திருக்கதைகள்
திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 55

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

காட்டுப்பூக்களால் அர்ச்சனை... காட்டுக் கனிகளே நைவேத்திய பிரசாதம்.

‘அமரவோ ரங்க மாறும்

வேதமோர் நான்கு மோதி

தமரர்களில் தலைவராய

சாதியந் தணர்களேலும்

நுமர்களைப் பழிப்பராகில்

நொடிப்பதோ ரளவில், ஆங்கே

அவர்கள் தாம் புலையர் போலும்

அரங்கமா நகருளாளே!’

- தொண்டரடி பொடியாழ்வார்.

ரங்கன் திருமலையில் ஒரு குகைக்குள் வழிபாடுகளைக் கண்டுகொண்டிருந்தார். ஆண்டுகள் பல கடந்துவிட்ட நிலையில் இருளர் இனத்தைச் சார்ந்த இருவர் யதார்த்தமாக வேட்டைக்கு வந்தபோது, மணிச்சத்தம் ஒலிக்கக் கேட்டு அருகிலுள்ள குகைக்குள் புகுந்து பார்த்தனர்.

அங்கே ஒரு முதியவர் எம்பெருமானை வணங்கிக் கொண்டிருந்தார். காட்டுப்பூக்களால் அர்ச்சனை... காட்டுக் கனிகளே நைவேத்திய பிரசாதம். அங்கேயே இருந்துகொண்டு அவர் செலுத்திய பக்தியும் பாவமும் இருளர்களைப் பிரமிக்கச் செய்தன. அந்த இருளர்கள் எம்பெருமான் குறித்து, திருமலையைத் தன் ஆட்சிக்குட்பட்ட நிலமாகக்கொண்டிருந்த சந்திரகிரி மன்னனிடம் கூறினார்கள்.

அந்த மன்னன் வேத பண்டிதர்கள் பலரை அந்த இருளர்களோடு அனுப்பி, குகைக்குள் வழிபாடு கண்டபடி இருந்த அழகிய மணவாளரை வெளியே கொண்டு வந்தான். தொடர்ந்து, பெருமானின் வரலாற்றை அறிந்த நிலையில் தன்னைப் பெரிதும் பாக்கியசாலியாக உணர்ந்தவன், விக்கிரகத்தைத் திருவரங்கம் கொண்டு செல்லப் பணிந்தான். எம்பெருமானும் திருமலையைவிட்டுத் திருவரங்கம் நோக்கிச் செல்லலானார்!

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

திருவரங்கம் ஆலயம் மிலேச்ச பாதிப்புகளில் இருந்து மீண்டு, திரும்பவும் அங்கே புத்துயிர்ப்போடு பூஜைகள், உற்சவங்கள் என்று களை கட்டியிருந்தன. இந்த நிலையில், 60 ஆண்டுகளுக்கு முன் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்ட அழகிய மணவாளப் பெருமான், திருமலையில் அது நாள் வரை பூஜை கண்டு திரும்பி வந்துகொண்டிருப்பதைக் கோயில் ஸ்தானீகர்கள் அறிந்தனர். ஒருபுறம் மகிழ்ச்சி; மறுபுறம் தற்போது வழிபாட்டிலுள்ள மூர்த்தியை என்ன செய்வது என்கிற கேள்வியும் குழப்பமும்!

கூடுதலாக, உண்மையில் களவுபோன சிலை அதுதானா என்கிற சந்தேகமும் பலருக்கு ஏற்பட்டு விட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் சிலையும் திருவரங்கம் வந்து சேர்ந்தது. வந்த சிலையை மங்கை மன்னன் மண்டபத்தில் எழுந்தருளச் செய்த ஸ்தானீகர்கள், தங்கள் ஐயப்பாட்டை எதை வைத்து எப்படி நீக்கிக்கொள்வது என்று யோசித்தனர். சிலர் மூலச் சந்நிதி நாடிச் சென்று கண்ணீர்விட்டு அழுதனர்.

