திருத்தலங்கள்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 57

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

தந்தையே இவருக்கு முதல் குருவாய் இருந்து வேதம் முதல் சாத்திர நெறிமுறைகளையெல்லாம் கற்பித்தார்.

‘அத்திகிரியருளாள ரடி பணிந்தோன் வாழியே

அருட்கச்சி நம்பியுரையாறு பெற்றோன் வாழியே

பக்தியோடு பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே

பதின்மர் கலையுட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே

சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே

தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே

சித்திரையிலாதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே

சீர் பெரும்பூதுார் முனிவன் திருவடிகள் வாழியே’

- வாழி திருநாமம்...

திருவரங்கம் பற்றிச் சிந்திக்கையில், தவறாது சிந்திக்க வேண்டிய நாமங்களில் தலை யானது ஶ்ரீராமாநுஜர் என்னும் நாமம். தொண்டை மண்டலத்து ஶ்ரீபெரும்புதூரில் 1017-ம் ஆண்டில் பிங்களத்துச் சித்திரைத் திங்களின் வளர்பிறையில், பஞ்சமியும் வியா ழக்கிழமையும் கூடிய திருவாதிரை நட்சத்திர நாளில் பிறந்தவர் இவர்!ஆசூரி கேசவப் பெருமாள் எனும் தந்தைக்கும், பூமிப்பிராட்டி எனும் தாய்க்கும் பிறந்த இவரின் பிறப்பு குறித்து குருபரம்பரை நூலில் ஒரு நற்கருத்து காணக் கிடைக்கிறது.

‘கலியிருள் நீங்கிப் பேரின்ப வெள்ளம் பொங்கும் படி பிறந்தவன் இவன்’ என்கிறது இக்கருத்து.

பெற்றோர் முதலில் இவருக்கு இட்ட திருநாமம் இளையாழ்வான் என்பதாகும். தந்தையே இவருக்கு முதல் குருவாய் இருந்து வேதம் முதல் சாத்திர நெறிமுறைகளையெல்லாம் கற்பித்தார்.

11-வது வயதில் தஞ்சமாம்பாள் என்னும் பெண்ணை மணந்துகொண்டார். சில நாள்களிலேயே தந்தையான ஆசூரி கேசவப் பெருமாள் இறந்துவிடவும் ஶ்ரீபெரும் புதூரைவிட்டு மனைவி மற்றும் தாயுடன் காஞ்சிபுரம் ஏகினார். காஞ்சி வாசத்தோடு வேதாந்தம் கற்க விரும்பி திருப்புட்குழி என்னும் ஊரில் வசித்த யாதவப்பிரகாசரிடம் சென்று சேர்ந்தார்.

ரங்க ராஜ்ஜியம் - 57

யாதவப்பிரகாசர் ஒரு அத்வைதி.அவர் வயதில் முதிர்ந்தவராகத் திகழ்ந்த அளவுக்கு வேதாந்தத்தில் முதிர்ச்சி பெற்றிருக்கவில்லை. போகப் போக ராமாநுஜரைக் கண்டு அஞ்சும் ஒரு நிலை அவருக்கு ஏற்பட்டது. ஶ்ரீராமாநுஜரோ குருவை விஞ்சிய சீடனாக இருந்தார்.

உபநிடதம் ஒன்றில் ‘தஸ்ய யதா கப்யாஸம்’ என்கிற சொற்களுக்குப் பொருள் கூறும்போதுதான் யாதவப்பிரகாசரின் ஆழமில்லாத தவறான கருத்தும் தெரியவந்தது.

இறைவனின் கண்கள் சிவந்திருந்தன. அந்தச் சிவப்பு நிறத்துக்கு யாதவப்பிரகாசர் எதை உதாரணம் காட்டினார் தெரியுமா... குரங்கின் பின்புற ஆசனபாகத்தை. அதைக் கேட்டு ஶ்ரீராமாநுஜர் மனம் வெதும்பினார்.

