திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 54

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

திருமலை வசதியானது என்று அவர்கள் முடிவெடுக்க சில காரணங்கள் இருந்தன.

‘மறம் சுவர் மதிலெடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு,

புறம்சுவ ரோட்டை மாடம் புரளும் போதறிய மாட்டீர்

அறம் சுவராகி நின்ற அரங்கனார்க் காட் செய்யாதே,

புறம் சுவர் கோலஞ் செய்து புள் கவ்வக் கிடக்கின்றீரே’

- தொண்டரடிப் பொடியாழ்வார்.

சிங்காரவல்லி குழுவினரைப் பிடித்துக்கொண்டுவரும்படி சுல்தான் உத்தரவிட்ட செய்தி, சிங்காரவல்லியை அடைந்த போது டெல்லியை விட்டு வெளியேறியிருந்தது அவள் சாரட்.

அதேநேரம், சுல்தானிய வீரர்கள் புரவிகளில் வந்தால், எளிதில் தங்களைப் பிடித்துவிடக்கூடும் என்று கருதினாள் சிங்காரவல்லி. ஆகவே, தன் குழுவை மூன்றாகப் பிரித்தாள். வேடத்தையும் மாற்றிப் போடவைத்தாள். அழகிய மணவாளப் பெருமாளுடன் நேராக திருவரங்கத்துக்குச் செல்வது இப்போது சரியில்லை என்றும் சிந்தித்தாள்.

தற்போதைக்கு, திருமலை திருப்பதியே பாதுகாப்பானது என்று முடிவு செய்தவள், ஓர் ஆண்மகன் போன்று வேடம் தரித்துக்கொண்டு, அழகிய மணவாளப் பெருமாள் விக்கிரகத்துடன் தான் மட்டும் திருமலை திருப்பதியை நோக்கிப் பயணப்பட ஆயத்தமானாள். மற்றவர்கள் திருவரங்கம் நோக்கிப் பயணித்தனர்.

ரங்க ராஜ்ஜியம் - 54

சிங்காரவல்லியைத் தனியே அனுப்ப மனமின்றி, கொடவர்களில் மூன்று பேர் (பெரிய பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்பவர்கள்), அவளோடு சேர்ந்துகொண்டார்கள். ஆக மொத்தம் நான்கு பேர்.

திருமலை வசதியானது என்று அவர்கள் முடிவெடுக்க சில காரணங்கள் இருந்தன. அந்த மலைக்குமேல் மிலேச்சப் படை ஏறிச் செல்வது என்பது சிரமமான காரியமாக இருந்தது. மலை வழியில் மிருக உபாதைகள் அதிகம். ஒரு சிலர் ஏற முற்பட்டபோது, அவர்கள் யானைகளால் மிதிக்கப்பட்டும் சிறுத்தைகளால் தாக்கப்பட்டும் மடிந்தார்கள்.

திருமலை யாத்திரை புரிய வேண்டுமென்றால், பகல் பொழுதில் சந்திரிகிரி பக்கமாய்க் குறிப்பிட்ட பாதையில் செல்ல வேண்டும். அதுவும் கூட்டமாய்க் கோஷமிட்டுக் கொண்டும் மணிகளால் சத்தம் எழுப்பிக் கொண்டும்தான் செல்ல வேண்டும். அப்போது தான் இடையூறின்றிப் போய்ச் சேர முடியும். எனவே திருமலைக்கு மிலேச்ச ஆபத்து அவ்வளவாக இல்லை. இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டே சிங்காரவல்லியும் கொடவர்களும் திருமலையைத் தேர்வு செய்து திருமலையை நோக்கிச் சென்றனர்.

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

டெல்லி அரண்மனையிலோ சுல்தானின் மகளான சுரதாணி, மயக்கம் நீங்கி விழித்தாலும், திக்பிரமை பிடித்தவள் போலாகி விட்டாள். விஷயம் சுல்தான் காதுகளுக்குச் சென்றது. சுல்தான் வந்து பார்த்தபோது, சுரதாணியின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.

“மகளே ஏன் அழுகிறாய்?”

