திருக்கதைகள்
திருத்தலங்கள்
தொடர்கள்
ஜோதிடம்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 56

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

கோயில் ஸ்தானீகர்கள் முதலில் அவருக்குச் சக்கரத்தாழ்வார் சந்நிதிப் பரிவட்டம் சூட்டித் தீர்த்தமளித்தனர்.

திருவரங்கம் பெருமானின் நித்தியப்படி ஆடைகளைத் துவைத்து ஆலயப் பண்டாரத்திடம் ஒப்புவிக்கும் பணியைச் செய்துவந்த சலவைத் தொழிலாளி ஒருவர்,

எம்பெருமான் திரும்பக் கிடைத்து திருமங்கை மன்னன் திருமண்டபத்துக்கு நாடி வந்ததை அறிந்து அங்கு வந்தார்; கண்ணீர் வடித்தார். அழகிய மணவாளர் விக்கிரகத்தின் சாந்நித்தியம் குறித்து ஏற்பட்ட குழப்பத்துக்கு, அந்தச் சலவைத் தொழிலாளி மூலம் தீர்வு காண விளைந்தனர் கோயில் ஸ்தானீகர்கள். அவரும் பரவசத்தோடு அதற்குத் தயாரானார்.

கோயில் ஸ்தானீகர்கள் முதலில் அவருக்குச் சக்கரத்தாழ்வார் சந்நிதிப் பரிவட்டம் சூட்டித் தீர்த்தமளித்தனர். பின் ராமர் சந்நிதிப் பரிவட்டம் சூட்டித் தீர்த்தமளித்தனர். மூன்றாவதாக அழகிய மணவாளப் பெருமான் விக்கிரகப் பரிவட்டத்தை எடுத்து அந்த சலவைத் தொழிலாளிக்கு சாத்தித் தீர்த்தம் அளித்தனர்.

அடுத்த சில நொடிகளில் “இவரே நம்பெருமாள் இவரே நம்மை விட்டுச் சென்ற பெருமாள்...” என்று மிகுந்த பரவசத்தோடு சலவைத் தொழிலாளி சொல்லவும் எல்லோரும் மகிழ்ந்தனர்.

அதுவரை பலவித கருத்துகளைச் சொல்லி எப்படி ஏற்பது என்று தயங்கியவர்கள்கூட அதன்பின் எதுவும் பேசவில்லை.

ரங்க ராஜ்ஜியம் - 56

சலவைத் தொழிலாளி அழைத்தபடி அந்த நொடி முதல் அந்த அழகிய மணவாளப் பெருமாள் ‘நம்பெருமாள்’ என்றானார். இந்த நிலையில் இந்த நம்பெருமாளையும் வில்வமரத்தடியில் கிட்டிய ரங்கநாயகி தாயாரையும் முன்போல் பிரதிஷ்டை செய்தனர்.

மேலும், ராஜமகேந்திரன் திருச்சுற்றின் வடகிழக்கு மூலையில் ஒரு பகுதியை மண்டபமாக ஏற்படுத்தி, அங்கே மறவாமல் டெல்லி சுல்தான் மகளான சுரதாணியின் உருவத்தைச் சித்திரமாக எழுதிவைத்து, அதற்கு துலுக்க நாச்சியார் என்கிற திருநாமத்தையும் சூட்டினர். அப்படியே சுரதாணியின் விருப்ப உணவான கோதுமை ரொட்டி, வெண்ணெய், கிச்சடிப் பொங்கல் போன்றவற்றை நம்பெருமாளுக்கு அமுதுபடியாக சமர்ப்பித்தனர்.

இவ்வேளையில் தஞ்சையை ராஜேந்திர சோழன் ஆண்டு வந்ததாகத் தெரிகிறது. இவன் ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திரன் அல்ல. இவ்வேளையில் சோழநாடு, ஹொய்சாளர் மற்றும் பாண்டியர் பிடியில் அடிமைப்பட்டிருந்தது. இந்த ராஜேந்திர சோழன் துலுக்க நாச்சியார் நிமித்தம் இரண்டு கிராமங்களை நிவந்தமாகத் தந்ததாகக் கோயிலொழுகுக் குறிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

சலவைத் தொழிலாளிக்கு இவ்வேளை பிரத்யேகமாய் ‘ஈரங்கொல்லி’ என்கிற திருநாமம் சூட்டப்பட்டது. எம்பெருமானைத் திருமலையில் பூஜித்து பின் அங்கிருந்துகொண்டு வந்திருந்த கொடவருக்கு திருத்தாழ்வரைதாசர் என்கிற நாமம் சூட்டப்பட்டது.