எந்த ஒரு கவியும் இப்படி ஒரு மோசமான பொருள்கொள்ளும் உதாரணத்தை மனத்தில் வைத்து எழுதியிருக்க மாட்டார்; உவமானத்தைக் கூறவும் மாட்டார். ‘கப்யாசம்’ எனில் குரங்கின் பின்புறம் அல்ல; அது கதிரவனால் மலரப் பெறும் செந்தாமரைப் பூவைப் போன்றது என்பதே சரியான அரும்பொருள்!

அதை ஶ்ரீராமாநுஜர் எடுத்துரைக்கவும் அந்த நொடியே யாதவப்பிரகாசர்வரையில் ஶ்ரீராமாநுஜர் ஓர் அதிகப் பிரசங்கியாகிவிட்டார். சற்றே கூடுதலாக... தான் பின்பற்றும் அத்வைதத் துக்கேகூட ஶ்ரீராமாநுஜர் எதிரியாகிவிடக் கூடும் என்று கணித்து ஶ்ரீராமாநுஜரைக் கொல்வதுவரை அவர் மனம் துணிந்துவிட்டது.

ஶ்ரீராமாநுஜர் போன்ற சான்றோர்களின் வாழ்வில் நடக்கும் அவர்களுக்கு எதிரான அடாத செயல்களும் அற்புதங்களாக மாறி விடுவது உண்டு. அப்படி ஓர் அதிசயம் ஶ்ரீராமாநுஜர் வாழ்விலும் நடைபெற்றது. அவர் யாதவப்பிரகாசருடன் காசி யாத்திரை மேற்கொண்ட நேரம், அவரை கங்கை நதியில் நீராடும்போது அமுக்கிக் கொன்று விடுவது என்பது யாதவப்பிரகாசரின் திட்டம். இதை ஶ்ரீராமாநுஜரின் ஒன்றுவிட்ட சகோதரனான கோவிந்தன் என்பவர் அறிய நேர்ந்தது. அவர் காசியில் கங்கைக்கு நீராடச் சென்ற ஶ்ரீராமாநுஜரைத் தடுத்து ‘எங்காவது சென்று உயிர் பிழைத்துக்கொள்’ என்று கூறினார்.

ஶ்ரீராமாநுஜர் மனத் துயரத்துடன் அங்கிருந்து விலகி எம்பெருமானிடம் பிரார்த்தனை புரிந்தார். யாதவப்பிரகாசருக்கோ ஶ்ரீராமாநுஜர் கங்கையில் அடித்துச்செல்லப்பட்டதுபோல் செய்தி சொல்லப்பட்டது.

ரங்க ராஜ்ஜியம் - 57

ஶ்ரீராமாநுஜரை எப்பெருமான் கைவிட வில்லை. ஶ்ரீராமாநுஜர் ஒரு காட்டுவழியே திக்குதிசை தெரியாது நடந்தபோது, வேடுவன் வேடுவச்சி வடிவில் எம்பெருமானும் பெருமாட்டியும் வந்து சரியான வழியைக் காட்டி, காஞ்சி மண்ணில் அவரைக் கொண்டு வந்து சேர்த்தனர். காஞ்சியை அடைந்த பிறகே, தனக்கு வழிகாட்டியதோடு வழித் துணையாகவும் வந்தது எம்பெருமானும் பிராட்டியுமே என்பது ஶ்ரீராமாநுஜருக்குத் தெரிந்தது.

