தொடர்கள்
திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 53

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

சிங்காரவல்லிக்கு உதவ கோயில் ஸ்தானீகர்கள் சிலருடன், அரங்கன்பால் பற்றுகொண்ட இளம் வைணவ பக்தர்களும் முன் வந்தனர்.

மற்றுமோர் தெய்வமுண்டோ

மதியிலா மானிடங்காள்…

உற்ற போதன்றி நீங்கள்

ஒருவன் என்றுணர மாட்டீர்,

அற்றமே லொன்ற றியீர்.,

அவனல்லால் தெய்வமில்லை

கற்றினம் மேய்த்த வெந்தை

கழிலிணை பண்டினீரே!

- தொண்டரடிப் பொடியாழ்வார்

ந்த ஜக்கிணி நாட்டியக்குழுவுடன் சிங்காரவல்லி திரும்பவும் டெல்லிக்குப் புறப்படலானாள். இம்முறை சிங்காரவல்லிக்கு உதவ கோயில் ஸ்தானீகர்கள் சிலருடன், அரங்கன்பால் பற்றுகொண்ட இளம் வைணவ பக்தர்களும் முன் வந்தனர். சிங்காரவல்லி அவர்களுக்குப் பாடமெடுக்கலானாள்…

“அன்பானவர்களே! முதலில் நம் தோற்றத்தில் மாற்றம் வேண்டும். பழுத்த வைணவனாகத் தோள்களில் சங்கு சக்கரச் சின்னம் பொறிக்கப்பட்ட பச்சை முத்திரையுடன் நீங்கள் என்னோடு வருவது சரியாக இராது. அந்த முத்திரையைக் கோலம் போல மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் குடுமியையும் நீக்கிவிடுங்கள். விரும்புகிறவர்கள் தாடி வைத்துக்கொள்ளுங்கள். நாம் நம் தோற்றத்தை மாற்றிக்கொள்ளாமல் விரும்பியதைச் சாதிக்க முடியாது” என்ற அவள் கருத்தைக் கேட்டு எல்லாருமே அதிர்ந்தனர். சிலர் அக்கருத்தை எதிர்க்கவும் செய்தனர்.

ரங்க ராஜ்ஜியம் - 53

“சிங்காரவல்லி… விட்டால் நீ அவர்கள் மதத்துக்கே மாறிவிடு என்றுகூடச் சொல்வாய் போல் உள்ளதே…” என்றனர்.

“ஆம்… தற்காலிகமாக நாம் அப்படி நடந்துகொண்டால்தான் நம் காரியம் ஜெயமாகும்.”

“என்னால் முடியாது. இதற்குத் தற்கொலை எவ்வளவோ மேல்…”

“அப்படியானால் தற்கொலை செய்துகொண்டு ஒழிந்து செல்லுங் கள். கோழையாகி தற்கொலை செய்து கொள்வதற்கு, வீரனாகி வேடமிடுவது தவறில்லை என்பவர் மட்டும் என்னோடு வாருங்கள்.”

“உயிரைவிட மேலானவையல்லவா, நம் சின்னமும் வழிமுறைகளும்…”

“இந்தச் சின்னமும் வழிமுறைகளும் அவனிடமிருந்தல்லவா நமக்கே வந்தன. அவனே இன்று அடைபட்டுக்கிடக்கையில் நமக்கெதற்கு இந்த அடையாளங்கள்…”

“ நீ வளைந்து தரச் சொல்கிறாய். அப்படித் தானே...”

ரங்க ராஜ்ஜியம் - 53

“ஆம்… அவனே வளைந்துபோக வேண்டிய இடத்தில் வளைந்து சென்றவன்தானே... பாரதப் போரில் துரோணரை வீழ்த்த அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்று உரத்த குரலில் சொல்லச் சொன்னது என்னவாம்... பீஷ்மாச்சார்யரிடம் ஆசி பெற திரௌபதியை முகத்தை மூடி அழைத்துச் சென்றது எதற்காம்... கர்ணனிடம் அந்தண வேடமிட்டுச் சென்று தர்ம பயன்களை யாசகம் கேட்டதும் எதற்காம்… எல்லாமே பாரதப் போரில் பாண்டவர் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தானே...”

“புரிகிறது புரிகிறது… உன் விருப்பப்படியே உருமாறுகிறோம். சரிதானே...”