“எம்பெருமானே! உன் பொருட்டு எத்தனை தேடல்… எத்தனை தியாகங்கள்... மாற்றார் மனத்தையே கொள்ளைகொண்டு, அழிவை ஏற்படுத்தியவர்களாலேயே நிவந்தம் பெற்றவன் நீ! நீ அறியாத ஒன்றும் இங்கு இருக்கலாகுமா... அன்று நீ மட்டுமா கடத்தப்பட்டாய்… உன்னோடு சேர்ந்து பொன், பொருள் என்று சகலமும் கடத்தப்பட்டன. 60 ஆண்டுக் கால ஓட்டத்தில் அன்றிருந்த பலர் இன்று இல்லாது போய்விட்ட நிலையில், அந்த சிலைக்குரிய தெய்வம் நீதான் என்பதை எதை நம்பி ஏற்பது... ரங்கநாயகி தாயாரும் அல்லவா காணாது போனாள்... ஆக, ரங்கநாயகி தாயார் சிலைக்கு எங்கே செல்வது?” என்று மனம் குமுறினர்.

அவர்கள் குமுறல் வீண் போகவில்லை. பலத்த காற்றுடனும் இடியுடனும் பெருமழை பொழியத் தொடங்கியது. அவ்வேளை, ஆலயப் புறவெளியில் நாச்சியார் கோயிலின் வில்வ மரத்தடியில், ஒரு பேரிடி விழுந்து பெரும் பள்ளம் ஒன்று உருவானது. அப்பள்ளத்துக்குள் 60 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட ரங்கநாயகி தாயாரின் விக்கிரகம் வெளியே தெரிய தொடங்கியது. மழை நிற்கவும் அதைக் கண்டவர்கள் மெய்சிலிர்த்தனர்.

அரங்கன் சந்நிதியில் இப்படி அற்புதங்கள் நிகழத் தொடங்கிய காலத்தைத் திருவரங்கக் கோயிலொழுகு, சான்றுகள் சிலவுடன் அதாவது சில கல்வெட்டுச் செய்திகள் மூலம் எடுத்துரைக்கிறது. அதன்படி பார்த்தால் 1311-ல் களவாடப்பட்ட அழகிய மணவாளப் பெருமான் திரு உருவம் திரும்பத் திருவரங்கத்தை அடைந்திட 60 ஆண்டுகள் ஆயின!

இதை ராஜ மகேந்திரன் திருச்சுற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கம்பண்ணர் காலத்துக் கல்வெட்டு 1371 ஜூன் மாதம் (பரிதாபி வைகாசி 17) என்று அறுதியிட்டுக் கூறுகிறது. இம்மட்டில் சில குழப்பமான சங்கதிகளும் காணக் கிடைக்கின்றன. திருவரங்க ஆலயம் 1311-ல் ஒருமுறை,1323-ல் ஒரு முறை என்று இரு முறை மிலேச்ச படையெடுப்புக்கு ஆளாகியுள்ளது. 1311-ல் மாலிக்காபூராலும், 1323-ல் முகமது பின் துக்ளக்கினாலும் படையெடுப்புகள் நிகழ்ந்து, ஆலயம் மிலேச்சர்கள் வசம் சிக்கி, பல காலம் பூஜைகள் புரியப்படாமல் பாழ்பட்டுக் கிடந்தது. அதன்பின் 1377-ல் ஒரு புத்துயிர்ப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம் விஜயநகரப் பேரரசும் அதன் ஆட்சியாளர்களுமே. இவ்வேளை ஹரிஹரரும், அவரின் உறவினரான விருப்பண்ண உடையாரும் திருவரங்க ஆலயம் சீர் பெறப் பல உதவிகளைச் செய்துள்ளதை கோயிலொழுகு எடுத்துக்காட்டுகிறது.

குழப்பமான சங்கதி எதுவெனில் 1311-ல் மாலிக்காபூர் படையெடுப்பின்போது களவாடப்பட்ட அழகிய மணவாள விக்கிரகமும் 60 ஆண்டுக்கால இடைவெளிக்கு பிறகே திருவரங்கம் திரும்புகிறது. அதேபோல் 1323-ல் துக்ளக்கின் படையெடுப்பின்போது பிள்ளைலோச்சார்யார் என்பவரால் எடுத்துச் செல்லப்பட்டு மதுரை கொடிக்குளத்தில் வைத்துப் பேணப்பட்ட அழகிய மணவாள விக்கிரகமும் 60 ஆண்டுகள் கழித்தே திருவரங்கம் திரும்புகிறது.

