திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 52

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

எப்போதும் கலகலப்பாகக் காணப்படும் கடைவீதி சுடுகாடு போல காட்சியளித்தது. பொருள்கள் இறைந்து கிடந்தன.

`எழிலுடைய வம்மனைமீர் என்னரங்கத் தின்னமுதர்

குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்

எழு கமலப் பூவழக ரெம்மானார், என்னுடைய

கழல் வளையைத் தாமும் கழல் வளையே யாக்கினரே!'

டையெடுப்பு குறித்து திருவரங்கத்து வைணவர்கள் தங்களுக்குள் விவாதம் செய்துகொண்டு ஒரு முடிவை எட்டிய நிலையில், சிங்காரவல்லி என்ற பெண்மணி ஆலயமிசை அழுதுகொண்டே வந்தாள். தெற்குக் கோபுர நுழைவாயிலிலிருந்து அவள் கண்ட காட்சிகள், கண்களையே பிடுங்கி எரிந்துவிடலாமா என்பது போல அவளை எண்ணச் செய்தன!

ஆங்காங்கே வீட்டு முகப்புப் பந்தல்கள் எரிந்து புகைந்தபடி இருந்தன. பசுக்களும் ரிஷபங்களும் வெட்டப் பட்டு ரத்த ஒழுக்கோடு கிடந்தன. அநேகம்பேர் குற்றுயிரோடு துடித்துக்கொண்டிருக்க, சிலர் அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

எப்போதும் கலகலப்பாகக் காணப்படும் கடைவீதி சுடுகாடு போல காட்சியளித்தது. பொருள்கள் இறைந்து கிடந்தன. காய்கறிகளும் தானியங்களும் சிதறிக்கிடந்தன. கோயிலுக்குள் புகுந்தபோது இன்னும் அதிக கோரம்! சிற்பங்கள் உடைந்தும், தூண்கள் பல சிதிலப்படுத்தப்பட்டும் திகழ்ந்தன. குதிரைகள் சில செத்துக் கிடந்த நிலையில், காக்கைகள் அவற்றின் ரத்தம் வழியும் பாகத்தைக் கொத்திக்கொண்டிருந்தன.

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

சிங்காரவல்லி தினமும் அரங்கனை தரிசிப்பதுடன் அழகிய மணவாளப் பெருமாளையும் தரிசிப்பதைத் தன் வாழ்நாள் கடமையாகவே கொண்டிருந்தாள். சேரகுலவல்லி போல தானும் பெருமானோடு சென்று சேர்ந்துவிட வேண்டும் என்பதே அவளது பிரார்த்தனை! ஆனால் அன்றைய காட்சி களும், அழகிய மணவாளப் பெருமாளையும் சேரகுலவல்லிச் சிலையையும், மிலேச்சன் அள்ளிச் சென்று விட்டான் என்று கிடைத்த செய்தியும் அவளை நிலைகுலைய வைத்துவிட்டன. காலியாகக் காட்சி தந்த சந்நிதியைப் பார்த்து கண்ணீர் சிந்திய சிங்காரவல்லி ஓர் ஆவேசமான தீர்மானத்துக்கு வந்தாள்.

“எம்பெருமானே... அழகிய மணவாளா! உன்னை நான் விடமாட்டேன். அதிலும் அசுரன் ஒருவன் உன்னைக் கொண்டு செல்ல விழைந்துவிட்ட இத்தருணத்தில், அப்படிச் செய்துவிடாமல் அவனைத் தடுத்து நிறுத்துவதோடு எப்பாடுபட்டாவது உன்னை நான் மீட்பேன்! அவ்வாறு மீட்க முடியாது போனால் உயிரை விடுவேன். இது சத்தியம்!'' என்று வாய்விட்டே சபதம் செய்தாள்!

அதைக் கண்டு, அவளை அறிந்த சிலர் வருந்தினர். “சிங்காரவல்லி! நீ வருந்துவதால் பயனில்லை. பேரரசர்களே வீழ்ந்து விட்டார் கள். மிலேச்சர்களின் பலம் அப்படி. விரோதிகள், எதிரிகள் இப்படி வருவார்கள் என்று நாம் கனவில்கூட எண்ணிப் பார்க்கவில்லை. நம் திருவரங்கம் போல இந்த உலகம் முழுவதும் அன்பு மயமானது என்று நாம் கருதிவிட்டோம். அது எவ்வளவு பெரிய பிழை தெரியுமா” என்றார் ஒருவர்.