ரங்க ராஜ்ஜியம் - 56

இவை எல்லாம் 1371-ம் ஆண்டில் வைகாசி மாதத்தில் நடந்தேறின. இவற்றையெல்லாம் கல்வெட்டில் பொறித்துவைத்தவர் கம்பண்ண உடையார். கம்பண்ண உடையாரின் கல்வெட்டுபடி மீண்டும் திருவரங்கம் ஏகிய நம்பெருமாள், பிள்ளைலோகாசார்யரால் திருவரங்கத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பெருமாள் என்ற கருத்தும் சந்தேகமும் நிலவுகின்றன.

பிள்ளைலோகாசார்யர் என்பவர் யார்... அவர் எதற்காக எம்பெருமாளைத் தன் வசப்படுத்தி, திருவரங்கம்விட்டு மதுரை ஆனை மலையருகில் உள்ள ஜ்யோதிஷக்குடி என்னும் கொடிக்குளம் வரை கொண்டு செல்ல வேண்டும் என்று இவ்வேளையில் பல கேள்விகள் எழுகின்றன. பிள்ளைலோகாசார்யருக்கு வேதாந்த தேசிகரும் பேருதவி செய்ததாகக் குறிப்புகள் கூறுகின்றன.

ஆக மொத்தம், நாம் இவ்விரு மகான்களையும் சற்றேனும் அறிதல் என்பது, திருவரங்க வரலாற்றை அறிவதற்குப் பேருதவியாக இருக்கும்.

இருவருமே இம்மண்ணில் பரிபூரணமாக நூறாண்டு வாழ்வைக் கடந்தவர்கள். இதில் வேதாந்த தேசிகன் 1268-ல் தோன்றி 1369-ல் பரமபதம் அடைந்தவர். பிள்ளைலோகாசார்யர் 1203-ல் அவதரித்து 1323-ல் தன் 120-வது வயதில் பரமபதித்தவர்.

பிள்ளைலோகாசார்யர், திருவரங்கத்து வடக்குத் திருவீதிப் பிள்ளை என்பாருக்குத் தவமிருந்து பெற்ற பிள்ளையாய் பிறந்தவராவார். இவருக்கு அழகிய மணவாளதாசன் என்றொரு தம்பியும் பின் பிறந்தார். இவ்விருவரைப் பற்றிச் சொல்லும்போது ராம லட்சுமணர்போல் என்பர்.

இவர் தன்னைப் பெற்றெடுத்த தந்தையையே ஆசார்யனாகக் கொண்டவர். ஐப்பசி மாத திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தவர். கூரகுலோத்தமதாசர் விளாஞ்சோலைப் பிள்ளை, திருவாய்மொழிப் பிள்ளை மணப்பாக்கத்து நம்பி, கோட்டூர் அண்ணர், திருக்கண்ணங்குடிப் பிள்ளை, திருப்புட்குழி ஜீயர், கொல்லிக்காவல் தாசர் ஆகியோர் இவரின் சீடர்களாவர்.

இவர்கள் இவரின் சீடர்கள் என்பதோடு, வைணவம் குறித்து சிந்திக்கையில் நாம் எல்லோரும் அவர்களை மறவாமல் சிந்திக்க வேண்டியதும் அவசியம்.

ரங்க ராஜ்ஜியம் - 56

பிள்ளைலோகாசார்யர் இவர்களின் குரு என்பதோடு, ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதையும் நாம் அறிய வேண்டும். மனத்தாலும் பெண்களை நினையாதவர்களை நைஷ்டிக பிரம்மச்சாரிகள் என்போம்.