இரண்டும் ஒன்றுதானா... இல்லை வெவ்வேறா என்பதே குழப்பத்துக்குக் காரணம். அம்மட்டில் 1311-ல் களவாடப்பட்டு பின் 1371-ல் திருவரங்கம் திரும்பிய அழகிய மணவாளப் பெருமான் குறித்து நாம் அறிந்து கொள்ளவேண்டிய ரசமான சங்கதிகள் பல உள்ளன.

உண்மையில் களவுபோன சிலை அதுதானா என்கிற சந்தேகமும் பலருக்கு ஏற்பட்டு விட்டது.

நாச்சியார் கோயில் வில்வ மரத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரங்கநாயகி தாயார் விக்கிரகம் பெருமழையில் வெளிப்பட, அந்த அதிசயத்தைக் கண்டு ஊரே வியந்தது.

‘பெருமான் வரவும் பெருமாட்டியும் வந்து விட்டாள்’ என்று ஊரே மகிழ்ந்தாலும், சில ஆகம சாஸ்திர வல்லுநர்களும் ஆலய ஸ்தானீகர்களும் அழகிய மணவாளப் பெருமான் திருச்சிலையை சந்தேகித்தனர். இது, அதேபோன்ற வேறு ஒரு சிலை என்றனர் சிலர். இன்னும் சிலரோ ‘இப்பெருமாள் நம் அழகிய மணவாளரே எனில், இப்போது திரும்பி வந்தது ஏன்... முன்னமே வந்திருக்கலாமே’ என்றனர்.

அத்துடன் `இவ்வளவு நாள்களாக பூஜை கண்டாரோ இல்லையோ... இடையறாது தொடர்ந்து நடத்திடும் பூஜைகளாலும் உற்சவங்களாலும் அல்லவா பெருமாளுக்கு சாந்நித்யம் மிகுதியாகிறது. அவ்வாறு இல்லாத பட்சத்தில், அதுவொரு கலைப்பொருளாக மட்டுமே அல்லவா கருதப்படும்’ என்றும் சிலர் கூறினர்.

‘இதற்கு என்னதான் தீர்வு...’ என்று அனைவரும் முனைந்தபோது, தீர்வு கண்டு சொல்ல முன்வந்தார் சலவைத் தொழிலாளி ஒருவர். அவர், திருவரங்கம் பெருமானின் நித்தியப்படி ஆடைகளைத் துவைத்து ஆலயப் பண்டாரத்திடம் ஒப்புவிக்கும் பணியைச் செய்துவந்தவர்.

எம்பெருமான் களவு போன தருணத்தில் 30 வயது அவருக்கு. இப்போது 90 வயதாகிறது. பார்வை போய் விட்டிருந்தது. எம்பெருமான் திரும்பக் கிடைத்து திருமங்கை மன்னன் திருமண்டபம் நாடி வந்ததை அறிந்து அங்கு வந்தார்; பெருங்கண்ணீர் வடித்தார்.

“ஐயனே! உமக்குத் தொண்டு செய்தவன் நான். இன்று உம்மைக் காண இயலாத அந்தகனாகிவிட்டேன். என்னை நீர் இப்படிச் சோதிக்கலாமா?” என்று வாய்விட்டு அவர் புலம்பிட, அதைக் கவனித்த ஸ்தானீகர் ஒருவர் அவரிடம் வினவலானார்.

“அப்பனே நீர்தானே அன்று ஆடை தோய்த்தவர்?”

“ஆம் ஐயா...”

“அன்று நீர் செய்த பணிகளெல்லாம் இன்னும் ஞாபகம் உள்ளதா?”

“என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்கள்... நேற்று நடந்ததுபோல் நினைவில் இருக்கிறது. எம்பெருமானின் திவ்யரூபம் மட்டுமல்ல, அவன் வாசமும் எனக்கு மிகப் பரிச்சயம்”

“வாசமா... என்ன சொல்கிறீர் நீர்?”