“இனி புலம்புவதால் என்ன பயன். நல்லவேளையாக அரங்கப் பெருமானின் மூல விக்கிரகத்தையும், உற்சவ மூர்த்தியையும் எப்படியோ பாதுகாத்துவிட்டோம். ஸ்ரீபிள்ளைலோகாசார்யர் சரியான தருணத்தில் சரியான முடிவெடுத்து மிலேச்சர் களை திசை மாற்றி, அழகிய மணவாளரை மட்டும் அவர்கள் கொண்டுபோகும்படிச் செய்துவிட்டார். நாம் இப்போது அவரைப் போற்ற வேண்டும்” என்றார் இன்னொருவர்.

“என்ன பேசுகிறீர்... நம் ஆலயத்தையே பாழ் படுத்திவிட்டுப் போயுள்ளனர். எப்பேர்ப்பட்ட திருத்தலம் இது. இன்றைக்கு அவர்களின் தோற்செருப்புக் கால்களால் அசுத்தமாகி, நாம் கட்டிக்காத்த புனிதமெல்லாம் பாழாகிவிட்டதே. எவ்வளவு இடிபாடுகள்... மண்மேடுகள்... போகிற போக்கில் பூஜை மணியை வேறு அறுத்தெரிந்துவிட்டு போயுள்ளனர். இதுவரை ஒரு நாள் ஒருபொழுது பூஜை நடக்காமல் இருந்ததில்லையே… ஆனால், இனி எப்போது பூஜைகள் நிகழும் என்றே தெரிய வில்லையே…” என்ற அங்கலாய்த்த ஒருவர் அழவே தொடங்கிவிட்டார்.

சகலத்தையும் கண்ணீர் வழிய கேட்டுக் கொண்டிருந்த சிங்காரவல்லி, தீர்க்கமாய் ஒரு முடிவுக்கு வந்தாள்.

“நாம் இப்படி அழுது புலம்புவதால் பயனில்லை. இது நம் பக்திக்கான பரிட்சை. இதைவிட கொடுமையான சோதனைகளைச் சொந்தத் தகப்பனாலேயே அனுபவித்தவன் பிரகலாதன். ஆனால் அவன் கடைசி வரை பக்தியைக் கைவிடவில்லை. எம்பெருமானும் கருணை காட்டத் தவறவில்லை. எனவே, அதுபோன்ற புராணச் சங்கதிகளைப் பௌராணிகர் மூலமாய் அறிந்த நாம் அயர்ந்துவிடக் கூடாது. இப்படியும் சோதனைகள் வரும் என்பதற்காகவே அதுபோன்ற புராணங்கள் நமக்குப் போதிக்கப் பட்டிருக்கின்றன. அற்பமான மனிதர்களின் மூர்க்கத்தால் அழிந்து போகக்கூடியதல்ல இந்தப் பெருங்கோயில். இதை உலகுக்கு உணர்த்தியே தீர வேண்டும்” என்று ஆவேசமாக பேசவும் செய்தாள்.

“உன் ஒருத்தியால் என்ன செய்துவிட முடியும்?” – என்று ஒருவர் ஏளனமாய்க் கேட்டார்.

“அந்நியன் ஒருவனால் எம்பெருமானை இங்கிருந்து கொண்டு செல்ல முடியும் என்றால், என்னால் அவரை அங்கிருந்து இங்கு கொண்டு வர முடியாதா?”

“உளறாதே! அச்சிலையை இந்த நொடி அவர்கள் அழித்திருப்பர்.”

“இருக்காது… இருக்கவே இருக்காது. ஆயிரமாயிரம் பூஜை கண்ட ஐம்பொன் திருமேனி அது. அதற்கென்று பெரும் சக்தி உள்ளது. அதை எவராலும் அழிக்க முடியாது.”