அதன்பின் திருக்கச்சிநம்பி என்னும் ஆசார்யனைச் சந்தித்து அவரிடம் தன்னைச் சீடனாக்கிக்கொண்டு, காஞ்சிப் பேரருளாளனுக்குத் திருமஞ்சன நீர் கொண்டு வந்து தரும் கைங்கர்யத்தைச் செய்ய தொடங்கினார்.மூன்று மாதங்கள் கடந்த நிலையில் காஞ்சி திரும்பிய யாதவப்பிரகாசருக்கு ஶ்ரீராமாநுஜர் உயிரோடிருப்பது பெரும் ஆச்சர்யத்தை மட்டுமல்ல; அதிர்ச்சியையும் அளித்தது. இருந்தும் அவர் அதைக் காட்டிக்கொள்ளாமல், ஶ்ரீராமாநுஜர் எப்போதும்போல் தன்னிடம் வேதம் கற்க வரலாம் என்றார். ஶ்ரீராமாநுஜரும் குருவின்மீது கோபமோ வருத்தமோ கொள்ளாது அவரிடம் பாடம் கற்கத் வந்தார். அவரின் இச்செயல், குரு என்பவர் எப்படிப்பட்டவராக இருப்பினும் அவரிடம் குற்றம் காணுதல் கூடாது என்பதற்கான ஒரு செய்தியாகும்.

இப்படிப்பட்ட ஒரு நாளில்தான் திருவரங்கத்திலிருந்து ஆளவந்தார் என்ற ஆசார்ய புருஷர் திருக்கச்சிக்கு வந்தார். வந்த இடத்தில் வரதராஜப் பெருமானின் ஆலயமிசை ஶ்ரீராமாநுஜர் செய்த தொண்டுடன் அவருடைய தேஜஸையும் கண்டவர், ‘இவனோ இளையாழ்வான்...” என்று கேட்டதோடு அந்த நொடியே மனத்துக்குள் ‘இவன் பெயரிலேயே இளையாழ்வான். ஆயினும் எம்பெருமானுக்கு இவனே முதலாமவன்’ என்று கருதினார்.

ஶ்ரீராமாநுஜரைக் கண்ட நிலையில், வரதராஜ தரிசனம் முடிந்து திருவரங்கம் திரும்பிய ஆளவந்தார் காலத்தால் நோய்வாய்ப்பட்டார். தனக்குப் பின் வைணவம் தழைக்க அரும்பாடுபடக் கூடியவர் எவர் உள்ளார் என்று ஒரு தேடுதல் நிகழ்த்தினார். ஒரு குருவின் கோணம் என்பது சராசரி மனிதனின் கோணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. வைணவச் சின்னங்களோடும், ஶ்ரீவிஷ்ணுபக்தியோடும் இருப்பதால் மட்டும் ஒருவன் வைணவனாகிட முடியாது.

வைணவ லட்சணங்கள் என்று சில உள்ளன. அதில் முதலாவது, நான் எனும் அகந்தையின்றியும் தன்னை மேலாக கருதாதும் இருத்தல். இரண்டாம் லட்சணம் என்பது பெரும் ஆசார்ய பக்தியும் நித்ய வழிபாடுகளும் ஆகும். மூன்றாம் லட்சணம் பாகவதர்களுக்கு உதவுவது. நான்காம் லட்சணம் ஆலயத் திருப்பணி செய்தல். ஐந்தாவதாக ஒன்றுள்ளது... இந்த நான்கின்படி துளியும் பிசகின்றி நடப்பது. அதோடு தன்னலம் துளியுமின்றித் தன்னைச் சுற்றியுள்ளோர் நலம் பேணுவது என்பதும் அதில் ஒன்றாகும்.

ஆளவந்தாரின் தேடலில் இந்த ஐந்தும் கொண்ட ஒருவர் அகப்படவேயில்லை. ஏதாவது ஒன்று குறைவாக இருப்போரே அவரைச் சுற்றியிருந்தனர். மனம் நொந்து அவர் சலித்திருந்த ஒரு நாளில்தான், காஞ்சியில் ஶ்ரீராமாநுஜரைச் சந்திக்க நேர்ந்ததும் அவர் முகத்தில் தென்பட்ட பொலிவும் நினைவுக்கு வந்தது. தன் பிரதான சீடனை அழைத்துத் தன் உயிர்பிரிவதற்குள் காஞ்சிக்குச் சென்று ஶ்ரீராமாநுஜரை அழைத்து வரப் பணித்தார். சீடரும் புறப்பட்டார்.