“ஆம்... வாசம்தான்! அவன் ஆடையைத் தோய்த்துத் தரும் திருப்பணிக்கு வெகுமதியாக எனக்குத் தீர்த்தம் தருவர். அப்போது எம்பெருமான் பரிவட்டதையும் சாத்துவர். அந்தப் பரிவட்டத்தில் அவன் மேனி வாசம் ஒட்டியிருக்கும். வேறு எங்கும் நான் அப்படி ஒரு வாசத்தை உணர்ந்ததில்லை.”

“அப்படியா! அப்படியானால், இப்போதும் அவ்வாறு உமக்கு மரியாதை செய்யும்பட்சத்தில் கண்டறிந்து விடுவீரா?”

“ஆஹா... அது என் பாக்கியமல்லவா?”

“மகிழ்ச்சி. நாங்கள் உம் மூலமாய் உண்மையை அறியப் போகிறோம். இப்போது நாங்கள் பல பரிவட்டங்களைச் சாத்தித் தீர்த்தம் தருவோம். அதில் ஒன்றே எம்பெருமானுடையது. அதை நீர் சரியாகக் கூறிவிட்டால் போதும்” என்றார் ஸ்தானீகர்

“உத்தரவு ஐயனே” - என்றபடி பரவசத்தோடு தயாரானார் சலவைத் தொழிலாளி!

- தொடரும்...

கடந்த மூன்று அத்தியாயங்களிலிருந்து...

மிலேச்ச படையெடுப்பினால் திருவரங்கம் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. பெரும் உயிர்ச்சேதம் நிகழ்ந்தது. கோயில் கொள்ளையடிக்கப்பட்டதோடு, ஆபரணப் பொக்கிஷங்களுடன் அழகிய மணவாளப் பெருமானின் திருமேனியும் மிலேச்ச படைகளால் தூக்கிச் செல்லப் பட்டது.

இதையறிந்து துடித்துப்போனாள் அரங்கனின் பக்தனையான சிங்காரவல்லி என்பவள். உயிரைக் கொடுத் தாவது அழகிய மணவாளப் பெருமானின் விக்கிரகத்தை மீட்டுவருவது என சங்கல்பித்தாள். மிலேச்சப் பெண் போன்று வேடமணிந்து, பொக்கிஷத்தைக் கொண்டு செல்லும் மிலேச்ச வீரர்களுடன் இணைந்து அவர்களின் அன்பைப் பெற்றாள். அவர்களின் பொக்கிஷப் பேழையில் அழகிய மணவாளப் பெருமான் இருப்பதை அறிந்து நிம்மதி அடைந்தாள்.

தலைநகர் டெல்லிக்குக் கொண்டுசெல்லப்பட்ட பொக்கிஷங்களோடு பெருமானின் திருமேனியும் சுல்தானிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தத் திருமேனியைக் கண்டு பரவசம் அடைந்த சுல்தானின் மகள் சுரதாணி, தந்தையிடமிருந்து அதை வாங்கிச் சென்று பக்தி செலுத்த ஆரம்பித்தாள். அவளின் அன்புப் பிடியிலிருந்தும் அரண்மனையின் கட்டுக்காவலையும் மீறி, தனியொருத்தியாக பெருமானை மீட்டுச் செல்வது முடியாத காரியம் என்பதை உணர்ந்த சிங்காரவல்லி, வேறொரு திட்டம் தீட்டினாள்.

கலா ரசிகனான சுல்தான், ஆடல் கலையில் மயங்கி அதற்காக எதைக் கேட்டாலும் பரிசளிப்பான் என்பதைத் தெரிந்துக்கொண்டாள். மீண்டும் திருவரங்கம் வந்தவள் அங்கிருந்த அரங்கன் பக்தர்களிடமும் ஸ்தானீகர்களிடமும் தன் திட்டத்தை விளக்கினாள். அவர்களில் சிலர் அவளுக்கு உதவ முன்வந்தனர்.

அவளின் திட்டப்படி நடனக்குழுவாக மீண்டும் டெல்லிக்குப் புறப்பட்டனர். அங்கே சுல்தானின் அவையில் ஜக்கிணி எனும் நாட்டியத்தை ஆடினாள் சிங்காரவல்லி. சுல்தான் மகிழ்ந்தான். அவனிடம் சுரதாணி வைத்திருக்கும் அழகிய மணவாளனின் திருமேனியைப் பரிசாகக் கேட்டாள் சிங்காரவல்லி.