பிள்ளைலோகாசார்யரை காஞ்சி வரதனின் அம்சம் என்றும் கூறுவர். காஞ்சி வரதனே பிள்ளைலோகாசார்யராக அவதாரம் எடுத்து வந்திருக்கிறான் என்று அன்று பலர் கருதினர். இதற்குச் சான்றாக ஒரு சம்பவமும் உண்டு. மணப்பாக்கத்து நம்பி எனும் அன்பர் காஞ்சி வரதன் ஆலயத்தில் அவன் திருமுன் வைணவ ஆசாரங்களையும் தாத்பர்யங்களையும் கற்று வந்தார். ஒரு நாள் காஞ்சி வரதனின் அசரீரிக் குரல், மணப்பாக்கத்து நம்பியைத் திருவரங்கம் சென்று அங்கு நம் சம்பிரதாயங்களை போதிக்கும் பிள்ளைலோகாசார்யனிடம் சேர்த்து மீதமுள்ள அனைத்தையும் கற்கச் சொன்னது.

மணப்பாக்கத்து நம்பியும் மகிழ்வுடன் புறப்பட்டுத் திருவரங்கம் அடைந்தார். அப்போது பிள்ளை லோகாச்சார்யர் காட்டழகிய சிங்கர் ஆலயத்து வெளியில் தன் சீடர்களுக்கு உபதேசித்தபடி இருந்தார்.

மணப்பாக்கத்து நம்பி ஒரு தூண் பின்னால் மறைவாக நின்றுகொண்டு, பிள்ளைலோசார்யர் சொல்வதைக் கேட்கலானார். அப்போதுதான் அவருக்கு ஒரு பேருண்மை புலப்பட்டது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமான் சந்நிதியில் செவியுற்ற அசரீரிக் குரலும், பிள்ளைலோகாசார்யர் குரலும் ஒன்றாக இருந்தன. அத்துடன், அதுவரை அங்கே எதை எல்லாம் தனக்குக் கற்பித்தாரோ அதையே இங்கே தன் மாணவர்களுக்கும் மாற்றமின்றிச் சொல்லியபடி இருந்ததைக் கண்டார், மணப்பாக்கத்து நம்பி.

`இவரே நம்பெருமாள்... இவரே நம்மை விட்டுச்சென்ற பெருமாள்...” என்று சலவைத் தொழிலாளி பரவசத்தோடு கூற, அனைவருக்கும் மெய்சிலிர்த்தது!

அந்த நொடியே பெருமான் வேறு பிள்ளைலோகாசார்யர் வேறில்லை என்பதை உணர்ந்து அந்த மறைவிலிருந்தும் விலகி, பிள்ளை முன்சென்று அவர் காலில் விழுந்து வணங்கி எழுந்து, “அறிந்தேன் அறிந்தேன் அவரோ நீர்...” என்று காஞ்சி அருளாளனை மனத்தில் எண்ணியபடி கேட்டார். “ஆமாம்... இப்போது அதற்கென்ன...” என்று பிள்ளையும் திரும்பிக் கேட்டார். அந்த பதிலே அவர் யார் என்பதை உணர்த்திவிட்டது.

காஞ்சி அருளாளன் அம்சமாகத் திகழ்ந்த போதிலும், ராமாயணத்து ராமன் மானுட பஞ்சபூத நெறிகளுக்கு உட்பட்டே காரியங்கள் சாதித்ததுபோல், இவரும் நடந்து கொண்டார் என்பது முக்கியம்.

இவர் தன் வாழ்நாளில் 18 கிரந்தங்களை அருளிச் செய்துள்ளார். அவற்றில் அர்த்த பஞ்சகம் தத்வத்ரயம், தத்வசேகரம், சம்சார சாம்ராஜ்யம், நவரத்ன மாலை நவவித சம்பந்தம், வசன பூஷணம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இவரைத் தொடர்ந்து நாம் வேதாந்த தேசிகனையும் அறிய முற்படுவோம். அவர்கள் இருவரை அறியுமுன்பே ஸ்ரீராமாநுஜ மகாத்மாவை நாம் அறிய வேண்டியவர் களாவோம். (இத்தொடரில் இது காறும் ராமாநுஜ சம்பந்தம் ஏற்படவில்லை. திருவரங்க ஆலய தொடக்கம் முதல், அதன் சப்தப்ரக்ரங்களில் புகுந்து அங்கு கோயில் கொண்டிருக்கும் சந்நிதிகள் தொட்டு, அவை சார்ந்த சம்பவங்கள் தொட்டு வரிசையாக வந்து கொண்டிருப்பதால் ஸ்ரீராமாநுஜரை சிந்திக்கும் வேளை வரவில்லை.)