அவள் பதிலேதும் கூறவில்லை.

“உன்னைத்தான் மகளே… ஏன் அழுகிறாய்?”

“உங்களுக்குச் சொன்னால் புரியாதப்பா என் வேதனை!”

“அப்படி என்ன வேதனை... ஒரு சிலைக்காகவா இவ்வளவு வருத்தம்... இப்போதே அதுபோல ஆயிரம் சிலைகளை வடிக்கச் செய்து, உன் அறையில் நீ திரும்பும் பக்கமெல்லாம் அவற்றை வைத்துவிடுகிறேன். போதுமா...’’

“எந்த ஒரு சிலையும் அந்தச் சிலையாகாது அப்பா…”

“அப்படியென்ன இருக்கிறது அந்தச் சிலையில். எனக்கு எந்த விசேஷமும் புலப்படவில்லை அந்தச் சிலையில்...’’

“அதன் தோற்றத்தை விடவும் அதன் சாந்நித்தியம் பெரியது அப்பா!’’

“சாந்நித்தியமா… அப்படியென்றால்?”

“அது ஒரு வகை சிலிப்பு உணர்வு. உங்களுக்கு ஏற்படவில்லை என்றால், நான் அதற்குப் பொறுப்பல்ல…”

“இது என்ன பேச்சு… உன்னுள் சைத்தான் புகுந்துவிட்டதா?”

“தவறு தந்தையே… அழகிய மணவாளன் முன் சைத்தான்கூட அடங்கி ஒடுங்கிவிடும்.”

“இல்லை… உன் புத்தி பிசகி விட்டது. அந்த தாதி உனக்கு மயக்க மருந்து தரும்போதே, புத்தி கலங்கும் விதமாய்ச் சில மருந்துகளையும் தந்துவிட்டதாகக் கருதுகிறேன்.”

ரங்க ராஜ்ஜியம் - 54

“அவளைத் திட்டாதீர்கள். அவள் எனக்கு முன்னோடி. எவ்வளவு பக்தியும் பிரேமையும் இருந்தால், அவள் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பாள் என்று எண்ணிப்பாருங்கள்”

“தண்டிக்கப்பட வேண்டியவளைப் போற்றுகின்றாயா... நான் அந்தச் சிலையை அரண்மனைக்குள்ளேயே விட்டிருக்கக் கூடாது. கலைப்பொருள் என்று கருதியது தப்பாகி விட்டது. உன் புத்தி பிசகிவிட்டது. எல்லாவிதங்களிலும் நம் வழிமுறைகளுக்கு எதிரானது உன் சிந்தனை. உன்னை எச்சரிக்கிறேன். அந்தச் சிலைக்காக அழுவதை நிறுத்து. எங்கே வைத்தியர்கள்...”

சுல்தான், தன் மகளைக் கிட்டத்தட்ட பைத்தியமாகவே எண்ணி வைத்தியம் பார்க்க ஏற்பாடு செய்துவிட்டார். வைத்தியர்கள் வந்து பார்த்தனர். சுரதாணி அவர்களிடம் தனக்கு எதுவுமில்லை, தான் நலமுடன்தான் உள்ளேன் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். ஆனால், அவர்கள் கேட்பதாக இல்லை.

அவளுக்கு முதலில் நல்ல துக்க மருந்து கொடுத்தனர். நன்கு துங்கி எழுந்த பிறகும் ‘ரங்கா… ரங்கா…’ என்று அவள் மருகவும் அதிர்ச்சியடைந்தனர். இவ்வேளை சுரதாணியும் தந்திரமாக ஒரு காரியம் செய்தாள்.

அருகிலுள்ள மலை வாசஸ்தலத்துக்குச் சென்று சில காலம் ஓய்வெடுக்க விரும்புவதாக, தாதி ஒருத்தியின் மூலம் அரசரின் காதுக்குக் கொண்டு சென்றாள். அரசரும் அனுமதித்தார். ஆனால், சுரதாணியோ பாதி வழியில் தென்னகம் நோக்கித் திரும்பலானாள். உடன் வந்தவர்கள் தடுத்தும் கேட்கவில்லை. கிட்டத்தட்ட 40 நாள்கள் பயணம் செய்து திருவரங்கத்தை அடைந்தாள்.