“முட்டாள்தனமாக பேசாதே… சிலை வழிபாட்டுக்கு எதிரிகள் அவர்கள். சிலைகளை அழித்தால்தான் நம்முடைய வழிபாட்டை நிறுத்த முடியும் என்பதே அவர்களின் கொள்கை. எனவேதான் கோயில்களைக் கொள்ளையடிப்பது, நிர்மூலமாக்குவது என்று செயல்பட்டு வருகின்றனர். எனவே, அச்சிலை நிச்சயம் நிர்மூலமாகியிருக்கும்…”

“இல்லை… இல்லை… இல்லை… என் அழகிய மணவாளன் அழிக்கப்பட முடியாதவர். அவரை அழிக்க முனைவோரே அழிந்து போவார்கள்…” – சிங்காரவல்லி குரலோங்கச் சொன்னாள்.

“அழிந்துபோய் நிலைகுலைந்து கிடப்பது நாம்தான். அவர்களில்லை. இதைப் புரிந்துகொள்.”

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

“அதற்கு காரணம், நம்முடைய சாந்த குணமும் பயந்த போக்கும்தான். இது ஒரு பாடம். நாம் இனி நம் குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். நம்மைக் கொல்ல வரும் புலியை நாம் வேட்டையாடிக் கொல்வதில்லையா. அதுபோல், நாம் வேட்டைக்கும் தயாராக வேண்டும்.”

“கேட்க நன்றாக இருக்கிறது. நடைமுறைக்கு ஒத்து வருமா?”

“உங்கள் நிலை எப்படியோ தெரியாது... நான் துணிந்துவிட்டேன். இனி, ஆடுகிற மாட்டை ஆடிக் கறப்பேன், பாடுகிற மாட்டை பாடிக் கறப்பேன்.”

“சிங்காரவல்லி! நீ ஒரு சாமான்யப் பெண். உணர்ச்சிப் பெருக்கில் ஏதேதோ பேசுகிறாய். போய் ஆக வேண்டியதைப் பார்.”

“ஆம் உணர்ச்சிப்பெருக்கில்தான் பேசுகிறேன். இது சாதாரண உணர்ச்சிப் பெருக்கல்ல… பக்திச் சிலிர்ப்புப் பெருக்கு! எனக்கு எம்பெருமான் துணையிருப்பார். என் சக்தியில், புத்தியிலிருந்து அவர் வழி நடத்துவார்…” என்ற சிங்காரவல்லி, சொன்னதுபோலவே புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளத் தொடங்கினாள்.

தன் இல்லம் திரும்பியவள் தன் ஆடைகளைக் களைந்து மிலேச்சப் பெண்கள் அணிவது போன்று ஆடை உடுத்திக்கொண்டாள். மிலேச்ச வீரர்கள் கூடியிருக்கும் பகுதியைத் தெரிந்துகொண்டாள். சோளக் கருதுகளைப் பறித்து வந்து, அவற்றை அனலில் வாட்டிச் சுட்டெடுத்து, ஒரு கூடையில் வைத்துச் சுமந்தபடி அவர்களின் இருப்பிடம் நோக்கிச் சென்றாள்.

அவர்கள், சிங்காரவல்லியை தங்கள் இனப் பெண்ணாக நினைத்து வரவேற்றனர். சோளக் கருதுகளை அள்ளித் தந்தவள், அவர்களின் அன்புக்குப் பாத்திரமானாள். அவர்கள் சொன்ன சிறு சிறு வேலைகளைச் செய்தாள். அப்படியே கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் எங்கு உள்ளன எனும் ரகசியத்தையும் தெரிந்துகொண்டாள். அவை, சிராப்பள்ளி திருக்குளத்தை ஒட்டிய கல்யாண மண்டபத் துக்குள் பாதுகாப் போடு இருப்பதாகவும் நாளை அந்தப் பொருள்களுடன் அறுபதுபேர் கொண்ட கஜானாக் குழு டெல்லிக்குப் புறப்பட இருப்பதாகவும் தெரிந்துகொண்டாள்.

அத்துடன், அந்தக் கஜானாக் குழுவின் தலைவன் இன்னார் என்பதை அறிந்து அவனைக் காணச் சென்றாள். அவனிடம் மிக நெருக்கமாகப் பழகி “உன்னோடு என்னையும் அழைத்துச் செல்லுங்கள். வழியில் உங்களுக்குச் சுவையான உணவு சமைத்துப் போடுகிறேன். என்னை டெல்லி சுல்தான் அரண்மனைப் பணியில் சேர்த்து விடுங்கள். இறைவன் உங்களுக்குக் கருணை செய்வான்” என்று அழுதாள். அவனும் அவளை நம்பினான். அவளின் வேண்டுகோளுக்குச் சம்மதித்தான்.

