தொடர்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 51

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

புதைக்காத நிலையில் நிற்கும் சிலைக்கு நித்ய பூஜையும் நைவேத்தியமும் அவசியம்.

உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து

பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்

திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார்

எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே…

- நாச்சியார் திருமொழியில் ஆண்டாள்.

பிள்ளை லோகாசார்யர் ஆண்டாளின் திரு உருவச் சிலையைப் புதைக்கலாம் என்று சொன்னது கேட்டு அங்குள்ள எல்லோர் முகங்களும் இருளடைந்து போயின. புதைப்பைக் கற்பனைசெய்து பார்க்கக்கூட மனம் வராமல் கலக்கமுடன் லோகாசார்யரை அவர்கள் பார்த்தனர். “உங்கள் பார்வையின் பொருள் புரிகிறது. அபிஷேக ஆராதனைகள் செய்து அன்றாடம் வணங்கிய திரு உருவச் சிலையைக் குழி தோண்டிப் புதைப்பதைக் கற்பனை செய்யக்கூட உங்களால் இயலவில்லை. அப்படித்தானே...”

“ஆம். நீங்கள் சொன்னதைக் கேட்டு உடல் நடுங்குகிறது. இது எப்பேர்ப்பட்ட பாதகம்...”

“பாதகமில்லை. இப்போதைக்கு இதுவே பவித்ரம். நாம் எப்போதும் நம்மை மையமாக வைத்தே சிந்திப்போம். நாம் ஜீவாத்மாக்கள். இப்படிச் சிந்திப்பதே நம் வழக்கமும்கூட.ஆனால், பரமாத்மாவுக்குக் கல்லும் ஒன்றுதான் நெல்லும் ஒன்றுதான்; பொன்னும் ஒன்றுதான் மண்ணும் ஒன்றுதான்.”

“எங்களுக்கொரு மாற்று யோசனை.”

“என்ன?”

“எங்களில் எவர் இல்லத்துக்காவது கொண்டு சென்று வைத்துக்கொள்ளலாமா...”

“தாராளமாக. ஆனால், புதைக்காத நிலையில் நிற்கும் சிலைக்கு நித்ய பூஜையும் நைவேத்தியமும் அவசியம். அம்மட்டில் நாளோ, பொழுதோ தவறக் கூடாது.”

ரங்க ராஜ்ஜியம் - 51

“இயன்றவரை செய்கிறோம். இயலாது போகும்போது என்ன செய்ய இயலும்?”

“இது சரியான பதிலில்லை. அதோடு சிலை இருப்பது தெரிந்து மிலேச்சர்களால் அதற்கோர் உத்பாதம் நேரிட்டால் அதைவிட பாதகமும் வேறில்லை. அதற்கு நாம் உயிரை விட்டுவிடுதல் பெருநலம்.''

- இப்படி வாதப்பிரதிவாதங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் ஓர் அதிர்ச்சித் தகவல் வந்து சேர்ந்தது. சுல்தானியப்படை சமயபுரத்தைக் கடந்துவிட்டது என்பதுதான் அந்தச் செய்தி.

“ஐயோ… இப்போது என்ன செய்வது?”

“இனி விவாதிக்கக் காலமெல்லாம் இல்லை. இந்த ஆலயத்தின் ஈசான்ய பாகத்தில் குழியைத் தோண்டுங்கள்... சீக்கிரம்”- பிள்ளை லோகாசார்யர் வேகமெடுத்தார்.

தானும் ஒரு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு ஈசான்ய பாகத்தில் குழியைத் தோண்டி ஆறடி ஆழத்தில் நெல்லைக் கொட்டி அதன் மேல் ஆண்டாளின் திரு உருவச்சிலையைக் கிடத்தினர்.

பின் அங்கிருந்த அவ்வளவு பூக்களையும் கொட்டி, மேலே பட்டாடையை விரித்து அதற்குமேல் மண்ணைப் போட்டு மூடி, தோண்டிய சுவடு தெரியாதபடி அக்குழிப் பரப்பின் மேல் சிறியதாக ஒரு மாடம் அமைத்து அதனுள் விளக்கையும் ஏற்றிவைத்தனர்.