திருப்பதியை அடைந்த அழகியமணவாளர் அங்கே எவரும் அறியாதபடி பூஜிக்கப்பட்டுக்கொண்டிருந்தார்.

இந்த விஷயம் சுல்தானுக்குத் தெரிவிக்கப்பட்டது. சுல்தான், திருவரங்கத்துப் பொறுப்பில் இருந்த ஹவில்தார் ஒருவருக்கு, தன் மகளைப் பத்திரமாகப் பாதுகாத்து, அந்தச் சிலையையும் அவளிடம் ஒப்படைக்கச் சொல்லி செய்தி அனுப்பினார்.

ஹவில்தார் சுரதாணியை அழைத்துக்கொண்டு ஆலய வெளிக்குள் நுழையலானான். சுரதாணி தன்னையும் அறியாது மண்டியிட்டு தொழுதாள். அப்படியே “இது புனிதமான இடம். இதை மற்ற இடம் போல கருதி நடமாடவோ, சத்தமிடவோ, அசுத்தம் செய்யவோ கூடாது” என்றும் உத்தரவிட்டாள்.

சுரதாணி இப்படி திருவரங்க ஆலயக் கோட்டத்துக்குள் புகுந்த வேளை, அது மனித நடமாட்டமின்றி காணப்பட்டது. சுரதாணிக்குள், ஏற்கெனவே அங்கே தான் ஓடியாடித் திரிந்தது போல் ஓர் உணர்வு. அதை, தன்னோடு வந்த ஒருவரிடம் சொன்னதுடன், ஓரிடத்தில் நின்றுகொண்டு குறிப்பிட்ட திசையைச் சுட்டிக்காட்டி, ``அங்கே திரும்பினால் யானை சிலை ஒன்று இருக்கும். நான் அதன்மீது அமர்ந்து விளையாடியிருக்கிறேன்’’ என்றாள்.

அவள் குறிப்பிட்டபடியே அவள் சுட்டிக்காட்டிய இடத்தில் யானை சிலை இருப்பதைக் கண்டு, ஹவில்தார் உட்பட அவளோடு வந்த அனைவரும் திகைத்தனர். பல இடங்கள் பாழ்ப்பட்டுப் போயிருந்தன. சுரதாணி கண்ணீர் வடித்தாள். மூலவர் திருச்சந்நிதிக்குச் சென்றபோது, சுவரெழுப்பி மறைக்கப்பட்டிருந்தது.

சுரதாணியிடம் “எல்லாம் இடிக்கப்பட்டு விட்டன…” என்று சொல்லவும் சுரதாணி நெஞ்சு துடித்தது. கண்களில் நீர் பெருகிட சுருண்டு விழுந்தாள். சில நொடிகளில் உயிரும் பிரிந்துவிட்டது! எல்லாமே விட்ட குறை… தொட்டகுறை!

அதைக்கண்டு ஹவில்தார் உள்பட சுல்தானின் படையே அதிர்ந்துபோனது. கோயிலைச் சார்ந்தவர்களோ ‘எம்பெருமான், தன்னை அழிக்க நினைத்த சுல்தானுக்கு அவனுடைய மகள் மூலமாகவே தன்னையும் தன் இன்னருளை யும் உணர்த்திவிட்டான்’ என்று எண்ணி உருகினர்.

மகள் உயிர்விட்ட செய்தி கிடைத்ததும் சுல்தானின் உள்ளம் துடித்தது. மற்ற மதத்தவரின் நம்பிக்கைகளை நாம் பின்பற்றாவிட்டாலும், அவற்றைக் குறை கூறியதோடு அழிக்கவும் நினைத்தது, தனக்கு ஒரு பெரிய இழப்பை ஏற்படுத்திவிட்டது என்று உணர்ந்தான். தவற்றுக்குப் பரிகாரமாக, திருவரங்கம் ஆலயம் பழையபடி பூஜைகளோடு திகழவும் வழிபாடுகள் நிகழவும் ஜாகீர் எனப்படும் நில மானியத்தை வழங்கி, தன் மகளின் ஆத்ம சாந்திக்கு அடிகோலினான்.