அதேநேரம் ஒருசிலர் சிங்காரவல்லியைச் சந்தேகப்படவும் செய்தனர். அவர்களை யெல்லாம் மன உறுதியோடு சமாளித்து, கஜானாக் குழுவோடு அறுபத்து நான்கு நாள் பயணம் செய்து டெல்லியை அடைந்தாள். இடையில் அழகிய மணவளாப் பெருமான் விக்கிரகத்தை அவள் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. மிகுந்த பொன் நகைகள், அட்டிகைகள், பொற்காசுகள், வெள்ளிப் பாத்திரங்களோடு அழகிய மணவாளப் பெருமான் ஒரு மரப் பெட்டிக்குள் இருந்தார். அப்பெட்டிக்கான பூட்டுச்சாவி தலைவனிடம்தான் இருந்தது. டெல்லியை நெருங்கிவிட்ட நேரம் அவனுக்கு மது குடிக்கத் தந்து சாவியைக் களவாடி, பெட்டியைத் திறந்து பார்த்தவள், பூரித்துப் போனாள்.

உள்ளே பெருமான் துளிகூட சிதைவின்றி பொற்குவியலுக்குள் அவளுக்குக் காட்சி தந்தார்! அந்த நொடியே சிங்காரவல்லி அவன் உருவை வெளியே எடுத்து நிற்கவைத்து, காலில் விழுந்து வணங்கி ஆனந்தக் கண்ணீர் சிந்தினாள். அப்படியே துக்கிச் சென்றுவிடலாமா என்றுகூட நினைத்தாள். ஆனால் அத்தருணத்தில் பலரும் முழித்துக்கொண்டு அங்கு வரவும், சிலையை மீண்டும் உள்ளே வைத்துப் பூட்டி சாவியை மீண்டும் தலைவனின் இடுப்பில் செருகிவிட்டாள்.

நல்ல வேளை எவரும் சந்தேகிக்கவில்லை. அதன்பின் பயணம் தொடர்ந்தது. டெல்லியை அடைந்ததும் அந்தப் பெட்டி அப்படியே சுல்தானின் முன் வைக்கப்பட்டு திறந்து காட்டப்பட்டது. உள்ளே இருந்த நகைகளைப் பார்த்து சுல்தான் வாய்பிளந்தான். ஆனால் அவனுடைய திருமகளான சுரதாணி என்பவளோ, அழகிய மணவாளரின் விக்கிரகத்தைப் பார்த்துச் சொக்கிப்போனாள். தன் ஆசனத்திலிருந்து இறங்கி திரைச்சீலைகளை எல்லாம் விலக்கிக்கொண்டு வந்தவள், சுல்தானிடம்

`‘இந்தச் சிலை தனக்கு வேண்டும். இது எனக்கு மிகப்பிடித்து விட்டது'’ என்று கேட்டாள்.

சுல்தானும் “தாராளமாய் எடுத்துக்கொள். உன் இஷ்டம்போல் இதை ரசித்து மகிழ்ந்திடு” என்றான். அத்துடன், “எல்லோரும் விழுந்து விழுந்து வணங்கிய இந்த உலோகச் சிலை, இனி என் மகளின் விளையாட்டுப் பொருள்” என்று கூறி, அந்தச் சபையே அதிரும்படி சிரித்தான். கூட்டத்தோடு கூட்டமாக பார்த்தபடி இருந்தாள் சிங்காரவல்லி.

எப்படியோ... எம்பெருமானின் திருமேனியை சிதிலப்படுத்தி விடாமலோ அல்லது நெருப்பிலிட்டு உருக்காமலோ இருந்தார்களே... என்று சமாதானமடைந்தாள். மேலும் சுல்தான் மகளின் அந்தப் புரத்துக்குள் நுழையவும் முடிவு செய்தாள். அதற்கு இலகுவாக தலைவன் மகளுக்கு தலைவாரி பூ அலங்காரம் செய்தாள். கைக்கு மருதாணி இட்டு அவள் செய்த அழகான செயல்கள், மிக இலகுவாக சல்தான் மகள் சுரதாணியை நெருங்கச் செய்துவிட்டன.