சுல்தானோ `மகள் அனுமதித்தால் வாங்கிக்கொள்’ என்று கூறி விட்டான். சுரதாணி இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டாள் என்பதை அறிந்த சிங்காரவல்லி பாலில் மயக்க மருந்து கொடுத்து, சுரதாணியை மயக்கி, திருமேனியைக் கைப்பற்றினாள். அத்துடன், முன்பே திட்ட மிட்டு எடுத்துவைத்திருந்த சேரகுலவல்லி சிலையையும் எடுத்துக்கொண்டு டெல்லியை விட்டுப் புறப்பட்டனர்.

நடந்தது அனைத்தையும் அறிந்த சுல்தான், அவர்களைப் பிடித்து வர வீரர்களை ஏவினான். அவர்களிடம் அகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சிங்காரவல்லியின் குழு இரண்டாகப் பிரிந்து ஒன்று திருவரங்கம் திரும்ப, சிங்காரவல்லி அழகிய மணவாளப் பெருமானின் விக்கிரகத்துடன் திருமலைக்குப் பயணமானாள்.

ரங்க ராஜ்ஜியம் - 55

இந்நிலையில் பெருமானைப் பிரிந்த துக்கத்தால் வாடிய சுரதாணி அவரைத் தேடி திருவரங்கத்துக்கே வந்தாள்; பக்தியின் உச்சத்தில் அங்கே தன் இன்னுயிரையும் நீத்தாள். செய்தியை அறிந்த சுல்தான் துடித்துப்போனான். அதேநேரம், திருவரங்கத்தின் மகிமையை உளமார உணர்ந்து அங்கே ஆலயம் பழையபடி பூஜைகளோடு திகழவும் வழிபாடுகள் நிகழவும் ஜாகீர் எனப்படும் நில மானியத்தை வழங்கி, தன் மகளின் ஆத்ம சாந்திக்கு அடிகோலினான்.

திருவரங்கம் இப்படி திருப்பம் கண்டு நின்ற நிலையில், திருப்பதியை அடைந்த அழகிய மணவாளர் அங்கே எவரும் அறியாதபடி பூஜிக்கப்பட்டுக்கொண்டிருந்தார். அங்கே அதற்கான ஏற்பாடுகளைச் செய்த சிங்காரவல்லி, மாறுவேடத்தில் திருவரங்கம் திரும்பியபோது, சுரதாணி உயிர் விட்டுவிட்ட சம்பவம் நிகழ்ந்து முடிந்திருந்தது. அது அவளை உருக்கிவிட்டது.

இடையில் உற்சவங்கள் நடைபெற வேண்டி மறைக்கப்பட்ட சுவர் இடிக்கப்பட்டு மூலவர் வெளியே கொணரப்பட்டார். அதேபோல், வில்வ மரத்தடியில் ரங்கநாயகி தாயார் விக்கிரகம் புதைக்கப்பட்ட இடத்தை அறியாததால், புதிதாக ஒரு விக்கிரகம் செய்து அதைப் பிரதிஷ்டை செய்து உற்சவங்கள் நிகழத் தொடங்கின.

சிங்காரவல்லிக்கோ தான் பாதிக் கிணறு தாண்டியதுபோல்தான் தோன்றியது. திருமலையில் கொடவர் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட பெருமானைத் திருவரங்கத்துக்குக் கொண்டுவர இனி தடையேதும் இல்லை என்று கருதினாள். அதன்பொருட்டு திருப்பதிக்குப் பயணப்பட்டவள், திருமலையை அடைந்ததும் நோய்ப்பட்டு இறந்து போனாள்!

எம்பெருமானுக்கு உரிய ஏகாதசி நாளில் திருமலையில் அவள் உயிர் பிரிந்ததும் அங்கேயே மலையில் அவளது உடல் தகனம் செய்யப்பட்டு, பாபநாச தீர்த்தத்திலும் கரைக்கப்பட்டது. சிங்கார வல்லியும் பெருமாள் திருவடிகளில் சென்று சேர்ந்தாள்.

கொடவர்களால் பூஜிக்கப்பட்டு வந்த பெருமான் திருமலையில் ஒரு குகைக்குள் வழிபாடுகளைக் கண்டுகொண்டிருந்தார்.