திருவரங்கம் இப்படி திருப்பம் கண்டு நின்ற நிலையில், திருப்பதியை அடைந்த அழகியமணவாளர் அங்கே எவரும் அறியாதபடி பூஜிக்கப்பட்டுக்கொண்டிருந்தார். அங்கே அதற்கான ஏற்பாடுகளைச் செய்த சிங்காரவல்லி, மாறுவேடத்தில் திருவரங்கம் திரும்பியபோது, சுரதாணி உயிர் விட்டுவிட்ட சம்பவம் நிகழ்ந்து முடிந்திருந்தது.

அது அவளை உருக்கிவிட்டது. இடையில் உற்சவங்கள் நடைபெற வேண்டி மறைக்கப்பட்ட சுவர் இடிக்கப்பட்டு மூலவர் வெளியே கொணரப்பட்டார். அதேபோல், வில்வ மரத்தடியில் ரங்கநாயகி தாயார் விக்கிரகம் புதைக்கப்பட்ட இடத்தை அறியாததால், புதிதாக ஒரு விக்கிரகம் செய்து அதைப் பிரதிஷ்டை செய்து உற்சவங்கள் நிகழத் தொடங்கின.

சிங்காரவல்லிக்கோ தான் பாதிக்கிணறு தாண்டியதுபோல்தான் தோன்றியது. திருமலையில் கொடவர் பொறுப்பில் ஒப்படைக் கப்பட்ட பெருமாளைத் திருவரங்கத்துக்குக் கொண்டுவர இனி தடையேதும் இல்லை என்று கருதினாள். அதன்பொருட்டு திருப்பதிக்குப் பயணப்பட்டவள், திருமலையை அடைந்ததும் நோய்ப்பட்டு இறந்து போனாள்!

எம்பெருமானுக்கு உரிய ஏகாதசி நாளில் திருமலையில் அவள் உயிர் பிரிந்ததும் அங்கேயே மலையில் அவளது உடல் தகனம் செய்யப்பட்டு, பாபநாச தீர்த்தத்திலும் கரைக்கப் பட்டது. சிங்காரவல்லியும் பெருமாள் திருவடிகளில் சென்று சேர்ந்தாள்.

கொடவர்களால் பூஜிக்கப்பட்டு வந்த பெருமாள் திருமலையில் ஒரு குகைக்குள் வழிபாடுகளைக் கண்டுகொண்டிருந்தார்.

ஆண்டுகள் பல கடந்தன.

இருளர் இனத்தைச் சார்ந்த இருவர் வேட்டைக்கு வந்த தருணத்தில், மணிச் சத்தம் ஒலிக்கக் கேட்டு, அருகிலுள்ள குகைக்குள் புகுந்து பார்த்தனர். அங்கே ஒரு முதியவர் எம்பெருமானை வணங்கிக் கொண்டிருந்தார்!

தொடரும்…

கஜலக்ஷ்மி வழிபாடு!

ஷ்டலக்ஷ்மிகளுள் விசேஷமானவள் கஜலக்ஷ்மி. இவளே நடுநாயகமாக இருந்து, ஏனைய லக்ஷ்மி வடிவங்களை தன்னுள் கொண்டவள். இவள் நிலைப்படிமேல் அமர்ந்துள்ளதால், திருநிலை நாயகி எனப் புகழப்படுகின்றாள்.

விஷ்ணு புராணத்தில் இவள் கடலிலிருந்து வெளிப்பட்டதும், திசை யானைகள் எட்டும் பொற்குடங்களால் புனித நீரை ஏந்தி வந்து நீராட்டின என்று கூறுகிறது. யானைகள் நீராட்ட நடுவில் வீற்றிருப்பதால் இவளை கஜலக்ஷ்மி என்று அழைக்கின்றனர். காமாட்சி விளக்கில் இவளே வீற்றிருந்து சகல மங்கலங்களையும் அளித்தருள்கிறாள்.

- பா.சரவணன், ஶ்ரீரங்கம்