“உருமாறினால் மட்டும் போதாது… உருப்படியாக நடிக்க வேண்டும். தியாகத்தில் பெரிய தியாகம், நாம் இப்போது செய்ய இருப்பதுதான் அவனை மனத்தால் மட்டுமே வழிபட வேண்டும். நித்ய அனுஷ்டானங்களுக்கு இனி நம்மிடம் இடமில்லை. நாம் நாட்டியக் குழுவினர்... அக்குழுவினர் போலவே நடக்க வேண்டும். நாம் நாடோடிகளைப் போல்… ஆடிப்பாடி மகிழ்விப்பது நம் செயல். அதற்காக நமக்குக் கிடைக்கும் பரிசே நமக்கான சன்மானம். சன்மானமே நம் சம்பளம்” - சிங்காரவல்லி தெளிவாகப் பேசினாள். அதன்பின் அரங்கனின் கோபுரத்தை தரிசனம் செய்தவர்களாக சாரட் வண்டிகளில் புறப்பட்டனர் டெல்லி நோக்கி…

சிங்காரவல்லிக்கு ஒருமுறைக்கு இருமுறை சென்று வந்த அனுபவம் இருந்தால் பயணம் தடையின்றித் தொடர்ந்தது. இடையில் சிலரால் இடையூறு ஏற்பட்டபோது, டெல்லி சுல்தான் பெயரைச் சொல்லி அவர்களை அடக்கினாள் சிங்கார வல்லி. செல்லும் வழியில் தோப்புகளில், நதிக் கரைகளில், மலை அடிவாரங்களில் தங்கி அங்கெல்லாமும் நாட்டியப் பயிற்சி செய்தனர். பயிற்சியைச் சில நேரங்களில் ஊர் மக்கள் நடுவில் செய்து அவர்கள் பாராட் டையும் பெற்றனர். சரியாக 60 நாள்கள்… அதாவது இரு பௌர்ணமி காலம் ஆகின டெல்லியை அடைந்திட.

முதல் காரியமாக சுரதாணியைத்தான் சென்று பார்த்தாள் சிங்காரவல்லி. சுரதாணி அழகிய மணவாளப்பெருமாளுக்கென்றே ஒரு சிறு மண்டபம் கட்டி அதன் நடுவில் பெருமாளை நிறுத்தியிருக்க, ஊதுவத்தி வாசம் கமழ்ந்தபடி இருந்தது. அக்காட்சி சிங்காரவல்லியைச் சிலிர்க்கவைத்தது. சுரதாணி அறியாமல் ரகசியமாக விழுந்து வணங்கினாள். சிங்காரவல்லிக்கு டெல்லியில் பானு என்கிற பெயர்!

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

“இவ்வளவு நாள் எங்கே போய்விட்டாய் பானு… நீ இல்லாமல் நான் மிக வருந்தி னேன். நீ நம்புவாயோ மாட்டாயோ இந்தச் சிலையிடம் உனக்காகப் பிரார்த்தனை செய்தேன். `பானு வர வேண்டும்' என்று நேற்றுகூட உருகினேன். நீ வந்து விட்டாய்…”

சுரதாணியின் அன்பும் நம்பிக்கையும் சிங்காரவல்லியைச் சிலிர்க்க வைத்தது.

“இனி உங்களைப் பிரியவே மாட்டே னம்மா…” என்று சமாதானம் செய்த சிங்கார வல்லி, தன் புதிய நாட்டியக்குழு பற்றிக் கூறி அவையில் தான் ஆடிக்காட்ட அனுமதி பெற்றுத்தர வேண்டும்” என்றாள்.

மறுநாளே கிடைத்தது!

டெல்லி சுல்தான் முன்னிலையில் ஜக்கிணி நாட்டியம் அழகுடன் நடத்தப்பட்டது. சுல்தான் மயங்கிப்போனார்.

“அருமை… இப்படி ஒரு நாட்டியத்தை என் வாழ்நாளில் கண்டதேயில்லை… அருமை... அற்புதம்…” என்று மகிழ்வின் உச்சிக்கே சென்றார். இறுதியாக அவர்களுக்குப் பரிசளிக்க முன்வந்து ‘என்ன வேண்டுமோ கேளுங்கள்’ என்று சொன்ன மாத்திரத்தில் சிங்காரவல்லி அழகாகக் காய் நகர்த்தத் தொடங்கினாள். எதையும் கேட்காமல் அமைதியாக நின்றாள். சுல்தானிடம் வியப்பு.