இதேபோல் அரங்கன் சந்நிதி முதல் சகல சந்நிதிகளுக்கும் சென்று விக்கிரகங்களைக் காப்பாற்றலாம் என்று காலெடுப்பதற்குள் சுல்தானியப்படை காவிரி ஆற்றைக் கடந்து திருவரங்கத்துக்குள் ஆவேசத்துடன் பிரவேசித்தது.

காவிரியில் அப்போது பார்த்துப் பெரிதாய் நீரோட்டமில்லை. எனவே, சுல்தானிய மிலேச்சர்கள் திருவரங்கத்துக்குள் நுழைவது சுலபமாகிவிட்டது.

ரங்க ராஜ்ஜியம் - 51

இவ்வேளையில் பிள்ளை லோகாசார்யர் நேராகத் திருவரங்கப் பெருமான் சந்நிதிக்கு ஐம்பது சீடர்களோடு சென்று தென்திசை மற்றும் வடதிசை நோக்கியிருக்கும் கதவுகளை மூடித் தாழிட்டதோடு, கதவருகிலேயே ஒன்றுக்குப் பத்து பேர் அமர்ந்துகொண்டனர்.. பிள்ளை லோகாசார்யரும், ஸ்தானிகர்களும் அரங்கன் திருச்சந்நிதி முன் கூடி கண்ணீர் மல்கப் பிரார்த்தனை புரியலாயினர்.

திபுதிபுவென சுல்தானியப்படை வருவதை, அதுவும் கொள்ளிடம் வழியே வடபுலமாய் வருவது அறிந்து பஞ்சுகொண்டான் எனும் கோயிலின் பிரதானக் காப்பாளன், அவர்களைத் தடுத்து நிறுத்தும்விதமாக கம்புகள், கட்டாரிகள் மற்றும் வாள்களோடு கொள்ளிடக் கரைக்கே சென்று போரிடலானான்.

அதற்குள் செய்தி ஊருக்குள் பரவியதில் சிலர் கதவையடைத்துக்கொண்டு உள்ளடங்கினர். சிலர் ஆவேசமாய் தங்கள் வசம் உள்ள உலக்கை, கம்பு என்று கிடைத்ததை எடுத்துக்கொண்டு, வடக்குக் கோபுர வாசலில் திரண்டனர். ஆனாலும் மிலேச்சர்களின் படைபலத்துக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

இதில் பஞ்சுகொண்டானும் அவன் ஆட்களும் கொல்லப்பட்டனர். மிலேச்சப்படை கோபுர வாசல் கடந்து உள் நுழைந்தது. அப்போது மூல விக்கிரகங்களுக்கு பங்கம் நேரக் கூடாது என்று எண்ணி, மூல விக்கிரக சந்நிதிகள் மூடப்பட்டன. கதவுகள் தெரியாதபடி துணியால் மறைக்கப்ப்பட்டு, அதன் முன் உற்சவ விக்கிரகங்கள் வைக்கப்பட்டன..

தற்காலிகமாகத் தோன்றிய இந்த எண்ணம் நன்கு பயனளித்தது என்றே கூற வேண்டும். கூடுதலாக சுல்தானியப் படையின் கவனத்தைச் சிதறடிக்கவேண்டி ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஸ்ரீபண்டாரம் என்னுமிடத்தில் சேமித்துவைக்கப்பட்டிருந்த நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், உண்டியல் வருவாய், மேலும் உற்சவ விக்கிரங்கள் உள்ள இடத்தை, பயத்தின் காரணமாக சொல்வதுபோல் ஒருவர் காட்டித் தர, படையினரின் கவனம் அங்கே திரும்பியது.

உள்ளே புகுந்து மொத்தத்தையும் கொள்ளையிட்டனர். அப்படியே சிலைகளையும் அள்ளிப்போட்டுக் கொண்டனர். அரங்கநாதன் திருச்சந்நிதி நோக்கியோ, தாயார் சந்நிதி நோக்கியோ செல்லாமல், செல்லவும் தோன்றாமல் ஒரு பெருங்கொள்ளையைச் செய்து முடித்தனர்.