ஸ்ரீராமாநுஜர் - பிள்ளைலோகாசார்யர், வேதாந்த தேசிகன் போன்றோருக்கெல்லாம் 250 ஆண்டுகள் முந்தையவர். வைணவ சித்தாந்தத்தை மிகுந்த பிரயாசையுடனும் எவராலும் அசைக்க முடியாதபடி நிலை நிறுத்திக்காட்டியவர். இவர் வாழ்வு ஸ்ரீபெரும்புத்தூர், திருவரங்கம், மேல்கோட்டை என்கிற மூன்று ஊர்களோடு காஞ்சிபுரம், திருக்கோவிலுர் போன்ற பல க்ஷேத்திரங்களையும் சார்ந்த ஒன்றாகும்.

120 ஆண்டுக்காலம் இம்மண்ணில் வாழ்ந்த ஸ்ரீராமாநுஜரையும் நாம் தெளிவுற அறிந்தாலே, திருவரங்க வரலாற்றை நாம் அறிகையில் ஒரு பூரணத்துவம் கிட்டும். அவ்வகையில் பிள்ளைலோகாசார்யரை அறிந்த நாம் ஸ்ரீராமாநுஜரை முதலிலும், வேதாந்த தேசிகரை அதைத் தொடர்ந்தும் அறிவோமாக....

ஸ்ரீராமாநுஜர்...

யதிராஜா, உடையவர், எம்பெருமானார், லக்ஷ்மணமுனி, கோயிலண்ணன், பாஷ்யகாரர் என்று இவருக்குத்தான் எத்தனை பெயர்... அடேயப்பா!

- இன்னும் வரும்...

பசுவும் பாவமும்!

கரிஷி ஒருவர் தன் குடிலுக்கு முன்னே மரத்தடியில் ஜபம் பண்ணிக் கொண்டிருந்தார். அவருக்கு எதிரே ‘அம்மா’ என்று அலறியபடி ஓடிவந்த பசு ஒன்று, அவரது குடிலுக்குள் புகுந்து விட்டது. ஒருவன் கையில் கத்தியோடு பசுவைத் துரத்திக்கொண்டு வந்தான்.

ரங்க ராஜ்ஜியம் - 56

நிலைமையை மகரிஷி புரிந்து கொண்டார். வந்தவன் மகரிஷியிடம் ‘‘இந்தப் பக்கம் பசு வந்ததா?’’ என்று கேட்டான். மகரிஷி உண்மயைச் சொன்னால், அவன் ஆசிரமத்துக்குள் சென்று பசுவைக் கொல்வான். மகரிஷி உண்மையைச் சொல்லிப் பாவத்தைச் சுமக்க விரும்பவில்லை. அதேநேரம், பொய் சொல்லவும் விரும்பவில்லை. அதனால் சாமர்த்தியமாக ‘‘கண் பார்க்கும், ஆனால் பேசாது. வாய் பேசும். ஆனால் பார்க்காது’’ என்று பதில் சொன்னார்.

வந்தவன் பார்த்தான். ‘இது ஏதோ உளறுகிறது’ என்று கத்தியுடன் புறப்பட்டுப் போய்விட்டான். பசு வதை செய்யும் மகா பாவியான அவனுக்கு அந்த மகரிஷி சொன்னதைப் புரிந்து கொள்ளும் ஞானம் இல்லை.

சரி... மகரிஷி சொன்னதற்கு என்ன பொருள்? ‘கண் பார்க்கும், ஆனால் பேசாது. வாய் பேசும், ஆனால் பார்க்காது’ என்றால் ‘கண்ணால் பார்த்தேன். ஆனால் பேச முடியாத நிலையில் இருக்கிறேன்’ என்ற பொருளில் மகரிஷி சொல்லி இருக்கிறார். அதைப் புரிந்துகொள்ள அவனுக்குச் சக்தி இல்லை. அதனால் திரும்பப் போய் விட்டான். கோமாதா காப்பாற்றப்பட்டு விட்டது.

- ஆர்.ஆர். பூபதி, கன்னிவாடி