காஞ்சியிலோ யாதவப்பிரகாசருடன் ஶ்ரீராமாநுஜருக் குத் திரும்பவும் பிணக்கு ஏற்பட்டதில், யாதவப்பிரகாசர் ஶ்ரீராமாநுஜரிடம் வேறு ஆசார்யனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டார்.

ஶ்ரீராமாநுஜர் மனம் வருந்தினாலும் காஞ்சி வரதனுக்குத் திருமஞ்சன நிமித்தம் தண்ணீர் சுமக்கும் கைங்கர்யத்தை விட்டுவிடவில்லை. அந்தக் கைங்கர்யமும் அவரை விடவில்லை. அப்படி ஒரு நாள் நீர் சுமந்து வருகையில், ஶ்ரீராமாநுஜர் செவியில் எம்பெருமானின் புகழ்பாடும் ஸ்தோத்திர ரத்னம் என்கிற துதி விழுந்தது.

ஸ்தோத்திர ரத்னப் பொருள், ஶ்ரீராமாநுஜரை தன் வயப்படுத்திக் கொண்டுவிட்டது. ஆழ்ந்த பொருள், நயந்த சொற்கட்டு, உச்சரித்துச் சொன்ன விதத்திலும் ஒரு கம்பீரம். இம் மூன்றும் ஶ்ரீராமாநுஜரைக் கட்டிப்போட்டு அவரின் திருமஞ்சனக் கடமையையே மறக்கச் செய்தன. தோளில் சுமந்து நின்ற குடத்துடன் அதை இறக்கிவைக்கக்கூடத் தோன்றாமல் அந்த ரத்தினத்தைச் செவிமடுத்தார். ஸ்தோத்திரம் முடியவும் “திரும்பப் பாடுங்களேன்” என்றார். பாடியவரோ ``தாங்கள் யார்?'' என்று கேட்டார்.

ரங்க ராஜ்ஜியம் - 57

``நான் ராமாநுஜன்'' என்றார். அப்போது ஶ்ரீராமாநுஜருக்குத் தெரியாது, இப்படித் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் ஒரு போக்கு தன்னை நடையாக நடக்கவிடப் போகிறது என்பது.“அடடே தாங்கள்தானா அது... தங்களைக் காணவே நான் திருவரங்கத்திலிருந்து வந்துள் ளேன். என்னை அனுப்பியவர் ஶ்ரீஆளவந்தார். நான் அவரின் சீடர்களில் ஒருவன். இப்போது நீங்கள் செவிமடுத்தது அவர் ஸ்மரித்த ஸ்தோத்திர ரத்தினத் தையே'' என்றார் அச்சீடர்.

“ஆஹா அற்புதம்... தங்கள் பெயர்?”

“பெரிய நம்பி.”

“மிகவும் மகிழ்ச்சி. என்னைக் காணவே வந்துள்ளதாகச் சொன்னீர்களே... நான் என்ன அத்தனை பெரியவனா?”

“வைணவத்தில் பெரிது சிறிது எனும் பாகுபாடுகள் ஏது... தங்களைக் காண வேண்டும் என்பது என் ஆசார்யரின் விருப்பம்...”

“என்னது... ஶ்ரீஆளவந்தாருக்கு என்னைக் காண விருப்பமா... நான் அவ்வளவு பாக்கியசாலியா...”

“ஏன் இருக்கக் கூடாது... தங்களுக்கு என்னோடு வந்திட விருப்பம்தானே...”

“பாக்கியம் என்று கூறியவன் வராது போவேனா... இதோ போய் கைங்கர்யம் முடித்து, உடன் வருகிறேன். இங்கே வரத கைங்கர்யத்துக்கும் மாற்று ஏற்பாடும் செய்தாக வேண்டும். செய்துவிட்டு ஒடி வருகிறேன்” என்று புறப்பட்டார்.

பெரிய நம்பியும் காத்திருந்தார். ஶ்ரீராமாநுஜரும் சொன்னது போலவே ஒரு கோலும் கோலின் நுனியில் தனக்கான ஆடைகள் கொண்ட ஒரு துணி முட்டையுமாக ஒரு யாத்ரிகன் போலவே வந்து சேர்ந்தார்.