இந்த இடைப்பட்ட காலத்தில் சிங்காரவல்லி உருது மொழியையும் பேசக் கற்றுக்கொண்டதுதான் விந்தை. அவளது கலையார்வம், பேசும் திறன், தைரியமான செயல்பாடுகள் சுரதாணி மனத்தில் அவளுக்கோர் இடத்தை அளித்துவிட்டன.

அப்போது சுரதாணியின் மாடத்தில்தான் அழகிய மணவாளரின் சிலையும் இருந்தது. அவளைக் காணும் சாக்கில் சிலைக்கும் பூ சாற்றி ரகசியமாக வணங்கினாள். ஒருநாள் சுரதாணி அதைக் கண்டு “என்ன செய்கிறாய்” என்று கேட்க, “இந்தச் சிலை மிக விசேஷமானது. இது, கேட்பவர்க்குக் கேட்டதைத் தந்திடும்” என்றாள்.

“அப்படியா… இது எனக்கு தெரியாதே?”

“உங்களுக்குத் தெரியாத இன்னும்பல விஷயங்கள் உண்டு சுரதாணி!”

“அப்படியென்ன விஷயங்கள்?”

“இச்சிலை ஏதோ கலைப் பொருளல்ல… இந்த உலகைப் படைத்த அருளாளனின் வடிவம் இது…!”

“உலகைப் படைத்த இறைவனுக்கு வடிவம் கிடையாதே?”

“அது நம் கொள்கை. ஆனால், ஒரு வடிவம் இருந்தால்தான் மனத்தில் பக்தி புரிய முடியும் என்பது தென்னவர்கள் சித்தாந்தம்.”

“உண்மைதான்… நாம்கூட குறிப்பிட்ட திசை மற்றும் இறைவன் உறைக்கின்ற இடத்தை எண்ணித் தானே தொழுகிறோம்.”

“ஆம்! அவர்கள் வரையில் இது இறைத்தோற்றம்”

“என்னவோ தெரியவில்லை… இத்தோற்றம் எனக்கும் மிகவும் பிடித்துவிட்டது. என்ன அழகு… என்ன ஈர்ப்பு!” – சுரதாணி சொல்லிக்கொண்டே, சிலையைத் துக்கி மார்போடு அணைத்துக்கொண்டாள்.

“சுரதாணி, நீங்கள் இப்படி அனுபவிப்பதை அரசர் பார்த்தால் தவறாக எண்ணுவார். இதை எனக்குத் தந்துவிடுங்களேன்…” – சிங்காரவல்லி இதுதான் தருணம் என்று கேட்கவும், சுரதாணியின் முகம் மாறியது.

“இல்லை… இதை நான் தரமாட்டேன். இனி, இதைப் பிரியவும் மாட்டேன். நான் உறங்கும்போதும் இச்சிலை என்னோடு உறங்கட்டும்'' என்றவளாய் சொன்னபடியே செய்தாள்.

சிங்காரவல்லிக்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. அங்குள்ள பாதுகாவலிலிருந்து அச்சிலையைக் கடத்திக்கொண்டு திருவரங்கம் செல்ல, தன் தனியொருத்தியால் முடியாது என்பதே அது. இவ்வளவு துரம் படாத பாடு பட்டு வந்ததெல்லாம் வீணாகிவிட்டதே என்று முதலில் வருந்தியவள், பிறகு அதற்கொரு வழியைக் கண்டாள்.

டில்லி சுல்தான் பாரத தேசம் முழுவதையும் அடிமைப்படுத்தி தனது குடையின்கீழ் ஆட்சி செய்பவனாக இருந்த அதேநேரம், சொன்ன சொல் தவறாதவனாகவும், கலைக்கு மயங்குபவனாகவும், தன்னை துதிப்பவர்க்கு அள்ளி அள்ளித் தருபவனாகவும் இருப்பதை அறிந்தாள். எனவே, அவனுடைய அந்தக் குணங்களைப் பயன்படுத்தி எம்பெருமானின் திருவிக்கிரகத்தைப் பெற முயல்வதே சரி என்று அவளின் உள்ளுணர்வு கூறவும், உடனேயே டெல்லியைவிட்டுப் புறப்பட்டாள்.

- தொடரும்....