“ என்ன தயக்கம்… கேளுங்கள். பொன்னா... மணியா... இல்லை, தானிய மூட்டைகளா?” என்று திரும்பக் கேட்டார்.

“அதெல்லாம் இல்லை அரசே…”

“வேறு என்ன வேண்டும்?”

“கேட்டுவிட்டுச் சிரிக்கவோ... இல்லை, கோபிக்கவோ கூடாது…”

“அது கேட்பதைப் பொறுத்தது…”

“எங்கள் நாட்டியக்குழுவில் நாங்கள் ஒரு சிலையை வைத்திருந்தோம்” - சிங்காரவல்லி மெள்ளத் தொடங்கினாள்.

“சிலையா...”

“ஆம்… அது ஓர் எழில் சிற்பம்… அதன்முன்தான் ஆடிப் பாடிப் பயிற்சி செய்வோம்…”

“அதற்கென்ன...”

“எங்கள் வசம் உள்ள அந்தச் சிலை ஒருநாள் கீழே கை தவறி விழுந்து உடைந்துவிட்டது.”

“அதனாலென்ன… புதிதாகச் செய்து கொள்ளுங்கள்.”

“அதற்குப் பொருள் செலவாகும்…”

“அதை நான் தந்துவிடட்டுமா...”

“அதற்குப் பதிலாகத் தாங்கள் மனது வைத்தால் சிலையாகவே வழங்க முடியும்.”

“அது எப்படி... என்னைச் செய்து தரச் சொல்கிறீர்களா?”

“இல்லையில்லை… அப்படிச் செய்த ஒன்று உங்களிடமே இருக்கிறது.”

“என்ன இது உளறல்… என்னிடம் ஏது சிலையும் கலையும்...”

“இருக்கிறது… தங்களிடம் என்றால் தங்களிடமில்லை. தங்கள் திருமகளிடம்…”

“என் மகளிடமா...” - சுல்தான் அதிர, சிங்கார வல்லியாகிய பானு திருவரங்கக் கொள்ளைப் பொருள்களில் ஒன்றாக வந்த அதை சுரதாணி வைத்திருப்பது வரை ஞாபகப்படுத்தினாள். சுல்தானும் அதை உணர்ந்து, “போயும் போயும் அதையா கேட்பாய்...” என்று ஏளனமாகத் திரும்பிக்கேட்டார்.

“எங்களுக்கு இப்போது அதுதான் வேண்டும்.”

“வேடிக்கையான விருப்பம்தான். போகட்டும். என் மகள் தந்தால் தாராளமாகப் பெற்றுச் செல்லுங்கள். ஆனால், அவள் மறுத்தால் என்னால் தர இயலாது…”

“எனக்கு நம்பிக்கை உள்ளது… நான் சென்று கேட்டுப் பார்த்து அவர் தந்தால் எடுத்து வரவா...”

“தாராளமாக…”

சுல்தான் சம்மதித்திட சுரதாணி அறைக்குச் சென்ற சிங்காரவல்லி, அவையில் நடந்த எதையும் கூறவில்லை. மாறாக உபசரித்தாள். பால் பழம் தந்து சாப்பிடச் செய்தாள். அந்தப் பாலில் மயக்க மருந்தையும் கலந்து விட்டாள். சுரதாணி மயங்கவும் சிலையை எடுத்துக் கொண்டு அவைக்கு வந்த சிங்காரவல்லி, “சுரதாணி இதை எனக்கு வழங்கி விட்டார்” என்றாள்.

“ஆச்சர்யமாக உள்ளதே… உறக்கத்திலும் இது அவள் உடன் இருக்க விரும்பினாளே” என்றார் சுல்தான்.

“நான் வேறு ஒரு சிலையை எடுத்து வந்து தருவதாகக் கூறவும் சரி எனச் சொல்லி விட்டார்.”

“அப்படியானால் தாராளமாகக் கொண்டு செல்லுங்கள்” – சுல்தான் அனுமதியளித்த அடுத்த நிமிடமே அழகிய மணவாளப் பெருமாளின் சிலையுடன், முன்பே திட்ட மிட்டு எடுத்து வைத்திருந்த சேர குலவல்லி சிலையையும் எடுத்துக்கொண்டு டெல்லியை விட்டு வேகமாகப் புறப்பட்டனர்.