பெரிய நம்பியிடம் பூரிப்பு. ஶ்ரீராமாநுஜர் காஞ்சியைப் பிரியமனமின்றி பிரிவது, அவரின் உடல் மொழியில் நன்கு தெரிந்தது. ஹஸ்தகிரி உள்ள திசை நோக்கி சாஷ்டாங்க நமஸ்காரம் புரிந்தவர், கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கொண்டார்.

“உற்றார் உறவினரைப் பிரிவதைவிட இந்த ஊரைப் பிரிவதில் உங்களுக்கு இவ்வளவு வருத்தமா?”

பெரிய நம்பியின் கேள்விக்குப் பதில் சொல்வதைவிட மௌன மாகப் பார்ப்பது சிறந்ததாகத் தோன்றியது ஶ்ரீராமாநுஜருக்கு.அதன்பின் பெரிய நம்பியிடம் ஆளவந்தார் பெருமை வெளிப்படத் தொடங்கியது, அதைக் கேட்பது பேரின்பமாக விளங்கியது ஶ்ரீராமாநுஜருக்கு. தான் வேதம் அனைத்தையும் முழுவதுமாய்க் கற்றிட எம்பெருமான் கருணை புரிந்து விட்டதாகத் தோன்றியது. நடையிலும் நல்ல வேகம்.

வாணிகர்கள் வண்டி கட்டிக்கொண்டு செல்வர். சத்திரியர் குதிரைகளில் ஆரோகணிப்பர். ஏனையோர்க்குக் கால்களே சக்கரங்கள். அந்தச் சக்கரக் கால்களோடு திருவரங்கத்தை அடைந்தவர்களுக்கு... குறிப்பாக வட காவிரியை அடைந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஶ்ரீஆளவந்தார் திருநாடு அலங்கரித்திருந்தார். பெரிய நம்பிக்கு மூர்ச்சையாகி விட்டது. ஶ்ரீராமாநுஜரோ கண்ணீர் பெருக்கலானார்.

‘தனக்கும் உற்ற குருவுக்கும் பிராப்தமே இல்லையோ... தன்னால் வேதத்தைக் கசடறக் கற்க முடியாதோ... தனது இப்பிறப்பு தொண்டூழியம் பார்க்க மட்டுமா...’ - இப்படி ஶ்ரீராமாநுஜருக்குள் எண்ணற்ற கேள்விகள்!

- தரிசிப்போம்...

பஞ்ச கோபுரங்கள்!

கோபுரங்கள் இறைவனின் பேரண்டத் திருமேனி என்கின்றன ஞான நூல்கள். அண்டத்தில் திகழும் பறவைகள், திக் பாலகர், அஷ்ட சக்திகள், முனிவர்கள் உள்பட சகல உயிர்களும் சுதைச் சிற்பங்களாக கோபுரத்தில் திகழும்.மய மதம் எனும் நூல், 15 வகை ராஜ கோபுரங்களை விவரிக்கிறது.

ரங்க ராஜ்ஜியம் - 57

அவை: 1. ஶ்ரீகரகம், 2. ரதிகாந்தம் 3.காந்த விஜயம், 4. விஜய விசாலம், 5. விசாலாலயம், 6. விப்ரதீகாந்தம், 7. ஶ்ரீகாந்தம், 8. ஶ்ரீகேசம், 9. கேசவிசாலகம், 10. சுவஸ்திகம், 11. திசா சுவஸ்திகம், 12. மர்தசம், 13.மாத்ர காண்டகம், 14. ஶ்ரீவிசாலம், 15.சதுர் முகம்.

ஆலயங்களில் திசைக்கு ஒன்றாக முறையே பூர்வகோபுரம், பச்சிம கோபுரம், உத்தர கோபுரம், தக்ஷிண கோபுரம் ஆகிய நான்கும் மத்திம கோபுரம் ஒன்றும் திகழும். இவற்றைப் பஞ்ச கோபுரம் என்பர்.

ஓவியம்: கார்த்திகா