிவிடுகிறான். எந்த ஒரு கோயிலிலும் விளக்கேற்றக்கூட துளி செல்வம் இருக்கக்கூடாது என்பதுதான் அவன் கட்டளையாம். அதனால்தான் ஆண்டாள் நாச்சியாரின் நகைகளை எல்லாம் ஒரு பெட்டியில் போட்டு அதை எவருக்கும் தெரியாதபடி புதைத்துவிட்டோம்.”

அவர்கள் அப்படிக் கூறவும் அவர்களை அதிர்ச்சி யோடு ஏறிட்ட பிள்ளைலோகாசார்யர் “நகைகளைப் பத்திரப்படுத்திவிட்டோம் என்கிறீர்களே… அந்த நகைகளுக்குச் சொந்தக்காரியான இவளை விட்டு விட்டீர்களே...” என்று கேட்கவும் விக்கிப்போடு பார்த்தனர்.

“என்ன பார்க்கிறீர்கள்...”

“இப்படிக் கேட்டால் எப்படி சுவாமி… கோயிலில் நிலை கொண்டுவிட்ட உருவத்தை நாம் சந்நிதியைப் பூட்டித்தான் பாதுகாத்திட முடியும்.”

“பூட்டை உடைக்க மிலேச்சனுக்கு எவ்வளவு நேரமாகும்… யோசிக்கவேண்டாமா... சரி, நகைகளைப் புதைத்துவிட்டோம் என்றீர்களே, கூடவே ஏன் இவள் விக்கிரகத்தையும் புதைக்கத் தோன்றவில்லை...”

“சுவாமி…”

“அதெல்லாம் தங்கம், வைரம்... இது கல்தானே... எதுவானாலும் ஆகட்டும் என்கிற எண்ணமா...”

“அப்படியில்லை… வழிபாட்டுக்குரியவளை எப்படி... அதுகுறித்து எங்களால் கற்பனைகூடச் செய்ய முடியவில்லை.”

“இவ்வளவுதானா இவளைப்பற்றி நீங்கள் அறிந்துவைத்திருப்பது. இவளது மூலமே இந்த மண்தானே... இந்த மண்மேல் துளசி மாடத்தருகில் கிடைத்த மழலையல்லவா இவள்...”

“அதனால்...”

“உடைக்கப்பட்டு நொறுங்கிப்போவதற்கு மாறாக இவள் புதைந்துபோவதில் எந்தத் தவறுமில்லை” - அழுத்தமாய் உறுதிபடச் சொன்னார் பிள்ளைலோகாசார்யர்!

-தொடரும்...

ஆயுள் யோகம் அருளும் ஶ்ரீவாஞ்சியம்

கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் வழி யாக நாகப்பட்டினம் செல்லும் பாதையில் வரும் ஊர்- அச்சுதமங்கலம். இங்கிருந்து ஒண்ணரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, ஶ்ரீவாஞ்சிநாதர் கோயில்கொண்டிருக்கும் ஶ்ரீவாஞ்சியம். ஸ்காந்த புராணம், பிரமாண்ட புராணம், சாம்போப புராணம் போன்றவை ஶ்ரீவாஞ்சியத்தின் மகிமை பற்றிச் சொல்கின்றன.

ஶ்ரீவாஞ்சிநாதர் கோயில்
ஶ்ரீவாஞ்சிநாதர் கோயில்

பிரளய காலத்திலும் அழியாத திருத்தலம். பிரளயம் ஏற்பட்டு அடங்கிய பின், பிரம்மனைப் படைத்த சிவபெருமான், உயிர்களைப் படைக்கும் பொறுப்பை பிரம்மனுக்கு அளித்த தலம் இது. ஶ்ரீயை வாஞ்சித்து (மகாலட்சுமியை அடைய விரும்பி) திருமால் தவம் இருந்த திருத்தலம் இது. எனவே, ‘ஶ்ரீவாஞ்சியம்’ ஆனது. இங்கு எம்பெருமான், சுயம்பு வடிவம். ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் சந்தன மரங்கள் அடர்ந்து காணப்பட்டதாம். அப்போது இந்தத் தலம், ‘கந்தாரண்ய க்ஷேத்திரம்’ எனப்பட்டது. எனவே, இறைவன் `கந்தாரண்யேஸ்வரர்’ என்றும் வழங்கப்படுகிறார். இன்றைக்கும் ஆலயத்தில் தல விருட்சமாக இருப்பது சந்தன மரம்தான். சந்தன இலைகளைக் கொண்டு வாஞ்சிநாதரை பூஜிப்பது விசேஷம் எனிறார்கள்.

இந்தத் தலத்தில் ஒரு அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்தால், பித்ருக்கள் பத்து வருட காலம் திருப்தி அடைகிறார்கள். இரண்டு அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்தால் நூறு வருடமும், மூன்று அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்தால் ஒரு யுக காலத்துக்கும் பித்ருக்கள் திருப்தி அடைவதாக புராணங்கள் சொல்கின்றன.

மேலும், கங்கையும் யமதருமனும் சிவனருள் பெற்ற தலம் இது. ஆகவே, காசிப் புண்ணியம் பெறவும், நீண்ட ஆயுள் வேண்டியும் இந்தத் தலத்தில் பிரார்த்திப்பது விசேஷம். ராஜ கோபுரத்தை ஒட்டி தென்திசையில் இருக் கிறது எமதர்மனின் சந்நிதி. உள்ளே, தென் திசை நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு, இவர் அனுக்கிரக மூர்த்தி. இவரை தரிசித்தால் எம பயம் விலகும்; ஆயுள் கூடும் என்பது ஐதிகம். இங்கு மாசிப் பெருவிழா பிரசித்திபெற்றது.

- கே.காமாக்ஷி, திருவாரூர்