நெடுநேரம் கழித்து அமைதி திரும்பியது. அரங்கப் பெருமான் சந்நிதிக் கதவுகள் திறக்கப்பட்டன. பெருமானுக்கு எந்த உத்பாதமுமில்லை; தாயாருக்கும் யாதொரு பாதிப்புமில்லை.

ஆனால்… ஆனால்…

அழகியமணவாளப்பெருமாள் மற்றும் சேரகுலவல்லி விக்கிரகங்கள் கொள்ளை போய்விட்டன. இச்செய்தி, பிள்ளை லோகாசார்யர் உள்ளிட்ட ஸ்தானிகர்களை அடையவும், அனைவரும் அப்படியே கலங்கி அமர்ந்துவிட்டனர்.

“எம்பெருமானின் திருமேனியை ஒரு கலைப்பொருள்போல கருதி, தூக்கிச்சென்றுவிட்டார்களே… பாவிகள்” என்று ஒருவர் கதறி அழத் தொடங்கினார்.

“ஏதோ அம்மட்டோடு போயிற்றே… அரங்கப் பெருமானின் உற்சவமூர்த்தம் பத்திரமாகத்தானே உள்ளது...”

“பெருமானின் எழில் ததும்பும் தோற்றமல்லவா அழகிய மணவாள சொரூபம்…”

“அதனினும் அழகானது சேரகுலவல்லியின் சொரூபம்...”

“இப்போது என்ன செய்யலாம்?”

“நாம் முதலில் செய்ய வேண்டியது கோயிலைக் காப்பதன்பொருட்டு உயிரை விட்ட பஞ்சுகொண்டானின் ஈமச்சடங்கைத்தான். அவனுக்கு எம்பெருமானின் திருவடிகளில் மோட்சகதி நிச்சயம்.”

“இப்படிக் கொலையும் கொள்ளையும் புரிந்த இந்தப் பாவிகளுக்குத் தண்டனை ஏதும் கிடையாதா? ஹிரண்யனின் பொருட்டு தூணைப் பிளந்துகொண்டு வந்த எம்பெருமான் இப்போதும் அப்படி வந்திருந்தால் எத்தனை நன்றாயிருந்திருக்கும்...”

“எண்ணிப்பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், பிரகலாதன்போல் நம்மிடையே ஒருவர்கூட இல்லையே...”

“என்ன சொல்கிறீர்கள் நீங்கள்… நம் பக்தியில் என்ன குறை?”

“அவரவர்க்கும் அவரவர் புரியும் பக்தி மேலானதாகவே தெரியும். ஆயினும் பிரகலாதனோடு ஒப்பிட்டால் நாம் எவ்வளவு தாழ்வானவர்கள் என்பது தெரிய வரும். எம்பெருமான் நிமித்தம், பெற்ற தந்தையையே பகைத்துக்கொண்டவன் பிரகலாதன். நெருப்பில் தூக்கிப்போட்ட போதும், கடலில் தூக்கிப்போட்ட போதும், சீறிவரும் சர்ப்பங்களுக்கு நடுவில் விட்ட போதும் நம்பிக்கை இழக்கவில்லை அவன்.

அவர் வருவாரா மாட்டாரா என்று அவன் சந்தேகம் கொள்ளவில்லை. `வந்தே தீருவார்' என்று உறுதியாகக் கூறினான். அதேபோல் எம்பெருமானும் வந்து காத்து அருளினார்.”

``அப்படியானால் அந்த அளவு நம்பினால் தான் எம்பெருமான் காட்சி தருவாரா... நம்போன்ற சாமான்ய பக்தர்களெல்லாம் இருப்பதும் ஒன்று, இல்லாததும் ஒன்றா...”

“எதையும் சரியாகப் புரிந்து பேசுங்கள். அவதார நிகழ்வுகளையும் கூர்ந்து சிந்தித்து, பின் பேசுங்கள். இது அவனால் உண்டான உலகு. இதில் நாம் மட்டுமல்ல; அந்த மிலேச்சனும்கூட அவன் மக்களே! இது நமக்குள் நாம் போட்டுக் கொள்ளும் சண்டை. சொல்லப்போனால் இது ஒரு கொள்கைப் போராட்டம். கலாசாரப் போர் என்றும் கூறலாம். இதில் எவரின் ஆத்மசக்தி பெரியதோ அதுவே வென்றிடும்... ”