மாளிகையில் மயக்கம் விழித்த சுரதாணியோ அழகிய மணவாளப்பெருமாள் சிலையைக் காணாது அதிர்ச்சியடைந்து தன் தாதிகளிடம் கேட்டிட, அவர்கள் பானு எடுத்துச் சென்று விட்டதைக் கூற, சுரதாணி வேகமாக சுல்தான் முன் சென்று நின்றாள். கண்ணீர் விட்டாள்.

பிறகே சுல்தானுக்குத் தான் ஏமாற்றப்பட்டது புரிந்தது. பானுதான் சிங்காரவல்லி என்பது முதல் அந்த சிலைக்காகவே அவள் ஜக்கிணி நாட்டியக்குழுவை அழைத்து வந்தாள் என்பது வரை சகலமும் புரிந்தது. சுல்தான் அதிர்ச்சியின் உச்சத்துக்கு மட்டுமல்ல பிரமிப்பின் உச்சத்துக்கே சென்றார்.

“ஒரு செப்புச் சிலைக்கு இத்தனை நாடகமா?”

“அவர்கள் வரையில் அது சிலையில்லை. அதுவே இறைவனின் தோற்றம்.”

“அதுவே இறை தோற்றமென்றால் நான் ஏன் அதை உணரவில்லை…”

“இறைவன் நம்வரையில் வடிமற்றவன் அல்லவா...”

“வடிவமற்ற அவன் அவர்களுக்கு மட்டும் எப்படி வடிவமாகக் காட்சி தருகிறான்?”

“அது அவர்களாக வடிவமைத்துக் கொண்டது அரசே…”

“எனக்கு அதெல்லாம் தெரியாது. என்னையும் என் மகளையும் ஏமாற்றி எடுத்துச் சென்றுவிட்டனர். இதை இப்படியே விடக் கூடாது. அவர்கள் இந்த டெல்லியை நிச்சயம் கடத்திருக்க மாட்டார்கள். அவர்களைக் கைது செய்து சிலையோடு என் முன்னால் கொண்டுவந்து நிறுத்துங்கள்”

- சுல்தானின் உத்தரவைக் கேட்ட ஒருவர் சிங்காரவல்லிக்குச் செய்தி அனுப்பினார். இதுவும் அவள் ஏற்பாடே!

செய்தி சிங்காரவல்லியை அடைந்தபோது டெல்லியை விட்டு வெளியேறியிருந்தது அவள் சாரட்.

- தொடரும்...

எந்த நாள்களில் முடி வெட்டலாம்?

முடி, நகம் முதலான நம் உடற்பகுதிகளை எந்தெந்த நாள்களில் இழக்கலாம் என்பதற்கு சாஸ்திரத்தில் விஸ்தாரமான விளக்கங்கள் இருக்கின்றன. நாள், கிழமை, நட்சத்திரம் போன்றவை எல்லாம்கூட அதில் இருக்கும்.

காலப்போக்கில் கிழமையை மட்டும் பார்த்தால் போதும் என்றாகி விட்டது. எனவே, இன்னின்ன கிழமைகளில் முடி வெட்டக் கூடாது என்பதைப் பின்பற்றுகிறோம். ‘குஜதின மதிஷ்டமிதி’ என்று ஜோதிட சாஸ்திரம் இதைக் குறிப்பிடும்.

செவ்வாய், சனி ஆகியவை குஜ தினங்கள். நல்ல காரியம் செய்வதைத் தவிர்க்க வேண்டிய தினங்கள். வெள்ளிக் கிழமை அன்று நல்ல நாள். ஆனாலும் ஒரு நல்ல நாளிலா இதைச் செய்வது என்கிற சிந்தனையில் வெள்ளியும் அதில் சேர்ந்து கொண்டது.

வெள்ளிக்கிழமை முடி வெட்டக் கூடாது என்பது எல்லோருக்கும் பொருந்தாது. தகப்பனார் இல்லாதவர்கள், வெள்ளிக் கிழமை முடி எடுக்கலாம். அவர்களும் செவ்வாய், சனிக் கிழமைகளில் முடிவெட்டிக் கொள்வது கூடாது.

- சேஷு மாமா