“அதுவும் சரிதான்… இம்மட்டில் மிலேச்சனை எதிர்க்கும் ஆற்றலையும், நம் தத்துவங்களையும் கொள்கைகளையும் காப்பாற்றிக்கொள்ளும் ஆற்றலையும் நாம் பெறுவதற்காகப் பிராத்திக்கலாம். இது நமக்கான பரீட்சை. அதன்பொருட்டு உயிரைக்கூடத் துறக்கலாம். மாறாக இறைவன் ஏன் இப்போது வரவில்லை என்று கேட்பதும் எதிர்பார்ப்பதும் சிறுபிள்ளைத்தனமே!”

“அவர் வருவார்… பல ஆசார்ய புருஷர்கள் வடிவில்… அப்படி வந்தவர்தானே ராமாநுஜ மகாத்மா. அவர் இந்தத் திருவரங்கத் தலத்தில் செய்த சீர்திருத்தங்களும் நிறுவிச்சென்ற சித்தாந் தங்களும் நமக்குத் துணை நிற்கின்றனவே!”

இதைக் கேட்டதும் அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவர் சொன்னார்: “ஸ்ரீஸ்ரீராமாநுஜர் மாத்திரமா... இதோ நம்மிடையே இருக்கும் பிள்ளை லோகாசார்யர் யாராம்... காஞ்சி வரதனின் அம்சமில்லையா இவர். அதே காஞ்சியம்பதி இன்று நமக்கு அளித்திருக்கும் ஸ்ரீஸ்ரீவேதாந்த தேசிகர் யாராம்... எம்பெருமானின் கண்டாவதாரமில்லையா அவர். இவர்களெல்லாம் இருக்க நம்மிடையே எதற்கு சலனம்...”

“அப்படியானால் இந்த மிலேச்ச உபாதையை நாம் முழுமையாகக் கடந்துவிடுவோமா...”

“கடந்தாக வேண்டும். கடந்தால்தான் நாம் நல்ல மனிதர்கள். நல்ல வைணவர்கள். நல்ல விஷ்ணு பக்தர்களாவோம்.”

- அவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் விவாதம் செய்துகொண்டு ஒரு முடிவை எட்டிய நிலையில், சிங்காரவல்லி என்று ஒரு பெண்மணி ஆலயமிசை அழுதுகொண்டே வந்தாள். தெற்குக் கோபுர நுழைவாயிலிலிருந்து அவள் கண்ட காட்சிகள் கண்களையே பிடுங்கி எரிந்துவிடலாமா என்பது போல அவளை எண்ணச் செய்திருந்தன!

-தொடரும்...

விருதகிரிக்கு ஐந்தால் பெருமை!

விபச்சித்து, ரோமசர், நாதசர்மா, அநவர்த் தனி, குமாரசர்மா ஆகிய ஐந்து மகான்கள் வழிபட்ட புண்ணிய க்ஷேத்திரம் விருத்தாசலம். ஐந்து எனும் எண்ணிக்கையின் அடிப்படையில் வேறுசில மகிமைகளும் இந்தத் தலத்துக்கு உண்டு.

ஐந்து பிரகாரங்கள்: ஆலயப் பிராகாரம் மூன்று; தேரோடும் வீதி மற்றும் பஞ்சவர்ணப் பிரகாரம்.

ஐந்து கோபுரங்கள்: நான்கு திசைகளிலும் ஒன்று என நான்கு கோபுரங்கள் உண்டு. ஐந்தாவது கண்டராதித்த கோபுரம்

ஐந்து கொடி மரங்கள்: நந்தி மண்டபக் கொடிமரம், வன்னியடிப் பிராகரத்தில் பிரதான கொடிமரம், தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு சுற்றில் உள்ள மற்ற கொடி மரங்கள்.

ஐந்து தீர்த்தங்கள்: அக்னி, குபேர, சக்கர, நித்யானந்த கூபம் மற்றும் மணிமுத்த நதி.

ஐந்து பிள்ளையார்கள்: ஆழத்துப் பிள்ளையார், வல்லப விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், தசபுஜ விநாயகர், முப்பிள்ளையார்.

- தட்சிணாமூர்த்தி, திருவாரூர்